Published:Updated:

என் உடல் என்னுடையதல்ல! - மார்கரெட் அட்வுட்

என் உடல் என்னுடையதல்ல! - மார்கரெட் அட்வுட்
பிரீமியம் ஸ்டோரி
என் உடல் என்னுடையதல்ல! - மார்கரெட் அட்வுட்

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம் மருதன்

என் உடல் என்னுடையதல்ல! - மார்கரெட் அட்வுட்

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம் மருதன்

Published:Updated:
என் உடல் என்னுடையதல்ல! - மார்கரெட் அட்வுட்
பிரீமியம் ஸ்டோரி
என் உடல் என்னுடையதல்ல! - மார்கரெட் அட்வுட்

ந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த பலரும் எதிர்பார்த்தது ஒன்றைத்தான். எப்படியாவது இதை மறந்துவிட வேண்டும், முடிந்தவரை விரைவாக, முழுவதுமாக. அவர்கள் நம்பிக்கையோடு இருந்தார்கள். வாசிப்பதற்கத்தான் மெனக்கெட வேண்டும். மறப்பதற்கு நாம் எதுவுமே செய்யவேண்டியதில்லை. படிக்கும் தருணத்தில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும் பல புத்தகங்கள், காலம் செல்லச் செல்ல காய்ந்த இலைபோல சுருங்கி, முற்றாக நம்மைவிட்டு விலகிவிடுகின்றன. `தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ மற்றோர் இலை. அது உதிர்ந்து கீழே விழுவதற்கும், சருகாக மாறுவதற்கும், மெள்ள மெள்ள அடித்துச் செல்லப்படுவதற்கும் அதிக நேரம் எடுக்காது. வாழ்வின் அசுர ஓட்டத்தின் முன்னால் 300 பக்க நாவல் எம்மாத்திரம்? 

என் உடல் என்னுடையதல்ல! - மார்கரெட் அட்வுட்

ஆனால், வெளிவந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட பிறகும் இந்த நாவலை வாசித்தவர்களால் அதை மறக்க முடியாமல்போனபோது, அவர்களுக்குப் பயம் வந்துவிட்டது. ஒருவேளை, இது நம்மைவிட்டு அகலவே அகலாதோ? இந்தப் புத்தகத்தில் உள்ள சொற்கள் அனைத்தும் நம்முள் முழுக்க இறங்கிவிட்டனவா? ஒவ்வொரு சொல்லும் வேர் பிடித்து உள்ளுக்குள் வளர ஆரம்பித்துவிட்டதா? நினைவுகளைக் கடந்து உடல் முழுக்க இந்தப் புத்தகம் படர்ந்து பரவிவிட்டதா? ஆவேசமான ஒரு வேட்டை விலங்குக்கு நாம் இரையாகிவிட்டோமா?

வாசித்தவர்களை மட்டுமல்ல, எழுதியவரையும்கூட அந்தப் புத்தகம் சக்கையாகப் பிழிந்து எடுத்துவிட்டது. மார்கரெட் அட்வுட் நினைவுகூர்கிறார்...

``நான் உண்மையில் வேறு ஒரு நாவலைத்தான் கற்பனை செய்திருந்தேன். அதைத்தான் ஆர்வமாக எழுதிக்கொண்டிருந் தேன். ஆனால், `தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ என்னை அவ்வப் போது இடைமறித்துக்கொண்டே இருந்தது. என்னைப் பிடித்து இழுத்து, கிளறிவிட்டுக்கொண்டே இருந்தது. வாரக்கணக்கிலோ மாதக் கணக்கிலோ அல்ல, மூன்றாண்டுகள் இதை நான் அனுபவித்தேன். `என்னை முதலில் முடித்துவிட்டு, வேறு எழுது' என்று அது என்னை வதைத்துக்கொண்டே இருந்தது. அதற்குமேல் தள்ளிப்போடுவது சாத்தியமில்லை என்ற சூழலில், நான் எழுத விரும்பியதை நகர்த்தி வைத்துவிட்டு, எழுத விரும்பாத அந்த நாவலை எழுதத் தொடங்கினேன்.

ஒருநாள் அமெரிக்க அதிபர் கொல்லப்பட்டுவிடுகிறார். அரசாங்கம் கவிழ்க்கப்படுகிறது. `இனி நாங்கள்தாம் எல்லாம்' என்று ஒரு சிறிய குழு அறிவிக்கிறது. ஜனநாயகத்தை அழித்துவிட்டு அந்த இடத்தில் மதநூலை நிறுத்தி, `இனி மதமே நம் கோட்பாடு. அதுவே சட்டம். அதுவே அரசு' என்று அறிவிக்கிறது அந்த வலதுசாரிக் குழு. தவிர்க்க முடியாதபடி, முதல் தாக்குதல் பெண்கள்மீதாக இருக்கிறது. அதை ஒரு பெண்ணின் குரலில் பதிவுசெய்திருக்கிறார் மார்கரெட் அட்வுட். `தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்' ஒரு பெண்ணின் கதை. அந்தப் பெண்ணுக்குப் பெயரில்லை. வலதுசாரிகள் அமைத்த புதிய உலகை அவள் விழிகள் வழியே நாம் காண்கிறோம். அவள் செவிகள் வழியே அந்த உலகின் அதிரவைக்கும் சத்தங்கள் நமக்குக் கேட்கின்றன. அவள் குரல், பெண்களின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலிக்கிறது. மார்கரெட் அட்வுட்டை வேறு எதுவும் செய்ய முடியாதபடி பிடித்து உலுக்கிய குரல் இதுதான். அந்தக் குரலையே அவர் செவிமடுத்துத் தன் புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார்.

`எனக்குப் பெயர் இல்லை; அடையாளம் இல்லை; கடந்த காலம் என்று ஒன்றும் இல்லை. நான் என்று என்னைக் குறிப்பிட்டுக்கொள்வதுகூட இங்கு குற்றம். இங்கே `நான்' என்று எதுவும் இருக்க முடியாது. நான் என்ன செய்ய வேண்டும், எப்படிச் சிந்திக்க வேண்டும், எதைத் தீண்ட வேண்டும், என்ன பேச வேண்டும், ஒரு நாளைக்கு எத்தனை அடிகள் நடக்க வேண்டும், நடக்கும்போது தலையை எப்படிச் சாய்த்து வைத்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அனைத்தும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. எதற்காக இந்தப் பைத்தியக்காரத்தனமான விதிகள் உருவாக்கப்பட்டன என்று எனக்குத் தெரியாது. ஆனால், அதை நான் கவனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் உடல் என்னுடையதல்ல! - மார்கரெட் அட்வுட்

ஒருகாலத்தில் எனக்கும் உரிமைகள் இருந்தன. ஆனால், அந்த நினைவுகளை பலவந்தமாக அவர்கள் அழித்துவிட்டார்கள். நான் கால் பதித்து நடந்த பூமி நழுவிச் சென்றுவிட்டது. `சுதந்திரம்' என்னும் சொல்லை ரகசியமாகக்கூட நான் சொல்லிப் பார்த்துக்கொள்ள முடியாது. வீடு, அதன் அர்த்தத்தை இழந்துவிட்டது. குடும்பம் என்னும் அமைப்பு சிதறடிக்கப்பட்டுவிட்டது. கணவன் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை எனக்கு. எனக்கொரு குழந்தை இருந்தது. ஆனால், அந்தக் குழந்தையை இனி நான் பார்க்க முடியாது. `உன்னிடமிருந்து வந்தது என்பதால் அதை உன்னுடையது என்று நினைத்துக்கொள்ளாதே' என்று எச்சரித்துப் பிரித்தெடுத்துவிட்டார்கள். என் சதையைக் கிழித்து எடுப்பதுபோல இருந்தது. பிறகு பழகிப்போய்விட்டது. இந்த உலகில் எல்லாமே ஒருகட்டத்தில் பழகிப்போய்விடுகிறது.

என்னால் இனி மழையை ரசிக்க முடியாது; ஓட முடியாது. வழிபடாமல் இருக்க முடியாது. பேச முடியாது. படிக்க முடியாது. தற்கொலை செய்துகொள்ள முடியாது. என் உடல், அரசுக்குச் சொந்தமானது. தன் தேவைக்கேற்ப அரசு என் உடலை உபயோகித்துக்கொள்ளும். பயனற்ற உடல் பிளாஸ்டிக் குப்பையைப்போல அப்புறப்படுத்தப்படும். குற்றமிழைத்தவர்கள் கொல்லப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் கொலை ஒரு சடங்குபோல எங்கள் அனைவரின் முன்னாலும் நிகழ்த்தப்படும். ஓர் ஆண் அல்லது பெண்ணின் உடல் எப்படித் தூக்கில் தொங்குகிறது என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அதைப் பார்த்தாக வேண்டும். கால்களை உதறித் தள்ளிக்கொண்டிருக்கும் அந்த உடல், நாளை என்னுடையதாகவும் இருக்கலாம். இந்த எச்சரிக்கை உணர்வை எனக்குள் விதைப்பதுதான் இந்தப் பங்கேற்பின் நோக்கம்.

நான் சிவப்பு ஆடை அணிந்திருக்கிறேன். அது என் அரசின் தேர்வு. சிவப்பு என்பது பெண்மையின் அடையாளம். நான் தப்பியோடினால் தொலைவிலிருந்து கண்டுபிடித்து, சுட்டுக்கொல்லவும் சிவப்பு உதவும். என் உணவை அரசு தேர்ந்தெடுத்து வழங்குகிறது. என் அரசு சுட்டிக்காட்டும் ஆண், என் உடலைத் தீண்டுவான். பதிலுக்கு நான் ஓர் உயிரை அளிக்க வேண்டும். அந்த உயிர் பரிசோதிக்கப்படும். பழுதிருந்தால் நான் வேறோர் ஆணிடம் அனுப்பி வைக்கப்படுவேன். என்னிடம் பழுதிருந்தால் நான் கழித்துக்கட்டப்படுவேன். பழுதில்லாத குழந்தை என்னிடமிருந்து பிரிக்கப்பட்டு விடும். பிறகு, அடுத்த தீண்டலுக்கு நான் தயாராக வேண்டும். நானல்ல, என்மூலமாகத் தோன்றும் உயிரே அரசுக்கு முக்கியம்.

இப்படியெல்லாம் நடக்கும் என்று என் னிடம் யாராவது முன்னர் சொல்லியிருந்தால், விழுந்து விழுந்து சிரித்திருப்பேன். இன்றோ, எல்லாமே நிஜமாகிவிட்டன. நான் அறிந்த அமெரிக்கா, என் கண்முன்னால் அழிக்கப்பட்டுவிட்டது. என் அரசு என்பது ராணுவத்தின் நீட்சியாக இருக்கிறது. என் அரசுதான் என் கடவுளாகவும் இருக்கிறது. என் அரசுக்கு எல்லைகள் இல்லை. என் உடலை மட்டுமல்ல, என் எண்ணங்களையும் என் அரசு கண்காணிக்கிறது; தணிக்கை செய்கிறது; வழிநடத்துகிறது; திருத்துகிறது; தண்டிக்கிறது.

என்னிடமிருந்து சொற்களை உருவி எடுத்துவிட்டார்கள். கனவு காணும் ஆற்றலை அழித்துவிட்டார்கள். போராடுவது இனியும் என் இயல்பாக இருக்கப்போவதில்லை. எது குறித்துச் சிந்திப்பது எனத் தெரியாததால் சிந்திப்பதையே நிறுத்திவிட்டேன். நான் இன்னமும் இறக்கவில்லை என்று மட்டுமே இப்போதைக்கு உறுதியாக என்னால் சொல்ல முடியும். நாளை எதுவும் நடக்கலாம். கடந்த காலத்தைப்போலவே எதிர்காலமும் என்னைவிட்டு விலகிச் சென்றுவிட்டது.'  

என் உடல் என்னுடையதல்ல! - மார்கரெட் அட்வுட்

``இப்படியெல்லாம் ஒரு நாவலை எழுத முடியுமா என்று எனக்குள் பல சந்தேகங்கள் இருந்தன'' என்கிறார் மார்கரெட் அட்வுட். `` `எந்தப் பிரச்னையும் இல்லாதபோது ஏன் இப்படியெல்லாம் நீ குரூரமாகச் சிந்திக்க வேண்டும்? அமெரிக்காவிலும் உலகிலும் ஜனநாயகம் இன்னமும் உயிர்த்திருக்கத்தானே செய்கிறது? பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?' என்றெல்லாம் வாசகர்கள் கேட்பார்கள் என நினைத்தேன். `இது ஒரு பைத்தியக்காரத்தனமான கதை' என்று உலகம் நகைக்குமோ என்றும் யோசித்தேன். இருந்தும், என்னை வாட்டிக்கொண்டிருந்த இந்தக் கதையை என்னைவிட்டு வெளியில் எடுத்த பிறகே எனக்கு நிம்மதி பிறந்தது'' என்கிறார் அட்வுட்.

ஆனால், அதை வாசித்த உலகம் நிம்மதி இழந்துவிட்டது. `இந்தப் புத்தகத்தை யாரும் படிக்க வேண்டாம்' என்று அமெரிக்கப் பள்ளிக்கூடங்கள் மாணவர்களைக் கேட்டுக்கொண்டன. `அட்வுட் பாவம், அவருக்கு என்ன ஆகிவிட்டதோ தெரியவில்லை' என்று சிலர் கிண்டலாக நகைத்தார்கள். `அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக அவர் வேண்டுமென்றே இப்படி எழுதியிருக்கிறார்' என்று வேறு சிலர் நிராகரித்தனர். மற்றொருபக்கம், இந்த நாவல் மெள்ள மெள்ள சமூகத்துக்குள் இறங்க ஆரம்பித்தது. விற்பனை சாத்தியங்களால் மொழிபெயர்ப்புகள் பெருகின. மார்கரெட் அட்வுட்டின் நாவல், புதிய வாசகர்களை ஈர்க்க ஆரம்பித்தது. அரசு, குடும்பம், ஜனநாயகம் அனைத்தும் உயிர்த்திருக்கும் சமூகங்களிலும்கூடப் பெண்கள் சுதந்திரமற்றவர்களாக இருந்ததைச் சுட்டிக்காட்டி பலர் அட்வுட்டை விவாதிக்க ஆரம்பித்தார்கள். `இது பெண்ணிய நாவலா?' என்று பலர் அட்வுட்டிடம் கேட்டனர்.

``ஒரு பெண்ணின் கதையை நான் எழுதினேன் என்றாலும், இதை ஒரு பெண்ணிய நாவல் எனச் சுருக்கிவிட முடியாது'' என்கிறார் அட்வுட்.  ``இது அதிகாரத்தைப் பற்றிய நாவல். அளவற்ற அதிகாரம் ஒரு சிலரின் கரங்களில் குவிந்தால் அவர்கள் சமூகத்தை எப்படி மாற்றுவார்கள் என்பதையே இந்த நாவலில் நான் விவரித்திருக்கிறேன். இதில் இருப்பவை, எங்கும் நிகழக்கூடியவைதாம். என்னைச் சுற்றி நடைபெறும் சில மாற்றங்களைக் காணும்போது அவையெல்லாம் ஏற்கெனவே நிகழ ஆரம்பித்துவிட்டனவா என்னும் சந்தேகமே எழுகிறது.''

அமெரிக்கா, இந்த நாவலை முதலில் அசட்டை செய்தது. `கனடாவைச் சேர்ந்த நீங்கள் எப்படி எங்கள் நாட்டைப் பற்றித் தவறாக எழுதலாம்?!' என்றும் சிலர் முணுமுணுத்தனர். ஆனால், இந்த நாவல் எழுப்பும் கேள்விகள் அமெரிக்காவைக் கடந்தவை என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்துகொண்டனர். இந்தக் கதை, நம் அனைவரோடும் உரையாடுகிறது, நம் அனைவரையுமே எச்சரிக்கிறது என்பதை உலகம் புரிந்துகொண்டது. அடிப்படைவாதம் வெற்றிபெற்றால் இப்படித்தான் நடக்கும். தனிமனிதச் சுதந்திரத்தில் அரசு தலையிட்டால், ஆணாதிக்கம் இயல்பானது என நாம் எடுத்துக்கொண்டால், சர்வாதிகாரத் தலைமையை அனுமதித்தால் நம் நாடும் பலியாடாக மாற்றம் பெற்றுவிடும். `மற்றவர்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. நானும் என் குடும்பமும் என் வீடும் பத்திரமாக இருந்தால் போதும்' என்று நாம் நினைக்க ஆரம்பிக்கும்போது நம் நாடு ஆக்கிரமிக்கப்படுகிறது. மார்கரெட் அட்வுட் நமக்கு வெளிச்சத்தை அளித்திருக்கிறார். அதைக் கொண்டு இருளைக் கண்டறிந்து அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் இருள் நம்மை மூழ்கடித்துவிடும்.

``இதுவரை மனிதர்கள் இழைக்காத எந்தக் குரூரத்தையும் நான் இதில் பதிவு செய்யவில்லை'' என்கிறார் மார்கரெட் அட்வுட். அதனால்தான் இது அதிக அச்ச மூட்டக்கூடியதாக இருக்கிறது; நம்மைவிட்டு அகலவும் மறுக்கிறது.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism