Published:Updated:

``குழந்தைகளுக்குப் போர்வையான புடவை... வெள்ள நீரில் கலந்த உதிரப்போக்கு... கொட்டும் மழையில் ஒருநாள்!" கண்ணீரில் கேரளப் பெண்கள்

``குழந்தைகளுக்குப் போர்வையான புடவை... வெள்ள நீரில் கலந்த உதிரப்போக்கு... கொட்டும் மழையில் ஒருநாள்!" கண்ணீரில் கேரளப் பெண்கள்
``குழந்தைகளுக்குப் போர்வையான புடவை... வெள்ள நீரில் கலந்த உதிரப்போக்கு... கொட்டும் மழையில் ஒருநாள்!" கண்ணீரில் கேரளப் பெண்கள்

``அன்று மாலை வரை மழையில் நின்றிருந்தோம். வானில் ராணுவ ஹெலிகாப்டரைக் கண்டதும் உரக்கக் கத்தினோம். கயிற்றில் தொங்கியபடி ஒரு வீரர் எங்களை நெருங்கி வந்து மீட்டார்."

`கடவுளின் தேசம்' கேரளா, கண்ணீரும் கதறலிலும் மிதக்கிறது. நூற்றாண்டில் காணாத மழை வெள்ளத்தால் இந்த அழகு தேசம்  முற்றிலுமாக நிலைகுலைந்துள்ளது. மாநிலத்தின் அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால், உபரிநீர் திறப்பு இன்னும் நிறுத்தப்படவில்லை. ஏராளமான கிராமங்களையும் லட்சக்கணக்கான வீடுகளையும் சூழ்ந்திருக்கும் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. கேரளாவுக்காக ஒட்டுமொத்த நாடும் வேண்டுகிறது; உதவிக்கரம் நீட்டுகிறது. தன் அழகை மீண்டும் மீட்டெடுக்க, கேரளாவுக்கு மனிதநேயம் உதவுகிறது. வெள்ள நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், மாநிலத்தில் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கும் திருச்சூர் மாவட்டத்தின் வடக்காஞ்சேரியைச் சேர்ந்த கிரேஸி, வெள்ளத்திலிருந்து தப்பித்த `திக் திக்' தருணங்களைப் பகிர்கிறார். 

``கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, கேரள மாநிலத்தில் மழையின் தீவிரம் அதிகமானபோது எங்கள் வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. வீட்டுக்குள் பாம்பு, பூரான் என விஷ ஜந்துகள் வந்துவிட்டன. அது இரவு நேரம். மின்சாரமும் இல்லாததால் உடனடியாக உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, மொட்டை மாடிக்குப் போனோம். என்னுடன் என் இரு குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் இருந்தார்கள். எங்கள் மாவட்டத்தில் வாழனி அணை, பீச்சி அணை, பெருங்கல்குத்து அணை மூன்றும் நிரம்பிவிட்டன. உபரிநீர் திறப்பு அதிகமானதால், வெள்ளம் பெருமளவில் ஊரைச் சூழ்ந்துவிட்டது. விடிய விடிய மொட்டை மாடியில் மழையில் நனைந்தவாறே நின்றிருந்தோம். விடிந்ததும் மாடியிலிருந்து எட்டிப் பார்த்தால், வீட்டின் முதல் தளம் வரை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள், டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மின்விசிறிகள், பீரோ, சிலிண்டர், உடைகள் என எல்லாமே அடித்துச்செல்லப்படுவதைப் பார்த்தோம். நாங்கள் அன்பாகவும் ஆசையாகவும் வளர்த்த கால்நடைகளும் செல்லப் பிராணிகளும் உயிரற்ற சடலமாகச் சென்றதைப் பார்த்துக் கதறினோம். எங்களைப் போலவே அருகிலுள்ள வீடுகளின் மொட்டை மாடிகளிலும் பலர் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

உணவில்லை; உடையில்லை; குடிநீரில்லை; போர்த்திக்கொள்ளப் போர்வையில்லை. குளிரில் என் குழந்தைகள் நடுங்கினர். என் புடவையை குழந்தைகளுக்குப் போர்த்தினேன். மழைநீரே குடிநீரானது. என்னுடன் இருந்த ஒரு பெண்ணுக்கு நாப்கின் இல்லாததால், நீருடன் உதிரமும் சென்றுகொண்டிருந்தது. வலியில் அந்தப் பெண் துடித்த நிகழ்வை வார்த்தைகளில் எப்படி விவரிக்க முடியும். எங்கள் உடல் நடுங்குகிறது. வார்த்தைகள் வரவில்லை; மேல் மற்றும் கீழ்த்தாடைப் பற்கள் குளிர் நடுக்கத்தில் மோதிக்கொள்ளும் சத்தத்தை மட்டுமே கேட்க முடிந்தது. அன்று மாலை வரை மழையில் நின்றிருந்தோம். வானில் ராணுவ ஹெலிகாப்டரைக் கண்டதும் உரக்கக் கத்தினோம். கயிற்றில் தொங்கியபடி ஒரு வீரர் எங்களை நெருங்கி வந்து மீட்டார். ஹெலிகாப்டரில் நுழைந்ததும் தண்ணீரும் உணவுப் பொருள்களையும் கொடுத்தார்கள். நான் உட்பட சில பெண்கள் எதையும் சாப்பிடவில்லை. சிறிது நேரத்தில் எங்களை அருகிலுள்ள ஒரு தேவாலயத்தில் இறக்கிவிட்டார்கள். முதலில் கழிவறைக்கு ஓடி சிறுநீர் கழித்தோம். அப்போதுதான் வயிற்று வலியே குறைந்தது. பிறகுதான் சாப்பிட்டோம்" எனக் கண்ணீர் ததும்பக் கூறுகிறார் கிரேஸி.

மரணத்தைக் கண்முன்னே கண்ட அதிர்ச்சியிலிருந்து மீளாத ஜோஸ்மியா, ``திருச்சூர் மாவட்டத்தில் குறாஞ்சேரி மலைப்பகுதியில் வசிக்கிறேன். எங்களுடையது சற்று மேடான பகுதி என்பதால், தாமதமாகத்தான் வெள்ளம் சூழ்ந்தது. எங்களை மீட்க, மீட்புக் குழுவினர் வந்தார்கள். படகு உயரமாக இருந்ததால், தங்கள் முதுகைப் படிக்கட்டாக்கி எங்களைப் படகில் உட்காரவைத்தார்கள். படகில் இருந்தவாறே சற்றுத் தொலைவில் மலைச்சரிவு ஏற்படுவதைப் பார்த்தோம். அந்த இடத்திலிருந்த மூன்று வீடுகளில் 22 பேர் இருந்தார்கள். அவர்களால் சற்றும் தப்பிக்க வழியில்லை. அதிர்வில் அந்த வீடுகள் ஆட்டம் காண்பதைப் பார்த்து, என்னவாகுமோ என பயந்துகொண்டே இருந்தோம். தண்ணீரும் அந்த வீட்டின் மீது வேகமாக மோதியபடி சென்றது.

சற்று நேரத்தில் மூன்று வீடுகளும் நிலத்தில் மூழ்கின. `ஏசப்பா... ஏன் இப்படி மக்களைத் தண்டிக்கிறீர்கள்?' என்ற அழுகையை நிறுத்த நீண்ட நேரமானது. 22 பேரில், 18 பேர் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டிருக்கிறதாம். நால்வர் உடலைக் காணவில்லை. நிவாரண முகாமுக்கு வரும் வழியில் நீரில் பல சடலங்களைப் பார்த்தேன். இதெல்லாம் எங்கள் கேரள தேசத்தில்தான் நடக்கிறது என்பதை இன்னும் நம்ப முடியவில்லை.

இப்போது மழை நின்றுவிட்டது. வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிகிறது. முழுமையாக வெள்ளம் வடிந்த பிறகுதான் வீட்டுக்குச் சென்று சேதங்களைப் பார்க்க முடியும். எங்கள் வாழ்க்கையை ஜீரோவிலிருந்து தொடங்கியாக வேண்டும் என்பது நிதர்சனம். இன்னும் மின்சார வசதிகள் சீராகவில்லை. செல்போன் டவரும் கிடைக்கவில்லை. என் சொந்தங்கள், எர்ணாகுளம் மாவட்டம் ஆழுவா, பருவூர், செங்கணூர் போன்ற அதிக நீர் சூழ்ந்த பகுதிகளில் இருக்கிறார்கள். அங்கே பாதிப்புகள் மிக அதிகம். மீட்புக் குழுக்களால், அந்தப் பகுதிகளுக்குப் பெரிதாகச் செல்ல முடியவில்லை. அருகிலுள்ள மருத்துவமனையில் வெள்ளம் அதிகம் சூழ்ந்ததால், அங்கிருந்த நோயாளிகளை நாங்கள் தங்கியிருக்கும் பள்ளிக்குக் கொண்டுவந்து சிகிச்சை அளிக்கிறார்கள். அந்த மனவேதனையான காட்சிகளைப் பார்த்தவாறு எங்கள் பொழுதுகள் கழிகின்றன.

நிறைய உதவிகள் கிடைக்கின்றன. உதவி செய்த, செய்யவுள்ள எல்லோருக்கும் நன்றி. இன்னும் உதவிகளை வேண்டுகிறோம். வரும் 25-ம் தேதி ஓணம் திருநாள். புத்தாடை, பலகாரம், உறவினர்கள், நண்பர்கள் என ஓணத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம். கடந்த வாரம், `அத்தப்பூ' திருநாளுடன் பண்டிகை தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் வண்ண வண்ண கோலங்கள் இடுவோம். ஆனால், அன்றைய தினம் மழை வெள்ளத்தில் தவித்தோம். எல்லா மதத்தினரும் ஒற்றுமை உணர்வுடன் கொண்டாடும் பண்டிகை. ஆனால், எங்கள் மாநில மக்கள் வாழ்நாளில் இப்படி ஒரு பண்டிகையைச் சந்தித்ததில்லை. இனி சந்திக்கவும் கூடாது. தற்போது எங்களுக்கு மாற்றுத்துணிகூட இல்லாமல் குழந்தைகளை அணைத்தபடி இருக்கிறேன்'' என்கிறார்.

அழகிய தேசத்தை பழைய பொலிவுடன் மீட்டெடுக்க, கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்!
 

அடுத்த கட்டுரைக்கு