Published:Updated:

TTF வாசன் - புது ரூட்டுத் தல; 2கே கிட்ஸ் ரசிகர் படை உருவாவது இப்படித்தான்!

TTF Vasan

`புகழ் பெறணும், சம்பாதிக்கணும், பலருக்கும் என்னைப் பிடிக்கணும்..!' - சோஷியல் மீடியாவில் புகழுடன் இருப்பவர்கள், புகழ் பெற ஆசைப்படுபவர்கள் பலரும் இந்த எண்ணத்துடன் இருப்பவர்களே. அதன்விளைவுதான், பொறுப்பற்ற யூடியூபர்கள் பலரையும் உருவாக்குகிறது.

TTF வாசன் - புது ரூட்டுத் தல; 2கே கிட்ஸ் ரசிகர் படை உருவாவது இப்படித்தான்!

`புகழ் பெறணும், சம்பாதிக்கணும், பலருக்கும் என்னைப் பிடிக்கணும்..!' - சோஷியல் மீடியாவில் புகழுடன் இருப்பவர்கள், புகழ் பெற ஆசைப்படுபவர்கள் பலரும் இந்த எண்ணத்துடன் இருப்பவர்களே. அதன்விளைவுதான், பொறுப்பற்ற யூடியூபர்கள் பலரையும் உருவாக்குகிறது.

Published:Updated:
TTF Vasan

சோஷியல் மீடியாவில் சமீபத்திய பேசுபொருள் `டி.டி.எஃப்' வாசன். `யாருப்பா தம்பி நீ?' என்று பலரையும் யோசிக்க வைத்திருக்கும் வாசன், கோவையைச் சேர்ந்த யூடியூபர். சமீபத்தில் இவரைச் சந்திக்கப் பெருந்திரளாகக் கூடிய கூட்டத்தால், காவல்துறையினரே திகைத்துப்போனார்கள். பைக் சாகசப் பிரியரான இவர், அதிக வேகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சாலை விதிகளை மீறுவதுடன், தன்னைப் பின்தொடரும் இளைஞர்களைத் தவறாக வழிநடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

TTF Vasan
TTF Vasan

இவரின் யூடியூப் சேனலைப் பின்தொடரும் பல லட்சம் 2கே கிட்ஸ்களில், பலரும் `டி.டி.எஃப்' வாசனைத் தலைவனாகக் கொண்டாடுகின்றனர். அவர்கள், சரி மற்றும் தவற்றைப் பகுத்தறியாமல், பிறரின் புகழ் வெளிச்சத்துக்கு விட்டில் பூச்சியாய் தங்களின் நேரத்தை வீணடிப்பதுடன், உளவியல் ரீதியான சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர்.

புதிது புதிதாக முளைக்கும் இணைய பிரபலங்கள், இளைஞர்களை எவ்வாறு ஈர்க்கின்றனர் என்பது முதல், இதுபோன்ற அறியாமையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீர்வுகளையும் முன்வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அர்விந்த்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சமூக வலைதளங்களில் நல்ல விஷயங்களைவிடவும், எதிர்மறையான விஷயங்கள்தான் மிக விரைவாகவும் அதிக அளவிலும் பிரபலமாகின்றன. இதை நன்கு உணர்ந்து, தங்களுக்குப் பிடித்த விஷயங்களை வீடியோக்களாக்கி யூடியூபராக பிரபலமடையப் பெருங்கூட்டம் முனைப்பு காட்டி வருகிறது.

Social Media
Social Media

`புகழ் பெறணும் சம்பாதிக்கணும், பலருக்கும் என்னைப் பிடிக்கணும்..!' - சோஷியல் மீடியாவில் புகழுடன் இருப்பவர்கள், புகழ்பெற ஆசைப்படுபவர்கள் பலரும் இந்த எண்ணத்துடன் இருப்பவர்களே.

இதற்காக, தான் செய்யும் விஷயங்கள், சரியானவைதானா, தன்னைப் பின்தொடர்பவர்கள் தவறாகத் திசைதிரும்ப தானும் காரணமாகிவிட வாய்ப்புள்ளதா என்பது போன்ற சமூக பொறுப்புணர்வுடன் இன்றைய இணைய பிரபலங்கள் பலரும் யோசித்துச் செயல்படுவதில்லை. அதன் விளைவுதான், பொறுப்பற்ற யூடியூபர்கள் பலரையும் உருவாக்குகிறது.

அடுத்து, இவர்களுக்கான ரசிகர் படை எப்படி உருவாகிறது என பார்க்கலாம்.

தன்னம்பிக்கை குறைவானவர்கள், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள், ஜெயிக்க எத்தகைய வழியையும் தேர்வு செய்யலாம் என நினைப்பவர்கள், பிறரின் வெற்றியைப் பார்த்து தானும் அதேபோல ஆக வேண்டும் என ஆசைப்படுபவர்கள், தான் ஆக நினைத்தது போலவே புகழ்பெற்ற ஒருவரை முன்னுதாரணமாக நினைப்பவர்கள்தான், யூடியூப் மூலமாகப் பிரபலமாகும் நபர்களைப் போலவே தானும் புகழ்பெற / சம்பாதிக்க நினைப்பார்கள்.

Social Media
Social Media

இன்றைய 2கே கிட்ஸ்களில், வளரிளம் பருவத்தில் தங்களுக்கான அடையாளத்தைத் தேடிய சிந்தனை, எதிர்பார்ப்பு, இலக்கு போன்றவை பலருக்கும் இருக்கும். அது நியாயமான, நியாயமற்ற இலக்காகவும் இருக்கலாம். தான் நினைப்பதுபோலவே அந்த வாழ்க்கை எனக்கு அமைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். இப்படித் தனக்கான சுய அடையாளம் இல்லாதவர்களே, பிறரின் வெற்றியைத் தன் வெற்றியாக நினைத்துக்கொண்டாடுவார்கள்; தனக்கான தலைவனைத் தேடி ஓடுவார்கள்.

