Published:Updated:

``கொரோனா நேரத்தில் பொய் வழக்கு போட்டு அலையவிடுவதா?" கொந்தளிக்கும் மது ஒழிப்பு பெண் போராளிகள்

சாராய ஆலைக்கு எதிரான போராட்டம்
சாராய ஆலைக்கு எதிரான போராட்டம்

''மக்கள் நலன் கருதி சாராய ஆலையை மூடக்கோரி, அமைதி வழியில் எதிர்ப்பு தெரிவிச்சதுக்கு, தமிழக அரசு கொடுக்குற பரிசா இது?’’ எனக் கடும் கோபத்தோடு கேள்வி எழுப்புகிறார்.

''சாராய ஆலையின் தூண்டுதலால், காவல்துறையினர் எங்கள் மீது பொய் வழக்குப் போட்டு மாவட்டம் விட்டு மாவட்டம் அலையவிடுகிறார்கள். இது சட்டவிரோதம். கொரோனா நேரத்தில் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டைக்குச் சென்று வருவது பெரும் சவாலாகவும் அச்சமாகவும் உள்ளது'' என மகளிர் ஆயம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி அம்மாள் ஆதங்கப்படுகிறார்.

லட்சுமி அம்மாள்
லட்சுமி அம்மாள்

தஞ்சையைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் இதுகுறித்து நம்மிடம் பேசியபோது, ``மதுவால் பல குடும்பங்கள் சீரழிஞ்சிக்கிட்டு இருக்கு. குறிப்பா, பெண்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகிக்கிட்டு இருக்காங்க. இதுமட்டுமா..? மதுவை உற்பத்தி செய்ற ஆலைகளால், மக்களோட வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுக்கிட்டு இருக்கு. இதனால்தான் மதுவுக்கும் மது ஆலைகளுக்கும் எதிராக, கடந்த சில ஆண்டுகளா எங்களோட மகளிர் ஆயம் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் தொடர்ச்சியா பல போராட்டங்கள் நடத்திக்கிட்டு இருக்கோம். எல்லாமே அமைதிவழிப் போராட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில கடந்த பல வருஷங்களா, தனியார் சாராய ஆலை இயங்கிக்கிட்டு இருக்கு. இதனால அப்பகுதி விவசாயிகள் பலவிதமான பாதிப்புகளை சந்திச்சுக்கிட்டு இருக்காங்க. அது ரொம்பவே வறட்சியான பகுதி. ஆத்து தண்ணிக்கு வழியில்ல. மழையும் ஒழுங்கா பேயாது.

கல்லாக்கோட்டையில பெரும்பாலான விவசாயிகள் நிலத்தடி நீரை நம்பிதான் விவசாயம் செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. அரசு விதைப் பண்ணை ஒண்ணும் அந்த ஊர்ல இயங்கிக்கிட்டு இருக்கு. சாராய ஆலை வந்த பிறகு, கல்லாக்கோட்டை, இதோட சுற்றுவட்டாரப் பகுதிகள்ல நிலத்தடி நீர் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்பட்டுக்கிட்டிருக்கு. மக்களைப் பாதிக்கக்கூடிய அந்த சாராய ஆலையை மூடக்கோரி, 2019 மே 14-ம் தேதி எங்களோட மகளிர் ஆயம் அமைப்பு சார்பா, மறியல் போராட்டம் அறிவிச்சோம்.

alcohol
alcohol
Representational Image

கல்லாக்கோட்டை கடைத்தெருவுல பெண்கள் கூடியிருந்தோம். சாராய ஆலையிலிருந்து கடைத்தெரு ரெண்டு கிலோமீட்டர் தூரம். சாலை ஓரத்துல இடதுபக்கமா கொஞ்ச தூரம் பேரணியா நடந்து போனோம். எங்களுக்கு முன்னாடி, காவல்துறையினர் பாதுகாப்புக்கு நடந்து போனாங்க.

கொஞ்ச தூரம் போனதும், எங்களை வாகனத்துல ஏத்தி, ஒரு கல்யாண மண்டபத்துல வெச்சிருந்துட்டு அன்னைக்கு சாயந்தரமே விட்டுட்டாங்க. சாராய ஆலைக்கு முன்னாடி மறியல் செய்யவிடாமல், முன்கூட்டியே தடுத்து கைது செஞ்சதுனாலதான், உடனடியா அன்னைக்கு சாயந்தரமே விடுவிச்சிட்டாங்க. இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி அதுதான் சரி. அது அப்பவே முடிஞ்சுபோன பிரச்னை. ஆனா, ஒரு வருஷம் கழிச்சு, இப்ப காவல்துறையினர் அந்தப் பிரச்னையைக் கையில எடுத்து, 13 பெண்கள் உட்பட 15 பேர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 143, 161 பிரிவுகள்ல வழக்குப் பதிவு செஞ்சிருக்காங்க.

சட்டவிரோதமா மறியல் போராட்டம் நடத்தினோம்னு குற்றம்சாட்டியிருக்காங்க. சாராய ஆலையோட தூண்டுதலால்தான் காவல்துறையினர் இந்த மாதிரி நடந்துக்குறாங்களோனு நாங்க சந்தேகப்படுறோம். இது சட்டவிரோதம். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள 15 பேர்ல, 13 பெண்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவங்க. இந்தப் பொய் வழக்குகளால், கொரோனா நேரத்துல புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அலைஞ்சிக்கிட்டு இருக்கோம். போன வாரம்தான் கோர்ட்டுக்கு போயிட்டு வந்தோம்.

மகளிர் ஆயம் பெண்கள்
மகளிர் ஆயம் பெண்கள்

மறுபடியும் 22-ம் தேதி போகணும். மக்கள் நலன் கருதி சாராய ஆலையை மூடக்கோரி, அமைதி வழியில் எதிர்ப்பு தெரிவிச்சதுக்கு, தமிழக அரசு கொடுக்குற பரிசா இது?’’ எனக் கடும் கோபத்தோடு கேள்வி எழுப்புகிறார் லட்சுமி அம்மாள். மேலும் பேசியவர், ``மதுவுக்கு எதிராகப் போராடும் பெண்களை அச்சுறுத்தி ஒடுக்குறதுக்காகத்தான் இதுமாதிரி வழக்குகள் பதிவு செய்றாங்க. ஆனாலும், எங்களோட அறவழிப் போராட்டம் தொடர்ந்துகிட்டேதான் இருக்கும்” என்றார். இந்த வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு