Published:Updated:

`முதியவரின் கழுத்தைச் சுற்றிய மலைப்பாம்பு!' - போராடி மீட்ட சகதொழிலாளிகள்

தப்பிக்க முயன்ற மலைப்பாம்பு திடீரென தொழிலாளி புவனச்சந்திரனின் கழுத்தில் சுற்றி இறுக்கத் தொடங்கியது. இதனால் பதறிப்போன மற்ற தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, மலைப்பாம்பை மிகுந்த பலத்துடன் இழுத்தனர்.

கழுத்தில் சுற்றிய மலைப் பாம்பு
கழுத்தில் சுற்றிய மலைப் பாம்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், நெய்யாறு டேம் பகுதியில் அமைந்துள்ளது கிக்ம கல்லூரி. இந்தக் கல்லூரி வளாகத்தில் புல், புதர்கள் நிறைந்து காணப்பட்டன. புதர்களை அகற்றுவதற்காக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் உள்ள தொழிலாளர்கள் பணியில் இறங்கினர்.

மலைப்பாம்பு பிடியில் புவனச்சந்திரன்
மலைப்பாம்பு பிடியில் புவனச்சந்திரன்

தொழிலாளர்கள் புதர்களை அகற்றிக்கொண்டிருந்தபோது, புற்களுக்கிடையில் மலைபாம்பு ஒன்று நெளிந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த பெருங்குளங்கரா பகுதியைச் சேர்ந்த புவனச்சந்திரன் (61) என்ற தொழிலாளி, மலைப்பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் அடைக்க முற்பட்டார்.

குப்பைக்குள் ஒளிந்த 8 அடி நீள சாரைப் பாம்பு - எரித்துக்கொன்ற வனத்துறை ஊழியர்கள்!

தப்பிக்க முயன்ற மலைப்பாம்பு, திடீரெனத் தொழிலாளி புவனச்சந்திரனின் கழுத்தில் சுற்றி இறுக்கத் தொடங்கியது. இதனால் பதறிப்போன மற்ற தொழிலாளர்கள் ஒன்றுசேர்ந்து, மலைப்பாம்பை மிகுந்த பலத்துடன் இழுத்தனர். தொழிலாளர்கள் வேகமாகச் செயல்பட்டு புவனச்சந்திரன் கழுத்தில் சுற்றியிருந்த மலைப்பாம்பை அகற்றி, அதை சாக்குப்பையில் அடைத்தனர். இதனால் புவனச்சந்திரன் ஆபத்திலிருந்து தப்பினார்.

மலைப் பாம்பை மீட்ட காட்சி
மலைப் பாம்பை மீட்ட காட்சி

மலைப்பாம்பு விஷத்தன்மை இல்லாதது என்றாலும், பெரிய உயிரினங்களின் உடலை இறுக்கிக் கொன்று, விழுங்கிவிடும். தொழிலாளி புவனச்சந்திரனைக் காப்பாற்ற, உடனிருந்த தொழிலாளிகள் அதிரடியாகச் செயல்பட்டதால் அவர் காப்பாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை அங்கிருந்த சிலர் மொபைலில் வீடியோவாகப் பதிவுசெய்தனர். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.