Published:Updated:

நடத்துநரின் தவறான பேச்சு; பஸ்ஸின் கியரை இறுகப் பிடித்த பெண்!- சென்னை சாலையை பரபரப்பாக்கிய நிமிடங்கள்

தவறாகப் பேசியதால் பேருந்து நடத்துநரையும் ஓட்டுநரையும் சாலையில் நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

பொதுவாகப் பேருந்தில் ஏறினாலே நடத்துநர் கூறும் முதல் வார்த்தை ‘சரியான சில்லறை கொடுங்கள்’ என்பதுதான். இதே வாசகம்தான் தமிழகத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் ஒட்டப்பட்டிருக்கும். இதையும் மீறி நம் மக்கள் சரியான சில்லறை கொடுக்காமல் இருப்பதும் அதற்கு நடத்துநர் கோபத்தைக் காட்டுவதும் நம் ஊரில் அடிக்கடி நடக்கும் வழக்கமான நிகழ்வுதான். இதேபோன்ற ஒரு நிகழ்வுக்கு, இளம்பெண் ஒருவர் கொடுத்த பதிலடி, சென்னையில் நடந்துள்ளது.

சென்னை பேருந்து
சென்னை பேருந்து

சென்னை நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் பூஜா. இவர் நேற்று முன்தினம் இரவு பட்டினப்பாக்கத்திலிருந்து வில்லிவாக்கம் செல்வதற்காக 27 D பேருந்தில், தன்னுடைய ஆண் நண்பர் ஒருவருடன் ஏறியுள்ளார். பேருந்தின் நடத்துநர் வழக்கமாக டிக்கெட் கேட்டுள்ளார். பணத்தை எடுத்தபோது, டிக்கெட்டுக்குப் போதுமான பணத்தில் 10 ரூபாய் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதை நடத்துநரிடம் தெரிவித்த பூஜா, ‘ பணம் குறைவாக இருக்கிறது. நான் மட்டும் பேருந்தில் செல்கிறேன். என்னுடைய நண்பர் இறங்கிக் கொள்வார், பேருந்தின் கதவைத் திறந்துவிடுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

Vikatan

இதை ஏற்க மறுத்த நடத்துநர், ‘நான் டிக்கெட்டைக் கிழித்துவிட்டேன். பணம் கொடுத்துவிட்டுதான் இருவரும் இறங்க வேண்டும்’ என வாக்குவாதம் செய்துள்ளார். இதற்குள் அடுத்த பேருந்து நிறுத்தம் வந்துள்ளது. பூஜாவின் நண்பர் இறங்கி அருகில் உள்ள ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, பேருந்திலிருந்த பூஜாவை நடத்துநர் மிகவும் மோசமாக ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. ‘காதலனுடன் ஊர் சுற்றத் தெரிகிறது டிக்கெட் வாங்கப் பணம் இல்லையா’ என்பது போன்று பேசியுள்ளார்.

வில்லிவாக்கம் பேருந்து
வில்லிவாக்கம் பேருந்து

இதில் கொதிப்படைந்த பூஜா, நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்குள் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கச் சென்ற நண்பர், ஆட்டோ பிடித்து மீண்டும் அதே 27 டி பேருந்தில் ஏறி, தாங்கள் வாங்கிய இரண்டு டிக்கெட்டுகளுக்கும் சேர்த்து 500 ரூபாயைக் கொடுத்துள்ளார். இதைக் கண்டதும் கோபமடைந்த நடத்துநர், பூஜாவையும் அவரது நண்பரையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

நடத்துநர் பேசியது பூஜாவுக்குக் கோபத்தை வரவழைக்கவே, நேராகப் பேருந்து ஓட்டுநருக்கு அருகில் சென்ற அவர், கியர் கம்பியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு வண்டியை எடுக்க விடாமல் செய்துள்ளார், ‘கதவைத் திறந்து விடுங்கள், நாங்கள் இறங்க வேண்டும்’ எனக் கூறி ஆவேசமாகப் பேசியுள்ளார். பூஜாவின் செயலினால் அதிர்ந்த ஓட்டுநர், அவருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

பின்னர் கதவு திறக்கப்பட்டது, பேருந்தின் முன் வந்து நின்ற பூஜா, ‘என்னைத் தவறாகப் பேசி அவமானபடுத்தி விட்டீர்கள், அதற்கு நீங்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் வண்டியைக் காவல்நிலையத்துக்கு விடுங்கள்” எனக் கத்தியுள்ளார். இதை அறிந்த அருகிலிருந்த போக்குவரத்துக் காவலர்கள் பூஜாவை சமாதானப்படுத்தினர். இருந்தும் விடாத பூஜா, தன்னிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இடத்தை விட்டு நகருவேன் எனக் கூறியுள்ளார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது.

பேருந்தில் ஏறும்போதே பணம் இல்லை, தன் நண்பர் இறங்கிவிடுவார் எனக் கூறியதாகவும், அதைக் கேட்காத ஓட்டுநர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார் பூஜா. ஆனால், இதை மறுத்துள்ள நடத்துநர், பணம் இல்லாமல் பேருந்தில் ஏறியது ஏன் எனக் கேள்வி எழுப்பியதாகவும், தகாத முறையில் பேசவில்லை என்றும் காவலர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

சென்னை பேருந்துகள்
சென்னை பேருந்துகள்

நடத்துநர் மற்றும் பயணியின் சண்டையால் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக டி.டி.கே சாலையில்ல பரபரப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்தப் பேருந்து காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏற்பட்ட சமசரப் பேச்சுக்குப் பிறகே பேருந்து இயக்கப்பட்டது.