Published:Updated:

கால்களை இழந்த காதலனைக் கரம்பிடித்த ஷில்பா இப்போது எப்படி இருக்கிறார்? #VikatanExclusive

கால்களை இழந்த காதலனைக் கரம்பிடித்த ஷில்பா இப்போது எப்படி இருக்கிறார்? #VikatanExclusive
கால்களை இழந்த காதலனைக் கரம்பிடித்த ஷில்பா இப்போது எப்படி இருக்கிறார்? #VikatanExclusive

கால்களை இழந்த காதலனைக் கரம்பிடித்த ஷில்பா இப்போது எப்படி இருக்கிறார்? #VikatanExclusive

ந்து மாதங்களுக்கு முன்பு, ரயில் விபத்து ஒன்றில் கால்களைப் பறிகொடுத்த காதலன் விஜய்யை, அரசு மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்ட ஷில்பாவை ஞாபகம் இருக்கிறதா. அந்தக் காதல் தம்பதியர் தற்போது எப்படி இருக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள வேலூரை அடுத்த வாணியம்பாடியில் இருக்கும் விஜய் அம்மாவைத் தொடர்புகொண்டேன். மகனைப் பற்றி விசாரித்ததும், உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார். 

``ஒரு கால் ரயிலோடு போய்விட, இரண்டாக உடைந்து தொங்கிப்போன இன்னொரு காலுக்கு வேலூர் மருத்துவமனையில் இரும்பு பிளேட் வைத்து அறுவைசிகிச்சை செஞ்சாங்க. அந்த ஆபரேஷன் ஃபெயிலானதால், ரத்த ஓட்டம் இல்லாமல், முட்டிக்குக் கீழே வரைக்கும் நீக்கிட்டாங்க. என் புள்ளை இப்பவும் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியிலதான் இருக்கான். நான் இங்கே வேலை பார்த்தாதான் அடுப்பு எரியும். அதனால், சென்னைக்கு மாசத்துக்கு ரெண்டு தடவைதான் போகமுடியுது. நீ ஒரு எட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் புள்ளையையும் மருமவளையும் பார்த்துட்டு வர்றியாம்மா' என்றார் அழுகை கலந்த குரலில். 

உடனே கிளம்பினேன். வார்டை கண்டுபிடித்து உள்ளே நுழைந்தால், படுக்கையில் அமர்ந்தபடி தன் காலில் கசியும் ரத்தத்தைத் துடைத்துக்கொண்டிருந்தார் விஜய். என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்தவர், ``வாங்க... வாங்க! ஷில்பா மதியச் சாப்பாடு வாங்கறதுக்கு ஹோட்டலுக்குப் போயிருக்கா'' என்றவர், நெடுநாள் பழகியவர் போல பேசத் தொடங்கினார். ``நான் டிகிரி முடிச்சதுமே சில கார்மென்ட்ஸ் கம்பெனிகளில் வேலை பார்த்தேன். அந்த வருமானம் குடும்பத்துக்குப் போதலைங்க. அப்பா கை நிறைய சம்பாதிச்சாலும் முக்கால்வாசியைக் குடிச்சே தீர்த்துடுவார். அம்மாதான் டிரெய்னில் டிஷர்ட்ஸ் வித்து குடும்பத்தைக் காப்பாத்துறாங்க. நான் வேலைக்குப் போனதும் அம்மாவை வீட்ல ரெஸ்ட் எடுக்க வைக்கணும்னு நினைச்சேன்...'' என்றபடி தன் கால்களையே சில நிமிடங்கள் பார்த்தவாறு இருந்தார். பிறகு, அந்தக் கொடுமையான நாளை விவரிக்க ஆரம்பித்தார்.

``நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிருக்கேன். உள்ளூரில் கிடைச்ச வேலைகளில் சம்பளம் ரொம்ப குறைச்சல். அதனால், பெங்களூர்ல வேலைக்கு டிரை பண்ணினேன். ஒரு கம்பெனி இன்டர்வியூவுக்குக் கூப்பிடுச்சு. போய்ட்டு நல்லபடியா இன்டர்வியூ முடிச்சேன். திரும்பி ஊருக்குப் போக பெங்களூரு டு காக்கிநாடா செல்லும் சேஷாத்திரி எக்ஸ்பிரஸுக்குக் காத்திருந்தேன். முதல்ல அம்மாவுக்கு போன் பண்ணி இன்டர்வியூ முடிச்சுட்டேன்னு சொல்லிட்டு, ஷில்பாவுக்கு சாட் பண்ண ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரத்துல டிரெயின் வந்துடுச்சு. போனை கட் பண்ணி பாக்கெட்ல வெச்சுட்டு, வலது காலை தூக்கி படியில் வைக்கிறேன். கண்ணு மூடித் திறக்கும் நேரத்துல டிரெயின் படிக்கட்டுகளுக்கு நடுவுல கால் மாட்டிக்கிச்சு. இன்னொரு கால் வெளியே தொங்கிட்டிருக்கு. டிரெயின் மூவ் ஆகிருச்சு. மதியம் 12 மணி நேரமா இருந்ததால், ஸ்டேஷன்ல ஆளுங்களும் அவ்வளவா இல்லை. இருந்த கொஞ்ச பேரும் `அய்யோ... அய்யோ'னு அலறுறாங்க. வண்டி தடதடன்னு பிளாட்பாரத்தைவிட்டு நகர ஆரம்பிச்சுடுச்சு. வெளியே தொங்கின இடது கால் ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கு நடுவுல சிக்கி அப்படியே துண்டாகி விழுந்துருச்சு.

படிகளுக்கு நடுவுல மாட்டிக்கிட்ட வலது கால் முட்டிக்குக் கீழே இரண்டா உடைந்து தொங்குது. பிளாட்பாரத்தைவிட்டு 50 அடி தொலைவு போனதும், தடால்னு கருங்கற்கள் மேலே விழுந்துட்டேன். துண்டான காலில் ரத்தம் பீய்ச்சி அடிக்குது. தலையிலும் அடி. முகத்தில் ரத்தம் வழிஞ்சு ரெண்டு கண்ணையும் மறைக்குது. வழிஞ்ச ரத்தத்தை துடைச்சுக்கிட்டே ஸ்டேஷன் பக்கம் பார்க்கிறேன். பயத்துல யாருமே என்கிட்ட வரலை. வேற வழியில்லாம, போட்டுக்கிட்டிருந்த டி-ஷர்ட்டைக் கழட்டி காலைச் சுற்றிக் கட்டினேன். யாரோ ஒருத்தர் என்னை நோக்கி ஓடிவந்தார். ஹெல்ப் பண்ணுங்க சார்னு கத்தினேன். ஆனா, கிட்ட வந்தவர் செல்போனில் வீடியோ எடுக்க ஆரம்பிச்சிட்டாரு'' என்கிற விஜய் வறட்டுச் சிரிப்பு சிரிக்க, அது நம் முகத்தில் அறைகிறது.

இதன்பிறகு, விஜய்யை ரயில்வே போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். குடும்பத்துக்கும் தகவல் கிடைக்க, பதறியடித்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளது. பெங்களூருவில் சில நாள் சிகிச்சைக்குப் பிறகு, வேலூரில் தொடர்கிறது. இதற்கிடையில், நடந்ததையெல்லாம் விஜய்யின் தங்கை மூலம் தெரிந்துகொள்கிறார் காதலி ஷில்பா. தன் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, மருத்துவமனைக்கு வந்து அங்கேயே விஜய்யைத் திருமணம் செய்துகொள்கிறார். இது பரபரப்பு செய்தியானது. `எங்களுக்கு வேலை கிடைத்தால் போதும். எல்லோரையும்போல வாழ்ந்து காட்டுவோம்' எனப் பேட்டி கொடுத்தார்கள் விஜய்-ஷில்பா தம்பதியர். பிறகு நடந்தது என்ன? 

சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்த ஷில்பா, ``கல்யாணத்துக்கு முன்னாடியே மாமியார், நாத்தனார் பழக்கம்தான். இவருக்கு ஆக்ஸிடென்ட் ஆனதைத் தெரிஞ்சுக்கிட்டு போன் பண்ணினால், இவர் போனையே எடுக்கலை. கட் பண்ண ஆரம்பிச்சார். நான் விடலை. தொடர்ந்து பண்ணிட்டே இருந்தேன். கடைசியா ஒரு நாள் போனை எடுத்து, `எனக்குக் கால் போயிடுச்சு. என்னால் உன்னைக் காப்பாத்த முடியுமான்னு தெரியலை. என்னை மறந்துடு'னு சொல்லிட்டார். எங்க லவ் பற்றி ஏற்கெனவே என் வீட்டுல தெரியும். ஆக்ஸிடென்ட் விஷயமும் தெரிஞ்சதும், இன்னும் பலமா எதிர்க்க ஆரம்பிச்சுட்டாங்க. வேற வழியில்லாமதான் வீட்டைவிட்டு வெளியே வந்துட்டேன். விஜய் நல்லபடியா இருந்து வேற காரணம் சொல்லி, கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தாலும், சரி போ என ஒதுங்கியிருப்பேன். ஆனா, என் மேலே இருந்த அன்பில்தானே அப்படிச் சொன்னார். நான் மட்டும் எப்படி விட்டுட்டு போவேன்.? அதான், அவரைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்'' என்றார்.

ஷில்பாவின் உண்மையான காதல், கோபத்தோடு இருந்த அவருடைய பெற்றோர்களின் மனதையும் இளக வைத்திருக்கிறது. தற்போது, இரண்டு குடும்பமும் சந்தோஷமாக உறவாடுகிறார்கள்.  

அவர்கள் காதல் குறித்துக் கேட்டதும், விஜய் வெட்கத்துடன் தலைகுனிந்து கொள்கிறார். ஷில்பாதான் கணவரைக் குறும்பாகப் பார்த்துவிட்டு நினைவுகளைப் பகிர்கிறார். ``ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிச்சோம். இவர் ஃபைனல் இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும்போது, நான் ஃபர்ஸ்ட் இயர் பி.காம் சேர்ந்தேன். காலேஜ்ல ஃபார்ம் போடும்போதே என்னைப் பார்த்திருக்கார். சாருக்கு உடனே லவ் வந்துருச்சாம். தினமும் அவரோட டிபார்ட்மென்ட்டை கடந்துதான் என் கிளாஸுக்குப் போவேன். தினமும் ஷில்பா ஷில்பான்னு என்னைக் கூப்பிடுவார். ஆனா, எனக்கு ரொம்ப பயமா இருக்கும். பதிலே பேச மாட்டேன். ஒரு நாள் இவரோடு படிக்கும் அக்கா என்கிட்ட வந்து, `விஜய் உன்னை லவ் பண்றான்'னு சொன்னாங்க. மறுநாளும் இவர் என் பேரைச் சொல்லிக் கூப்பிட, கையெடுத்துக் கும்பிட்டுட்டு ஓடிப்போயிட்டேன். அப்புறம் என் பக்கம் திரும்பவே இல்லை. அது என் மனசை என்னவோ பண்ணிச்சு. ஏற்கெனவே தூது அனுப்பின அந்த அக்காவையே பிடிச்சு, நானும் லவ் பண்றதாச் சொன்னேன்'' என்றவரின் கன்னங்களில் செம்மைப் படருகிறது. 

தன் மீசையை வருடிக்கொடுத்தபடி, மனைவியை ரசிக்கிறார் விஜய். தற்போது, செயற்கைக் கால்கள் பொருத்திக்கொண்டு நடக்கப் பழகுகிறார். அதன் உரசலால், கொப்புளங்கள், ரத்தம் வடிவது என வலி மிகுந்திருந்தாலும், ``சீக்கிரம் சரியாகிடுவேன். வேலைக்கும் போயிடுவேன். ஷில்பாவும் வேலைக்குப் போவேன்னு சொல்றா. என் அம்மாவையும் ஷில்பாவையும் உள்ளங்கையில் வெச்சுத் தாங்கணும்'' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு