Published:Updated:

வாசிப்பே துணை! - எழுத்தாளர் தமயந்தி

வாசிப்பே துணை! - எழுத்தாளர் தமயந்தி
பிரீமியம் ஸ்டோரி
வாசிப்பே துணை! - எழுத்தாளர் தமயந்தி

எனக்குள் நான்ஆர்.வைதேகி - படங்கள் : கே.ராஜசேகரன்

வாசிப்பே துணை! - எழுத்தாளர் தமயந்தி

எனக்குள் நான்ஆர்.வைதேகி - படங்கள் : கே.ராஜசேகரன்

Published:Updated:
வாசிப்பே துணை! - எழுத்தாளர் தமயந்தி
பிரீமியம் ஸ்டோரி
வாசிப்பே துணை! - எழுத்தாளர் தமயந்தி

மயந்தி - வாசிப்பை நேசிப்பவர்களுக்கு நெருக்கமான பெயர். சகமனிதர்களின் வலிகள் தொடங்கி, சமகால அரசியல் வரை வாழ்வியலை நயம்படப் பேசும் எழுத்துக்குச் சொந்தக்காரர். எழுத்தாளரான இவர், பாடலாசிரியர் ஆனார். அடுத்து இயக்குநராக இடம்பெயரக் காத்திருக்கிறார். தமயந்தியின் எழுத்தைப்போலவே அவருடனான உரையாடலும் நிகழ்விடங்களில் நம்மை நிறுத்தி அனுபவங்களை உணரச்செய்கிறது.  

வாசிப்பே துணை! - எழுத்தாளர் தமயந்தி

நான் `தமயந்தி' ஆனது எப்படி?

வாசிப்பு, சினிமா பார்ப்பது போன்றவை எல்லாம் நிராகரிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவள் நான். மதக்கட்டுப்பாடுகளும் அதிகம். தனிமையை உணர்ந்த எனக்கு, வாசிப்பு துணையானது. என் தோழி தங்கத்தின் அத்தை, பெரிய அலமாரி முழுவதும் புத்தகங்கள் வைத்திருப்பார். அதற்காகவே அவர் வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஏழாம் வகுப்பு படித்தபோது, தோழியின் அத்தை மிகுந்த தயக்கத்துடன் எனக்கு வாசிக்கக் கொடுத்த புத்தகம் நா.பார்த்தசாரதியின் `குறிஞ்சி மலர்'.
வாசிப்புப் பழக்கம் தொடர்ந்தபோது தனிமை உணர்விலிருந்து வெளியே வந்தேன். அடக்கிவைக்கப்பட்ட விஷயங்களை எழுத ஆரம்பித்தேன். எட்டாவது படித்தபோது கணக்குப் பாட வகுப்பில் தூக்கத்தை விரட்ட ஏதோ எழுதி, பக்கத்து இருக்கையில் இருந்த தோழி சித்ராவிடம் காட்டினேன். `நல்லா எழுதியிருக்கியே!' என்ற அவளது பாராட்டு, அன்று முழுவதும் மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

பத்தாவது படிக்கும்போது முதல் சிறுகதை எழுதினேன். தோழி அமுதா தமிழ் சொன்னதன் பேரில் அதை சாவி பத்திரிகைக்கு அனுப்பினேன். விடுமுறைக்குச் சென்னை வந்தேன். விகடனுக்குச் சிறுகதைகள் கொடுக்க ஆர்வம். ஆனால், எப்படிக் கொடுக்க வேண்டும் எனத் தெரியாது. குத்துமதிப்பாக டி.வி.எஸ் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, எதிரில் உள்ள விகடன் அலுவலகம் வந்தேன். வாசலில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது நான் கையெழுத்துப் பத்திரிகை ஒன்று நடத்திக்கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர் ஆட்சியில் விகடன் நிறுவனர் எஸ்.பாலசுப்ரமணியன் கைதான நேரம் அது. அதை என் கையெழுத்துப் பத்திரிகையில் கொலாஜ் ஓவியமாகப் பதிவிட்டிருந்தேன். அதையும் என் கதைகளுடன் கொடுத்துவிட்டுத் திரும்பினேன்.

ஜாக்பாட் பரிசுப் போட்டியில் என் கதை தேர்வுசெய்யப்பட்டதாகத் திடீரென ஒரு போஸ்ட் கார்டு வந்தது. அடுத்த கதையும் தேர்வானது. இதற்கிடையில் சாவி பத்திரிகைக்கு நான் அனுப்பியிருந்த கதை திருப்பியனுப்பப்பட்டது. கூடவே ஒரு கடிதக் குறிப்பும் இருந்தது. `உங்கள் எழுத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கிறது. இதைத் திருப்பி அனுப்பியதற்காக எழுதுவதை நிறுத்த வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள்' என்கிற அந்த வார்த்தைகள் எனக்குப் புதிதாக இருந்தன. அடுத்த முறை சென்னை வந்த போது எழுத்தாளர் சாவியைச் சந்தித்தேன்.

