Published:Updated:

`போலீஸைப் பார்த்து பயந்த குழந்தைகள் இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?!' - பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி

police station
police station

`போலீஸ் ஸ்டேஷன்ல குழந்தைகள் என்ன பண்றாங்க?' எனப் பலரும் உள்ளே வந்து பார்த்துவிட்டு ஆச்சர்யப்படுகிறார்கள்.

காவல்நிலையம் மற்றும் காவலர்கள் என்றாலே குழந்தைகளுக்கு அச்ச உணர்வுதான் ஏற்படுவது இயல்பு. இதற்கு நேர்மாறாக இருக்கின்றன, மூன்று காவல்நிலையங்கள்.

சாலையில் செல்லும் பள்ளிக் குழந்தைகள் பலரும் அந்தக் காவல்நிலையங்களுக்குள் மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள். அங்குள்ள அவர்களுக்கான விளையாட்டு அறையில், உற்சாகமாக விளையாடுகிறார்கள்; படிக்கிறார்கள். அந்த அறைக்கு, `சைல்டு ஃப்ரெண்ட்லி ரூம்' எனப் பெயர். 

police station
police station

அந்த அறையில் குழந்தைகள் அமர சேர், டேபிள், விளையாட்டுப் பொருள்கள், புத்தகங்கள், கண்கவர் சுவர் ஓவியங்கள் நிறைந்திருக்கின்றன. திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை ஆகிய ஊர்களிலுள்ள அனைத்து மகளிர் காவல்நிலையங்களில்தான், இந்தக் குழந்தைகளுக்கான விளையாட்டு அறைகள் உள்ளன. இதற்கான பின்னணிக் காரணங்களை விவரிக்கிறார், திருத்தணி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி.

`15,579 காவல்நிலையங்களில் 4-ம் இடம்!' - தேசிய அளவில் சாதித்த தேனி மகளிர் காவல்நிலையம்

``காவல்நிலையத்துக்கும் குழந்தைகளுக்குமான நட்புறவு குறைவாக இருக்கிறது. தவிர, புகார் அளிக்க வரும் பெண்கள் பலரும் தங்கள் குழந்தைகளுடன் காவல்நிலையம் வருவதற்கும் தயங்குகிறார்கள். இந்த இரண்டு பிரச்னைகளுக்குமான தீர்வாக, காவல்நிலையத்திலேயே குழந்தைகளுக்கான விளையாட்டு அறையை உருவாக்க முடிவெடுத்தோம். முதல்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்று காவல்நிலையங்களில் மட்டும் கடந்த மாதம் குழந்தைகளுக்கான விளையாட்டு அறைகள் திறக்கப்பட்டன. இதை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.

police station
police station

புகார் அளிக்க காவல் நிலையம் வரும் பெண்களின் குழந்தைகள் தவிர, சாலையில் செல்லும் பள்ளிக் குழந்தைகளையும் காவல்நிலையத்துக்குள் வந்து புத்தகங்கள் படிக்கவும் விளையாடவும் ஊக்கப்படுத்துகிறோம். இந்த அறையில் குழந்தைகள் இருந்தால், அவர்களின் பாதுகாப்புக்காக ஒரு பெண் காவலர் உடன் இருப்பார். இதனால், காவல்துறையினர் மீது குழந்தைகளுக்கு நட்புறவு ஏற்படுகிறது. முன்பெல்லாம் எங்களைப் பார்த்து பயந்த குழந்தைகள், தற்போது மகிழ்ச்சியுடன் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால் அதை எங்களிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கிறார்கள்.

மேலும், ஏதாவதொரு வழக்கில் குழந்தைகளையும் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், காவல்துறையினரைப் பார்த்து குழந்தைகள் அச்சப்படாமல் இருக்கவும் எங்களுடைய முன்னெடுப்பு உதவுகிறது. காவல்நிலையம் எதற்காகச் செயல்படுகிறது. எத்தகைய குற்றங்கள் செய்பவர்களுக்குக் காவல்துறையினர் தண்டனையைப் பெற்றுக்கொடுக்கிறார்கள் என்பதுபோன்ற அடிப்படை விஷயங்களையும் குழந்தைகள் தெரிந்துகொள்கிறார்கள். இதனால், குழந்தைப் பருவத்திலிருந்தே தீய வழிகளுக்குச் செல்லாமல் இருக்கவும் வழிகாட்டுகிறோம். 

police station
police station

இதனால், பள்ளிக் குழந்தைகள் தனியாகவும் நண்பர்கள் குழுவுடனும் அடிக்கடி எங்கள் காவல்நிலையத்துக்கு வருகிறார்கள். `போலீஸ் ஸ்டேஷன்ல குழந்தைகள் என்ன பண்றாங்க?' எனப் பலரும் உள்ளே வந்து பார்த்துவிட்டு ஆச்சர்யப்படுகிறார்கள்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், ராஜேஸ்வரி.

அடுத்த கட்டுரைக்கு