Published:Updated:

“வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்!”

“வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்!”

ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரிஅந்த நாள்வி.எஸ்.சரவணன் - படங்கள் : வெ.ராம்குமார்

“வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்!”

ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரிஅந்த நாள்வி.எஸ்.சரவணன் - படங்கள் : வெ.ராம்குமார்

Published:Updated:
“வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்!”

1993 மார்ச் 30... ஆசியக் கண்டத்திலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுநராக, நாகர்கோவிலைச் சேர்ந்த வசந்தகுமாரி பணியேற்ற நாள். இந்திய தென்கோடியின் எளிய பெண்ணை இந்த நாடே வியப்போடு பார்த்த நாள். இந்தச் சமூகத்தில் அனைத்து வேலைகளிலும் பெண்களும் ஈடுபடுவோம் என இந்த உலகுக்கு உற்சாகமாகக் கூறிய நாள். 

“வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்!”

“உங்கள் வாழ்வின் திருப்புமுனையான அந்த நாள் பற்றிச் சொல்வதற்கு முன்பு, உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்” என்றதும், ‘`அது நிறைய இருக்கே... எங்கே தொடங்கி, எதைச் சொல்றதுனு தெரியலையே!” எனச் சிரிப்புடன் தொடங்குகிறார் வசந்தகுமாரி.

“நாகர்கோவிலின் கிள்ளியூர் பக்கத்தில், தொலையா வட்டம்தான் என் சொந்த ஊர். அப்பாவுக்கு ஒரே பொண்ணு. எனக்கு ஒன்றரை வயசு இருக்கும்போது அம்மா இறந்துட்டாங்க. மாமா வீட்டுலதான் வளர்ந் தேன். எனக்கு எல்லாமே பாட்டிதான். ஆசை ஆசையாகப் பார்த்துக்கிட்டாங்க. ஆனா, நான் நாலாவது படிக்கும்போது அவங்களும் இறந்துட்டாங்க. வசதியில்லாததால ஹைஸ்கூலோடு படிப்பு முடிஞ்சுப்போச்சு. கே.எஸ்.எஸ் என்ற அமைப்புல ஹெல்த் வொர்க்கராக வேலை செய்ய ஆரம்பிச்சேன். 19 வயசுல திடீர்க் கல்யாணம் நடந்துச்சு. அவர் பேர் செபஸ்ட்டியன். ரீட்டாபுரத்தைச் சேர்ந்தவர். அவரின் முதல் மனைவிக்கு நாலு பொம்பளைப் புள்ளைங்க. அஞ்சாவதா ஆம்பளைப் புள்ள பொறந்தப்போ அந்தம்மா இறந்துட்டாங்க. அந்தக் குழந்தையும் கொஞ்ச நாள்ல இறந்துடுச்சு. தன் புள்ளைங்களைப் பார்த்துக்க ஒரு பொண்ணைத் தேடிட்டிருந்தார். அம்மா இல்லாமல் வளர்ற கஷ்டத்தை அனுபவிச்சவ நான். அதை அந்தப் புள்ளைங்களும்படக்கூடாதுனு நினைச்சேன். செபஸ்ட்டியனைக் கல்யாணம் பண்ணிக்கறதா வீட்டுல பெரியப்பாகிட்டே சொன்னேன். எல்லோரும் தயங்கினாங்க. ஏன்னா, எனக்கு 19 வயசு; அவருக்கு 39 வயசு. எல்லாரின் எதிர்ப்பை மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எம் புள்ளைங்களா நினைச்சு அந்த நாலு புள்ளைங்களையும் வளர்த்தேன். எனக்கும் ஓர் ஆண், ஒரு பெண் குழந்தை பொறந்துச்சு. கிடைச்ச வேலைகளைப் பார்த்து, எல்லோருக்கும் நல்லபடியா கல்யாணம் கட்டிக்கொடுத்திருக்கேன். இப்போ எனக்கு 13 பேரக் குழந்தைகள்” எனச் சொல்லும்போதே பூரிப்பும் மகிழ்ச்சியும் வசந்தகுமாரியின் குரலில்.

“இந்தச் சூழலில் டிரைவரானது எப்படி?” எனக் கேட்டதும், “அதுக்குத்தானே வாரேன்” எனச் சிரித்துக்கொண்டே தொடர்கிறார்... 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்!”

“15 வயசிருக்கும்போது பெரியப்பா வீட்ல ஒரு கார் வாங்கியிருந்தாங்க. அதை ஓட்டிப் பார்க்க ஆசைப்பட்டதும் அண்ணன் கத்து கொடுத்தார். பக்கத்து ஊருக்குப் போகணும்னா, நானே காரை எடுத்துட்டுப் போயிடுவேன். அதைப் பார்க்கிறவங்க, ‘ராஜம்மா மவளைக் கொல்லப் பார்க்கிறாங்களே’னு விளையாட்டா சொல்வாங்க. கல்யாணமாகி ரீட்டாபுரம் வந்ததும், 1989-ம் வருஷத்தில் ஹெவி  லைசென்ஸ் வாங்கினேன். மாதர் சங்கத்தில் இருந்தவங்க, ‘நம்ம நாட்டுல இப்போ பெண்களுக்கு நிறைய வேலைவாய்ப்பு இருக்கு. நீதான் நல்லா வண்டி ஓட்டறியே... பஸ் ஓட்டப் போகலாமே’னு சொன்னங்க. உடனே, டிரைவர் வேலைக்கு அப்ளை பண்ணினேன்’’ என்கிறார் வசந்தகுமாரி.

வேலை கிடைப்பது அத்தனை சுலபமாக இருந்துவிடவில்லை. ஒவ்வோர் இடத்திலும் பிரச்னை.

162 செ.மீ உயரம்கொண்டவர் வசந்தகுமாரி. தேர்வின்போதோ 159.2 செ.மீ எனத் தவறாக அளந்திருக்கிறார்கள்.

‘`ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. எப்படியாவது வேலைக்குப் போகணும்னு போராடினேன். கவர்ன் மென்ட் ஹாஸ்பிடலுக்குப்போய் ஹைட், வெயிட் இரண்டுக்கும் சர்ட்டிஃபிகேட் வாங்கினேன். அந்த நேரத்துல பலரும் எனக்கு உதவினாங்க. சமூகச் செயற்பாட்டாளரா இருந்த ஓவியாவும் அவங்களோடு இருந்தவங்களும் எனக்காகப் பெரிய பேரணியே நடத்தினாங்க. இதெல்லாம் அரசாங்கத்து காதுல விழலை. எங்க ஊரு எம்.எல்.ஏ பாலையா, சட்டமன்றத்தில் இதைப் பற்றிக் கேள்வி கேட்டதுக்கு, அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர், என் உயரம் கம்மினு பதில் சொல்லியிருக்கார். இது தெரிஞ்சதும், ஹாஸ்பிட்டலில் வாங்கின சர்ட்டிஃபிகேட்டை எடுத்துட்டுச் சென்னைக்குப் போனேன். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மாகிட்டே மனு கொடுத்தேன். அவங்க என்கிட்டே அன்போடு பேசினாங்க. ‘பஸ் நல்லா ஓட்டுவீங்களா?’ எனச் சிரிச்சுட்டே கேட்டாங்க. ‘ஓட்டுவேன்’னு என் திறமையைத்தான் சொன்னேனே தவிர, அப்பவும் என் வறுமை, குடும்பச் சூழ்நிலைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லலை. திறமைக்கு வேலை கிடைச்சா போதும்னு நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகலை. அங்கேயே பர்சனல் செக்ரட்டரியை அழைச்சு, ‘வசந்தகுமாரிக்குத் திரும்பவும் இன்டர்வியூ வைக்கச் சொல்லுங்க’னு உத்தரவு போட்டாங்க. 

“வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்!”

