Published:Updated:

கொரோனாவுக்கு கணவர், மாமனார், மாமியாரை பறிகொடுத்த பெண், 7 வயது மகனுடன் தற்கொலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரேஷ்மா தற்கொலை செய்த கட்டடம்
ரேஷ்மா தற்கொலை செய்த கட்டடம்

கொரோனாவுக்கு கணவன் மற்றும் அவரின் பெற்ரோரை இழந்த பெண், தன் 7 வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்களின் உறவுகளை பலிகொடுத்து, அந்தத் துயரத்திலிருந்து மீள முடியாமல் இருக்கின்றனர். அதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இருந்த பெண் ஒருவர், தன் கணவரையும் கணவரின் பெற்றோரையும் கொரோனாவுக்கு பறிகொடுத்த துன்பத்தைத் தாங்க முடியாமல் தன் மகனுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் மேற்குப் பகுதியில் உள்ள சாந்திவலியில் நேஹர் அம்ரித் சக்தி காம்ப்ளக்ஸ் கட்டடத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தவர் ரேஷ்மா (44). ரேஷ்மாவின் கணவர் சரத்தும், ரேஷ்மாவும் தங்களின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வாரனாசியில் இருந்து இரண்டு மாதத்துக்கு முன்பு மும்பை வந்து தங்கி இருந்தனர். இந்தத் தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் இருந்தான்.

சித்திரிப்பு காட்சி
சித்திரிப்பு காட்சி

ரேஷ்மாவின் கணவர் சரத்தின் பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அவர்களுக்கு இறுதிச்சடங்குகளை செய்யச் சென்றபோது சரத்துக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் உயிரிழந்தார். கொரோனா கட்டுப்பாடுகளால் தன் கணவரின் இறுதிச்சடங்கில் கூட ரேஷ்மாவால் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் அவர் மிகவும் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

தனிமையில் இருந்த ரேஷ்மாவுக்கும், அவரின் பக்கத்து வீட்டினருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கணவரையும், அவரின் குடும்பத்தினரையும் இழந்து மன அழுத்தத்தில் இருந்த ரேஷ்மா, பக்கத்து வீட்டினரால் ஏற்பட்ட பிரச்னையால் மேலும் பாதிக்கப்பட்டார். இதனால், அவர் தான் வசித்துவந்த 12வது மாடியில் இருந்து மகனுடன் கீழே குதித்தார்.

அதிகாலை 2.30 மணிக்கு, கட்டட வளாகத்தில் இருக்கும் தோட்டத்தில் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்த வாட்ச்மேன் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர்களை சோதித்த டாக்டர், அவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

ரேஷ்மா தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறார். அதில், தனது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் அயூப்கானும், அவரின் குடும்பத்தினரும் துன்புறுத்தியதால் இந்த விபரீத முடிவை எடுத்ததாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அயூப் கான் குடும்பத்தினர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதற்கு முன்பு அயூப்கான், ரேஷ்மா மீது போலீஸில் புகார் செய்திருக்கிறார். போலீஸார் இரண்டு குடும்பத்தினரையும் அழைத்து சமாதானமாகப் பேசி அனுப்பி வைத்தனர். பக்கத்து வீட்டில் படுத்த படுக்கையாக இருவர் இருப்பதாகவும், ரேஷ்மாவின் மகன் வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்டு நடனம் ஆடியதால் பக்கத்து வீட்டினர் மிகவும் எரிச்சலடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இரு குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரேஷ்மாவின் உடலை உரிமை கோரி அவரின் குடும்பத்தினர் யாரும் வரவில்லை. ரேஷ்மாவின் சகோதரர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் இறுதிச்சடங்குகளை செய்வதற்காக மும்பை வந்துள்ளார். அமெரிக்காவில் படித்த ரேஷ்மா, முன்னாள் பத்திரிகையாளர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு