Published:Updated:

`பால்லதான் தங்கம் இருக்குல்ல?' - பசுவுடன் வந்து கோல்டு லோன் கேட்ட விவசாயி

தங்க நகைக்கடன் வேண்டி பசுவுடன் தனியார் கடன் வழங்கும் நிறுவனத்துக்கு வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பசுவுக்கு தங்க நகைக்கடன் கேட்ட விவசாயி
பசுவுக்கு தங்க நகைக்கடன் கேட்ட விவசாயி

மேற்குவங்க மாநிலத்தின் தன்குனியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன் பசுவுடன், அந்தப் பகுதியில் உள்ள தனியார் தங்கநகைக் கடன் வழங்கும் நிறுவனத்தை அணுகியிருக்கிறார். தன் மாட்டுக்கு தங்க நகைக் கடன் வழங்குமாறு அவர் வைத்த கோரிக்கையைக் கேட்டு அந்த தனியார் நிறுவன ஊழியர்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.

அவரிடம் விசாரித்ததில், கொல்கத்தாவை அடுத்த புர்த்வான் பகுதியில் நடந்த கூட்டத்தில் அம்மாநில பா.ஜ.க தலைவரும் எம்.பி-யுமான திலீப் கோஷ் பேசியதை மேற்கோள் காட்டியிருக்கிறார் அவர். அந்தக் கூட்டத்தில் பேசிய திலீப் கோஷ், `பசுவின் பாலில் தங்கம் இருக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார்.

திலிப் கோஷ்
திலிப் கோஷ்
`ஸ்கீம் முடிஞ்சிடுச்சி; அனுப்ப வாய்ப்பே இல்லை' - ஈரமில்லாத மருத்துவர்களால் உயிருக்குப் போராடும் பசு!

அந்தக் கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில், ``இந்தியப் பசுக்கள் தனித்துவம் வாய்ந்தவை. இந்தியப் பசுக்களுக்கு முதுகில் இருக்கும் குமிழ் போல், வெளிநாட்டுப் பசுக்களுக்கு இருக்காது. அந்தக் குமிழிலில் சுவர்ண நாரி என்ற தங்க ரத்தநாளம் ஓடுகிறது. பசுவின்மேல் சூரிய ஒளி படுகையில் தங்கத்தை உற்பத்தி செய்யக்கூடியது. பசுவின் பாலில் தங்கம் கலந்துள்ளது, அதனால்தான் பசும்பால் தங்க நிறத்தில் உள்ளது. இந்தியப் பசுக்கள் நம் தாய் போன்றவை. என் தாய்க்கு யாரும் தீங்கு இழைத்தால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது" என்று அவர் பேசியிருந்தார். அவர் பேசியதில் `பசும்பாலில் தங்கம் உள்ளது' என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அதைக் கேள்விப்பட்டு அந்த விவசாயி தனியார் கடன் வழங்கும் நிறுவனத்துக்கு விரைந்துள்ளார்.

இதுகுறித்து அந்த விவசாயி கூறுகையில், ``பசுவை நம்பித்தான் என்னுடைய குடும்பம் உள்ளது. எங்கள் வீட்டில் 20 பசுக்கள் உள்ளன. அதனால், தங்கநகைக் கடன் வாங்கலாம் என்று என் பசுவையும் அழைத்து வந்தேன். இந்தக் கடன் கிடைத்தால் என்னுடைய வியாபாரத்தைப் பெருக்க எனக்கு உதவியாக இருக்கும்" என்று கூறினார்.

`பால்லதான் தங்கம் இருக்குல்ல?' - பசுவுடன் வந்து கோல்டு லோன் கேட்ட விவசாயி

இதுகுறித்து பேசிய அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவரான மனோஜ் சிங்,``திலிப் கோஷ், பசும்பாலில் தங்கம் உள்ளது என்று கூறியதிலிருந்து எங்கள் பகுதியிலிருந்து பல மக்கள் என்னை தினமும் அணுகி, தங்கள் பசு ஒரு நாளைக்கு 15 முதல் 16 லிட்டர் பால் சுரப்பதாகவும் அதன் மூலம் எவ்வளவு தங்களுக்கு கடன் கிடைக்கும் என்றும் கேட்டு வருகின்றனர். ஓர் அரசியல் தலைவர் நாட்டின் முன்னேற்றம் குறித்து பேச வேண்டுமே தவிர, இவ்வாறு பேசியிருக்கக் கூடாது. அவர் பேசிய இந்தப் பேச்சை எண்ணுகையில் அவமானமாக உள்ளது. இந்த `தங்கப்பால்' குறித்த கண்டுபிடிப்புக்கு திலிப் கோஷுக்கு, நோபல் பரிசு வழங்க வேண்டும்'' என்று காட்டமாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.