நிறைய மண்ணெண்ணெய் பேரல்களை பஸ்ஸில் வெச்சு, கீழே விழுந்துடாம ஓட்டச் சொன்னாங்க. நானும் கரெக்டா ஓட்டிக் காட்டினேன். ஒருவழியாக வேலை கிடைச்சுது. 1993 மார்ச் 30-ம் தேதி, முதல்வர் கையால் பணி ஆணையை வாங்கினேன். ‘நல்லா வேலை பாருங்க. என் ஆசி எப்பவும் உங்களுக்கு உண்டு’னு சொன்னாங்க. `ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் நீதான்'னு சொன்னாங்க. அப்போ, எனக்கு அதுபற்றியெல்லாம் ஒண்ணும் புரியலை. நம்ம கனவு நிறைவேறிடுச்சு. கொடுத்த வேலையை ஒழுங்கா செஞ்சு நல்ல பேர் வாங்கணும்னு, ஸ்டீரியங்கைப் பிடிச்சேன். அன்னிக்கு ஆரம்பிச்ச ஓட்டம், போன வருஷம்தான் நின்னுச்சு. கிட்டத்தட்ட 24 வருஷங்கள் ஆயிடுச்சு’’ எனப் புன்னகைக்கும் வசந்தகுமாரியின் முகத்தில் நிறைவின் வரிகள்.

‘`ஆண்கள் நிறைந்த இடத்திலிருந்து ஒரு பெண் முன்னேறி வர்றது சாதாரணமா? என் சர்வீஸ்ல கவனக்குறைவு காரணமா ஒரு ஆக்ஸிடென்ட்கூட ஆனதில்லை. பெண் என்பதால் சலுகையெல்லாம் கிடையாது. ரொம்பக் கஷ்டமான ரூட்டும் தருவாங்க.

நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரூட்ல பல ராத்திரிகளில் பஸ் ஓட்டியிருக்கேன். அதுல மறக்கமுடியாத டிரிப் ஒண்ணு இருக்கு. அன்னிக்குச் சரியான கூட்டம். ஃபுட் போர்டுல தொங்கிட்டு வந்தாங்க. திடீர்னு ஸ்டீரியங் டைட்டாயிடுச்சு. லெப்ட் சைடு வீல் ஒண்ணு கழண்டு ஓடுது. பிரேக்கும் பிடிக்கலை. பயணிகளிடம் விஷயத்தைச் சொல்லி உஷார்படுத்திட்டேன். இடப்பக்கம் போகலாம்னு பார்த்தால், அந்தப் பக்கம் ஒரு கல்யாண வீட்டுக்கு வெளியே கூட்டமே நிற்குது. `சரி, நமக்கு என்னவானாலும் பரவாயில்லை’ன்னு வலப்பக்கமா ஒரு புளிய மரத்துல மோதி நிப்பாட்டி னேன். நல்லவேளையா பயணிகள் யாருக்கும் அடிபடலை. பஸ் முகப்புக் கண்ணாடி உடைஞ்சு என் உடம்புல சிதறி ரத்தம் கொட்டுச்சு. கைலேயும் அடி” என்று அந்த எதிர்பாரா தருணத்தைச் சிலிர்ப்போடு விவரிக்கிறார் வசந்தகுமாரி.

சில நிமிடங்கள் இடைவெளிவிட்டு, “பொண்ணுங்க பத்தடி முன்னேறின்னா, பல அடி கீழே பிடிச்சு இழுக்கிற சமூகம்தான் இது. அதுக்காக சோர்ந்துடாமல் போராடணும். ஆணைவிட பொண்ணு வலிமை குறைஞ்சவள் இல்லை. பீரியட்ஸ் நாள்களிலும் பஸ்ஸை ஓட்டிட்டு பல கிலோமீட்டர் போயிருக்கேன். கொஞ்சம் வயசானதும், சுகர், பி.பி வந்துடுச்சு. லைட்டான டியூட்டி கொடுங்கனு கேட்டேன். ‘முடியாது’னு மறுத்துட்டாங்க. அப்பவும் தளர்ந்துடலை. தயங்கி நிற்க ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம். ஆனால், வளர்வதற்கு ஒண்ணே ஒண்ணுதான் வேணும். அதுதான், விடாமுயற்சி. வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்” என்கிறார் கம்பீரப் புன்னகையுடன்.