Published:Updated:

கல்விக் கடனுக்காகத் திண்டாடிய சென்னை திவ்யா, இன்று ஜெனரல் மோட்டார்ஸின் சி.எஃப்.ஒ! #SuccessStory

கல்விக் கடனுக்காகத் திண்டாடிய சென்னை திவ்யா, இன்று ஜெனரல் மோட்டார்ஸின் சி.எஃப்.ஒ! #SuccessStory
கல்விக் கடனுக்காகத் திண்டாடிய சென்னை திவ்யா, இன்று ஜெனரல் மோட்டார்ஸின் சி.எஃப்.ஒ! #SuccessStory

ந்தியாவில் மட்டுமன்றி, உலகம் முழுக்க உள்ள முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் இந்த நிமிடம் உச்சரித்துக்கொண்டிருக்கும் பெயர், திவ்யா சூர்யதேவரா.

யார் இந்த திவ்யா சூர்யதேவரா? அமெரிக்காவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனம், ஜெனரல் மோட்டார்ஸ். சுருக்கமாக ஜி.எம். உலகப் புகழ்பெற்ற `செவர்லே' கார், இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான். இந்த நிறுவனத்தின் மிகமுக்கியமான பதவியான `தலைமை நிதி அதிகாரி'யாக (சிஎஃப்ஓ), செப்டம்பர் மாதம் பதவியேற்க உள்ளார் திவ்யா. இந்த அளவுக்குப் பெரிய மல்ட்டி நேஷனல் கம்பெனி ஒன்றில், முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்கப்போவது நம் திவ்யாதான். யெஸ்! திவ்யா நம்ம சென்னைப் பொண்ணு. சென்னையில் பிறந்து வளர்ந்து, இளநிலை மற்றும் முதுநிலை வணிகவியல் படிப்பையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முடித்தவர். 

இன்று உலகமே கொண்டாடும் திவ்யாவின் இளமைக் காலம் அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை. சிறு வயதில் தந்தையை இழந்தவர். அம்மாவின் அரவணைப்பில்தான் இத்தனை உச்சங்களையும் தொட்டிருக்கிறார். உடன்பிறந்த இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். அப்போதிருந்த குடும்பச் சூழ்நிலையால் சென்னையின் பெரிய கல்லூரிகளில் படிக்கமுடியவில்லை. பிறகு, கல்விக் கடன்பெற்று அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்கச் சென்றார். அங்கே  பட்டயக் கணக்காளராகவும், நிதி ஆய்வாளராகவும் பயிற்சிபெற்ற திவ்யா, யுபிஎஸ் மற்றும் பிரைஸ்வாட்டர் ஹவுஸ்கூப்பர்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார். உலகமே தன்னைத் திரும்பிப் பார்க்கக் காரணமாக இருக்கப்போகும் ஜெனரல் மோட்டார்ஸில் 2005-ம் ஆண்டில் இணைந்தார். அந்த நிறுவனத்தின் பல துறைகளிலும் பணியாற்றியவர், சென்ற வருடம் ஜூலை மாதம், நிறுவனத்தின் கார்ப்பொரேட் ஃபைனான்ஸ் துறையின் வைஸ் பிரசிடென்ட்டாக உயர்ந்தார். 

13 வருடங்கள் ஒரே நிறுவனத்தில் உழைப்பு... வெற்றி... கடுமையான உழைப்பு... அபாரமான வெற்றி எனத் தன் இலக்குகளை, வானத்துக்கு ஏணியாக்கி உழைத்ததன் பலன் ... இன்று, 39 வயதிலேயே, ஃபைனான்ஸியல் ஜாம்பவான்கள் எல்லோரும் அண்ணாந்து பார்ப்பவராக உயர்ந்துள்ளார் திவ்யா.

ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பாரா, ``திவ்யாவின் அனுபவம், இதுவரை எங்கள் நிறுவனத்தின் நிதித் துறையிலும் தொழில் வளர்ச்சியிலும் மிகச்சிறந்த மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. நிதித் துறையின் தலைமைப் பொறுப்புக்குத் திவ்யாவின் வருகை, எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை இன்னும் அதிகப்படுத்தும்'' என்று இப்போதே திவ்யாவின் திறமைக்கு சர்ட்டிஃபிகேட் கொடுத்துவிட்டார்.

திவ்யா, அடிக்கடி நிறுவனங்களை மாற்றும் இயல்பில்லாதவர். பர்சனல் விஷயங்களை வெளியே பகிர்ந்துகொள்கிற இயல்பு திவ்யாவிடம் சுத்தமாகக் கிடையாது.  சமூக வலைதள நடமாட்டமும் இவரிடம் கிடையாது. அமெரிக்காவில் செட்டிலானாலும், இந்திய உணவுகளின் மேல் காதலாக இருப்பவர். திவ்யா பயணங்களின் காதலியும். பணிச் சுமைகளுக்கு மத்தியிலும் சின்ன சின்னப் பயணங்களை ஆரம்பித்துவிடுகிறார்.

பேட்டி ஒன்றில், ``நான் அமெரிக்காவுக்குப் படிக்க வந்தபோது, என் குடும்பம் என்னைவிட்டு வெகுதூரத்தில் இருந்தது. படிக்கவந்த இடத்தில் எனக்கு ஏற்பட்ட கலாசார அதிர்வுகளை என்னால் அம்மாவுடன் பகிர்ந்துகொள்ள முடியாத தூரம். அமெரிக்காவில் படித்த காலத்தில் என்னிடம் தேவைக்கு மிஞ்சி பணம் இருக்காது. மற்றவர்கள் எல்லோரும் ஜாலியாகச் சுற்றுலா போவார்கள். என்னால் அவர்களின் சந்தோஷங்களை பார்க்க மட்டுமே முடியும். அவர்களுடன் இணைந்து செல்ல முடியாது. நான் படிப்பதற்காக வாங்கிய லோனை அடைக்க வேண்டும். அதற்குப் படித்துக்கொண்டே வேலை பார்க்க வேண்டும் என்கிற நிலை'' எனத் தன் ஆரம்ப காலத்தை, மென் சோகத்துடன் நினைவுகூர்கிறார் திவ்யா.

கல்வியும் கடுமையான உழைப்பும் ஒரு பெண்ணை எந்த உயரத்துக்கும் கொண்டுசெல்லும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் நம்ம சென்னை திவ்யா!