Published:Updated:

சவால்களில் விருப்பமா... கப்பல் வேலைக்கு வாங்க! - ரேஷ்மா

சவால்களில் விருப்பமா... கப்பல் வேலைக்கு வாங்க! - ரேஷ்மா
பிரீமியம் ஸ்டோரி
சவால்களில் விருப்பமா... கப்பல் வேலைக்கு வாங்க! - ரேஷ்மா

உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்சாஹா

சவால்களில் விருப்பமா... கப்பல் வேலைக்கு வாங்க! - ரேஷ்மா

உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்சாஹா

Published:Updated:
சவால்களில் விருப்பமா... கப்பல் வேலைக்கு வாங்க! - ரேஷ்மா
பிரீமியம் ஸ்டோரி
சவால்களில் விருப்பமா... கப்பல் வேலைக்கு வாங்க! - ரேஷ்மா

ப்பலில் வேலைபார்க்கிற ஆண்களுக்கு வாழ்க்கைப்படுவதில் பெரும்பாலான பெண்களுக் குத் தயக்கம் இருக்கும். காரணம், வருடத்தில் பாதியைக் கப்பலிலேயே கழிக்கிற ஆண் என்பதே. கப்பலில் வேலை செய்கிற பெண்களை ஏற்றுக்கொள்வதில் ஆண்களின் தயக்கம் அதைவிட அதிகம். அதனாலேயே அந்தத் துறையில் பெண் முகங்களின் பங்களிப்பு அரிதினும் அரிதாக இருக்கிறது.  

சவால்களில் விருப்பமா... கப்பல் வேலைக்கு வாங்க! - ரேஷ்மா

அரிதானவர்களில் ஒருவராக அறிமுகப்படுத்திக் கொள்கிறார் ரேஷ்மா நிலோஃபர் நாஹா. இந்தியா வின் முதல் பெண் மெரைன் பைலட் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரரான ரேஷ்மா, தமிழச்சி என்பதில் நாமெல்லாம் கூடுதல் கர்வம்கொள்ளலாம். இப்போது கொல்கத்தா துறைமுகத்தில் பணிபுரிகிற, உழைப்பால் உயர்ந்து இந்த அங்கீகாரத்தைத் தொட்டிருக்கிறார்.

``சின்ன வயசுல டாக்டருக்குப் படிக்கணும்கிற ஆசை இருந்தது. அப்புறம் வளர வளர அந்த மனநிலை கொஞ்சம் மாறி, குடும்பச்சூழல் காரணமா, ஸ்காலர்ஷிப்ல படிக்க முடியுமானு யோசிக்க ஆரம்பிச்சேன். அதேநேரம் அந்தப் படிப்பு வித்தியாசமானதா இருக்கணும்னும் நினைச்சேன். எங்க குடும்ப நண்பரின் மகன், அப்போ கப்பல் துறை வேலையில இருந்தார். அந்த நண்பர்தான் எனக்கும் அந்தத் துறையைப் பற்றிச் சொன்னார். அதுக்கான பேப்பர் விளம்பரத்தையும் காட்டினார். பார்த்ததுமே பிடிச்சது.

அந்தப் படிப்புல சேரணும்னா எழுத்துத் தேர்வுல பாஸ் பண்ணணும். அப்புறம் மெடிக்கல் எக்ஸாம். அதுலயும் பாஸ் பண்ணிட்டா, தங்கும் இடம், சாப்பாடு தவிர மற்ற எல்லாச் செலவுகளையும் கம்பெனியே ஏத்துக்கும்னு சொன்னாங்க. அதாவது மெரைன் இன்ஜினீயரிங் படிப்பை, ஒரு ஷிப்பிங் கம்பெனியே ஸ்பான்சர் பண்ணிப் படிக்க வைப்பாங்க. காலேஜ்ல சேர்ந்த முதல் நாளே அந்த கம்பெனியின் ஊழியர் என்கிற நினைப்போடு இருக்கலாம். ஐயாயிரம் பேர் தேர்வு எழுதி,  கடைசிக்கட்டமா தேர்வான 250 பேர்ல நானும் ஒருத்தியா அந்தப் படிப்பைப் படிச்சேன்.

டெக் சைடு, இன்ஜின் சைடுனு கப்பல் துறையில ரெண்டு பிரிவுகள் இருக்கும். டெக் சைடுல கேப்டன், சீஃப் ஆபீஸர், ஃபர்ஸ்ட் ஆபீஸர், செகண்டு ஆபீஸர்னு நாலு பேர் இருப்பாங்க. இன்ஜின் சைடுல சீஃப் இன்ஜினீயர்ஸ், அவங்களுக்கு அடுத்த லெவல் இன்ஜினீயர்ஸ் இருப்பாங்க. ரெண்டு பிரிவுகளுக்கும் பி.எஸ்ஸி, பி.இ-னு தனித்தனியா படிப்பு இருக்கு. நான் காலேஜ்ல சேர்ந்தபோது, இந்த ரெண்டையும் சேர்த்து பி.இ இன் மெரைன் டெக்னாலஜினு ஒரு புது கோர்ஸ் கொண்டுவந்தாங்க. அஞ்சு வருஷப் படிப்பான அதை முதன்முறையா அப்பத்தான் அறிமுகப்படுத்தினாங்க. இப்போ அந்தப் படிப்பு இல்லை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சவால்களில் விருப்பமா... கப்பல் வேலைக்கு வாங்க! - ரேஷ்மா

அந்த ஸ்பெஷல் கோர்ஸை படிச்ச 250 பேர்ல என்னையும் சேர்த்து வெறும் ஐந்து பெண்கள்தான். எனக்கு முந்தைய பேட்ச்ல 120 மாணவர்களுக்கு ஒரே ஒரு பெண்தான். மற்ற படிப்பு, வேற வேற பேட்ச்னு கணக்குப் போட்டா 4 ஆயிரம் பேர் இருப்பாங்க. அத்தனை பேர்லயும் 5 பேர்தான் பெண்கள்...'' - ஆச்சர்யத் தகவல் சொல்கிற ரேஷ்மா, அமெட் யுனிவர்சிட்டியில் படிப்பை முடித்து  பி.ஐ.டி ராஞ்சியில் பட்டம் வாங்கியவர்.

``கப்பல் வேலைகளுக்குப் பெண்களும் போகலாம் என்ற விழிப்பு உணர்வே சமீப காலம் வரை இல்லை. `பொண்ணுங்களுக்கு இந்த வேலை சரியா வராது'ங்கிறது பெற்றோரின் மனநிலையும் பெண்களுக்குக் கப்பல் துறை சார்ந்த வேலைகள் பாதுகாப்பானவை இல்லைங்கிற எண்ணமும் அதுக்குக் காரணம். இப்போ வரைக்கும் ஒரு கப்பலுக்கு ஒரு பெண் என்ற அளவுலதான் வேலை பார்த்திட்டிருக்கோம்.

இது  அத்தனை ஈஸியான வேலையில்லை தான். எல்லாப் பெண்களுக்கும் பொருத்தமா இருக்குமாங்கிறதும் சந்தேகம்தான். `கஷ்டப் படத் தயாரா இல்லை, எனக்கு ஈஸியான லைஃப் வேணும்'னு நினைக்கிறவங்க கப்பல் வேலையைப் பத்திக் கனவுகூட காண வேண்டாம். சவால்களை விரும்புற, உழைக்கத் தயாரா இருக்கிறவங்க தாராளமா வரலாம். அப்படி வர்றவங்களுக்கு உடலளவுலயும் மனசளவுலயும் அசாத்திய பலம் தேவை...'' - அவசியத் தகுதிகள் சொல்கிறார்.

``ஒரு கப்பல் துறைமுகத்துக்குள்ள வரும்போது அதைச் சுத்தியுள்ள இடங்களில் நிறைய ஆபத்துகள் இருக்கலாம். கப்பல் வந்து தரை தட்டணும். அந்தப் பகுதியைப் பத்தின அறிவு பைலட்டுக்கு இருக்கணும். அந்த இடத்துல  தண்ணீர் கம்மியா இருக்க லாம். நிறைய கப்பல்கள் ஒரே இடத்துல தரை தட்டலாம். அதனால போக்குவரத்துச் சிக்கல் வரலாம். காற்று, அலைகளை எல்லாம் கணிச்சு, கப்பலைச் சரியா கையாளத் தெரிஞ் சிருக்கணும். இந்த நிலைமை ஒவ்வொரு துறைமுகத்துக்கும் மாறும். இடத்துக்கேற்ப மாறும்போது அதைப் பத்தின அடிப்படை அறிவும் பைலட்டுக்கு இருக்கணும். பைலட் கப்பலுக்குள்ள வந்துட்டாங்கன்னா, கேப்டன் கிட்ட அவங்க என்ன செய்ய போறாங்கன்னு சொல்லிட்டு, கப்பலைத் துறைமுகத்துக்குக் கொண்டுவருவது பைலட்டின் வேலை. அதேபோல கப்பல் திரும்பிப் போகும்போது துறைமுகத்தின் எல்லை வரை பைலட்தான் கொண்டுவந்து விடணும். உலகம் முழுக்க எந்த நாட்டுல உள்ள துறைமுகத்துக்குப் போனாலும் உள்ளே நுழையும்போதும் வெளியில திரும்பும்போதும் கப்பலுக்கு பைலட் அவசியம்.

