Published:Updated:

`விழுப்புரம் ஆராயி சம்பவத்தில் எங்களைக் கோப்பதா?’ - முகநூல் பதிவர்மீது பா.ம.க போலீஸில் புகார்!

`விழுப்புரம் ஆராயி சம்பவத்தில் எங்களைக் கோப்பதா?’ - முகநூல் பதிவர்மீது பா.ம.க போலீஸில் புகார்!
`விழுப்புரம் ஆராயி சம்பவத்தில் எங்களைக் கோப்பதா?’ - முகநூல் பதிவர்மீது பா.ம.க போலீஸில் புகார்!
`விழுப்புரம் ஆராயி சம்பவத்தில் எங்களைக் கோப்பதா?’ - முகநூல் பதிவர்மீது பா.ம.க போலீஸில் புகார்!

விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனத்துக்கு யார் காரணம் என்பது இன்னும் அறியப்படாத நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகக் கீற்று இணையதளத்தை நடத்திவரும் நந்தன் என்கிற இரமேசுக்கும் பா.ம.க-வுக்கும் பிரச்னை எழுந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூரில் ஆராயி என்பவரின் 8 வயது மகன் சமயன் கொடூரமாகத் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதும், ஆராயியும் அவரின் 14 வயதுப் பெண் இருவரும் பாலின வன்கொடுமைக்கும் கொலைவெறித் தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டதும் தமிழக மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஒரு துப்பும் புலப்படவில்லை. 

நிலம் தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த ஒருவருக்கும் ஆராயிக்கும் இடையில் முன்பகை இருந்தது என்றும் இதைப்போலவே கும்பலாகச் சேர்ந்து செய்யும் பாலின வன்கொடுமைக் குற்றங்கள் அதே பகுதியில் நடந்துள்ளன என்றும் அதன் தொடர்ச்சியாகவும் இருக்கலாம் என்றும் பின்னணி குறித்துக் கூறப்படுகிறது. 

இதில் தலித் அல்லாத குறிப்பிட்ட ஒரு சாதியினர்தான் குற்றவாளிகள்; சாதி மட்டுமே இதில் பிரச்னை என்று பாதிக்கப்பட்டவர் தரப்புக்கு ஆதரிக்கும் விருப்பத்தில், சென்னை போன்ற வெளியூர்களிலிருந்து கருத்துகள் வெளியிடப்பட்டுவருகின்றன. எதிர்த்தரப்பில், பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த சமூகத்துக்கு எதிரான சாதியக்கருத்துகளும் சமூக ஊடகங்களில் சாதியச்சண்டையைப் போல கொட்டப்படுகின்றன. 

வடக்குத் தமிழகத்தின் சாதியப் பதற்றம் சற்றே அடங்கியிருக்கும்நிலையில், தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. கடந்த 20-ம் தேதியன்று இதே மாவட்டத்தின் அத்தியூர் திருக்கை கிராமத்தில் சாதிமறுப்புத் திருமணத்தின் தொடர்ச்சியாக தலித் குடியிருப்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, மிக மோசமானதும் கடும் நடவடிக்கைக்கு உரியதும் ஆகும். வெள்ளம்புத்தூர் படுகொலை, வன்முறை குறித்து விசாரணைநடத்திவரும் காவல்துறை, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே விசாரித்துவருகின்றனர் என்ற விமர்சனமும் பலமாக எழுந்துள்ளது. 

இந்தச் சூழலில், சமூக அக்கறை கொண்ட எழுத்துகளை வெளியிட்டுவரும் கீற்று இணையதளத்தின்  ஆசிரியரான நந்தன், முகநூல் இணையதளத்தில் எழுதிய ஒரு பதிவு, சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கீற்று நந்தன் பெயரில் கடந்த 25-ம் தேதி பதியப்பட்டுள்ள முகநூல் பதிவில், ' கீழ்வெண்மணி படுகொலைக்குக் காரணமான இருஞ்சியூர் கோபாலகிருஷ்ண நாயுடுவைப் பழிதீர்த்த நக்சல்பாரி தோழர்கள் இன்று இருந்திருந்தால், தைலாபுரத்தில் இருந்துதான் தங்கள் பணியைத் தொடங்கியிருப்பார்கள் # விழுப்புரம் படுகொலைகள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

கீற்று நந்தனின் இந்தப் பதிவானது கலவரத்தைத் தூண்டும்விதமாகவும் இரு பிரிவினருக்கிடையே பகைமையையும் வன்முறையையும் ஊக்குவிக்கும்வகையிலும் உள்ளதாகவும் பா.ம.க. சார்பில் சென்னை மாநகர போலீஸிடம் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

புகார் தந்த சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்புச்செயலாளர் மு.ஜெயராமனிடம் பேசினோம்.

“அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தலித் சமுதாயத்தினருக்கும் கோபாலகிருஷ்ணநாயுடுவுக்கும் இடையில் நடந்த பிரச்னையை, விழுப்புரம் சம்பவத்தோடு சம்பந்தப்படுத்தி இருக்கிறார். முதலில் சம்பந்தமில்லாமல் பா.ம.க-வை இதில் கோத்துவிட்டிருக்கிறார். கிராமத்தில் இதைப் படிக்கின்ற இளைஞர்கள் என்ன நினைப்பார்கள்..ஒருவரோடு ஒருவர் பேசி ஏதாவது கலவரம் மூண்டால் யார் பொறுப்பு? இப்படிப்பட்ட அவதூறை யார் உருவாக்குவது என்பதைக் கண்டுபிடித்தாக வேண்டும். நக்சல் என்றெல்லாம் எழுதியிருக்கிறார், இந்த நந்தன்.. இவரே தீவிரவாதியா இருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது. சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் மாநகரப் போலீஸ் ஆணையரகத்தில் புகார் தந்திருக்கிறோம்” என்றார் மு. ஜெயராமன். 

விவகாரம் குறித்துக் கருத்தறிய கீற்று நந்தனைத் தொலைபேசியில் பல முறை தொடர்புகொண்டும், அவரைப் பிடிக்கமுடியவில்லை. 
சாதியம், மதவாதம் போன்றவற்றை யார், எப்படிக் கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அவை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்பதே சமூக உணர்வாளர்களின் அச்சம்!