Published:Updated:

'லெஸ்பியன் என்பது அன்பின் அழகியல்' கவிஞர் குட்டி ரேவதி!

'லெஸ்பியன் என்பது அன்பின் அழகியல்' கவிஞர் குட்டி ரேவதி!
'லெஸ்பியன் என்பது அன்பின் அழகியல்' கவிஞர் குட்டி ரேவதி!

"சாமானியர்களைவிட நெட்டிசன்களுக்குத்தான் அதிகம் விழிப்புஉணர்வு தேவை" என்கிறார் கவிஞர் குட்டி ரேவதி. சட்டப்பிரிவு 377 பற்றிப் பேசுகையில், "2003-ம் ஆண்டிலேயே ஒருபால் ஈர்ப்பு குறித்த கவிதைகளை நான் எழுத ஆரம்பித்திருந்தேன். அப்போதிருந்தே இதன் சார்பான இயக்கங்களில் போராடிவருகிறேன். இது ஒரே நாளில் நடந்த மாற்றமில்லை" என வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களுக்குள் அழைத்துச்செல்கிறார்.

''கி.மு. 2500-களில் வாழ்ந்த கிரேக்க கவிஞர் சாப்போ, முதல் லெஸ்பியன் கவிஞர் எனலாம். வார்த்தைகளால் மனம் முழுவதும் வசீகரிக்கும் தன்மைகொண்டது சாப்போவின் கவிதைகள். அவர் ஓர் ஆணைக் காதலித்திருக்கிறார். அந்தக் காதல் மறுக்கப்பட்டபோது, காதலருக்காக மலையிலிருந்து குதித்து இறந்ததாகத் தகவல். மனித மனங்களில் கறுப்பு வெள்ளை எதுவுமில்லை அது உணர்வுகளால் ஆனது. எனவே, காதலுக்குப் பாலினம் ஒரு தடையில்லை என்பதை சாப்போவின் கவிதைகளில் தெரிந்து கொண்டேன் என்கிறார் குட்டி ரேவதி''

''சட்டப்பிரிவு 377... சாதகமான முடிவுதானா? 

''நிச்சயமா ரொம்பவே சாதகமான முடிவுதான். ஆனால், இதுவே முழுமையான தீர்வு எனச் சொல்லிட முடியாது. மனித உரிமைகள் அத்தனையையும் இதோடு இணைச்சுப் பார்க்கணும். அவங்க யாரோ புதுசா வந்தவங்க இல்லே. நமக்குள்ளேயும் நமக்கு வெளியிலும் இருக்கிறவங்கதான். இப்போதைக்கு அவங்களுக்குத் தேவை, ஓர் அங்கீகாரம்.''

''சமூகத்தில் அதைப் பற்றிய சரியான புரிதல் இருக்கா?''

''சமூகம் எபப்வுமே மாறிக்கொண்டே இருக்கும் சக்கரங்களால் சுழலுது. கடந்த 100 வருடங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் கட்டமைக்கப்பட்ட விதிகள் பலவும் பரிணாம மாற்றம் அடைஞ்சிருக்கு. இதிலும் மனிதர்கள் நடுவில் நிச்சயம் அறிவார்ந்த மாற்றம் வரும். எல்லாரும் ஒரே மாதிரியான மனநிலையில் இதை அணுகுவாங்கனு சொல்லிட முடியாது. இது தொடர்பான முகநூல் பதிவுகள் அதுக்குச் சாட்சி. சாமானியர்களைவிட நெட்டிசன்களுக்குத்தான் அந்த விழிப்புஉணர்வு அவசியப்படுது. சாதாரண மக்கள், நாகரிகமான வாழ்க்கையின் ஒரு பகுதியா அதை எடுத்துட்டு கடந்துடுவாங்க.''

''இலக்கியத்தில் எல்.ஜி.பி.டி. சார்ந்த புரிதலின் நிலை குறித்து...''

''என்னைப் பொறுத்தவரை, சட்டங்களைவிட இலக்கியம் ரொம்ப முக்கியம். இலக்கியம் எப்பவுமே மாறாமல் நல்ல பதிவாக இருக்கும். 50 வருசம் கழிச்சு வர்றவங்க இதைப் பற்றி தெரிஞ்சுக்க வாய்ப்பா அமையும். சட்டங்கள் முக்கியமில்லைன்னு சொல்லிட முடியாது. தீண்டாமை, உரிமைகள் குறித்த அடிப்படையில் அது தவிர்க்கமுடியாத ஒண்ணா இருக்கு. 'பெண்ணியம் தொடர்பான கருத்துக்களைக் கவிதையாக முன்னெடுக்கும்போது அதைப் பயங்கரமா எதிர்த்தாங்க. இப்போ அதைப் புரிஞ்சுக்க தொடங்கிட்டாங்க. அதுபோல காலம் எல்லாவற்றையும் மாற்றும். ஏற்கெனவே, லிவிங் ஸ்மைல் வித்யா, சு.சமுத்திரம், ரேவதி எனத் தொடர்ந்து அவங்களுக்காக எழுத்துத் துறையிலும் கால்பதிச்சவங்க இருக்காங்க.''

''நீங்கள் எப்போது சமூகத்தைப் புரிந்துகொண்டீர்கள்?''

''எனக்கான புரிதல், கவிதை எழுத ஆரம்பித்தபோதுதான் ஏற்பட்டது. நான் எப்படி இந்தச் சமூகத்தைப் பார்த்தேன். இந்தச் சமூகம் என்னை எப்படி அணுகியது என்று கவிதையில் தொடங்கிய எனது அனுபவங்களே இதற்குக் காரணம்.''

''லெஸ்பியன்ஸ் என்றதும் முதலில் உங்களுக்கு என்ன தோன்றும்?''

''அழகியல். பெண்ணும் பெண்ணும் சார்ந்த அழகியல் தொடர்பான ஒன்றாகவே அதைப் பார்க்கிறேன். நான் எழுதிய 'பேரழகியே அழைத்தாயோ' (லேடிஸ் அண்டு ஜென்டில்வுமன் ஆவணப்படம்) பாடலில்கூட, 'நிலைக்கண்ணாடிபோல என்னை அழகாக்கிக் காட்டும்' என ஒரு வரி வரும். அது ஒரு பெண், இன்னொரு பெண்ணின் பிரதிபலிப்பு என்ற காதலின், அன்பின் அழகியல்தான்.''

''பெண்களின் கவிதை உலகம் குறித்து...''

''பெண் கவிஞர்கள் எந்தவிதத்திலும் பொய்யைப் பரப்பின மாதிரி எனக்குத் தோணலை. அது தேவையானதா, பாசங்கு இல்லாமல், ரொம்ப சத்தமா தனக்கான கேள்விகளை நேரடியா கேட்கிற மாதிரி இருக்கும். அதனாலே, பெண் கவிஞர்கள் மீது அதிக ஈடுபாடு எனக்கு இருக்கு.''

''அடுத்து என்ன பண்ணப்போறீங்க?'' 

"கவிதைகளில் மொழிபெயர்ப்பைத் தொட வேண்டும். சாப்போ கவிதைகளை முன்னாடியே மொழிபெயர்ப்பு செய்திருந்தாலும், இந்தக் காலகட்டத்துக்கு அது ரொம்ப அவசியம். அதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டுப் போகணும்" என உற்சாகமாகக் கவிதை செய்யத் தயாரானார், குட்டி ரேவதி. 

கவிதைகளுக்காகக் காத்திருப்போம்.