Published:Updated:

உலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது - வைஷ்ணவி

உலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது - வைஷ்ணவி
பிரீமியம் ஸ்டோரி
உலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது - வைஷ்ணவி

ஈர இதயங்கள்இரா.குருபிரசாத்

உலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது - வைஷ்ணவி

ஈர இதயங்கள்இரா.குருபிரசாத்

Published:Updated:
உலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது - வைஷ்ணவி
பிரீமியம் ஸ்டோரி
உலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது - வைஷ்ணவி

‘` `தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை யெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’னு பாரதியார் கொதிச்சுப் போய் பாடியிருக்கார்னா, அந்த நிலை எவ்வளவு கொடுமையானதுன்னு நினைச்சுப் பார்ப்போம். அதுக்கு நம்மால் என்ன செய்ய முடியும்னு யோசிப்போம். தினமும், பசியில் இருக்கிற ஒருத்தருக்காவது சாப்பாடு கொடுப்போம். இப்படித்தான் இயங்கிட்டிருக்கு கோவை உணவு வங்கி (Food Bank Coimbatore)’’ என்று உள்ளத்திலிருந்து பேசுகிறார், அதன் நிறுவனர் வைஷ்ணவி.   

உலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது - வைஷ்ணவி

கோவையில் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உணவு வங்கி அமைப்பின் உறுப்பினர்கள், தங்கள் வீட்டுச் சமையலில் தினமும் ஒருவருக்குக் கூடுதலாகச் சமைக்கிறார்கள். அவற்றையெல்லாம் சேகரித்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் பட்டினியோடு இருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு வழங்கிவருகிறார்கள். பணி ஓய்வுபெற்றவர்கள், ஐ.டி துறையினர், கல்லூரி மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் இந்த அமைப்பில் உள்ளனர்.  இவர்கள் தங்களின் சேவைக்காக யாரிடமும் பணம் வாங்குவதில்லை. உணவாகவோ, உழைப்பாகவோ மட்டுமே உதவிகள் பெறுகிறார்கள்.

‘`எங்களைப் பார்த்து இப்போ ஈரோடு, சேலம், தெலங்கானாவிலும் உணவு வங்கி தொடங்கியிருக்காங்க’’ என்று உற்சாகமாகப் பேசுகிறார் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் பட்டதாரியான வைஷ்ணவி. `சிஐடி’ கல்வி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியரான இவர், தான் இந்தச் சேவைக்கு வந்தது பற்றியும் உணவு வங்கியின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.

“நான் பணிபுரிந்த `சிஐடி’ நிறுவனத்தில், நண்பர்கள் சிலர் இணைந்து ஆதரவற்ற குழந்தைகளுக்குப் பாடம் எடுப்போம்.  ஒருநாள் எங்க வீட்டுக்குப் பக்கத்துல, 70 வயசிருக்கும் ஒரு பாட்டி துடைப்பம் வித்துட்டிருந்தார். திடீர்னு அவர் மயங்கிவிழ, நான் ஓடிப்போய் அவருக்குத் தண்ணி கொடுத்தேன். ‘நீ மட்டும் தண்ணி கொடுக்கலைன்னா, நான் போய் சேர்ந்திருப்பேம்மா’னு சொன்னார். உண்மைதான்... ஒரு மிடறு தண்ணியும் ஒருவேளை சாப்பாடும் இல்லாம உயிரை விடுறவங்க எத்தனையோ பேர். மாற்றி சொல்லிப்பார்த்தா, ஒரு மிடறு தண்ணியும் ஒருவேளை சாப்பாடும் உயிர்களைக் காப்பாற்றக்கூடியது. அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சு ஆரம்பிச்சதுதான், ‘ஃபுட் பேங்க் கோயம்புத்தூர்’.

நண்பர்கள், உறவினர்கள், அவர்களுக்குத் தெரிந்தவர்கள்னு பலரும் இந்த அமைப்பில் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் உறுப்பினர்களா இணைஞ்சாங்க. வீட்டில் மீதமாகிற உணவைக் கொடுக்கிறதில் எங்க அமைப்புக்கு உடன்பாடில்லை. நாம நல்ல உணவை, சூடான உணவைச் சாப்பிடுற மாதிரியே பசியில் வாடும் மனுஷங்களும் சாப்பிடணும்னு நினைச்சோம். அதனால, எங்க உறுப்பினர்கள் அனைவரின் வீட்டிலும் தினசரி சமையலை ஒருத்தருக்குச் சேர்த்துச் சமைத்து, அதை பேக் செய்துடுவோம். அவற்றை எல்லாரோட வீட்டிலும் சென்று சேகரிச்சு எடுத்துட்டுவந்து, ரோட்டோரமா பசியில் வாடிக்கிடக்கும் மனிதர்களைத் தேடிப்போய்க் கொடுப்போம்’’ என்று சொல்லும் வைஷ்ணவி, தங்கள் அமைப்பின் மீட்டிங் ஸ்பாட் வ.உ.சி பூங்கா என்கிறார். அங்குதான் இவர்கள் அனைவரும் சந்தித்து, கலந்தாலோசிக்கிறார்கள். சேகரிக்கும் உணவுகளைக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். அங்கிருந்து புலியகுளம், டவுன்ஹால், மருதமலை என்று இருசக்கர வாகனத்தில் சென்று விநியோகிக்கிறார்கள்.

‘`வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், எந்த வேலையும் கிடைக்காததால் ரோட்டுக்கு வந்தவர்கள்னு தேர்வுசெய்து உணவை வழங்குவோம். மிகவும் முதியவர்களைக் கண்டால் ஹோமில் சேர்த்துடுவோம். உடல் பலமும் ஆர்வமும் இருக்கிறவங்களுக்கு, எங்களுக்குத் தெரிஞ்சவங்க மூலமா ஏதாவது வேலை ஏற்பாடு செய்துகொடுப்போம். 

‘எங்களுக்கும் சாப்பாடு கொடுக்க ஆசை, வந்து எடுத்துக்க முடியுமா’னு சமூக வலைதளம் மூலம் கேட்டு எங்களுடன் இணைஞ்சவங்க பலர். நான் சாப்பாடு கொடுக்கப்போகும்போது என் பெண்ணையும் அழைச்சுட்டுப்போவேன். அதேபோல, எங்கள் அமைப்பிலிருக்கும் பலர், தங்கள் குடும்பத்தோட சென்று சாப்பாடு கொடுத்துட்டு வருவாங்க. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கியிருக்கோம்’’ என்றவர்,

‘`உலகத்துல மொத்த மக்கள்தொகையின் தேவையைவிட 10 சதவிகிதம் எக்ஸ்ட்ராவாகவே உணவிருக்கு. ஆனா, பகிர்ந்தளிக்கும் எண்ணம் இல்லாததாலேயும், அதுக்கான வழி தெரியாததாலேயும் பல கோடி பேர் பட்டினியோட இருக்காங்க. நாம எல்லோரும் நினைச்சா, இந்த நிலையை நிச்சயம் மாற்ற முடியும். உலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது. அங்கே நீங்க பார்க்கிற ஒட்டிப்போன வயிறுகளுக்கும் சேர்த்துச் சமைத்தால், அவங்க வாழ்க்கை மட்டுமில்லை, உங்க மனசும் எவ்வளவு அழகாகும்னு உணர்ந்துபார்க்கலாம்’’ - கைகள்கூப்பிச் சொல்கிறார் அன்னமிடும் கைகளுக்குச் சொந்தக்காரரான வைஷ்ணவி. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!