Published:Updated:

``அந்தச் சங்கடத்தை அவளால் தாங்கிக்க முடியலை!" 12 வயதில் தாயான சிறுமி

``அந்தச் சங்கடத்தை அவளால் தாங்கிக்க முடியலை!" 12 வயதில் தாயான சிறுமி
News
``அந்தச் சங்கடத்தை அவளால் தாங்கிக்க முடியலை!" 12 வயதில் தாயான சிறுமி

``அந்தச் சங்கடத்தை அவளால் தாங்கிக்க முடியலை!" 12 வயதில் தாயான சிறுமி

``ஒரு குழந்தை இன்னொரு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கிற அநியாயம் எந்த ஊர்லனா நடக்குமாப்பா?" எனக் கேட்கும் அந்தப் பாட்டிக்கு அழுகை பீறிடுகிறது. ஆனால், இந்த விஷயம் மேலும் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று வாயைப்பொத்தி, லேபர் வார்டுக்கு வெளியே உள்ள பெஞ்சில் சத்தம் வராமல் அழ ஆரம்பித்தார்.

மிகுந்த மனஉளைச்சலுடன் இதை எழுத வேண்டியிருக்கிறது. சென்னை முகப்பேர் பகுதியில் வசிக்கும் பன்னிரண்டு வயது சிறுமி தாயாகி இருக்கிறாள். 

அந்தச் சிறுமியின் அப்பா குடும்பத் தகராறு காரணமாகப் பிரிந்து சென்று 5 வருடங்களாகின்றன. அம்மா, சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளி. சாலைகள் துப்புரவு செய்யும் பணி என்பதால் பகல் ட்யூட்டி, நைட் ட்யூட்டி என மாறி மாறி வேலைக்குச் செல்ல வேண்டியிருந்திருக்கிறது. அச்சிறுமி தன் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி வசிக்கும் தன் தோழியின் வீட்டுக்கு விளையாடச் செல்வது வழக்கம். தன் வீட்டில் யாருமில்லாததால் பெரும்பாலும் பள்ளி முடித்துவிட்டு அங்கே சென்றுவிடுவாள். அப்போது வீட்டில் யாருமில்லாத ஒரு சமயத்தில் சிறுமியைக் கட்டாயப்படுத்தி, மிரட்டி அந்த நபர் பாலியல் வல்லுறவு கொண்டிருக்கிறார். முதன்முறை மிரட்டியும் அடுத்தடுத்த முறை சிறுமிக்குப் பாலியல் காட்சிகளை செல்போனில் காட்டியும் கடந்த ஒரு வருடமாக சிறுமியைப் பயன்படுத்தி இருக்கிறார். அந்த நபரின் மிரட்டலால், தன் அம்மாவிடம் இந்த அக்கிரமத்தைச் சொன்னால்கூட ஏதும் ஆகிவிடுமென்று சிறுமி மறைத்து இருக்கிறாள். சிறுமியின் பயத்தைப் பயன்படுத்தி அவள் ஒன்பதுமாத பிள்ளையை வயிற்றில் சுமக்கும் வரை அந்த நபர் அவளைச் சீரழித்திருக்கிறார் என்பது மருத்துவ அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று அந்தச் சிறுமிக்கு ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது. இச்செய்தியைக் கேட்டறிந்ததும் சிறுமி அட்மிட் செய்யப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனைக்கு நேரில் விசாரிக்கச் சென்றேன். சிறுமியின் பாட்டி இருந்தார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``ரொம்பநாள் கழிச்சு, என் பையன் வீட்டுல இருந்து பொண்ணு வீட்டுக்குத் தங்கலாம்னு வந்தேன். என் பேத்தி ஒரு மாதிரி சோர்வாவே இருந்தா. ரெண்டு காலும் வீங்கியிருந்தது. அப்புறம்தான் என்ன ஏதுன்னு ஆஸ்பிட்டலுக்குக் கூட்டிடுவந்தா 'ஒன்பது மாசம் ஏழுநாள் கர்ப்பம்'னு சொன்னாங்க" என்றார் சிறுமியின் பாட்டி. 

`சிறுமியின் அம்மா எங்கே?' பாட்டியைக் கேட்டதற்கு ``வேலைக்குப் போனாதாம்பா எங்களுக்குச் சோறு. அவ ஒரு வாரம் லீவ்ல இருந்துட்டு இன்னைக்குதான் வேலைக்குப்போனா. ரெண்டு குழந்தைகளையும் நாந்தான் பாத்துக்கிறேன்" எனச் சொன்னவர் மீண்டும் அழத்தொடங்கினார். 

