Published:Updated:

''கடவுளுக்கும் பூசாரிக்கும் மத்தியில் ஆம்பளை, பொம்பளை வித்தியாசம் எதுக்குங்க?'' - பெண் பூசாரி கிருஷ்ணவேணி

''காலம் மாறிப்போயிடுச்சும்மா. பெண்கள் செய்யமுடியாத வேலைன்னு இந்த உலகத்துல ஒண்ணுமே இல்லை''

''கடவுளுக்கும் பூசாரிக்கும் மத்தியில்  ஆம்பளை, பொம்பளை வித்தியாசம் எதுக்குங்க?'' - பெண் பூசாரி கிருஷ்ணவேணி
''கடவுளுக்கும் பூசாரிக்கும் மத்தியில் ஆம்பளை, பொம்பளை வித்தியாசம் எதுக்குங்க?'' - பெண் பூசாரி கிருஷ்ணவேணி

சிரியைப் பணியும் செவிலியர் பணியும்தான் பெண்களுக்கானது என்ற நிலை, லெமூரியன் காலத்துடன் மாறிவிட்டது. விமானம் ஓட்டுவதில் ஆரம்பித்து, சமரசம் உலவும் இடம் வரையிலும் பெண்கள் இன்றைக்கு வெற்றிகரமாக இயங்கி வருகிறார்கள். இதில், கிருஷ்ணவேணி அம்மாள் கூடுதல் ஆச்சர்யம். சில கோயில்களில் பெண்கள் வழிபாடு செய்வதற்கே இன்னமும் போராடிவரும் நிலையில், பிரம்மச்சாரி தெய்வமாக  வணங்கப்படும் விநாயகர் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வருகிறார் இவர்.

வில்லிவாக்கம் - ரெட்ஹில்ஸ் சாலையில் சப்வேவை ஒட்டியிருக்கிறது அந்தச் சிறிய கமல விநாயகர் ஆலயம். ஒரு சாயங்கால வேளையில், அந்த வழியே செல்கையில், கருவறையிலிருந்து, கணீர் பெண் குரல் ஒன்று, விநாயகர் அகவல் சொல்லிக்கொண்டிருந்தது. ஆர்வம் மேலிடக் கோயிலுக்குள் நுழைந்தேன். கழுத்தில் சின்னச் சின்ன ருத்திராட்சங்கள் கோர்த்த மாலை, முகத்தில் மஞ்சள், நெற்றியில் குங்குமம், விபூதி, கூந்தலில் ஒரு இணுக்கு மல்லிகைப் பூவுடன் 'நம்ம வீட்டுப் பெரியம்மா' தோற்றத்தில் கவர்ந்தார் அவர். பக்தர்கள் கொண்டுவந்த மாலைகளை வாங்கி, விநாயகருக்குச் சாற்றி, தீபாராதனை காட்டிவிட்டு, ஓய்வாக அமர்ந்தவரிடம் பேச ஆரம்பித்தேன்.

''என் பேரு கிருஷ்ணவேணி. 75 வயசு ஆகுது. மூணு ஆம்பளைப் பசங்க எனக்கு. மூத்தவன் வில்லிவாக்கத்தில் இருக்கான். அவனோடு இருந்துக்கிட்டுதான் 7 வருஷமா அப்பன் விநாயகனுக்குத் திருப்பணி பண்ணிட்டிருக்கேன். என் கணவர், சொந்த ஊரான மதுரையில் மற்ற பிள்ளைகளோடு இருக்கார்'' என்றவர், கோயில் பூசாரியான கதையைச் சொன்னார்.

''இந்தக் கோயிலை 62 வருடத்துக்கு முன்னாடி என் அப்பாதான் கட்டினார். அவர் காலத்துக்கு அப்புறம், பூஜை பண்றதுக்கு வெளியாளுங்களைக் கூப்பிட்டோம். அவங்க 6,000 ரூபாய் கொடுங்க, 7,000 ரூபாய் வேணும்னு சம்பளம் கேட்டாங்க. அவ்வளவு வசதி இல்லாததால், நானே பூசாரி ஆகிட முடிவுப் பண்ணினேன். அப்போ, பஞ்சாயத்து போர்டுல பார்த்துட்டிருந்த வேலையிலிருந்து ரிட்டயர்டும் ஆகிட்டதால், கோயில் பணி செய்றதுக்கு நேரமும் இருந்துச்சு. பொதுவாக, அம்மன் கோயில்களில் பெண்கள் பூசாரிகளாக இருப்பார்கள். விநாயகர், ஆஞ்சநேயர் மாதிரி பிரம்மச்சாரி கோயில்களில் பெண் பூசாரிகளை வைக்க மாட்டாங்க. நான் அந்தக் கட்டுப்பாட்டை மாத்தணும்னு நினைச்சேன்'' என்கிறார் கிருஷ்ணவேணி அம்மாள்.

'நான் பூசாரியான ஆரம்பத்தில், தமிழ் ஸ்லோகங்கள் மட்டுமே தெரியும். சமஸ்கிருதம் சுத்தமாகத் தெரியாது. வாழ்க்கையின் இறுதிவரை விநாயகரப்பன் திருப்பணி செய்யறதுன்னு முடிவாகிருச்சு. சமஸ்கிருத ஸ்லோகங்கள் கத்துக்கிறதா பெரிய விஷயம் என்று நினைச்சு, அதையும் கத்துக்கிட்டேன். இப்போ விநாயகன், முருகன், ஆஞ்சனேயர், ஐயப்பன் என்று எல்லாத் தெய்வங்களையும் போற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்களும் தெரியும்'' எனப் பெருமிதமாகச் சிரிக்கிறார் கிருஷ்ணவேணி அம்மாள். தன் பெயரில் இருந்த ஓர் இடத்தை விற்றதோடு, பக்தர்களிடமும் நன்கொடை வாங்கி சில வருடங்களுக்கு முன்னால்தான் கமல விநாயகர் கோயிலைப் புதுப்பித்துள்ளார். 

''என் கணவர், பிள்ளைகள் மட்டுமின்றி, காலம் காலமாக கோயில் திருப்பணிகள் செய்து வருபவர்களும், விநாயகர் கோயிலில் பெண் பூசாரியா என எதிர்ப்பு காட்டினதில்லை. காலம் மாறிப்போயிடுச்சும்மா. பெண்கள் செய்யமுடியாத வேலைன்னு இந்த உலகத்துல ஒண்ணுமே இல்லை'' என்று உணர்ச்சிப் பெருக்குடன் கிருஷ்ணவேணி அம்மாள் பேச, அதை ஆமோதித்து ஒலிக்கிறது கமல விநாயகர் கோயிலின் மணியோசை.