முன்பெல்லாம் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனத் தங்களுக்குப் பிடித்தமான ஆளுமைகளைத் தங்களின் தலைவராகக் கொண்டு, நீண்டகாலம் அவர்களின் வழியைப் பின்பற்றியவர்கள் அல்லது அவர்கள் மீது அன்பைச் செலுத்தியவர்களைப் பார்த்திருப்போம்.

அந்த ரசிகர்களில்கூட, தன் தலைவனின் தோல்வியை / இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மொட்டை அடிப்பது, நாக்கைத் துண்டித்துக்கொள்வது போன்ற பிற்போக்குத்தனமான செயல்களைச் செய்பவர்களும் உண்டு. அதுபோன்று சிறியதும் பெரியதுமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

YouTube
YouTube

இதுவே, இன்றைய டிஜிட்டல் உலகில், திடீர் திடீரென டிரெண்டு ஆகும் நபர்களையெல்லாம் தலைவனாக நினைத்து, நேரத்தை வீணாக்கி, தங்களுக்கான சுய அடையாளமே இல்லாமல் போகும் `2கே கிட்ஸ்’ இளைஞர்கள் அதிகரித்து வருவதுதான் வருத்தமான உண்மை.

பொழுதுபோக்குக்காக ஒருவரின் செயல்பாடுகளை ரசிப்பது தவறில்லை. ஆனால், அதுவே நம் வேலையை, எண்ணத்தை, சிந்தனையை மழுங்கடிக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. இதனால், உளவியல் மற்றும் மனநலன் ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டு, தவறான பாதையில் திசைமாறவும் வாய்ப்புள்ளது.

இதற்குத் தீர்வு ஒன்றுதான். தலைவன் என்பவருக்கான தகுதிகள் என்ன, அவரை ஏன் பின்பற்ற வேண்டும், அவரின் புகழ் எந்த வழியில் கிடைத்தது, அவரால் இந்தச் சமூகத்துக்குக் கிடைக்கும் முன்னேற்றம் போன்று சரி, தவற்றைப் பிரித்துப் பார்க்கும் பகுத்தறிவு எல்லா விஷயங்களிலும் ஏற்பட்டால், சரியான தலைவனுடன், நல்ல வழித்தோன்றல்களும் உருவாவார்கள்" என்று உறுதிப்படக் கூறும் சித்ரா, இந்த விஷயத்தில் பெற்றோரின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

YouTube
YouTube

``படிக்காத சாமானிய பெற்றோர்கள் பலருக்கும், இந்த டிஜிட்டல் உலகம் பற்றியும், சமூக வலைதளங்களால் தங்களுடைய 2கே கிட்ஸ் பிள்ளைகளின் போக்கு எப்படிச் செல்கிறது என்றும் தெரியாமல் இருப்பார்கள். அத்தகைய பெற்றோர், பிள்ளைகள் செல்போனை பயன்படுத்தும் நேரம், பொழுதுபோக்கு, நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களையாவது கவனித்து, அவர்களின் போக்கைக் கண்காணிக்கலாம்.

படித்த பெற்றோர்களில் சிலர், பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கண்டும் காணாமல் இருப்பது, எல்லை மீறிய பின்னர் கண்டிப்பது, பிள்ளைகளுக்குப் போட்டியாகத் தாங்களும் எந்நேரமும் போனும் கையுமாக இருப்பதை நிச்சயம் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.

பிள்ளைகளுடன் தினமும் மனம்விட்டுப் பேசுவது நல்லது. அடிக்கடி வெளியிடங்களுக்குக் குடும்பமாகச் சென்று, சந்தோஷ மனநிலையில் ஒளிவுமறைவின்றி பல விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்வது பயன்தரும். பிள்ளைகள் அதிகம் பயன்படுத்தும் செயலிகள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களைக் கண்காணிக்க வேண்டும்.

சித்ரா அர்விந்த்
சித்ரா அர்விந்த்

பிள்ளைகளின் நடவடிக்கைகளில் தவறு இருக்கும்பட்சத்தில், `நீ செய்றது தப்பு' என்று நேரடியாகக் கண்டிக்காமல், அவர்கள் செய்யும் தவற்றால் நேரும் பாதிப்புகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்லி நல்வழிப்படுத்த வேண்டும். இலக்கை நோக்கி ஓடினால், தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்க்கலாம்" என்று வலியுறுத்தி முடிக்கிறார் சித்ரா.

TTF வாசன் நடவடிக்கைகள் குறித்து, கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறையிடம் பேசினோம். ``இதுதொடர்பாக விசாரித்துக்கொண்டிருக்கிறோம். புகார்கள், தகவல்கள் கிடைத்தால் நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்கள்.

அச்சுறுத்தலான சாகசங்கள் எதுவாயினும் அவை ஆபத்தானவைதான். இருப்பினும், தனிப்பட்ட விருப்பத்தினால் TTF வாசன் போன்றோர், பைக் சாகசங்களுக்கென பிரத்யேக சாலையில் பயிற்சி மேற்கொள்ளலாமே தவிர, பொது வழித்தடத்தில் அதிவேகத்தில் வாகனங்கள் ஓட்டுவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி, சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, பொறுப்புடனும் பொதுநலன் கருதியும் செயல்பட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை எப்போதும் நினைவில் கொள்வது அனைவருக்கும் நலம் பயக்கும்.