Published:Updated:

"என் பொணத்து மேல விழுந்து எங்கம்மா சுத்தமானவங்கனு என் பிள்ளைகள் அழணும்'' - ஒரு வளையல்காரம்மாவின் கதை

"என் பொணத்து மேல விழுந்து எங்கம்மா சுத்தமானவங்கனு என் பிள்ளைகள் அழணும்'' - ஒரு வளையல்காரம்மாவின் கதை

``சொந்த வீடெல்லாம் வெச்சுட்டு ரோட்டுல உட்கார்ந்திருக்கீங்களே. பிள்ளைகள், வீட்டுக்காரர் எல்லாம் எங்கே?'' என்றதும், விலுக்கென நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார்.

"என் பொணத்து மேல விழுந்து எங்கம்மா சுத்தமானவங்கனு என் பிள்ளைகள் அழணும்'' - ஒரு வளையல்காரம்மாவின் கதை

``சொந்த வீடெல்லாம் வெச்சுட்டு ரோட்டுல உட்கார்ந்திருக்கீங்களே. பிள்ளைகள், வீட்டுக்காரர் எல்லாம் எங்கே?'' என்றதும், விலுக்கென நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார்.

Published:Updated:
"என் பொணத்து மேல விழுந்து எங்கம்மா சுத்தமானவங்கனு என் பிள்ளைகள் அழணும்'' - ஒரு வளையல்காரம்மாவின் கதை

சொல்லப்பட்ட கதைகளைவிட, சொல்லப்படாத கதைகளின் பெரு வலிகளை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா? அந்த வளையல்கார அம்மாவின் கதை அப்படிப்பட்டது. அழகானப் பெண்கள், யுக யுகமாக அனுபவித்து வரும் ஆதி வலிகளில் அதுவும் ஒன்று.

அயனாவரம், மேடவாக்கத்தை ஒட்டிய சிறிய சந்து, குட்டியப்பன் தெரு. இரண்டு டூவீலர்கள் எதிரும் புதிரும் சென்றால், ஒருவர் விட்டுக்கொடுத்து நின்றால் மட்டுமே செல்லமுடியும். அந்தத் தெருவின் ஒரு வீட்டு வாசலில் தார்ப்பாய் விரித்து, அதன்மேல் அடுக்கிய விதவிதமான கண்ணாடி வளையல்கள், ஒரு பிரம்புக்கூடை சகிதம் உட்கார்ந்துகொண்டிருந்திருந்தார் அறுபதுகளில் இருக்கும் அந்த அம்மா. கிளி கொஞ்சும் அழகு என்று போன தலைமுறை அம்மாக்கள் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? அந்த வளையல்கார அம்மாவை பார்த்ததும், அந்த வாசகம்தான் மனதுக்குள் ஓடியது. வெடித்த வெள்ளரியின் நிறம், லேசான பவுடர் பூச்சு, நடு நெற்றியில் குங்குமப்பொட்டு, கொண்டையில் செருகப்பட்ட ஒரேயொரு குண்டு மல்லி. அந்த அழுக்குத் தெருவுக்கும் அவர் உட்கார்ந்திருந்த தார்ப்பாய்க்கும் ஒட்டாமல் இருந்தவரிடம், 'ஆஷ் கலர் வளையல் இருக்குங்களாம்மா?' என்று பேச்சுக் கொடுத்தேன்.

``நீயே வந்து பார்த்து எடுத்துக்கோடா'' என்றவர், கூடையில் இருந்த மிச்ச வளையல்களையும் எடுத்துக்காட்ட ஆரம்பித்தார். ஆஷ் கலர் வளையல்களைத் தேடியபடியே, ``இந்தக் கடையை மெயின் ரோட்டுல போட்டா  நல்லா வியாபாரம் நடக்குமே'' என்றேன். 

``நடக்கும்தாண்டா. இங்கே பக்கத்துலேயே என் சொந்த வீடு இருக்கு. எல்லாரும் தெரிஞ்சவங்க. அதான், இங்கேயே 40 வருஷமா வளையல் வியாபாரம் பண்ணிட்டிருக்கேன்'' என்றார் சாதாரணமாக. 

``சொந்த வீடெல்லாம் வெச்சுட்டு ரோட்டுல உட்கார்ந்திருக்கீங்களே. பிள்ளைகள், வீட்டுக்காரர் எல்லாம் எங்கே?'' என்றதும், விலுக்கென நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார். ``எங்கம்மா வாங்கிக் கொடுத்த கால் கிரவுண்ட் வீடு இருக்கு, வாசல் இருக்கு. ஆறு ஆம்பிளைப் புள்ளைக கல்யாணமாகி மருமக, பேரன், பேத்தி எல்லாம் இருக்காங்க. வீட்டுக்காரரும் இருக்கார். ஒத்த பொம்பளைப் புள்ள இல்லாத பாவிம்மா நானு. அதான் இப்படிக் கிடக்கிறேன்'' என்றவர், தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள, சட்டென என் கைகளை இறுகப் பிடித்து வளையல்களை மாட்ட ஆரம்பித்தார். அவரையும் மீறி சில கண்ணீர்த் துளிகள், வளையல்கள் மீது விழுந்து, என் கைகளில் தெறித்தன.