சென்னையில கடலையொட்டி துறைமுகம் இருக்கிற மாதிரி கொல்கத்தாவுல பார்க்க முடியாது. அங்கே கடலும் ஆறும் கலக்கிற இடத்துல சாகர் தீவு இருக்கு. அந்த இடம்தான் எங்களுக்கான தொடக்கம். அங்கேயிருந்து  70 நாட்டிக்கல் மைல் தூரத்துக்குக் கப்பலை எடுத்துட்டு வரணும். துறைமுகங்களைப் பத்தின ஆழமான அறிவுதான் ஒரு பைலட்டா எனக்கான மிகப்பெரிய ப்ளஸ்...'' - மிரட்டலாகச் சொல்பவர், இந்தப் பணியில் சேர்ந்து ஏழு வருடங்கள் பயிற்சியாளராக இருந்த பிறகு, இந்த வருடம் ஜனவரியில்தான் பைலட்டாகத் தேர்வாகியிருக்கிறார்.

``வழக்கமா சின்னக் கப்பல்களில் வேலை பார்க்கிற எனக்கு, ஒருமுறை 190 மீட்டர் அளவு பெரிய கப்பலில் வேலை வந்தது. சைனீஸ் கப்பல் அது. நான் கப்பல் மேல ஏறிப் போயிட்டேன். நான்தான் பைலட்டுனு தெரியாம அங்க இருந்த சைனீஸ் கேப்டன், `பைலட் பின்னாடி வராங்க போல'னு எதிர்பார்த்திட்டிருந்தார். அவரைப் பார்த்து சம்பிரதாய மரியாதைகளைச் செலுத்தின பிறகும் அவருக்கு நான்தான் பைலட்டுனு நம்பிக்கை வரலை. ரொம்பக் கஷ்டப்பட்டுப் புரியவெச்சேன்.   

சவால்களில் விருப்பமா... கப்பல் வேலைக்கு வாங்க! - ரேஷ்மா

கப்பல்ல ஏறினதுமே என்னுடைய பிளான் பத்தி அவருக்கு விளக்கினபோது என்னை ஆச்சர்யமா பார்த்தார். கேப்டனுக்கு அட்வைஸரா இருக்கிறதுதான் பைலட்டின் வேலை. சில இடங்களில் தண்ணீர் இருக்கிற மாதிரி தெரியும். ஆனா, ஆழமே இருக்காது. ஆழம் தெரிஞ்சுதான் கப்பலை எடுத்துட்டுப் போகணும். இதெல்லாம் கேப்டனுக்குத் தெரியாது. எல்லா கேப்டன்களுக்கும் இருக்கிற இந்த பயத்தைத் தாண்டி, நான் ஒரு பெண்ணா எப்படிக் கப்பலை வழிநடத்தப்போறேங்கிற பயமும் அந்த சைனீஸ் கேப்டனுக்கு இருந்ததை அவர் கண்கள்ல பார்த்தேன். பைலட் என்பவர் கேப்டனை நிம்மதியா வெச்சிருக்கணும். எங்களுடைய ஒவ்வொரு மூவையும் கேப்டனுக்கு விளக்கணும். ரொம்பப் பொறுமையா நான் எல்லாத்தையும் அவருக்கு விளக்கி, கப்பலைப் பாதுகாப்பா கொண்டுவந்தபிறகுதான் அவருக்கு நம்பிக்கை வந்தது. `இன்னும் சீனா, ஜப்பான்ல எல்லாம் பெண்களுக்கு இந்தளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கிறதில்லை. நீங்க என் பொண்ணு மாதிரி. உங்களைப் பார்க்கிறபோது ரொம்பப் பெருமையா  இருக்கு'னு வாழ்த்திட்டுப் போனார். லைஃப்ல மறக்க முடியாத அனுபவம் அது...'' என்கிறவரின் மகிழ்ச்சியின் பின்னணியில் இருப்பது அவர் குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும்.

``பைலட்டா நான் துறைமுகத்தின் ஊழியர். ஒருநாளைக்கு ஒரு கப்பல் என்பதுதான் எனக்கான ஷெட்யூல். சென்னையில் கடலையொட்டியே துறைமுகம் இருப்பதால ஒருநாளைக்கு ரெண்டு ஷிஃப்ட்கூட வேலை பார்க்கலாம். அதிகபட்சம் மூன்று மணி நேரத்தில் வேலை முடிஞ்சுடும். ஆனா, கொல்கத்தாவில் 8 முதல் 10 மணி நேரமாகும். அது கடலின் ஆழம், கப்பலின் அளவுனு பலதையும் பொறுத்தது.  இன்னிக்கு நைட் நான் ஒரு கப்பலை வெளியில எடுத்துட்டுப் போறேன்னா, அன்னிக்கு நைட் எங்களுக்குனு இருக்கிற ஒரு ஸ்டேஷன்ல தங்கிட்டு, அடுத்த நாள், துறைமுகத்துக்குள்ளே வரும் இன்னொரு கப்பலை எடுத்துட்டு வரணும். ஒருநாள் உள்ளே, ஒருநாள் வெளியிலனு ரெண்டு நாள் வேலைக்குப் பிறகு ரெண்டு நாள் லீவு கிடைக்கும். இதுல தேசிய விடுமுறை, வீட்டுல பூஜை, விசேஷம்னு எதையும் பார்க்க முடியாது.

கப்பலில் தொடர்ந்து ஆறு மாசங்கள் வேலை பார்க்கிற பெண்கள், வருஷக் கணக்குல வேலை பார்க்கிற பெண்கள் எல்லாம் இருக்காங்க. `டைம் அண்டு டைட் வெயிட் ஃபார் நன்' என்று சொல்வாங்க. அது எங்க வேலைக்கு ரொம்பப் பொருத்தம். இந்த நேரத்துலதான் வேலைனு சொல்லமுடியாது. ஒரு நேரம் தண்ணீர் உள்ளே வரும்; இன்னொரு நேரம் வெளியில போகும்.  அதைப் பொறுத்துத்தான் எங்களுக்கு வேலை. அது நடுராத்திரியா இருந்தாலும் வேலை பார்க்கணும். சராசரியான மகளா, மனைவியா, மருமகளா வீட்டுல என்னால கடமைகளைச் செய்ய முடியாது. வீட்டுல இருக்கிற நாள்களே கம்மி. அதைப் புரிஞ்சுக்கிட்டு ஏத்துக்க குடும்பத்துலேருந்து மிகப்பெரிய சப்போர்ட் வேணும்.

என் மாமனாரும் ஒரு கப்பலின் கேப்டன். என் கணவர் அவிக் நாஹாவுக்கும் மெரைன் இன்ஜினீயர். அதனால என்னுடைய வேலை எப்படியிருக்கும்னு தெரியும். என் வளர்ச்சியைப் பெருமையோடு பார்க்கிற புகுந்த வீடு. எனக்கு மட்டுமில்லை, கப்பல் துறை வேலைகளில் சாதிச்சிட்டிருக்கிற எல்லாப் பெண்களுக்கும் இந்த சப்போர்ட் இருக்கும்...'' - தடைகளைத் தாண்டிச் சாதித்துவிட்டாலும், சமூகத்தின் சவால்களை இன்றும் எதிர்கொள்வதாகவே சொல்கிறார் ரேஷ்மா.

``நான் இந்த வேலையில சேர்ந்தபோது சிலர் மனசார வரவேற்று ஊக்கப்படுத்தி னாங்க. சிலர் வேற வழியில்லாம ஏத்துக்கிட்டாங்க. இப்போ வரைக்கும் என்னை ஏத்துக்காதவங்களும் இருக்காங்க. `ரெண்டு வருஷத்துல ஓடிடுவா'னு சொன்னாங்க. அதைப் பொய்யாக்கினேன். `கல்யாணமானதும் விட்டுட்டுப்போயிடுவா'னு சொன்னாங்க. அதையும் கடந்தேன். இப்போ, `குழந்தை பிறந்ததும் விட்டுடுவா'னு சொல்லியிருக்காங்க. நான் அதையும் கடந்து வருவேங்கிற நம்பிக்கை
யோடு உழைச்சுட்டிருக்கேன். ஏன்னா, எனக்கு உலகம் என்ன சொல்லுதுங்கிறதைவிடவும், உழைப்பு தரும் சுகம் பெருசு...'' - கண்கள் விரிகின்றன கப்பல்களின் காதலிக்கு. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism