லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

200 பெண்களின் உழைப்பில் உருவான 10 லட்சம் மலர்கள்!

10 லட்சம் மலர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
10 லட்சம் மலர்கள்

மனம் மலரட்டும்

ற்பனைக்கு எட்டாத மாற்றங்களையும் தாக்கங்களையும் கொரோனா வைரஸ் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

சுற்றுலாவை முக்கிய தொழிலாகக் கொண்ட நீலகிரியிலும் தொட்டபெட்டா முதல் ஊட்டி ரோஜா பூங்கா வரை கடந்த மார்ச் 17 முதல் மூடப்பட்டது.

ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் மலர்ச் செடிகள், 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் என ஒவ்வொரு வருடமும் களைகட்டும் ஊட்டி மலர் கண்காட்சி. அதற்கு இந்த ஆண்டு 124 வயது. அதைச் சிறப்பிக்கும் வகையில் விதை சேகரிப்பு, நாற்றாங்கால், மலர் நாற்று நடவு என 200 பெண்களின் உழைப்பில் 400 ரகங்களில் ஆறு லட்சம் மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் ஐந்து மாதங்களுக்கு முன்பே தொடங்கியது.

200 பெண்களின் உழைப்பில் உருவான 10 லட்சம் மலர்கள்!

இத்தனை அழகையும் கண்டு ரசிக்க ஆளில்லை எனப் பூங்கா ஊழியர்கள் வருத்தப்பட, கொரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், ஊட்டி பூங்கா ஊழியர்கள் போன்றோர் மலர் கண்காட்சியை ரசிக்க சிறப்பு அனுமதி வழங்கியது மாவட்ட நிர்வாகம்.

200 பெண்களின் உழைப்பில் உருவான 10 லட்சம் மலர்கள்!

புத்தாடை அணிந்து திருவிழாவை கண்டு ரசிக்கும் மனநிலையில் மகிழ்ச்சியோடு வந்திருந்தார்கள் ஊட்டி பூங்காவில் வேலை பார்த்த ஊழியர்களும் அவர்கள் குடும்பத்தினரும். அவர்களையெல்லாம் பூங்கா அதிகாரிகள் மலர்க்கொத்துகள் கொடுத்து வரவேற்க, கவலைகளை மறந்து குதூகலத்துடன் பூக்களைக்கண்டு ரசித்ததோடு பூங்கா மைதானத்திலும் ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்தனர்.

சிறு குழந்தையைப்போல விளையாடி மகிழ்ந்துகொண்டிருந்த ஒரு பாட்டியிடம் பேசினோம்... ``இருபது வருஷமா இங்கே வேலை செய்றேன்... இந்த பூங்காதான் எனக்கு உலகம். இந்த செடி கொடிகளையெல்லாம் என் சொந்தபந்தமா நெனச்சிக்குவேன். சில நேரங்களில் இதுங்களோட‌ பேசக்கூடச் செய்வேன். எனக்கு விவரம் தெரிஞ்சு இந்த கார்டனை மூடினதேயில்லை. எப்போதும் ஜன நடமாட்டமா இருக்கும். ஏப்ரல், மே மாசத்தில் சொல்ல முடியாத அளவு கூட்டம் இருக்கும். ஒவ்வொரு பூவுக்குள்ளும் எங்களோட அஞ்சு மாச உழைப்பு இருக்கும். ஆனால், இது யாருக்கும் தெரியவே தெரியாது. நாங்க ஓர் ஓரமா நின்னு எங்களோட வேலையை எப்பவும் போல செய்வோம். ஆனா, இந்த கொரோனா எங்களையே ஒருநாள் சுற்றுலாப் பயணியா மாத்திடுச்சி. தினமும் வந்து வேலை செய்யற இடம்னாலும் இன்னிக்கி புதுசா இருக்கு. இந்த பூங்காவும் பூக்களும் புல்வெளியும் எங்களுக்காகவே இருக்குற மாதிரி தோணுது'' என்கிறார் அவர் மகிழ்ச்சி பொங்க.

200 பெண்களின் உழைப்பில் உருவான 10 லட்சம் மலர்கள்!
200 பெண்களின் உழைப்பில் உருவான 10 லட்சம் மலர்கள்!

“இந்த கார்டன்ல பதினஞ்சு வருஷமா வேலை செய்றேன். பனி, மழை, குளிர் என எதுவும் பாக்காமல் வேலை செஞ்சு நட்ட செடியெல்லாம் பூத்து, அதை மாடத்துல அடுக்கும்போதுதான் மனசுக்கு நிம்மதியா இருக்கும். இத்தனை ஆயிரம் பூக்களை கண்டு ரசிக்கிற மக்களைப் பார்த்து நாங்க சந்தோஷப்பட்டுக்குவோம். கொரோனா பரவிடும்னு இந்த வருஷம் காட்சியை ரத்து செஞ்சிட்டாங்க. பட்ட கஷ்டமெல்லாம் வீணாகும்னு பயந்தோம். ஆனா, எங்களையே சிறப்பு விருந்தினரா அழைச்சு, குடும்பத்தோட கொண்டாடி மகிழ ஏற்பாடு செஞ்சதை மறக்கவே முடியாது. அதுவும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாங்க. இதைவிட வேற சந்தோஷம் எதுவும் இல்லை” என்கிறார் லட்சுமி அம்மாள்.

200 பெண்களின் உழைப்பில் உருவான 10 லட்சம் மலர்கள்!

“கொரோனா பாதிப்பால சுற்றுலாப் பயணிகள் வராமல் போனது எங்களுக்கு ஏமாற்றமாதான் இருக்கு. கஷ்டப்பட்டு மலர் கண்காட்சிக்கு உழைக்கிற எங்களுக்கு எந்த அங்கீகாரமும் இல்லைனு சில நேரங்களில் வேதனைப்படுவோம். ஆனா, எங்களுக்காக ஒரு நாள் ஒதுக்கி குடும்பமா கொண்டாடி மகிழ ஏற்பாடு செஞ்ச எல்லாருக்கும் நன்றி கொரோனாவுக்கும் நன்றி” எனச் சிரிப்புடன் சொல்கிறார் இங்கு பணிபுரியும் ஓர் இளம்பெண்.

மலர்களே.... மலர்களே!