Published:Updated:

’’அவர்களின் மன்னிப்பு இப்போது அர்த்தமற்றது!" #metoo குறித்து பத்திரிகையாளர் சந்தியா

’’அவர்களின் மன்னிப்பு இப்போது அர்த்தமற்றது!" #metoo குறித்து பத்திரிகையாளர் சந்தியா
’’அவர்களின் மன்னிப்பு இப்போது அர்த்தமற்றது!" #metoo குறித்து பத்திரிகையாளர் சந்தியா

இந்திய ஊடகங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளைப் பற்றியும், தனக்கு நேர்ந்த சம்பவத்தையும், பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தியா மேனன் ட்விட்டரில் பதிவிட்டார்.

டந்த சில நாள்களாக இந்திய ஊடகங்கள் மற்றும் கலைத்துறைச் சார்ந்த பெண்கள், பணியிடங்களில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களைச் சமூக வலைதளங்களில் #metoo ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து வருகிறார்கள். 2017-ம் ஆண்டு, ஹாலிவுட்டில் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது இளம் நடிகை புகார் எழுப்பியது, உலகையே திரும்பிப் பார்க்கச்செய்தது. இந்தியாவிலும் அப்போது இதன் தாக்கம் எதிரொலித்தது. 'பிரபல நடிகர் நானா படேகர், 10 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தார்' என நடிகை தனுஸ்ரீ தத்தா சொன்னது, பாலிவுட் முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பல பாலிவுட் பிரபலங்களும் #metoo பிரசாரத்துக்குக் குரல் கொடுத்தனர்.

இந்திய ஊடகங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளைப் பற்றியும், தனக்கு நேர்ந்த சம்பவத்தையும், பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தியா மேனன் ட்விட்டரில் பதிவிட்டார். தொடர்ந்து, பல ஊடகப்  பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளைப் பதிவிட்டு, விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தனர். இந்தியாவின் #metoo காலம் என்று விவரிக்கும் அளவுக்குச் சமூக வலைதளங்களிலும்  ஊடகங்களிலும் பூதாகரமாக வெடித்தது பிரச்னை. 

சமீபத்தில், பெங்களூருவில் நடந்த கூட்டத்தில், நடிகை தனுஸ்ரீ தத்தா, பத்திரிகையாளர் சந்தியா மேனன், நடிகை சோனம் கபூர், இந்திய மகளிர்  கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், கதுவா சிறுமி பாலியல்  வன்முறை வழக்கின் வழக்கறிஞர் தீபிகா ராஜவத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, தாங்கள் எதிர்கொண்ட சவால்களை விவாதித்தனர். இப்படி, இந்தியாவில் உயிர்தெழுந்திருக்கும் #metoo பிரசாரம் குறித்து பத்திரிகையாளர் சந்தியா மேனனிடம் பேசினேன்.

”இந்த விவகாரத்தில் நான் புகார் எழுப்பியவர், என் மீது மானநஷ்ட வழக்குப் பதிவுசெய்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. ஆனால், எனக்கு அப்படியான நோட்டீஸ் எதுவும் வரவில்லை. அப்படி வந்தால், சட்டப்படியான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பேன். அதுவரை என்  தரப்பிலிருந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து இன்னும் சிந்திக்கவில்லை” என்று கூறினார்.

எழுத்தாளர் சேத்தன் பகத் மற்றும் நகைச்சுவை நடிகர் உட்சவ் சக்கரபூர்த்தி, தாங்கள் செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்டிருப்பது குறித்துக் கேட்க, “அவர்கள் தங்களின் சிந்தனையையும் செயலையும் மாற்றிக்கொள்ளாமல், மன்னிப்பு

கேட்பது அர்த்தமற்றது. மேலும், இதனால் யாரும் இந்த விஷயத்தை அப்படியே பாதியில் விட்டுவிடப் போவதில்லை. ஊடக நிறுவனங்கள் இதற்குக் கடுமையான விதிமுறைகள் கொண்டுவர வேண்டும்” என்கிறார் அழுத்தமாக.

பெங்களூருவில் நடந்த கூட்டத்தில், தனுஸ்ரீ தத்தாவும் சந்தியா மேனனும் சேர்ந்து மேடையில் தங்களின் கருத்துகளை விவாதித்தனர். தனுஸ்ரீ மீது நானா படேகர் மானநஷ்ட வழக்குப் தொடுத்திருப்பது குறித்து சந்தியாவிடம் கேட்க, “தனுஸ்ரீ இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராவும் உறுதியாகவும் இருக்கிறார். இந்தப் பிரசாரத்தை அவ்வளவு விரைவாக நாங்கள் நிறுத்த மாட்டோம்” என்கிறார் உறுதியான குரலில்.

ஊடகப் பெண்களின் சுதந்திரத்தையும் உரிமையையும் நிலைநிறுத்தும் 'Network of women in media, India' என்ற இந்திய ஊடகப் பெண்களுக்கான அமைப்பு, இந்த விவகாரம் தொடர்பாகச் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், ஊடக நிறுவனங்களின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான விதிமுறைகள், ஊடகக் கல்லூரிகளில் தகுந்த ஆலோசனை குழு அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு