Published:Updated:

தன்னுடைய பிரசவத்துக்கு சைக்கிளில் சென்ற அமைச்சர் ஜூலி..!

ஜூலிக்கு முன்பாக, கடந்த ஜூன் மாதம், நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) பதவியில் இருக்கும்போதே குழந்தையைப் பெற்றெடுத்தார்.

தன்னுடைய பிரசவத்துக்கு சைக்கிளில் சென்ற அமைச்சர் ஜூலி..!
தன்னுடைய பிரசவத்துக்கு சைக்கிளில் சென்ற அமைச்சர் ஜூலி..!

ழகான இல்லற வாழ்க்கையின் பரிசு, `தாய்மை'. ஒவ்வொரு பெண்ணும் தாய்மையின் இன்பத்தைக் கர்ப்பகாலத்தில் உணர்வர். ஓர் உயிரைப் பத்திரமாக இந்த உலகத்துக்குக் கொண்டுவரும் பெரும் பொறுப்புடன், வலிகளை எல்லாம் புன்னகையுடன் கடப்பார்கள். அந்த நேரத்தில் தன்னை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும் எனக் கவனமாக இருப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் பெண்களுடைய ஆரோக்கியத்தில் ஏற்படுகின்ற பிரச்னைகளால் சிசேரியன் என்பது சுலபமாகி விட்டது. இருந்தாலும், `சுகப்பிரசவம்' என்பதுதான் அவர்களுடைய உயர்ந்தபட்ச ஆசை.

சுகப்பிரசவம் சாத்தியமாக வீட்டு வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டு செய்வார்கள். பிரசவ நாள் வரையிலும் யோகா போன்ற உடற்பயிற்சியைச் செய்வதுண்டு. குறிப்பிட்ட மாதத்துக்குப் பிறகு பயணம் செய்யலாம் என்றாலும், கவனமாக இருக்க வேண்மென தவிர்ப்பார்கள். அப்படி இருக்கையில், சைக்கிளை தானே ஓட்டிச்செல்வதை நினைத்துப் பார்க்க முடிகிறதா. ஆனால், முடியும் எனத் தைரியம் கொடுத்திருக்கிறார் ஜூலி. அதிலும் இவர் சாதாரண பெண் அல்ல.

நியூசிலாந்து நாட்டின் பெண்கள் நலத்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து இணை அமைச்சரான, ஜூலி அன்னி ஜென்டர் (Julie Anne Genter) தன்னுடைய பிரசவத்துக்கு சைக்கிளிலேயே சென்றது, சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புஉணர்வுகளை பொதுமக்களிடம் முன்னெடுத்து வருபவர் ஜூலி. அதற்கான முன்னுதாரணமாக, மாசுபாடு இல்லாத சைக்கிள் பயணம் மூலம் தன்னுடைய பிரசவத்துக்குச் சென்றுள்ளார். அவருக்குப் பக்கபலமாக கணவர் பீட்டரும் அவருடன் சைக்கிள் ஓட்டிச்சென்றிருக்கிறார். 

42 வார கர்ப்பிணியாக இருந்த ஜூலி, தன்னுடைய வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆக்லாந்து சிட்டி மருத்துவமனைக்கு சைக்கிள் ஓட்டிச்சென்றுள்ளார். அழகான ஆண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். 4.3 கிலோ எடையுடன் இருக்கும் தன் குழந்தையுடன் இன்ஸ்டாகிராமில், `பல நேர காத்திருப்புக்குப் பின்னர் எங்களுக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்துள்ளது' எனப் பதிவிட்டுள்ளார்.

வெளிநாட்டுச் சாலைகளுக்கு இந்த மாதிரியான பிரசவம் சாத்தியம். நம் நாட்டின் குண்டும் குழியுமான சாலைகளில் இந்த மாதிரியான பிரசவம் சாத்தியமில்லை என நெட்டிசன்களின் கலாய்ப்பு ஒரு பக்கம். `இதுபோன்ற விஷயத்தில் அவசரப்பட்டுத் தவறு செய்துவிடக் கூடாது. எனினும், பெரிய பதவியில் இருந்தாலும் மக்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஜூலி செய்திருக்கும் இந்தச் செயல் பாராட்டுக்குரியது' என்கிற வாழ்த்து இன்னொரு பக்கம் என டிரெண்டாகி இருக்கிறார் ஜூலி.

ஜூலிக்கு முன்பாக, கடந்த ஜூன் மாதம், நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) பதவியில் இருக்கும்போதே குழந்தையைப் பெற்றெடுத்தார். அவர் குழந்தை பெற்ற அதே மருத்துவமனையில்தான் ஜூலிக்கும் குழந்தை பிறந்துள்ளது. தற்போது, சமூக வலைதளங்களில் இருவரையும் ஒப்பிட்டு பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ஜூலியின் இந்தச் செயலால் பல கர்ப்பிணி பெண்கள், `நாங்களும் இந்த முயற்சியில் ஈடுபடுகிறோம். ஜூலி... நீங்கள் எங்களுடைய ரோல் மாடல்' எனப் பாராட்டியுள்ளனர். அதேநேரம், `அடுத்த குழந்தையின் பிரசவத்துக்கும் இதேபோல சைக்கிளில் பயணம் செய்யாதீர்கள். இது எந்நேரம் வேண்டுமானாலும் ஆபத்தாக முடியலாம். இந்த மாதிரியான காரியங்களை விடுமுறை நாள்களில் செய்துகொள்ளுங்கள். பிரசவ நாள்களில் வேண்டாம்' எனவும் பலர் அக்கறையுடன் பதிவிட்டுள்ளனர்.