Published:Updated:

#MeToo-வுக்கான வரையறை என்ன... சில கேள்விகளும் விமர்சனங்களும்..!

குறுகிய காலத்தில் பிரபலமாகி அந்தப் பிரபலத் தன்மை மிக விரைவிலேயே அழிந்துவிடும் இந்தக் காலத்தில் #MeToo-வும் இப்போதைக்கான பரபரப்பாகவே பேசி அடங்கிவிடும் அபாயம் இருக்கிறது.

#MeToo-வுக்கான வரையறை என்ன... சில கேள்விகளும் விமர்சனங்களும்..!
#MeToo-வுக்கான வரையறை என்ன... சில கேள்விகளும் விமர்சனங்களும்..!

#MeToo மூலம் சினிமா, பத்திரிகைத் துறைகளில் வேலைபார்க்கும் பெண்கள் தங்களுக்கு வேலைபார்க்கும் இடத்தில் பாலின ரீதியில் நிகழ்ந்த வன்கொடுமைகள் குறித்துச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இது இந்திய அளவில் பெரிய அலையை ஏற்படுத்தி வருகிறது. மிக முக்கியப் பொறுப்புகளிலும் சமூகப் படிநிலைகளும் இருக்கும் பல்வேறு ஆண்களின் போலி முகங்கள் பொதுவெளியில் வெளிப்பட்டு வருகின்றன. பெண்கள் தற்போது மிக வெளிப்படையாகத் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளை இந்த #MeToo மூலம் வெளிப்படுத்துகின்றனர். இதுதொடர்பாகச் சில வினாக்களும் விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. அவற்றையும் கருத்தில் கொண்டு செயல்படுத்தும்போது பொதுவெளிக்கும் வரும் பெண்களின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரிக்கும்.

 இந்தியாவில் இந்த #MetToo தொடங்கியபோது இது கல்வித்துறை சார்ந்தே அமைந்தது. அப்போது ஓரளவு ஆதரவு இருந்தது என்றாலும், நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா கொடுத்த புகாரைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் முன்னாள் பத்திரிகை ஆசிரியர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் கே.ஆர் ஸ்ரீனிவாசன், பிசினஸ் ஸ்டாண்டர்டு மயங்க் ஜெயின் ஆகியோர் மீது புகார் தொடுத்தனர். 

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயி முன்வைத்த குற்றச்சாட்டு இந்திய அளவில் பெரிய அலையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகத்தில் பதிவிடப்படும் ஒரு கருத்துக்கு அரசியல்வாதிகள் பதவி இழப்பது, சினிமா ஷூட்டிங் ரத்து செய்வது, சம்பந்தப்பட்டவர்மீது காவல்துறை விசாரணை, மத்திய அரசு சார்பில் 4 நீதிபதிகள் கொண்ட குழு, நடிகர் சங்கங்கள் சார்பில் ஒரு குழு எனத் தொடங்கி பல்வேறு எதிர்வினைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதன் விளைவாக மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தல்,  திரைப்படப் பிடிப்புகள் நிறுத்தப்படுதல் என்பதாக இருக்கின்றது.

பெண்களிடம்தாம் தங்களின் கௌரவம் இருக்கின்றது என்று நினைக்கும் இந்தியச் சமூகத்தில் நிலம், நீர் உட்பட பெரும்பாலான இயற்கைக்குப் பெண்களின் பெயர்களை வைத்துப் பூரித்துப்போய் நிற்கும் இந்தியச் சமூகத்தில், பெண்களைத் தெய்வங்களாகப் பார்க்கும் இந்த இந்தியச் சமூகத்தில்தான் பெண்களை வெறும் பாலியல் நுகர்வுப் பொருளாக மட்டுமே பார்க்கும் மிக மோசமான மனநிலை இருக்கிறது. இப்போதும் இந்த #MeToo  மூலம் வெளிவரும் புகார்களின் தீவிரத்தைப் பற்றி யோசிக்காமல் ``ஏன் இவ்வளவு நாள் கழித்து என்ற கேள்வியால் பிரச்னையை மக்கள் மத்தியில் கொண்டுவருபவரிடம் எழுப்புகிறோம். தவிர ஒருவர்கூட குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் எந்தக் கேள்வியும் எழுப்புவதில்லை. அல்லது எழுப்ப முடிவதில்லை. இதற்குக் காரணம் அவர்கள் எல்லாம் சமூக அடுக்குகள் அல்லது பொருளாதாரத்தில் மேல் அடுக்கில் இருப்பதாகவும் இருக்கலாம். எப்பொழுதும் கீழே இருப்பவரைத்தான் எளிதில் கேள்விக்குட்படுத்திவிடுகிறோம். அந்த வகையில் இதைச் சிறப்பாக எடுத்துச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் ஒட்டுமொத்த சமூகமும் இருக்கிறது. ஆனால், அதேநேரத்தில் சில கேள்விகளையும் விமர்சனங்களையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது...

#MeToo-வை நாம் ஆதரிக்கக் காரணம் என்ன, #MeToo-வுக்கான வரையறை என்ன; நாமாக தவறாகத் தேர்ந்தெடுத்த உறவு #MeToo-வில் வருமா, ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் தன் விருப்பத்தைச் சொல்வதே #MeToo-வில் வருமா, ஒரு காலத்தில் சேர்ந்திருந்து, தற்போது சில பிரச்னையினால் பிரிந்திருப்பது #MeToo-வில் வருமா, #MeToo  பதிவில் தன்னுடைய பெயரைப் பயன்படுத்துவதாலோ பயன்படுத்தாமல் இருப்பதாலோ சிக்கல்கள் வருமா, பால் உறவு சார்ந்த விருப்பத்தைத் தெரிவிப்பதற்கும் மோசமாகப் பேசுவதற்கும் வித்தியாசம் தெரியுமா, நகர்ப்புறப் பெண்களைவிடக் கிராமப்புற பெண்கள்மீதுதானே அதிக அளவு பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. அப்படியான கிராமப்புற பெண்களுக்கான #MeToo எங்கே என இன்னும் பல கேள்விகள் அதற்கான விளங்கள் இந்த இயக்கம் சார்ந்து தேவைப்படுகின்றன.

இந்த இயக்கம் பெண்கள் அமைப்பாகத் திரள்வதற்கு மாறாக மீடியா விசாரணையை முன்வைக்கிறது. பெண்களுக்கு எதிராக இருக்கும் பணியிடச் சூழல் பிரச்னைகளை அம்பலப்படுத்துவதற்கு மாறாகத் தனிநபர்கள் மீதே அதிகக் கவனம் குவிக்கிறது. சமூக வலைதளங்களை மையமாகக்கொண்டிருக்கும் இந்தப் போராட்டங்களைத் தங்கள் லாபநோக்குக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் நிர்வாகங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. தனித்தனி வழக்குகள், தனித்தனிச் செயல்பாடுகள் என்ற நிலையிலேயே இதில்வரும் குற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பொது நோக்கம், மொத்த சமூகத்துக்குமான செயல்திட்டம், ஆகியவற்றுக்குரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. தனிநபர் பலி தீர்த்துக்கொள்ளப்படுகிறது என்று இவைபோன்ற பல விமர்சனங்கள் இந்த அமைப்பின்மீது முன் வைக்கப்படுகின்றன.

முன்னர் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைப் பிரச்னைகளுக்கான போராட்டங்கள், நீட், ஸ்டெர்லைட், எட்டு வழிச் சாலை, கருத்துரிமை சார்ந்த போராட்டங்கள், காவேரி பிரச்னை, ஊழல் போன்ற அரசு சார்ந்து எழுந்த போராட்டங்கள் எல்லாம் அடுத்தடுத்த பிரச்னைகள் மூலம் நீர்த்துப் போயின. அதே நிலைமை இந்த #MeToo-வுக்கும் வரும். பெண்கள் இப்போதுதான் வெளியில்வந்து திடமாக தங்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு மிக முக்கியக் கவனம் கொடுத்து அதற்கான சரியான தீர்வுகள் கொண்டுவரப்பட வேண்டும். இல்லையேல் ஒரு பிரச்னையோ, மனிதரோ குறுகிய காலத்தில் பிரபலமாகி அந்தப் பிரபலத் தன்மை மிக விரைவிலேயே இழந்து வரும் இந்தக் காலத்தில் இதுவும் இப்போதைக்கான பரபரப்பாகவே பேசி அடங்கிவிடும் அபாயமும் இருக்கிறது.