Published:Updated:

14 நாள்கள்

14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

Published:Updated:
14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

நிறபேதத்தால் பாதிக்கப்பட்ட வயலாவுக்கு இன்று அளிக்கப்பட்ட அங்கீகாரம் முதல் துப்பாக்கிக் கலாசாரத்துக்கு எதிராக முழங்கும் சுட்டி யொலண்டாவுக்குக் கிடைத்த வரவேற்பு வரை கடந்த இரண்டு வார காலத்தில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன? அறிவோம்... ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்! 

14 நாள்கள்

அன்று அநீதி... இன்று கௌரவம்!

மெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினப் பெண் ரோசா பார்க்ஸ், ஆங்கிலேயர்களுக்காகப் பேருந்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து நகர மறுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்துக்கு ஒன்பது ஆண்டுகள் முன்பே, கனடாவில் அத்தகைய செயலைச் செய்த பெண்மணி வயலா டெஸ்மண்ட். 1946-ம் ஆண்டு நோவா ஸ்காட்டியா நகரின் ரோஸ்லாண்ட் திரையரங்கில் திரைப்படம் பார்க்கச் சென்றார் வயலா. ஆங்கிலேயருக்குச் சிறப்பு இருக்கைகளும், கறுப்பினத்தவருக்குச் சாதாரண இருக்கைகளும் ஒதுக்கப்பட்டிருந்த இரட்டை அமர்வு வழக்கம் பற்றி அறியாமல் சிறப்பு இருக்கையில் அமர்ந்தார் வயலா.  அதனால் அவரைக் கைது செய்யச் சொல்லி திரையரங்கு உரிமையாளர் காவல் துறையில் புகார் அளித்தார். கூடுதல் கட்டணமான ஒரு சென்ட்டைத் தர வயலா முன்வந்தபோதும், அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. `ஆங்கிலேயர் மட்டும்’ பகுதியில் அமர்ந்ததற்காக, வரி ஏய்ப்பு செய்தார் என்று கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் 32 வயதான வயலா. அவருக்கு வழக்கறிஞரும் மறுக்கப்பட 26 டாலர் அபராதம் விதித்தது நீதிமன்றம். 1965-ம் ஆண்டு மறைந்தும் போனார், காஸ்மெட்டிக் கம்பெனி ஒன்றை நடத்திய வயலா.

அவரின் சகோதரியான வாண்டா ராப்சன் 2003-ம் ஆண்டு முதல் வயலா குறித்து எழுதியும் பேசியும் வருகிறார். கடந்த ஆண்டு சாதனைப் பெண்களின் படங்கள் கொண்ட டாலர் நோட்டுகளை வெளியிடுவது என்று முடிவு செய்த கனடா அரசு, தகுந்த பெண்களைத் தேர்ந்தெடுத்துத் தருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது. ஏறத்தாழ 26 ஆயிரம் பெண்களின் படங்களும் அவர்கள் செய்த சாதனைகளின் பட்டியல்களும் குவிந்தன. 461 பெண்கள் முதல்கட்டமாகத் தேர்வாகி, அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் வயலா. அரச குடும் பத்துப் பெண்கள் தவிர வேறு எந்தப் பெண்ணின் தனித்த படமும் இதுவரை கனடா டாலரில் இடம்பெறவில்லை. முதன்முறையாக கனடா டாலர் நோட்டில் தனித்து இடம்பெறும் முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையை மரணத்துக்கு 50 ஆண்டுகளுக்குப்பின் பெறுகிறார் வயலா. பத்து டாலர் புதிய நோட்டின் வடிவமைப்பை வெளியிட்ட அவரின் 73 வயது தங்கை வாண்டாவுக்கோ அத்தனை பெருமை முகத்தில்!

தங்கை உடையாள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

14 நாள்கள்

மறைத்து வைக்காதீர்கள் மனநலச் சிக்கல்களை!

சி
ல ஆண்டுகளுக்கு முன் என்.டி.டி.வி-யில் தனக்கு நேர்ந்த மனச் சோர்வு மற்றும் மன அழுத்தம் குறித்து விரிவாகப் பேட்டி தந்தார் இந்தி சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோன். தொடர்ந்து மனநலம் பற்றி பேசியும் எழுதியும்வரும் தீபிகா, `லிவ்-லவ்-லாஃப் ஃபவுண்டேஷன்’ என்னும் அமைப்பை உருவாக்கி, மன அழுத்தம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார். மனநலம் பற்றி வெளிப்படையாகத் தன் மனதில் இருந்ததைப் பேசியதுதான் சிறந்தது என்று கூறியிருக்கும் தீபிகா, இதுபோன்ற பிரச்னைகளை நம்பகமானவர்களிடம் பகிர்ந்துகொள்வது நல்லது என்றும் தெரிவித்திருக்கிறார். தீபிகாவின் ஃபவுண்டேஷன் நாடு முழுக்க நடத்திய ஆய்வுகளின் தொகுப்பை வெளியிட்டு சமீபத்தில் பேசிய தீபிகா, “இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் சொந்த அனுபவங்கள் மூலம் இப்போது என்னைச் சுற்றியிருப்பவர்களின் எண்ணங்கள், உணர்ச்சிகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் மனநலம் பற்றிய புரிதலை ஓரளவுக்கு லிவ்-லவ்-லாஃப் ஃபவுண்டேஷன் ஏற்படுத்தி இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது” என்றும் கூறியிருக்கிறார்.

“டிப்ரஷன் பற்றி வெளிப்படையாகப் பேசுவது கடினமாக இல்லை. ஆனால், எனக்கு என்ன நடந்துகொண்டிருந்தது என்பதைப் புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தது. புரிந்ததும் பாதிப் பயணம் முடிந்துவிட்டதை உணர்ந்தேன். மீதிப் பயணம் சிகிச்சையில் கழிந்தது. அதைப் பற்றி பேசியதுதான் நான் செய்ததில் சிறந்ததாகக் கருதுகிறேன். இப்போது மிக இலகுவாக உணர்கிறேன்” என்று கூறியிருக்கும் தீபிகா, “இதுபோன்ற மனநலச் சிக்கல்களை நெருங்கியவர்களிடம் பகிர்வதில் தவறில்லை. அவர்கள் நம்மை மதிப்பிட மாட்டார்கள். அப்படியே செய்தாலும் அதில் தவறு ஏதும் இல்லை. உடல்நலக் கோளாறு போலத்தான் இதுவும் என்ற தெளிவு நமக்கு வேண்டும். மிக முக்கியமாக, இது போன்ற பிரச்னைகள் சாதாரணமானவை, அனைவருக்கும் வரக்கூடியவை, சரியாகிவிடுமென்ற நம்பிக்கை நமக்கு மிகவும் முக்கியம்” என்றும் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார். “நானும் டிப்ரஷனைச் சந்தித்திருக்கிறேன்; அதிலிருந்து மீண்டும் இருக்கிறேன். எனவே, மனம் தளர வேண்டாம்” என்று தெம்பூட்டியிருக்கிறார் தீபிகா!

முகமும் அழகு... மனசும் அழகு!

14 நாள்கள்

கொல்கத்தாவின் பெண்கள் படை!

கொ
ல்கத்தா நகரின் காவல் துறை ஆணையர் ராஜீவ் குமார், `ஷீ பட்ரோல்’ என்ற இருசக்கர வாகனங் களில் பயணித்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்புப் படைக்காக நேர்காணல் நடத்தி பெண்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார். நகரின் முக்கியப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் ரோந்து செய்யப்போகும் 20 பேர் கொண்ட சிறப்புப்படைப் பெண்கள் குழு, தேவைப்படும் இடங்களில் போதுமான பாது காப்பையும் உதவியையும் பெண்களுக்கு வழங்கும்.

2014-ம் ஆண்டு முக்கிய இடங்களில் பெண் காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தெருக்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றி உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் இவர்களது நியமனம் இருந்தது. கொல்கத்தா நகரில் ஏற்கெனவே மொத்தம் எட்டு மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.

இந்த சிறப்புக் காவல் படைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் பெரும்பாலும் சொந்தமாக இருசக்கர வாகனம் வைத்திருக்கும் காவல் துறை துணை ஆய்வாளர்கள். வாகனம் ஓட்டத் தெரிந்த இவர்களுக்கு அரசுப் பணிக்கெனப் புதிய இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும். இப்போது உள்ள 113 உதவி ஆய்வாளர்கள், 131 துணை உதவி ஆய்வாளர்கள் மற்றும் 444 கான்ஸ்டபிள்களில் இருந்து இந்த `ஷீ பட்ரோ’லுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. காவல் நிலையம் செல்லத் தயங்கும் பெண்களுக்கும் இந்த ரோந்துக் காவல் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்ம ஊருக்கு இதெல்லாம் வராதா ஆப்பிசர்ஸ்?!

14 நாள்கள்

மனித உயிர்களைக் காப்பாற்ற மாபெரும் போராட்டம்!

`ஐ
ஹேவ் எ ட்ரீம்' என்று தொடங்கிய உரை மூலம் உலக மக்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்த அமெரிக்க கறுப்பின மக்கள் உரிமைப் போராளியான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை நாம் அறிவோம். அவரின் பேத்தியான ஒன்பது வயது சுட்டிப் பெண் யொலண்டா ரினி கிங் அமெரிக்கத் தலைநகரில் மார்ச் 24 அன்று துப்பாக்கிக் கலாசாரத்துக்கு எதிரான `மார்ச் டு சேவ் அவர் லைவ்ஸ்’ என்ற போராட்டக் களத்தில் எழுச்சிமிகு உரை நிகழ்த்தியிருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவையே உலுக்கிய பார்க்லேண்ட் ஷூட்டிங் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் துப்பாக்கி கலாசாரம், வன்முறை ஆகியவற்றை எதிர்த்து அமெரிக்கப் பள்ளி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மார்ச் 24 அன்று இதுபோன்ற 800 பேரணிகள் உலகெங்கும் நடைபெற்றன. ஏறத்தாழ இருபது லட்சம் மாணவ மாணவிகள் கலந்துகொண்ட இந்தப் போராட்டம், அமெரிக்க வரலாற்றிலேயே வியட்நாம் யுத்தத்துக்கு எதிரான போராட்டத்துக்குப் பின் நடைபெற்ற மிகப்பெரிய எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய யொலண்டா, `என் தாத்தாவுக்கு ஒரு கனவு இருந்தது. தன் நான்கு குழந்தைகளும் அவர்களது நிறத்தால் இல்லாமல் குணத்தால் அளவிடப்பட வேண்டும் என்று விரும்பினார்' என்றார். `எனக்கும் ஒரு கனவு இருக்கிறது. போதும், பொறுத்தது போதும். துப்பாக்கிகளற்ற உலகம் நமக்கு வேண்டும்... அவ்வளவே!' என்று முழங்கியவர், `இந்த நாடு முழுக்க போற்றும் தலைமுறையாக நாம் இருப்போம்' என்றார். யொலண்டாவின் அத்தையும் மார்ட்டின் லூதர் கிங்கின் மகளுமாகிய பெர்னிஸ் கிங், தன் ட்விட்டர் பதிவில், கிங் குடும்பத்தின் எண்ணத்தையே தன் மருமகள் யொலண்டா பிரதிபலித்ததாகவும், அவரைக் கண்டு பெருமிதம்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

துப்பாக்கிக்கு எதிராகக் களம் இறங்கி இருக்கும் பூக்கள்!

14 நாள்கள்

உரிமைப் போராளிக்கு உயரிய விருது!

மா
ர்ச் 23 அன்று மறைந்த வழக்கறிஞரும் சமூகப் போராளியுமான அஸ்மா ஜஹாங்கீருக்கு அந்நாட்டின் உயரிய விருதான `நிஷான்-இ-பாகிஸ்தான்' விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது பாகிஸ்தான் அரசு. 66 வயதான அஸ்மா கடந்த மாதம் திடீர் மாரடைப்பால் காலமானார். மரணத்துக்குப் பின் இந்த உயரிய கௌரவம் அஸ்மாவுக்குக் கிடைத்துள்ளது. பாகிஸ்தானின் வீதிகளில் இறங்கி போராட்டங்கள் நடத்திய அஸ்மா, பாகிஸ்தானின் மனித உரிமைகள் கவுன்சில் நிறுவனர்களில் ஒருவர். அடிக்கடி ராணுவ ஆட்சியின் பிடியில் சிக்கித்தவித்த பாகிஸ்தானில் ஜனநாயகத்துக்காகக் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார் அஸ்மா. 1980-களில் அதிபர் ஜியா உல் ஹக்கின் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டவர் இவர். அதேபோல, பர்வெஸ் முஷாரஃபின் ராணுவ ஆட்சியிலும் சிறை சென்றார்.

தன் பள்ளிப் பருவத்தில், முறையான தேர்தல் இல்லாமல் பள்ளி மாணவர் தலைவியை நியமித்த நிர்வாகத்தை எதிர்த்து 1960-களில் எழுந்த கலகக் குரல் அஸ்மாவுடையது. சிறுபான்மையினருக்கு ஆதரவாக நீதிமன்றங்களில் வழக்குகளை முன்னெடுத்துப் போராடியவர். அரசு பயங்கரவாதத்தால் காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தவர். பாகிஸ்தானில் நடைபெற்ற கௌரவக் கொலைகளுக்கு எதிரான இவரது முன்னெடுப்பின் காரணத்தால்,
2003-ம் ஆண்டு பெண்கள் தங்கள் திருமணத்தை, ‘வாலி’ என்ற, ஆண் உறவினர்களது அனுமதி இன்றி, சொந்த விருப்பத்தின்பேரில் செய்துகொள்ளும் வகையில் திருமண சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அஸ்மா இருக்கும் வரை கொண்டாடப்பட்டாரோ இல்லையோ, மரணத்துக்குப் பின் விருது, மரியாதை என அவரைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.

சாதனைப் பெண்மணி  இருந்த வரை அருமை தெரியலையே!