``ஒரே வீட்டில இருந்தும் அவ அம்மாவால கண்டுபிடிக்க முடியல. வயிறே தெரியலை. இந்தப் பொண்ணும் அது தெரியாத மாதிரி ட்ரஸ் போட்டு மறைச்சுட்டு வந்துருக்கு. இதுல இன்னொரு கொடுமை என்னென்னா கர்ப்பமானதில இருந்து ஒன்பது மாசம் வரைக்கும் ஸ்கூலுக்குப் போயிருக்கா. அங்ககூட யாரும் கண்டுபிடிக்கல" என்கிறார் அவர்களுடைய சொந்தக்காரப் பெண் ஒருவர். 

அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கும் அந்தச் சிறுமி, நடக்க முடியாமல் வார்டுக்கு வெளியே வந்தாள். அவளிடம் ஏதும் பேச மனம் வராமல் வெளியே வந்துவிட்டேன். அந்த வார்டு முழுக்க அச்சிறுமியின் பேச்சாகவே இருக்கிறது. எல்லோரும் தன்னைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள், தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவளுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தவே, குழந்தையை உறவினர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்து உட்கார்ந்து கொள்கிறாள். 

``விஷயம் தெரிஞ்சதும் பாப்பாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரிக்கக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. இப்படி ஒரு சம்பவம் நடந்தது எங்களுக்கு ரொம்ப அவமானம்தான். ஆனா, ஒன்பது மாசம் புள்ளையை ஸ்டேஷன்ல கூட்டிட்டுப்போய் அங்கங்க ஆளாளுக்கு விசாரிச்சதுதான் ரொம்ப ரொம்ப அவமானமா இருந்ததுங்க" என்ற உறவினரின் கோபம் அடங்க வெகுநேரமானது. 

சம்பந்தப்பட்ட நபரை, திருமங்கலம் காவல்துறையினர் `போக்ஸோ' சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த வழக்கு `போக்ஸோ' சட்டத்தின்படி விசாரிக்கப்படவில்லை என்கிற தகவல் நமக்குக் கிடைத்தது. `போக்ஸோ' சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட சிறுமியை காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது, விசாரணை செய்யும் காவல்அதிகாரி சீருடையில் இருக்கக் கூடாது ஆகிய விதிகளைப் பின்பற்றவில்லை என்று புகார் எழுந்தது. ஆகவே, இந்த வழக்கை விசாரித்த திருமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் மல்லிகா அவர்களை நேரில் சந்தித்துப் பேசினேன். ``யாரோ தவறான விதத்தில் உங்களிடம் சொல்லி இருக்கிறார்கள். அந்தச் சிறுமியை நாங்கள் காவல்நிலையத்துக்கு அழைத்துவரவேயில்லை. வழக்கறிஞர் ஒருவரை அழைத்துக்கொண்டு அவர்களாகவேதான் இங்கே வந்தார்கள். அதுபோலவே அந்தச் சிறுமியை விசாரிக்கும்போது நான் மாற்று உடையில்தான் இருந்தேனே தவிர சீருடையில் இல்லை" என்றார். 

இதுபோன்ற வகையில் பிறக்கும் குழந்தைகளைக் குப்பைத்தொட்டியிலும், கழிவுநீர்க் கால்வாயிலும் வீசிவிட்டு நழுவும்போக்கு ஆண்டாண்டுகாலமாக நடந்துவருகிறது. சைல்ட் லைனைத் தொடர்பு கொண்டால் அந்தக் குழந்தைகளை முறையாக அவர்கள் வாங்கி வளர்க்கிறார்கள். இந்த விஷயத்தில் உள்ள வருத்தமான முரண் என்னவென்றால் சிசுவைப் பெற்றெடுத்த அந்தக் குழந்தையையும் சைல்ட் லைன் தங்களுடைய பொறுப்பில் வளர்க்க இருக்கிறார்கள். மேலும் தகவல்களுக்கு மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் வலைதளத்தைப் பார்க்கலாம்.. cara.nic.in

குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெளிச்சத்துக்கு வரத் தொடங்குகின்றன. இது நமக்கும் உணர்த்தும் செய்தியின் மூலம், நாம் கற்றுக்கொள்கிற பாடத்தில்தான் வருங்காலக் குழந்தைகளின் பாதுகாப்பு இருக்கிறது.