Published:Updated:

“வர்றவன் போறவனெல்லாம் குறுகுறுன்னு பாப்பானுங்க..!” - நடைபாதைப் பெண்களின் பரிதாப வாழ்க்கை!

“வர்றவன் போறவனெல்லாம் குறுகுறுன்னு பாப்பானுங்க..!” - நடைபாதைப் பெண்களின் பரிதாப வாழ்க்கை!
“வர்றவன் போறவனெல்லாம் குறுகுறுன்னு பாப்பானுங்க..!” - நடைபாதைப் பெண்களின் பரிதாப வாழ்க்கை!

சென்னைக்கு முதல்முறையாக வந்திருந்த என் நண்பனுக்கு இரவு நேரத்தில் ஊரைச் சுற்றிப் பார்க்க ஆசை. “நானும் இப்படி அடிக்கடி ராத்திரியில் வெளியில் சுத்துவேன்” என்றதும் அவனுக்குச் சந்தோஷம் (பின்னே.. கொளுத்துற வெயில்ல எவன் பகல்ல ஊரச்சுத்துவான்னு உள்ளுக்குள்ள நெனச்சது அவனுக்கு எங்க தெரியப்போவுது)!

இரவு பத்தரை மணிக்குக் கிண்டியிலிருந்து டூவீலரில் கிளம்பினோம். கத்திப்பாரா, தி.நகர், மயிலாப்பூர் வழியாக மெரினா போனோம். கடற்கரை காற்றில் உடம்பெல்லாம் சிலுசிலுக்க, குளுகுளு குல்பி வயிற்றுக்குள் கரைந்தது. அங்கிருந்து கிளம்பி பாரிஸ் கார்னர். டூவீலரின் பின்னால் உட்கார்ந்து சத்தமாகக் கத்தியபடி வந்த நண்பன், பாரிஸ் கார்னர் வந்ததும் அமைதியானான். அவன் அமைதிக்குக் காரணம், சாலையோரம் வரிசையாக உறங்கிக்கொண்டிருந்த நடைபாதைக் குடும்பங்கள் என்பது அவன் சொல்லாமலேயே எனக்குப் புரிந்தது. நானும் வண்டியின் வேகத்தைக் குறைத்து அதன் சத்தத்தை மட்டுப்படுத்தினேன்.

என்.எஸ்.சி. போஸ் ரோடு வந்ததும், பேருந்து நிலையத்துக்கு எதிரில் ஒரு நடைபாதைக் கூட்டம் ஏதோ விளையாடிக்கொண்டிருந்தார்கள். 'ராத்திரி 12 மணிக்கு மேலே பெரியவங்க, சின்னப் புள்ளைங்கனு எல்லோரும் அப்படி என்ன விளையாடறாங்க?' என்று பார்க்க, டூவீலரை ஓரம் கட்டிவிட்டு அவர்களை நெருங்கினோம். 

வட்டமாக அமர்ந்திருந்தவர்கள் எங்களைப் பார்த்ததும் விளையாட்டை நிறுத்தினார்கள். “என்ன தம்பிங்களா... என்ன வேணும்?'' என்று ஒருவர் அதட்டலாகக் கேட்க, “இந்தா... இன்னாத்துக்குய்யா அந்த புள்ளைகளை வெரட்டுற? கம்முன்னு இந்தாண்ட வந்து குந்து” என்று ஒரு பாட்டி குரல் கொடுத்ததும் அவர் அமைதியானார். 

“வாங்கப்பா... இங்கே வந்து குந்துங்க. யாரு நீங்க? இந்த ராவுல இங்கே என்ன சோலி'' என்று கேட்ட அந்தப் பாட்டியிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். நாங்கள் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே எல்லோரும் இயல்பாகப் பழக ஆரம்பித்துவிட்டார்கள்.  ஜாலியாகப் பேசினாலும் அவர்களின் வலிகளை உணர்த்தின அவர்களின் வார்த்தைகள். 

“எம் பேரு பச்சையம்மா. எங்களுக்கு வூடு வாசல்லாம் கெடையாது சாமி. காலங்காலமா இங்கேதான் பொழப்பு ஓடிட்டு இருக்கு. இந்தப் புள்ளைங்க பகல்ல வேலைக்குப் போயிடுதுங்க. ஆம்பளைங்க ஸ்டீல் கம்பெனிக்கும் ஆர்பர்ல மூட்ட தூக்கவும் போயிடுதுங்க. பொண்டுக கார்ப்பரேசன் குழாய்ல தண்ணிப் புடிச்சு கம்பெனிகளில் போடுறது, துணிக்கடைகளுக்கு வேலைக்குப் போறது, பிளாட்பாரத்துல பூவு விற்கிறதுனு பொழப்பு ஓட்டுதுங்க. பகல் முழுக்க ஓடியாடி வேலைபாத்த களைப்பு போக இப்படி ஒண்ணு கூடுவோம். எங்களுக்கு ராத்திரிதாம்யா சொர்க்கமே'' என்கிறார், மடியில் படுத்துள்ள பேரனின் தலையை வருடியபடி. 

''எங்க பாட்டி சொல்ற மாதிரியெல்லாம் இல்லீங்ணா. அதுக்கு வேணா சொர்க்கமா தெரியலாம். எங்களுக்கு இது நரக வேதனை. நான் எட்டாங்கிளாஸ் படிக்கிறேண்ணா. எங்களுக்கு ஒண்டிக்க வீடு கெடையாது. கார்ப்பரேசன் கக்கூஸ்தான் போகணும். ரோட்டுல வண்டிக்காரங்க திடீர் திடீர்னு வேகமா போவாங்க. குழந்தைங்க மேலே ஏத்திப்போட்டா என்ன பண்றதுனு ஒரு பயத்தோடயே இருப்போம். இந்த நெலமைய மாத்த கவர்மென்ட்கிட்ட எவ்வளவோ கேட்டுப் போராடிட்டோம். இப்போ வரை தீர்வு கெடக்கல'' என கண்ணீர் வடிக்கிறார் சிறுமி அமுதா.

''ராத்திரியில நாங்க தூங்காம இப்புடி பொழுத கழிக்குறதே ஒரு சில ஆம்பளைங்களுக்கு பயந்துதான். திடீர்னு வண்டியை நிறுத்திட்டு வந்து மேல கை வைப்பானுங்க. சந்துக்கு வர்றியான்னு கூப்பிடுவாங்க. பொம்பளப்புள்ளைக தூங்கும்போது வேடிக்கைப் பார்ப்பாங்க. அதனால நாங்க தூங்கும்போது எங்க பாதுகாப்புக்காக ஆம்பளைங்க முழிச்சிருப்பாங்க. ஆம்பளைங்க தூங்கும்போது பொம்பளைங்க நாங்கயெல்லாரும் ஒண்ணா சேர்ந்து முழிச்சிருப்போம்.  சில சமயம் பச்சைப் புள்ளைங்களைத் தூக்கிட்டுப் போயிடுவாங்க. அரசாங்கத்துக்கிட்ட எத்தனையோ மனு கொடுத்தும் யாரும் கண்டுக்கலை'' - இது நாகம்மாவின் வேதனைக் குரல். 

பாரீஸ் கார்னரைப் போலவே வால்டாக்ஸ் சாலையோரத்திலும் பலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அங்கே டி.வி ஓடிக்கொண்டிருக்க, பெண்கள் உட்கார்ந்து படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆண்களும் குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருக்கிறர்கள். அனிதாவுக்கு நம்மிடம் சொல்ல நிறையைப் புலம்பல்கள் இருக்கின்றன.

''எங்களாண்ட ரேசன் கார்டு, ஆதார், ஓட்டு ஐ.டி எல்லாமே இருக்குதுய்யா. 'எங்களுக்கு ஏன் வீடு தர மாட்டேங்கறீங்க?'னு அதிகாரிங்ககிட்ட கேட்டா, 'அதெல்லாம் உங்க தாத்தா பாட்டி காலத்துலயே கொடுத்தாச்சு'னு சொல்லி அனுப்பிடுறாங்க. இங்க முதல்வர்கள்கூட திடீர் திடீர்னு மாறிடறதை டி.வியில பாக்குறோம். ஆனா, நாங்கதான் காலங்காலமா மாறாம பிளாட்பாரத்துலயே சுருங்கிக் கெடக்குறோம். எத்தனையோ பத்திரிகைகாரங்க வந்து போட்டோ புடிச்சுட்டுப் போயிட்டாங்க. எம்.எல்.ஏ வந்துட்டுப் போயாச்சு. தூங்கும்போதும் இந்த பிளாட்பாரம்தான்; முழிக்கும்போதும் இந்த பிளாட்பாரம்தான். சூரியன் எங்களுக்கு மட்டும் புதுசாவா விடியப்போவுது'' என்று துயரம் மீறி புன்னகைக்கிறார். 

விடிவதற்கு இன்னும் கொஞ்ச நேரமே இருக்க, கனத்த இதயத்துடன் கிளம்பினோம்!