Published:Updated:

''இடது கையை உடைச்சுட்டார்.. வலது கையாலதான் ஸ்டார்ட் பண்றேன்!'' - ஆட்டோ டிரைவர் சுசீலா

`நீயெல்லாம் எதுக்கு ஆட்டோ ஓட்டறே. வீட்டு வேலைக்குப் போகவேண்டியதுதானே'னு கேலி பண்ணாங்க.

''இடது கையை உடைச்சுட்டார்.. வலது கையாலதான் ஸ்டார்ட் பண்றேன்!'' - ஆட்டோ டிரைவர் சுசீலா
''இடது கையை உடைச்சுட்டார்.. வலது கையாலதான் ஸ்டார்ட் பண்றேன்!'' - ஆட்டோ டிரைவர் சுசீலா

காலை 7.55... சென்னைக் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அந்தப் புகழ்பெற்ற பள்ளிக்கூட வாசலில் வரிசையாக ஆட்டோக்களும் வேன்களும் வந்து நிற்கின்றன. அவற்றின் உள்ளேயிருந்து வண்ண வண்ணப் பூக்களாக இறங்குகிறார்கள் குழந்தைகள். மற்ற வண்டிகளிலிருந்து குழந்தைகள் புத்தகப்பை மற்றும் லன்ச் பேக்குடன் இறங்க, சுசீலாவின் ஆட்டோவிலிருந்து மட்டும் கையில் சின்னச் சின்னப் பூக்களுடனும் முகம் முழுக்கச் சிரிப்புடனும் இறங்குகிறார்கள். ஒரு நாள், இரு நாள் அல்ல, தொடர்ந்து மூன்று வருடங்களாக இந்த நிகழ்வைப் பார்க்கிறேன். அன்றும் அப்படித்தான் வழக்கமான சிரிப்புடன் நகர முயன்றவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

``நான் அஞ்சு வருஷமா ஆட்டோ ஓட்டிட்டிருக்கேங்க" என வெகுநாள் பழகியவர்போல பேச ஆரம்பித்த சுசீலாவின் கதை, பெண்களின் தன்னம்பிக்கைக்கு இன்னுமொரு சான்று.

``என் வீட்டுக்காரர் லாரி டிரைவர். சம்பாதிக்கிறதை குடிச்சே அழிச்சாரு. வீட்டுச் செலவுக்கு ஒத்த ரூபா தர மாட்டாரு. இந்த லட்சணத்துல ஒரு பெண் குழந்தை பொறந்துச்சு. வேற வழியில்லாம ஒரு டைல்ஸ் கடையில் வேலைக்குப் போனேன். அங்கே கிடைச்ச சம்பளத்துல வீட்டு வாடகை, வயித்துக்கு ஒரு வேளை சாப்பாடுன்னு நானும் குழந்தையும் வாழ்க்கையை ஓட்டினோம். சில நாள் அதுவும் இருக்காது. கைப்பிடி அரிசியில் பொண்ணுக்குச் சோறாக்கி வெச்சுட்டு வேலைக்குப் போயிடுவேன். என் வயித்துக்குப் பட்டினி பழகிப்போன விஷயம்மா. பல நாள் தண்ணியைக் குடிச்சு பசியை அடக்கிப்பேன். அப்படியும் தாங்க முடியலைன்னா, சிங்கிள் டீ குடிச்சுப்பேன். கையில இருக்கிற காசுக்கு அதுதான் முடியும்" என நீண்ட பெருமூச்சுடன், கண்ணீரை கண்களுக்குள்ளேயே நிறுத்துகிறார்.

``பகல் முழுக்க டைல்ஸ் கடையில் வேலை செஞ்சுட்டு வருவேன். ராத்திரியானா குடிச்சுட்டு வர்ற புருஷன்கிட்ட அடி, உதை வாங்குவேன். அந்த ஆளோடு வாழ்ந்த காலம் மொத்தமும் நரகம்தான். ஒருதடவை போதையில் என் இடது கையை அப்படியே எதிர்பக்கமா வளைச்சுட்டாரு. கை உடைஞ்சு தொங்கிப்போச்சும்மா. அந்தக் கையை இந்தக் கையால் தாங்கிப் பிடிச்சுட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். அஞ்சு வருசத்துக்கு முன்னாடி செத்துப் போயிட்டாரு. அப்போ என் பொண்ணு பத்தாவது படிச்சுட்டிருந்தா. மனசும் உடம்பும் அந்தாளுகிட்ட அடி வாங்கி அடி வாங்கி மரத்துப் போயிருந்ததால, கண்ணைத் துடைச்சுட்டு டைல்ஸ் கடை, என் பொண்ணு என வாழ ஆரம்பிச்சேன்" என சோகம் புதைத்து, புன்னகை சிந்துகிறார்.

சரி, ஆட்டோ ஓட்ட வந்தது எப்படி?

 ``பசி தாங்கமுடியாம டீ குடிப்பேன்னு சொல்லியிருந்தேன் இல்லையா? அப்படி அடிக்கடி டீ குடிக்கப் போகும்போது, அந்த ஆட்டோக்கார அண்ணனைப் பார்ப்பேன். என் கஷ்டத்தைப் பார்த்துட்டு, `ஆட்டோ ஓட்ட கத்துக்கிறியாமா? மூணு வேளை திருப்தியா சாப்பிடலாம்'னு சொன்னார். எனக்கு ஆட்டோ ஓட்டவும் கத்துக்கொடுத்தார். நானும் கத்துக்கிட்டு, வாயைக் கட்டி வயித்தைக் கட்டிச் சேர்த்துவெச்ச காசை முதலா போட்டு டியூவுல ஒரு ஆட்டோ வாங்கிட்டேன். சவாரி ஓட்டவும் ஆரம்பிச்சுட்டேன். மத்த ஆட்டோ டிரைவருங்க மாதிரி சீட்ல உட்கார்ந்துட்டே, இடது கையால கிக்கரைத் தூக்கி ஸ்டார்ட் பண்ண முடியாது. அந்தக் கையைத்தான் என் வீட்டுக்காரர் உடைச்சுட்டாரே. கொஞ்சம் கஷ்டமான வேலை செஞ்சாலும் அந்தக் கை வலியில் உசுரு போகும். அதனால், ஆட்டோவை தெருவோரமா நிறுத்தி, வலது கையாலதான் ஸ்டார்ட் பண்ணுவேன். 

ஒரு தடவை நடுத்தெருவுல ஆட்டோ நின்னுடுச்சு. டக்குனு ஸ்டார்ட் பண்ண முடியலை. பின்னாடி வண்டிங்க கீ.. கீ...ன்னு ஹாரன் அடிச்சு திட்டறாங்க. அழுதுட்டே ஆட்டோவை தெருவோரமா  தள்ளிட்டுப்போய் ஸ்டார்ட் பண்ணினேன். அங்கே நின்னுட்டிருந்த மத்த டிரைவருங்க, `நீயெல்லாம் எதுக்கு ஆட்டோ ஓட்டறே. வீட்டு வேலைக்குப் போகவேண்டியதுதானே'னு கேலி பண்ணாங்க. அப்போ நான் அழுதுட்டிருந்ததைப் பார்த்த வயசான ஒரு ஆட்டோ டிரைவர், `இந்த மாதிரி கேலிக்கு பயந்துடாதே தாயி. கண்ணைத் துடைச்சுட்டு சவாரி தேடி கிளம்பு'னு சொன்னாரு. அவர் கொடுத்த தைரியத்தை இன்னிக்கும் கைவிடலை'' எனக் குரல் உடைந்து அழ ஆரம்பித்த சுசீலா, சட்டெனக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தொடர்கிறார்.

ஒரு பயணியாக அறிமுகமான தமயந்தி என்பவரே, தன்னுடைய இன்றைய நல்ல நிலைமைக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டுகிறார் சுசீலா. பயணியாக சுசீலாவின் ஆட்டோவில் ஏறிய தமயந்தி, பள்ளிக்கூடத்தில் படிக்கும் தன் மகளை சுசீலாவின் ஆட்டோவில் அனுப்ப ஆரம்பித்திருக்கிறார். தமயந்தியைப் பார்த்துவிட்டு, மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை சுசீலாவின் ஆட்டோவில் அனுப்ப ஆரம்பிக்க... சுசீலாவின் வாழ்க்கை இன்று சற்று நல்ல நிலையை எட்டியுள்ளது. மகள் ஸ்ருதி இப்போது, பி.எஸ்சி மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருக்கிறார். 

``இந்தக் குழந்தைகளை தினமும் கூட்டிட்டு வரும்போது என் சோகத்தை எல்லாம் மறந்துடுவேன். என் வீட்டுப் பக்கத்துல, வர்ற வழியில கிடக்குற செடிகளிலிருந்து பூக்களைப் பறிச்சுட்டு வந்து இவங்களுக்குக் கொடுப்பேன். சரிம்மா, நேரமாகுது நான் வரேன்'' என்றபடி, வலது கையால் கிக்கரை ஸ்டார்ட் செய்து அடுத்த பள்ளிக்கூட சவாரிக்குக் கிளம்புகிறார் சுசீலா.