பிரீமியம் ஸ்டோரி

`பூ' பார்வதியின் புதிய பிரச்னை முதல் சுட்டிப் பெண்ணின் `வாவ்' பார்வை வரை கடந்த இரண்டு வார காலத்தில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன? அறிவோம்... ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்!

14 நாள்கள்

பிரச்னைகளைத் தாண்டி சாதிக்கும் பார்வதி!

கே
ரளாவின் சிறந்த திரைப்பட நடிகைக்கான இந்த ஆண்டின் விருதை வென்றிருக்கிறார் நடிகை பார்வதி. தமிழில் `பூ' மற்றும் `மரியான்' படங்களில் நடித்த பார்வதி, மலையாளத் திரையுலகில் `என்னு நின்டெ மொய்தீன்', `சார்லி' எனத் தொடர்ச்சியாக வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். ‘டேக் ஆஃப்’ என்ற படத்தில் நடித்ததற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகை விருதைப் பெறுகிறார். பிரபல நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்திய மலையாள மொழி நடிகைகளில், முதல் எதிர்ப்புக் குரல் தந்தவர் பார்வதி. “டேக் ஆஃப் படம் வெளியீட்டுக்குத் தயாரான நிலையில்தான் அந்தப் பிரச்னை வெடித்தது. அப்போதுதான் `உமன்-இன்-சினிமா கலெக்டிவ்' அமைப்பும் தோன்றியது. வாழ்க்கை அப்படியே மாறிப்போனது. அதன்பின் எனக்குப் பயம் தோன்றவில்லை” என்று கூறும் பார்வதி, “இப்போது நான் செய்யும் வேலை அமைதியாக இருக்கிறது. எனக்கான பாராட்டு அத்தனை அதிகம் இல்லை என்றாலும், பணிக்குத் திரும்பும் ஆர்வத்தை இந்தப் படம் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார்.

மம்மூட்டி நடித்து வெளிவந்த `கசபா' திரைப்படத்தில், பெண்களுக்கு எதிரான தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியதற்காகத் தன் கண்டனங்களைப் பார்வதி பதிவுசெய்ய, மம்மூட்டி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில நடிகர்களும் இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க, பிரச்னை மேல் பிரச்னை. இத்தனையும் தாண்டி இந்த விருது கைகளில் கிடைக்கப்போகிறது என்பதில் பெரிதாக மகிழ்வு இல்லை என்று கூறும் பார்வதி, இனி தன் பணியில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாகவும், இதுபோன்ற பிரச்னைகளைத் தாமரை இலைத் தண்ணீர்போல ஒதுக்கக் கற்றுக்கொண்டதாகவும் கூறுகிறார்.

சும்மாவா... இவர்தான் தாமரைப் ‘பூ’வாச்சே?

14 நாள்கள்

பார்பி... இனி வெறும் அழகுப் பதுமையல்ல!

உல
கெங்கும் உள்ள பெண்களின் பால்ய பருவத்து உற்ற துணை பார்பி பொம்மைகள்தாம். பல தலைமுறைகளாகப் பெண் குழந்தைகளின் தோழியாக வலம்வந்த பொம்மைகள் குறித்து விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. நீண்ட பழுப்பு நிற ப்ளாண்டு கூந்தல், நீலக் கண்கள், எடுப்பான மார்புகள், சிறுத்த இடை, நீண்ட கால்கள், தட்டையான வயிற்றுப்பகுதி என அழகின் இலக்கணமாக இருந்த பார்பி பொம்மைகள்தாம் சிறுமிகளுக்கு சைஸ் ஸீரோமீது அதீத ஆர்வம் வரக் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அழகுப் பதுமைகளாக மட்டுமே பெண்ணைப் பார்க்க வைக்கும் உளவியலை பார்பி பொம்மைகள் பரப்பி வருவதாகவும், தவறான ‘ரோல் மாடலாக’ பார்பி பொம்மையைக் கருதுவதாகவும் பெரும்பான்மையான தாய்மார்கள் பார்பி பொம்மை தயாரிக்கும் மேட்டல் நிறுவனம் நடத்திய சர்வே ஒன்றில் கூறியிருந்தார்கள்.  

