மதுரையைச் சேர்ந்த முதல் பெண் பைலட் காவ்யாவுக்கு இன்று மதுரையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரையில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் காவ்யா. அரசுப் பேருந்து ஓட்டுநர் ரவிக்குமார் - கல்பனா தம்பதியின் மகளான இவர் மதுரை டி.வி.எஸ் பள்ளியில் படிக்கும்போதே தான் பைலட்டாகப் போகிறேன் என்று சக மாணவர்களிடம் கூறி வந்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே மாறுபட்ட துறையை எதிர்காலத்தில் தேர்வு செய்ய வேண்டுமென்ற லட்சியத்தில் இருந்தவர், விமான பைலட்டாக விரும்பினார். மகளின் கனவை நனவாக்க அவரின் பெற்றோர்கள் கடன் வாங்கி பெங்களூர் அருகில் உள்ள பயணிகள் விமான பயிற்சிக் கல்லூரியில் சேர்த்தனர். அதற்காக பல லட்சங்கள் கடன்பட்டனர். பின்பு மத்திய அரசு உதவித்தொகை வழங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முதலில் பயிற்சியாளர் துணையுடன் விமானத்தை எடுத்தவர், பின்பு தனியாக விமானத்தை ஓட்டி பாராட்டைப் பெற்றார். 200 மணி நேர பயிற்சியை முடித்து முதல்கட்டத் தேர்வில் தேறினார். தொடர்ந்து மற்ற பயிற்சிகளையும் முடித்து, தற்போது அங்கேயே பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். சவாலான துறையில் பயிற்சியை முடித்து விமானியாக அங்கீகரிக்கப்பட்டு இன்று மதுரைக்கு திரும்பியவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.