Published:Updated:

நீலாம்பாள்... வயது 102

நீலாம்பாள்
பிரீமியம் ஸ்டோரி
News
நீலாம்பாள்

வைராக்கியம்

கூன் விழுந்து தள்ளாடி நடக்கும் இந்தப் பாட்டியின் வெண்கலக்குரலை அந்தக் கிராமத்தின் எல்லாத் தெருக் களிலும் கேட்கலாம். தினமும் துடைப்பங்களைத் தயாரித்து விற்று, அந்தப் பணத்தில் ஜீவனம் செய்து வாழ்ந்து வரும் இந்தப் பாட்டியின் வயது 102.

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகிலுள்ள ஆயங்குடிபள்ளம் கிராமம். இங்குள்ள பாக்யராஜ் நகரில் ஓர் ஓலைக்குடிசையில் வசிக்கிறார் நீலாம்பாள் பாட்டி. அரியலூர் மாவட்டத்தில் தேவாமங்கலத்தைச் சேர்ந்த வாசுதேவனை 17 வயதில் மணந்துகொண்ட நீலாம்பாள், குழந்தை யில்லாமல் பல்வேறு கோயில்களில் பிரார்த்தனை செய்திருக்கிறார். பத்து ஆண்டுக்கால தவத்தின் பயனாக முதல் குழந்தை முத்தையன், அடுத்து எட்டு ஆண்டுகள் கழித்து இரண்டாவது குழந்தை கிருஷ்ணமூர்த்தி, அடுத்த ஏழாண்டுகளுக்குப் பிறகு லட்சுமி என மூன்று வாரிசுகளைப் பெற்றிருக்கிறார். பிழைப்பு தேடி குழந்தைகளோடு ஆயங்குடிபள்ளத்துக்குக் குடிபெயர்ந்த நீலாம்பாள் ஓராண்டுக்குள் கணவனை அம்மை நோய்க்குப் பறி கொடுத்திருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
என்னால சும்மா உட்காந்து சோறு திங்க முடியாது.

கணவனை இழந்த துயரத்திலும் மூன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய கட்டாயம்... தலையில் கூடை சுமந்து பழ வியாபாரம் செய்திருக்கிறார். தனியாளாகப் போராடி மூவரையும் வளர்த்தெடுத்து, அத்தனை கடமைகளையும் நிறைவேற்றியிருக்கிறார். காலச்சக்கரம் சுழன்றதில் இரண்டு மகன்களையும் இழந்துவிட்ட நீலாம்பாள், இப்போது மகள் லட்சுமி, பேரன் சிவா, சிவாவின் மனைவி மகேஸ்வரி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

“என் வயசைக் கேட்காதீங்க. நான் என்ன எண்ணிக்கிட்டா உட்கார்ந்திருக் கேன்? உடம்புல முழுத் தெம்பு இருக்கிறவரைக்கும் எல்லாமும் சுமந்துதான் வித்தேன். `எதுவும் செய்ய வேண்டாம். நாங்க சோறு போடறோம்னுதான் இப்பவும் சொல்றாங்க. என்னால சும்மா உட்காந்து சோறு திங்க முடியாது. கட்டையில வேகற வரைக்கும் உழைச்சிப்போடுவேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காலையில ஒரு டீயைக் குடிச்சிட்டு ரயில்வே லயன்கரைக்கு அரிவாளோட போவேன். குளஞ்சித் தட்டையை அறுத்து வந்து காயவைப்பேன். அதுக்குள்ள சூரியன் உச்சிக்கு வந்துடும். கேழ்வரகு அல்லது கம்மங்கூழைக் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் படுப்பேன். தட்டை காய்ந்ததும், அதை கம்பு வெச்சி தட்டி மூணு, நாலு கட்டா கட்டி, ஒரு கட்டு பத்து ரூபான்னு வித்துட்டு அந்தப் பணத்தை வீட்டில் கொடுத்திடுவேன். திங்கிற சோத்துக்கு நம்மால முடிஞ்ச வேலையைச் செய்யணும்ல'' என்கிறார் இந்த உழைப்புப் பாட்டி.

நீலாம்பாள்
நீலாம்பாள்

`அரசாங்கம் மாதந்தோறும் வழங்கும் முதியோர் உதவிப் பணம் வாங்குறீங்களா' என்று கேட்டால், “கையும் காலும் நல்லாருக்குற எனக்கு ஏன் அந்தப் பணம்? இதுவரைக்கும் நான் யார்கிட்டேயும் இலவசமா எதுவும் வாங்கினதில்ல'’ என்று அதிரடியாகச் சொல்கிறார்.

இரவு ஒருவேளை மட்டுமே அரிசி உணவு சாப்பிடும் நீலாம்பாள் பாட்டிக்கு மீன் குழம்பு ரொம்பப் பிடிக்குமாம். நீலாம்பாள் பாட்டியின் பழ வியாபாரத்தைப் பள்ளிக்கூட வாசலில் தொடரும் அவரின் மகள் லட்சுமியிடம் பேசினோம்.

“எனக்கு வயசு அறுபதை நெருங்குது. குழந்தை இல்லேன்னு என் வீட்டுக்காரர் பிரெஞ்சு பெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டார். நானும் அம்மாவோடவே இருந்திட்டேன். அம்மா நூறு வயசு வரைக்கும் நோய் நொடின்னு படுத்ததில்லை. இப்பதான் கொஞ்ச நாள் அடிக்கடி வயிற்றுக்கோளாறுன்னு வைத்தியம் பார்க்கிறோம். யார் யாருக்கோ உதவிப்பணம் தர்ற அரசாங்கம் எங்க அம்மாவுக்குத் தரக் கூடாதா?” என்கிறார் லட்சுமி, வெள்ளந்தியாக.