Published:Updated:

`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்!’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்

இரா.மோகன்
`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்!’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்
`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்!’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்

முதல் பிரசவத்திலேயே இரு பெண் குழந்தைகளைப் பெற்றதால்  தலைமறைவாகி விட்ட கணவரைக் கண்டுபிடித்துத் தரக்கேட்டும், குழந்தைகள் இருவரையும் காப்பாற்ற வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்த இளம் பெண்ணின் நிலை, அங்கு கூடியிருந்தோர் மனதை வேதனை அடையச் செய்தது. 

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே நெல்மடூர் கிராமத்தைச் சேர்ந்த  தர்மராஜுக்கும்  பானுப்பிரியா என்பவருக்கும், கடந்த ஓராண்டுக்கு முன்பு பார்த்திபனூர் முருகன் கோயிலில் திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த பானுப்பிரியா 6 மாதங்களுக்கு முன் தாயானார். ஒரே நேரத்தில் இவருக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தன. தர்ஷினி, தாரிணி என அக்குழந்தைகள் இருவருக்கும் பெயர் வைத்த நிலையில், குழந்தைகளின் தந்தையான தர்மராஜ், திடீரென தலைமறைவாகிவிட்டார். கூலி வேலை செய்துவந்த தர்மராஜ், தனது மனைவி ஒரே பிரசவத்தில் இரு பெண் குழந்தைகளைப் பெற்றதால், அவர்களைக் காப்பாற்ற முடியாது எனக் கருதி, குடும்பத்தைக் கைவிட்டு சென்றதாகத் தெரிகிறது.

இந்நிலையில், தலைமறைவான தனது கணவரைக் கண்டுபிடித்துத் தர உதவுமாறும், அதுவரை தனது இரு பெண் குழந்தைகளையும் வளர்க்க தனக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரியும் பானுப்பிரியாவும் , அவரது தாயார் சண்முகவள்ளியும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம்  மனு அளித்தனர். பிறந்து 6 மாதமே ஆகியுள்ள நிலையில், இரு பெண் குழந்தைகளுடன், தலைமறைவான கணவரைக் கண்டுபிடித்துத் தரக் கோரியும், குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக வேலை வாய்ப்பு கேட்டும் கண்ணீருடன்  மனு கொடுக்க வந்த பானுப்பிரியாவின் நிலை அங்கு கூடியிருந்த  அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் மனதை வேதனை அடையச்செய்தது.