Published:Updated:

அடி, உதை கொடுத்து மன்னிப்பு கேட்கவைத்த பெண் போலீஸ்! - பெண்களைக் கேலி செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி

இளைஞரைத் தாக்கும் காவலர்
இளைஞரைத் தாக்கும் காவலர்

உத்தரப்பிரதேசத்தில் கல்லூரிப் பெண்களைக் கிண்டல் செய்த இளைஞரைப் பெண் காவலர் ஒருவர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

நிர்பயா விவகாரம், கத்துவா சிறுமி, ஹைதராபாத் பெண் மருத்துவர், உன்னாவ் பெண் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் தேசிய அளவில் வலுத்துவருகிறது.

இளைஞரைத் தாக்கும் காவலர்
இளைஞரைத் தாக்கும் காவலர்

ஹைதராபாத், உன்னாவ் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் நடந்ததால் பல மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவசர உதவி எண்கள், இரவில் தனியாகச் செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளையில், இந்த இரு சம்பவங்களின்போதும் காவல்துறையினர் அலட்சியமாகச் செயல்பட்டனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதனால் இனி பெண்கள் தொடர்பான எந்தப் புகார்கள் வந்தாலும் அதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இளைஞரைத் தாக்கும் காவலர்
இளைஞரைத் தாக்கும் காவலர்

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்லூரிப் பெண்களைக் கிண்டல் செய்த ஒரு இளைஞரைப் பெண் காவல் அதிகாரி ஒருவர் கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிக கவனம் பெற்றுள்ளது.

கான்பூருக்கு அருகில் உள்ள பிதூர் நகரில் இருக்கும் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் கல்லூரிப் பெண்களுக்கு அங்குள்ள இளைஞர்கள் தினமும் தொல்லை கொடுத்து, அவர்களைக் கேலி செய்து வந்துள்ளனர்.

3 மாத அலைக்கழிப்பு; சமாதானம் செய்த போலீஸார்! - இறப்பில் முடிந்த உன்னாவ் பெண்ணின் 1 வருடப் போராட்டம்

இதுதொடர்பாகப் பலமுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. உன்னாவ் விவகாரத்துக்குப் பிறகு அலர்ட்டான போலீஸார், இன்று பிதூர் மாணவிகள் அளித்த புகாரை ஏற்றுச் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு ஒரு இளைஞர் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதைப் பார்த்த பெண் காவலர், அவரை சாலையில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளார். 33 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பெண் காவலர், இளைஞரைக் கையாலும் ஷூவாலும் சுமார் 22 முறை தொடர்ந்து தாக்கிக்கொண்டே உள்ளார்.

மேலும், `உங்களுக்கெல்லாம் பைத்தியம் பிடித்துவிட்டதா... உங்கள் வீட்டில் தாய், சகோதரிகள் இல்லையா?' எனக் கேட்டுக்கொண்டே அடிக்கிறார்.

பின்னர் அந்த நபரை அழைத்து வந்து பெண்களிடம் மன்னிப்பு கேட்கவைத்துவிட்டு, இறுதியில் காவல்நிலையம் அழைத்துச் சென்று அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இளைஞரைத் தாக்கிய பெண் காவலர் பிதூர் காவல்நிலைய குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த சஞ்சல் சவுரைசா என்பது தற்போது தெரியவந்துள்ளது. அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு