வழக்கமாக உச்ச நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கும். நீதிபதிகள் மதியம் 1 மணிக்கு ஓய்வு எடுத்து, மதியம் 2 மணிக்கு மீண்டும் தங்கள் பணிகளைத் தொடங்குவார்கள். மாலை வழக்குகள் முடிவடையும் வரை அவர்கள் பணிகள் தொடரும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்னதாக வந்து உச்ச நீதிமன்றத்தில் தமது நீதிமன்ற பணிகளைத் தொடங்கினார். இந்த அமர்வில், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் இருந்தனர்.
அப்போது பிணை தொடர்பான வழக்கில் முன்னாள் தலைமை நீதிபதி முகுல் ரோத்தகி ஆஜரானர். சீக்கிரமாக அமர்வு தொடங்கியதற்காக அப்போது பாராட்டிப் பேசிய அவர், ``காலை 9.30 மணியே நீதிமன்றத்தைத் தொடங்க முறையானதாக இருக்கும்” என்று தனது கருத்தை வலியுறுத்தினார்.
`எங்கள் பிள்ளைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்குச் செல்ல முடியும் என்றால், நீதிபதிகளாகிய எங்களால் ஏன் காலை 9 மணி முதல் வேலை செய்ய முடியாது. நீதிமன்றம் முன்கூட்டியே காலை 9 மணிக்குத் தொடங்க வேண்டும் என்றே நானும் கருதுகிறேன்' என்றார் நீதிபதி லலித்.

மேலும் ``உச்ச நீதிமன்ற அமர்வுகள் காலை 9 மணிக்குத் தொடங்கி, 11.30 மணி வரை நடத்தலாம். அரைமணி நேர இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் 12 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு முடிக்க வேண்டும். இதனால் மாலையில் அதிக பணிகளைச் செய்ய நமக்கு நேரம் கிடைக்கும்" என்றார்.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகஸ்ட் 26-ம் தேதி ஓய்வு பெறுவதை அடுத்து, இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக ஆகஸ்ட் 27 அன்று லலித் பதவியேற்க உள்ளார். தொடர்ந்து நவம்பர் 8 வரை தலைமை நீதிபதியாகப் பணியாற்றுவார்..