Published:Updated:

`லவ் யூ பேபி’ - சிங்கம் முன் நடனமாடும் இளம்பெண்! #ViralVideo

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lion
Lion

நியூயார்க்கில் உள்ள வன உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் வழக்கம் போல் மிருகங்களைப் பார்வையிட்டு வந்தனர். அப்போது ஆப்பிரிக்கச் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டிற்குள் இளம் பெண் ஒருவர் நடனமாடிக்கொண்டிருந்தார். அவர் முன் சிங்கம் ஒன்று நின்றுகொண்டிருந்தது. முதலில் அந்தப்பெண் பூங்கா ஊழியர் என நினைத்தனர். ஆனால் அவரது நடத்தை அவ்வாறாக இல்லை. இதனையடுத்து சிலர் அந்தப்பெண்ணைப் படம்பிடித்தனர்.

African Lion Benox Zoo
African Lion Benox Zoo

சிங்கம் அருகே சென்ற அந்தப்பெண் கைகளை அசைத்து நடனமாடினார். சிங்கம் அந்தப்பெண்ணை எதுவும் செய்யவில்லை. பூங்காவைப் பார்வையிட வந்த நபர் ஒருவர் அந்தப்பெண்ணின் சேட்டைகளை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அந்த இளம்பெண் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. `சிங்கம் உணவு எடுத்துக்கொண்ட பின் அந்தப்பெண் கூண்டுக்குள் குதித்தால் பெரிதாக அசம்பாவிதம் ஏற்படவில்லை. பசியோடு இருக்கும்போது அவர் உள்ளே சென்றிருந்தால் நிச்சயம் சிங்கத்தின் தாக்குதலுக்குள்ளாகி இருப்பார். பெரிய அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கும்' என்கின்றனர் பூங்கா ஊழியர்கள் .

இதுகுறித்து பேசிய பார்வையாளர்கள், ``அந்தப்பெண் சிங்கம் அருகே சென்று தனது கூந்தலை அசைத்த படி நின்றார். அந்தப்பெண் அருகே சிங்கம் வந்தபோது`பேபி ஐ லவ் யூ’ என்றார். சிங்கம் உறுமியதையடுத்து நாங்கள் எங்களது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். இதுகுறித்து பூங்கா ஊழியர்களிடம் தெரிவித்து அவர்களை அழைத்து வந்தோம். ஆனால் நாங்கள் திரும்பி வந்த`போது அந்தப்பெண் அங்கு இல்லை. இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சரியானது இல்லை. குழந்தைகள் இவர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் எனவே பூங்கா ஊழியர்கள் இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றனர்.

பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இது சட்டவிரோத நடவடிக்கையாகும். விதிகளை மீறுவது குற்றமாகும். இவ்வாறு செய்வதினால் கடுமையான காயங்கள் அல்லது மரணம் ஏற்படக்கூடும். பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டுதான் தடைகள் மற்றும் விதிகள் உள்ளன. பார்வையாளர்கள் பகுதிக்கும் சிங்கத்தின் இருப்பிடத்திற்கும் இடையே மிகப்பெரிய அகழி இருக்கிறது. இதுபோன்ற செயல்களை பூங்கா நிர்வாகம் ஊக்குவிக்காது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.