14 நாள்கள்

இந்த எண்ணத்தை மாற்ற, கடந்த 2015-ம் ஆண்டு முதல் `ஷீரோஸ்' என்ற பெயரில் சாதனைப் பெண்கள் போன்ற பொம்மைகளை உருவாக்கிவருகிறது மேட்டல் நிறுவனம். அமெரிக்க வாள்சண்டை வீராங்கனையான இப்திஹஜ் முகமதின் வடிவ பொம்மையை இஸ்லாமிய ஹிஜாப் அணிந்த முதல் பொம்மையாக அறிமுகப்படுத்தியது இந்நிறுவனம். இங்கிலாந்து குத்துச்சண்டை வீராங்கனை நிகோலா ஆடம்ஸ், அமெரிக்க ஸ்னோ-போர்டர் க்ளோ கிம், ஆஸ்திரேலிய பசுமைச் செயற்பாட்டாளர் ஸ்டீவ் இர்வினின் மகளான பிண்டி இர்வின், சீன கைப்பந்து வீராங்கனை ஹு ரோக்கி, பிரெஞ்சு சமையல் கலைஞர் ஹெலென் தெரோஸ் என விதம் விதமான பெண்களின் வடிவில் பொம்மைகளை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு மகளிர் தினத்தன்று மூன்று பொம்மைகளை `இன்ஸ்பயரிங் உமன்' என்ற அடைமொழியுடன் விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது மேட்டல். மெக்ஸிக எழுத்தாளர் மற்றும் ஓவியரான ஃப்ரீடா காஹ்லோவின் பொம்மை - அவரது டிரேட்மார்க்கான அடர்ந்த புருவங்கள், அழுத்தமான சிவப்பு உதட்டுச் சாயம், மெல்லிய கரங்கள் என ‘அழகு’ பற்றிய பொது வரைமுறையை மீறி நிற்கிறது. 1940-களில் உலகைத் தனியாக விமானத்தில் சுற்றி, காணாமல் போன அமேலியா இயர்ஹார்ட்டின் பொம்மை 40-களின் தொளதொள உடை, பாய் கட் கூந்தல் ஸ்டைலுடன் சிரிக்கிறது. பெரிய கண்ணாடி, சீரியஸான முகம் என அறிவுக்கூர்மையை வெளிப்படுத்துகிறது அமெரிக்க கணிதவியல் நிபுணரான கேத்தரின் ஜான்சனின் பொம்மை. புற அழகை ஒதுக்கி, மன வலிமைக்கு முக்கியத்துவம் தரும் சிறந்த ரோல் மாடல்கள் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பொம்மைகளுக்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது!

`கமான் பார்பி லெட்ஸ் கோ பார்ட்டி' பாட்டை இனிமே பாடப்படாது. மூச்!

14 நாள்கள்

அடடா மெலிண்டா!

மை
க்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அவர் மனைவி மெலிண்டா இருவரும் இந்தியா உள்பட வளர்ந்துவரும் எட்டு நாடுகளின் மகளிர் மேம்பாட்டுக்கென 170 மில்லியன் டாலர் வழங்கியிருக்கிறார்கள். வரும் நான்கு ஆண்டுகளில் இந்தப் பொருளாதார உதவியைச் செய்யவுள்ளனர். பாலின சமத்துவம் மலர பெண்களின் பொருளாதார விடுதலை மிகவும் முக்கியமானது என்று கூறியிருக்கும் மெலிண்டா, அந்தப் பொருளாதாரச் சுதந்திரத்தை வளரும் நாடுகளின் பெண்கள் சரியாகப் பயன்படுத்துவார்கள் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். “அதிகாரம் உள்ள பெண்களின் கைகளில் இந்தப் பணம் சென்று அடைந்தால், அனைத்தும் மாறும்” என்றும் கூறியிருக்கிறார். `பெண்களின் கைகளில் பொருளாதாரச் சுதந்திரம் இருந்தால் மட்டுமே, குடும்பத்தை ஏழ்மையிலிருந்து வெளிக்கொணரும் கல்வி, சத்தான உணவு, உடல்நலம் பேணுவது என ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பணம் செலவிடப்படும் என்பதை ஆய்வு முடிவுகள் காண்பிக்கின்றன' என்றும் தன் குவார்ட்ஸ் ஓப்-எட் பக்கத்தில் எழுதியிருக்கிறார் அவர்.

இம்முயற்சியில், முதலாவதாக பில் - மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் விளைபொருள்களை நல்ல விலையில் விற்று லாபம் பெற உதவும். இரண்டாவதாக, இந்தியா, பாகிஸ்தான், தான்சானியா உள்பட எட்டு நாடுகளில் பெண்கள் டிஜிட்டல் வங்கிக் கணக்குகளை இயக்க உதவும். இறுதியாக, சிறு வணிகம் முதல் ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு வரை பல்வேறு தளங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்குத் தகுந்த உதவிகள் வழங்கப்படும் என்று தன் திட்டத்தைத் தெளிவாக முன்வைத்திருக்கிறார் மெலிண்டா. அவரது விரிவான திட்டம் அறிய இங்கு சொடுக்கவும்: https://goo.gl/yxRxWx

தங்க மனசுக்காரி!

14 நாள்கள்

அமெரிக்காவைக் கலக்கிய இரண்டு வயதுச் சுட்டி!

அமெ
ரிக்காவைச் சேர்ந்த இரண்டு வயதுச் சுட்டிப்பெண் பார்க்கர் கரி, தன் அம்மாவுடன் தேசிய போர்ட்ரைட் கேலரிக்கு சென்றாள். அங்குள்ள பிரமாண்டமான ஓர் ஓவியத்தைப் பார்த்து வாய்பிளந்து நின்றுவிட்டாள். தாய் எவ்வளவு சொல்லியும் அங்கிருந்து நகரவில்லை. இந்தக் காட்சியைக் கண்ட பென் ஹைன்ஸ் என்ற நபர், அந்தச் சுட்டி வாய்பிளந்து நின்றதைத் தன் மொபைலில் படம்பிடித்துக்கொண்டார். முகநூல் பக்கத்தில் வாய்பிளந்து நிற்கும் சிறுமியின் புகைப்படத்தை அவர் வெளியிட, அது வைரல் ஆனது. ஓவியத்துக்கு போஸ் கொடுத்த வி.ஐ.பி அம்மணிக்கு இதுபற்றித் தெரியவர, பார்க்கர் கரியின் தாயை அவரின் அலுவலகத்தார் தொடர்புகொண்டு பேசினார்கள். பார்க்கர் கரியை அந்த வி.ஐ.பி சந்திக்கும் நாள் வந்தது.

வீட்டுக்குள் நுழைந்த வி.ஐ.பி-யைக் கண்டதும் துள்ளிக் குதித்துக் கட்டிக்கொண்டார் அந்தச் சுட்டிப்பெண். இருவரும் சேர்ந்து டெய்லர் ஸ்விஃப்ட்டின் ‘ஷேக் இட் ஆஃப்’ பாடலுக்கு நடனமாடினார்கள். `நீங்கள் ஒரு ராணி' என்று அந்த வி.ஐ.பி-யைப் பார்த்துப் பெருமை பொங்கச் சொன்னாள் சுட்டி. சிறுமியுடன் தான் நடனமாடும் காணொளியைத் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அந்த வி.ஐ.பி, `உன்னைச் சந்தித்ததில் பெருமகிழ்வு பார்க்கர். பெரும் கனவுகள் காண். என்றாவது ஒருநாள் உன் ஓவியத்தை நான் பெருமையுடன் பார்ப்பேன்' என்று எழுதினார். பார்க்கர் கரி ஒரு ஸ்டார் என்று அவளது பாட்டி சொல்ல, “அதெல்லாம் இல்லை... நான் பெரிய பெண்ணாகிவிட்டேனாக்கும்” என்று பதில் சொன்னாள் அந்தச் சுட்டி. அந்த வி.ஐ.பி தன் முழு உருவ ஓவியத்தை அந்தக் காட்சிக்கூடத்தில் திறந்து வைக்கும்போது சொன்னது இதுதான் - “இந்த ஓவியத்தை இந்த இடத்தில் வந்து பார்க்கும் ஆப்பிரிக்கன் அமெரிக்கன் சிறுமிகள்மீது இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன்.” ஓவியத்தின் தாக்கம், இரண்டு வயது சிறுமியை இந்த வி.ஐ.பி-யுடன் நடனமாட வைத்திருக்கிறது. அந்த வி.ஐ.பி - மிஷெல் ஒபாமா!

அழகு குட்டிச் செல்லமே!

14 நாள்கள்

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை

12
வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வழி செய்யும் சட்டத் திருத்தத்தை, நாட்டிலேயே முதல் மாநிலமாக, மத்தியப்பிரதேச மாநிலம் கடந்த டிசம்பர் மாதம் கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து ஹரியானா மாநிலமும் அதற்கான சட்ட முன்வரைவை கையில் எடுத்திருக்கிறது. ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா, குற்றவியல் சட்டம் (ராஜஸ்தான் திருத்தம்-2018) மசோதாவைச் சட்டசபையில் சமர்ப்பிக்க, குரல் வாக்கெடுப்புமூலம் மசோதா நிறைவேறியிருக்கிறது. இபிகோ 376AA எனும் பிரிவைக் குற்றவியல் சட்டத்தில் சேர்க்க வழிவகை செய்திருக்கிறது இந்த மசோதா. இதன்படி, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையும், குறைந்தபட்ச தண்டனையாக இறக்கும் வரை கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படும்.

ஆயுள்தண்டனையே 14 ஆண்டுகள்தான் என்றாலும், குற்றத்தின் தன்மை கருதி, சாகும்வரை கடுங்காவல் என்ற கடுமையான திருத்தத்தைக் கொண்டு வர நேர்ந்தது என்று கூறியிருக்கிறார் கட்டாரியா. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா நிகழ்த்திய பட்ஜெட் உரையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படியே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குற்றவியல் ஆவண பீரோவின் அறிக்கைப்படி, அந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 12 வயதுக்குட்பட்ட 4,034 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அளவீட்டில் நாட்டிலேயே நான்காவது மாநிலமாக உள்ளது ராஜஸ்தான். இந்தச் சட்டத் திருத்தம் போலவே, கூட்டு வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்டப் பிரிவு 377DD-யும் கொண்டுவரப்படவிருக்கிறது.

மற்ற மாநில அரசுகளும் இதைக் கவனிக்கலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு