Published:Updated:

“இதுவே என் வாழ்க்கை!” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார்

“இதுவே என் வாழ்க்கை!” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார்
பிரீமியம் ஸ்டோரி
“இதுவே என் வாழ்க்கை!” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார்

மனம் மலரட்டும்பிரேமா நாராயணன் - படங்கள் : வீ.நாகமணி

“இதுவே என் வாழ்க்கை!” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார்

மனம் மலரட்டும்பிரேமா நாராயணன் - படங்கள் : வீ.நாகமணி

Published:Updated:
“இதுவே என் வாழ்க்கை!” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார்
பிரீமியம் ஸ்டோரி
“இதுவே என் வாழ்க்கை!” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார்

‘பான்யன்!’ - பெயருக்கேற்றாற்போல, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தன் குடையின் கீழ் அடைக்கலம் கொடுத்துக் காக்கும் பிரமாண்ட விருட்சம். 1993-ல் தொடங்கப்பட்ட ‘பான்யன்’ அமைப்பு, இன்று சென்னை தாண்டி, தமிழகம் தாண்டி, இந்தியாவையும் தாண்டி உலகளவில் பரவியிருக்கிறது. அதன் நிறுவனர் வந்தனா கோபிகுமாரின் உழைப்பும் சேவையும் பிரமிக்க வைக்கின்றன. அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் வழங்கப்படும், சர்வதேச அளவில் மதிப்புமிகுந்த, ‘பென் நர்ஸிங் ரென்ஃபீல்டு ஃபவுண்டேஷ’னின் உயரிய விருதை சமீபத்தில் பெற்றிருக்கிறார் வந்தனா. இவ்விருதைப் பெற்றவர்களில் இளையவர், முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

“இதுவே என் வாழ்க்கை!” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார்

‘பான்யன்’ அமைப்புக்கு இது வெள்ளிவிழா ஆண்டு என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அதன் நிறுவனர்கள் வந்தனா மற்றும் வைஷ்ணவிக்கு. வாழ்த்துகளுடன் வந்தனாவைச் சந்தித்தோம்.

‘‘இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவங் களோட எண்ணிக்கை 15 கோடினு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. உலகளவில் மனநலம் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவர் இந்தியர். மன உளைச்சல், பதற்றம் இதெல்லாமே ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம். ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறவர்கள் நார்மலாகிடுறாங்க. ஆனா, அதைக் கண்டுபிடிக்க முடியாதபோது, அது மனநோயாக முற்றி, அவங்களோட குடும்ப, சமுதாய வாழ்வே குலைஞ்சு போயிடுது. சுத்தியிருக்கவங்க பார்க்கும் பார்வையும் நடத்தும் விதமும் அவங்க நிலையை இன்னும் மோசமாக்கிடுது. ஆனா, முன்பிருந்த நிலைக்கு இப்போ எவ்வளவோ விழிப்பு உணர்வு வந்திருக்குன்னாலும், அது போதாது; இன்னும் வரணும்... அவங்களையும் சமுதாயத்தில் ஓர் அங்கமாக அங்கீகரிச்சு, சாதாரண மக்களுடன் கலந்திருக்க அனுமதிக்கும் அளவுக்கு வரணும். அதுதான் எங்களுடைய இப்போதைய நோக்கம், போராட்டம்’’ - கடகடவெனப் பேசுகிறார் வந்தனா.

‘‘இந்த 25 வருஷங்களில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேருக்கு சிகிச்சை கொடுத்து வீட்டுக்குத் திரும்ப அனுப்பியிருக்கோம். வீடில்லாமல் தெருவில் விடப்பட்டு, வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக் காகத்தான் ‘பான்யன்’ தொடங்கினோம். சில வருஷங்களுக்கு முன்னால், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும் தனி யூனிட் ஆரம்பிச்சிருக்கோம். இங்கேயே தங்கி சிகிச்சை எடுத்துக்கிறவங்க, சிகிச்சை முடிந்து தொழிற்பயிற்சி எடுத்துக்கிறவங்கன்னு கிட்டத்தட்ட 750 பேர் ‘பான்ய’னில் இருக்காங்க.

இங்கேயிருக்கிற ஒவ்வொருத்தருக்குமே வீட்டுக்குப் போகணும்கிற ஆசை இருக்கும். தனக்குன்னு ஒரு குடும்பம், வேணும்கிறதை வாங்கிக்க கொஞ்சம் பணம்... இதெல்லாம் எல்லாருக்குமே இருக்கும் ஆசைகள். அவை இவங்களுக்கு மறுக்கப்படுறதுதான் வேதனை. இவங்களாலும் எல்லாரையும் போல வாழ முடியும். ஆனா, சுத்தியிருக் கிறவங்க அதுக்கான ஒரு வாய்ப்பைக் கொடுத்தால்தானே! மாத்திரைகள் மற்றும் கவுன்சலிங்கால் எத்தனையோ பேர் குணமாகியும்கூட, வீட்டுக்குத் திரும்ப முடியாமல் இருக்காங்க.

ஒரு சில குடும்பங்கள்ல பெற்றோர்கள், உடன்பிறந்தவர்களைக் கூப்பிட்டு, கவுன்சலிங் செய்த பிறகு, வீட்டுக்கு அழைச்சுட்டுப் போறாங்க. இன்னும் சில வீடுகளில், கணவரே வந்து புரிஞ்சுகிட்டு, வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறார். ஆனா, மாமனார் மாமியார் இருக்கும் கூட்டுக் குடும்பங்களில் இன்னும் அந்த அளவுக்கு ஏத்துக்கும் மனப்பக்குவம் வரலை. இவங்களை வீட்டில் எல்லோரும் ‘அக்செப்ட்’ பண்ணணும்; பிறகு ‘சப்போர்ட்’ பண்ணணும்.

இந்தப் பெண்களுக்குச் சமுதாயத்தில் மத்தவங்களோடு கலந்து வாழும் சூழல் (social mixing) நிச்சயமாகத் தேவை. இவங்க குணமாகிறதைத் தக்கவெச்சுக்கிறதுக்கும் மீண்டும் பாதிப்பு வராம இருக்கிறதுக்கும் ‘சோஷியல் மிக்ஸிங்’ உதவும். கூடவே, வேலை வாய்ப்பு, தொழில்ரீதியான பயிற்சிகள் வழங்குவதன் மூலம் அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடியும். வறுமையால ஏற்படும் மன உளைச்சல்களும் தவிர்க்கப்
படும். எங்கள் ‘பான்யன்’ நிறுவனம் அவங்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது, அரசு சலுகைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பெற்றுத்தருவது போன்ற வேலைகளையும் செய்துட்டிருக்கு’’ என்றவர், ‘ஹோம் எகெய்ன்’ திட்டம் பற்றிச் சொன்னார்.

``வீட்டுக்குப் போக வழியில்லாதவங்களுக்கு, ‘ஹோம் எகெய்ன்’ திட்டத்தின் மூலம், நாங்களே வீடுகளை அமைச்சு, நாலைந்து பேர் மற்றும் ஒரு கேர் டேக்கர் எனத் தங்கவைத்து, மறுவாழ்வுக்கான அத்தனை பயிற்சிகளையும் கொடுத்து, அவங்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்துடன் கலந்து வாழ வெச்சுட்டிருக்கோம். புள்ளம்பாடி ‘ஹோம் எகெய்ன்’ல, மன அழுத்தத்தால ரொம்ப வருஷங்களாகச் சிரிக்காத ஓர் அம்மாவோட மடியில், பக்கத்து வீட்டுக்காரப் பொண்ணு கடைக்குப் போறப்போ தன் குழந்தையைக் கொண்டுவந்து படுக்கவெச்சுட்டுப் போனாங் களாம். அந்த அம்மா, குழந்தையைப் பார்த்ததும் சிரிச்சு, பேசி, கொஞ்சி தன் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்காங்க.இதுபோன்ற வாய்ப்பைச் சமூகம்தான் கொடுக்கணும்’’ - அழுத்தமாகச் சொல்கிறார் வந்தனா.

`பான்ய’னில் வந்தனாவைப் போன்றே உயரிய நோக்கத்தோடும் பெருவிருப்பத்துடனும் பணிபுரியும் 200 ஊழியர்கள் இருக்கிறார்கள். பான்யன் அறக்கட்டளையின் அறங்காவலர்களுள் ஒருவரான வந்தனாவின் கணவர் செந்தில்குமார், ``குடும்பத்தையும், பான்யனையும் பிரிச்சுப் பார்ப்பதில்லை’’ என்கிறார்.

`பான்ய’னில் சிகிச்சை பெறுவோர் மற்றும் குணமானவர்களுக்காக, அவர்களின் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளை அளிக்கும் கைத்தறிக் கூடம், ஜூட் பைகள் தைக்கும் தையல்பயிற்சிக் கூடம், ஃபைல்கள் தயாரிக்கும் கூடம், நார்ப்பொருள்கள் தயாரிக்கும் இடம், பியூட்டி பார்லர், அவர்களே நடத்தும் கஃபே, சமையல் கூடம், பெட்டிக்கடை என எங்கும் எதிலும் வந்தனா, வைஷ்ணவி என்ற இரு சாதனைப் பெண்களின் அக்கறை மற்றும் ஆர்வத்தின் நற்பயன்களைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

‘‘இதில் இருக்கிற எல்லாருக்குமே ஊதியம் உண்டு. அந்தப் பணத்தை இங்கேயே சிறுசேமிப்பு மூலமாகச் சேமிக்கவும் செய் றாங்க. 10 ஆயிரம் ரூபாய் வரை சேமிச்சு நகை வாங்கிக்கிட்ட பெண்கள்கூட இருக்காங்க. இந்த 25 வருஷங்களில் ‘பான்யன்’, விரிவான மனநலச் சேவையைச் சுமார் 10 லட்ச மக்களிடையே கொண்டுபோய் சேர்த்திருக் கிறது. சுமார் 10 ஆயிரம் பேர் பான்யனின் புறநோயாளிகள் பிரிவில் பதிவுசெய்து பயனடைஞ்சிருக்காங்க. வீடு இல்லாம, ஆதரவற்ற நிலையில வீதியில் கிடந்த மன நோயாளிகளுக்கு ஆதரவும் புனர்வாழ்வும் கொடுத்திருக்கு பான்யன். இங்கே பதின்வயசுப் பொண்ணுங்களில் தொடங்கி, 70 வயசு பாட்டிவரை இருக்காங்க.

யாருக்காவது மனநோய் அறிகுறிகள் இருந்தா, மருத்துவ சிகிச்சையும் மத நம்பிக்கை யும் மட்டும் போதாது. அவங்களை முத்திரை குத்தி ஒதுக்காமல், மனசார ஏத்துக்கிட்டு, அவங்களுக்குத் தேவையான எல்லா ஆதரவை
யும் சரியான நேரத்தில் கொடுத்து, ‘நாங்க இருக்கோம்’கிற நம்பிக்கையை அவங்க மனசில் பதிய வைக்கிறதுதான் குடும்பத்தி னரும் சமுதாயமும் செய்யவேண்டியது. அப்போதான் தெருவில் பெண்கள் அநாதராவாகக் கிடக்கும் கொடுமை மறையும்’’ - வந்தனாவின் வார்த்தைகளில் தார்மிகப் பொறுப்பு உணர்வு ஒலிக்கிறது.

‘பென் விருது’ மூலம் கிடைத்திருக்கும் சுமார் 65 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை ‘பான்ய’னுக்கே வழங்குகிறார் வந்தனா.

`` ‘பான்யன்’ நான் தொடங்கிய அமைப்பு இல்லை; என் வாழ்க்கை’’ என்கிற அவர் வார்த்தைகளின் அர்த்தம் புரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இதுவே என் வாழ்க்கை!” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார்

அடுத்த கட்டத்தை நோக்கி!

‘பா
ன்யன் அகாடமி ஆஃப் லீடர்ஷிப் இன் மென்டல்ஹெல்த் (BALM)’ மற்றும் ‘அதர் ஐடென்டிடி ஃபவுண்டேஷன்’ போன்றவை ‘பான்ய’னின் அடுத்தகட்ட அக்கறை. மனநலம் சார்ந்த கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கென தொடங்கப்பட்டது ‘BALM’. இங்கே டிப்ளோமா மற்றும் முதுகலைப் படிப்புகள் உள்ளன. அயல்நாட்டு மாணவர்களும் ஆய்வுக்கென வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் மனைவியாகவோ, தாயாகவோ ஆகமுடியாது என்ற பொய்யான நம்பிக்கையை உடைத்தெறிவதும், அவர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளைக் கண்டறிந்து, விருது கொடுத்து ஊக்குவிப்பதும் ‘அதர் ஐடென்டிடி ஃபவுண்டேஷ’னின் குறிக்கோள். இதில் இயக்குநர் மணிரத்னம், ரேவதி, ரோகிணி, ஷோபனா, மாதவன், பி.சி.ஸ்ரீராம் எனப் பல பிரபலங்கள் தூண்களாக இருக்கிறார்கள்.

கிராமப்புற மக்களுக்காக ‘நலம்’ என்ற மனநலம் சார்ந்த நிகழ்ச்சிகள், அவசர சிகிச்சை மையங்கள், மக்களுடன் சேர்ந்து வாழும் வீடுகள், 10 கல்வி மையங்கள், 18 சேவை முனையங்கள் (சர்வீஸ் ஆக்சஸ் பாயின்ட்ஸ்), பல மருத்துவ நிலையங்கள், ஆண்களுக்கான தங்குமிடங்கள் என்று இவர்களின் செயல்பாடுகள் விரிந்துகொண்டே போகின்றன.