Published:Updated:

மலைத்தோட்ட விவசாயிகள்... வனத்துறையினர் மோதல் முடிவுக்கு வருவது எப்போது?

மலைத் தோட்ட கிராம்பு விவசாயம்
News
மலைத் தோட்ட கிராம்பு விவசாயம்

விலங்குகளுக்கான உணவுக்கு ஏற்பாடு பண்ணும் வேலையை வனத்துறை ஒழுங்கா செய்தாலே விவசாய நிலத்துக்குள்ள வன விலங்குகள் வராது - விவசாயி. நிலத்தை சர்வே செய்து, அவர்களது இடத்தில் வேலி போட்டுக்கொள்ளலாம் - வனத்துறை!

மலைத்தோட்ட விவசாயிகள்... வனத்துறையினர் மோதல் முடிவுக்கு வருவது எப்போது?

விலங்குகளுக்கான உணவுக்கு ஏற்பாடு பண்ணும் வேலையை வனத்துறை ஒழுங்கா செய்தாலே விவசாய நிலத்துக்குள்ள வன விலங்குகள் வராது - விவசாயி. நிலத்தை சர்வே செய்து, அவர்களது இடத்தில் வேலி போட்டுக்கொள்ளலாம் - வனத்துறை!

Published:Updated:
மலைத் தோட்ட கிராம்பு விவசாயம்
News
மலைத் தோட்ட கிராம்பு விவசாயம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைத்தோட்ட பயிர்கள் அதிக அளவில் உள்ளன. அதிலும் குமரி மலைப் பகுதியான கரும்பாறை, மாறாமலை பகுதிகளில் விளையும் கிராம்புகளுக்கு உலக அளவில் மவுசு உண்டு. குமரி கிராம்புக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மலைத்தோட்ட விவசாயிகளுக்கு வனத்துறை நெருக்கடி கொடுப்பதாக ஒவ்வொரு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் புகார் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இது பற்றி கரும்பாறை மலைத்தோட்ட விவசாயிகள் சங்க செயலாளர் லாலாஜி கூறுகையில்,

லாலாஜி
லாலாஜி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில மலைத்தோட்ட விவசாயிகளுக்கு வனவிலங்குகள் தொல்லையும், வனத்துறை கெடுபிடியும் அதிகமா இருக்கு. சில மாநிலங்களில பயிர்களை அழிக்கும் வனவிலங்குகளை வேட்டையாட அனுமதி கொடுத்திருக்கிறாங்க. காட்டுப்பன்றியை விவசாயிகளே வேட்டையாடலாம்னு அனுமதி கொடுத்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கு. கிராம்புச் செடியை நட்டு வளர்த்து வரும்போது மிளா அதைக் கடிசக்சு நாசம் பண்ணிரும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பயிருங்க நிலையைப் பார்த்தல் இதயமே வெடிக்கிற அளவுக்கு வேதனையா இருக்கும். காய்கறி போட்டா காட்டுப்பன்றி அழிச்சிரும். நான் மூணு லட்சம் ரூபா செலவுல ரப்பர் மரத்தை நட்டிருந்தேன். அதை யானை வந்து அழிச்சிருச்சு. அதுக்கு உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்னு சொன்னாங்க. நானும் அதுக்கு முயற்சி பண்ணினேன். அப்பத்தான் ஒரு அதிகாரி `மிஞ்சி மிஞ்சி போனா இருபத்தி அஞ்சாயிரம் ரூபா கிடைக்கும். அதுக்கும் ரெண்டு வருஷம் அலைய வேண்டி இருக்கும்'னு சொன்னார். அதோட அதை விட்டுட்டு வேற வேலை பார்க்க போயிட்டேன்.

மலையில் கிராம்பு சாகுபடி
மலையில் கிராம்பு சாகுபடி

மலைத்தோட்ட விவசாயிகளால நஞ்சில்லாத உணவைக் கொடுக்க முடியும். வனவிலங்குகளால மலையில எந்தக் காய்கறியும் பயிர் செய்ய முடியல. அதனால அரசாங்கம் தலையிட்டு வன உயிர் பாதுகாப்புச் சட்டம் 1972-ம் ஆண்டு மாற்றம் செய்து விவசாயிகள் பயிர் செய்ய உதவி செய்யணும். நாங்க காட்டுக்கு உள்ள வந்து வேட்டையாடல. அப்பிடி யாராவது காட்டுக்குள்ள வந்தா நீங்க என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க. எங்க விவசாய நிலங்களுக்கு வந்து, நாசம் செய்யும் விலங்குகளை வேட்டையாட அனுமதித்து சட்டங்களை திருத்தும்படி அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

அனுமதி கொடுத்தாலும் விவசாய நிலத்துக்கு வரும் காட்டுப்பன்றி போன்றவற்றை எப்பவும் விவசாயிகள் வேட்டையாட மாட்டாங்க. வேட்டை நடக்குதுன்னு தெரிஞ்சாலே எந்த விலங்கும் விளை நிலத்துக்கு வராது. இது வனவிலங்குகளை விளைநிலங்களுக்கு வராம விரட்டுற யுத்திதான். அதுமட்டு மல்லாம வனத்துக்குள்ளேயே விலங்குகளுக்கு தண்ணீர்த்தொட்டி அமைக்கிறது, விலங்குகளுக்கான உணவுக்கு ஏற்பாடு பண்ணும் வேலையை வனத்துறை ஒழுங்கா செய்தாலே விவசாய நிலத்துக்குள்ள வன விலங்குகள் வராது.

கன்னியாகுமரி மாவட்ட நிலப்பரப்பில 36 சதவிகிதம் காடு இருக்கு. அதுபோக எங்கள் விவசாய நிலங்களில் தனியார் காடுகள் சட்டம், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், வனவிலங்கு சரணாலயம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாயத்தின் புலிகள் நடமாடும் பகுதி, மலை பாதுகாப்பு அமைப்பு, சுற்றுச்சூழல் உணர் திறன் மண்டலம் என ஏழு சட்டங்கள் மூலம் விவசாயத்தை நசுக்குகின்றனர். மலையில உள்ள எங்க சொந்த தோட்டத்துகே நாங்க பயந்து பயந்து போக வேண்டிய நிலை இருக்கு. எங்க தோட்டத்தில ரோட்டை சீரமைக்க விடமாட்டேங்கிறாங்க. மிஷின் மூலம் பணி செய்யக் கூடாதுன்னு இடைஞ்சல் கொடுக்கிறாங்க.

கன்னியாகுமரி கிராம்பு
கன்னியாகுமரி கிராம்பு

தனியார் காடு சட்டத்தைக் கொண்டு வந்து எல்லாத்துக்கும் பர்மிஷன் வாங்கணும்னு சொல்றாங்க. விவசாயிகள் பர்மிசனுக்காக எத்தனை நாள் அலைய முடியும். எங்க மலைத்தோட்ட விவசாயி ஒருவர் பழைய ரப்பர் மரங்களை மாத்திட்டு புதிய மரங்கள் நடுறதுக்காக குழிதோண்ட ஆள் கிடைக்கல. அதனால ஜே.சி.பி கொண்டு போகணும்னு அக்ரி அதிகாரிகள்கிட்ட பேசினோம். அதற்கு அவர் வனத்துறையில இருந்து பிரச்னை ஆகும்னு சொன்னார்.

நாங்க விவசாய நிலம் வாங்கும்போது இந்த சட்டங்கள் எதுவும் கிடையாது. நீங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சட்டம் கொண்டு வந்து, எங்களை சுதந்திரமா விவசாயம் பண்ண விடமாட்டேங்கிறீங்கன்னு சொல்லிட்டு இந்த பிரச்னையை கலெக்டர்கிட்ட கொண்டுபோனோம். கலெக்டர் பாரஸ்ட் ஆபீஸர்கிட்ட பேசினார். அதுக்கு அவங்க அனுமதி மறுத்தாங்க. அப்படீன்ன ஜே.சி.பி கொண்டுபோகக் கூடாதுன்னு சட்ட விதி இருந்தா காட்டுங்கன்னு கலெக்டர் காட்டமா சொன்னதுக்கு அப்புறமா ஜே.சி.பி-யை அனுமதிச்சாங்க. இதுபோல ஏகப்பட்ட கெடுபிடிகளால விவசாயம் செய்யுற விருப்பமே இல்லாம போச்சுது.

அன்னைக்கு விவசாயத்துக்கு முக்கியத்துவம் இருந்ததுனால, பலருக்கு வேலை கொடுக்கிறதுக்காக டவுனை விட அதிக விலை கொடுத்து தோட்டத்தை வாங்கினாங்க. இன்னைக்கு தோட்டத்தோட ரேட்டு செண்டுக்கு 5,000 போகும். ஆனா நாகர்கோவில்ல ஒரு சென்ட் பத்து லட்சம் ரூபாய் போகுது. வனத்துறை அதிகாரிகள் கெடுபிடி பண்ணினப்ப, `உங்ககூட சண்ட போட்டு விவசாயம் பாக்கணும்னு அவசியம் இல்ல. எங்களுக்கு அந்த விலையைக் கணக்கிட்டு பணத்த தாங்க நாங்க தோட்டத்த விட்டுட்டு போறோம்'னு சொன்னோம். வனத்துறை செய்யும் கெடுபிடியைப் பார்க்கும்போது பிரிட்டிஷ் காலத்தில இருந்த ரெளலட் சட்டம் போல பீல் பண்ணுறோம்" என ஆதங்கப்பட்டார்.

குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா
குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா

இதுபற்றி கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜாவிடம் பேசினோம், ``விவசாயம் முழுவதும் வனப்பகுதிக்கு உள்ளேயே இருக்கு. விவசாய நிலத்துக்கும் காட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. விலங்குகள் விவசாய இடங்களையும் தாண்டிதான் போகும். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மாம்பழத்தணை போன்ற அணைகளுக்கு தண்ணீர் வனத்தில் உள்ள நீரோடைகள் மூலமாகத்தான் வருது. சிலர் ரப்பர், கிராம்பு போன்ற பயிர்கள் கொஞ்சம் தள்ளி வைத்தாலும் நீரோரம் அழிஞ்சு போயிரும். அதனால 1965-ல தனியார் காடுகள் சட்டம் கொண்டு வந்தாங்க. அதுக்கும் கலெக்டர், டி.எஃப்.ஓ, தாசில்தார், விவசாயத்துறையை சேர்ந்தவங்க அடங்கிய குழு இருக்கு. விவசாயிகள் மரம் வெட்டவோ, ரோட்டை சரிபண்ணவோ மனு கொடுக்கிறாங்கன்னா அந்த கமிட்டி முடிவு செய்து அனுமதி கொடுக்கும்.

அந்த குழு அனுமதிச்சா அவங்க வேலை செய்யலாம். சில இடங்களில வனத்துறை வழியாக போகும் சாலைகளை சரி செய்ய முறையா அனுமதி வாங்கினாதான் செய்ய முடியும். தனியார் காடுகள் வரும் பகுதியில் மரங்கள் வெட்ட சென்னை முதன்மை வன பாதுகாவலரிடம் அனுமதி பெற வேண்டும். இப்போது விவசாய நிலங்களாக இருக்கும் பகுதி முன்பு வனமாக இருந்தவை.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

எனவே, வனவிலங்குகள் பயிரை சேதப்படுத்தினால் இழப்பீடு கேட்டு மனுகொடுக்கலாம். இல்லையென்றால் நிலத்தை சர்வே செய்து, அவர்களது இடத்தில் வேலி போட்டுக்கொள்ளலாம். மரச்சீனி கிழங்கு, வாழை போன்றவை போட்டால் வனவிலங்குகள் சேதப்படுத்தும். எனவே, பயிர் மாற்றமும் தேவை. முடிந்த அளவுக்கு விவசாயிகளின் மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

வனத்தையும், வன விலங்களையும் பாதிக்காத வகையில் மலைத்தோட்ட விவசாயிகளின் நியாயமான கோரிக்கை மனுக்களை விரைந்து பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டாலே 90 சதவிகிதம் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டுவிடும். இதை அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.