``என் பேரு அலமேலு. இந்த அயனாவரத்துல வளையல்கார அம்மான்னு சொன்னா  எல்லாருக்கும் தெரியும். இது கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த ஊரும்மா. பொறந்தது திண்டிவனம் பக்கத்துல தீவனூர். எங்க  வீட்டுல அஞ்சுப் பொண்ணுங்க. வறுமை தாங்கமுடியாம 13 வயசுல, நுங்கம்பாக்கத்துல இருக்கிற மாமா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. மாமாவின் குழந்தைகளைப் பார்த்துக்கிற வேலை எனக்கு. ரெண்டு வருஷம் இப்படியே ஓடுச்சு. 15 வயசுல கல்யாணம். அந்த வயசுல கல்யாணம், புருசன் பற்றி என்ன தெரியும்? பிடிக்காமத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அடி, உதையோடு ஆறு புள்ளைகளைப் பெத்து வாழ்க்கை ஓட ஆரம்பிச்சது. ஆம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்கன்னு பொறுத்துக்கிட்டேன். ஆனா, மனுஷனுக்குப்  புத்தி முழுக்க சந்தேகம்தாண்டா. பார்க்க நெறமா, களையா இருக்கிறது என் தப்பா? பொழுது விடிஞ்சு பொழுது போனா சந்தேகம்தான். பால்காரன், காய்கறிக்காரன் ஒருத்தன் பாக்கியில்லாம சேர்த்துவெச்சு காது கூச திட்டுவார். வறுமையைப் பொறுத்துக்கலாம்; வார்த்தைகளை எப்படிப் பொறுத்துக்கிறது? ஒருதடவை தூக்கு மாட்டிக்க கயிறை உத்திரத்துல கட்டிட்டேன். தலையை  மாட்டிக்கிற நேரத்துல என் அம்மா வந்துடுச்சு. `புள்ளைக முகத்துக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கோடி'னு சொல்லுச்சு. மனசை தேத்திட்டு, `போய்யா நீயும் உன் சோறும்'னு வீட்டு வேலை, வளையல் வியாபாரம்னு என் வயித்துப் பாட்டை நானே பார்த்துக்க ஆரம்பிச்சுட்டேன். பொறந்த குழந்தைகளுக்கு தண்ணி ஊத்தறது, உரம் எடுக்கிறதுகூட செய்வேன்'' என்றபடி  கண்களை அழுந்த துடைத்துக்கொள்கிற அலமேலு அம்மா, ஒரே வீட்டுக்குள் வசித்தாலும் இன்று வரைக்கும் கணவரையோ, பிள்ளைகளையோ எதிர்பார்க்காமல், தன் சாப்பாட்டுக்குத் தேவையானதை தானே சம்பாதித்துக்கொள்கிறார். 

``இன்னொரு விஷயம் சொன்னா நம்ப மாட்டே. நான் சினிமாவிலும் நடிச்சிருக்கேன். எங்க ஊர்க்கார பையன் ஒருத்தன், சன் டி.வி.யில வேலை பார்க்கிறான். அவன் மூலமா 'குவியம்'னு ஒரு படத்துல அம்மாவா  நடிச்சேன். 'சின்னதம்பி', 'அவளும் நானும்', 'பிரியமானவளே' சீரியல்களிலும் ஹாஸ்பிடல்ல நடந்துபோற மாதிரி, தாம்பாளத்தட்டு வெச்சுட்டு நிக்கிற மாதிரி சின்னச் சின்ன ரோல் நடிச்சிருக்கேன். இதெல்லாம் என் வீட்டுக்காரருக்கும் தெரிஞ்சுதான் இருக்கும். 65 வயசுக்கு மேலேயும் பொண்டாட்டியைச் சந்தேகப்படும் ஆம்பளைக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்'' என்றார் கோபத்துடன்.

``உங்க பிள்ளைகள் அப்பாவைக் கண்டிக்க மாட்டாங்களா'' எனக் கேட்டால், ``புள்ளைகளை ஒண்ணும் சொல்லக்கூடாதும்மா. அதுங்க பாவம். எந்நேரமும் அம்மாவைச் சந்தேகப்பட்டு, கெட்ட வார்த்தை சொல்லி திட்டின   அப்பாவைப் பார்த்து வளர்ந்ததுங்க. அதுங்களுக்கு என்ன தெரியும்? நீ யார் பெத்த பிள்ளையோ. நான் பெத்த பொண்ணா நினைச்சு சொல்றேன். நான் செத்துட்டா, என் ஆறு புள்ளைகளும் 'எங்கம்மா சுத்தமானவ'னு சொல்லி என் மேல விழுந்து அழணும். அப்பத்தான் என் கட்டை வேகும்'' என்றவரின் குரலில், இன்னும் சொல்லப்படாத கதைகள் நிறைய இருப்பதாகவே தோன்றியது.