`உன் கதையில் பாயசம், வடை, ஏழு வகை கூட்டு, பொரியல்னு எல்லாமே இருக்கு. ஆனா, சாதம் இல்லையேம்மா. கதையே இல்லாம எழுதுறியே!' என்றார்.  யோசித்துப் பார்த்தபோது ஒரு சம்பவத்தை மட்டும் சொல்லியிருக்கிறேன். அதற்கு முன்பும் பின்பும் வாசகன் பயணிக்க வேண்டும் என்பது என் ஃபார்முலாவாக இருந்தது புரிந்தது. என்னுடைய இந்த பாணி, என்றாவது ஒருநாள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தொடர்ந்து எழுதினேன்.

கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தபோது எழுதுவதற்கு எதிர்ப்புகள் அதிகம். `ஒரு பெண் எழுதுவது பாவம். அதிலும் பிரபல பத்திரிகைகளில் எழுதுவது பெரும்பாவம்' என்ற கல்லூரி நிர்வாகம், என் இன்டர்னல் மதிப்பெண்ணில் கைவைத்தது. `எந்தக் காலத்திலும் எதற்காகவும் எழுத்தை மட்டும் இழந்துவிடக் கூடாது' என அப்போதே தீர்மானித்தேன். அது எனக்குப் பெரிய சொத்து. அதுவே என் ஆற்றலாகவும் மாறியது.

எழுத்தாளராக நிலைநிறுத்திக்கொள்ளும் போராட்டம்

`பீரியட்ஸ்' பற்றி எழுதினால் உடனே அம்மா பதற்றமாவார். அப்போது எனக்குத் திருமணமாகவில்லை. `நம்ம சமூகம் என்ன பேசும்... இதையெல்லாம் எழுதக் கூடாது' என்பார். `கிறிஸ்தவ மதத்தில் முக்காடிட்டுத்தான் நற்கருணை பெற வேண்டும்; மாதவிலக்கு நாள்களில் கோயிலுக்குச் செல்லக் கூடாது' என்றெல்லாம் கட்டமைத்து வைத்திருந்த விஷயங்களை நான் மீறினேன். மதம் எனக்கு பிரச்னையாக இருந்ததில்லை. ஆனால், எந்த மதமும் அது உருவாக்கப்பட்டதற்கான கோட்பாடுகளைப் பின்பற்றவே இல்லை.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசிப்பே துணை! - எழுத்தாளர் தமயந்தி

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த கிறிஸ்தவரும் எதுவும் செய்ய மாட்டார். ஓர் ஆடு குழியில் விழுந்தபோது இயேசு கிறிஸ்து, `ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த ஆட்டைக் காப்பாற்றாமல் விட முடியுமா?' எனக் கேட்கிறார். எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. `நிழலிரவு' என்றொரு நாவலை எழுதினேன். கம்யூனிசமும் கிறிஸ்தவமும் எப்படித் தோற்கின்றன என்பதைப் பேசும் நாவல்.  அதை தமிழ்ச் சமூகம் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பெண்கள் எப்போதும் சமைப்பதைப் பற்றியும் காதலைப் பற்றியும் எழுதினால் இந்தச் சமூகம் மகிழும். அதைத் தாண்டி, காமத்தைப் பற்றியோ, அரசியலைப் பற்றியோ எழுதினால் இங்கு உள்ளவர்களுக்குப் பதற்றம் வருகிறது. அதுதான் இந்தச் சமூகத்தின் சீரழிவுக்குக் காரணம்.

மிகப்பெரிய மரியாதைக்குரிய பிம்பத்துடன் வைத்திருந்த சிலரை நெருங்கிப் பார்த்தபோது, `பெண் எழுத்தாளராக நீ இதைத்தான் எழுத வேண்டும்' என்று அவமானப்படுத்தினார்கள். அவற்றை எல்லாம் கடப்பது மிகப்பெரிய போராட்டமாகவே இருந்தது.

சினிமா கனவுக்கான விதை

முதன்முதலில் அப்பா என்னிடம் `உனக்கு என்ன பரிசு வேண்டும்?' எனக் கேட்டபோது, வானொலிப்பெட்டி கேட்டேன். அது 24 மணி நேரமும் என்னுடனேயே இருந்தது. இளையராஜாவின் தீவிர ரசிகை. சினிமா பக்கம் என்னை ஈர்த்தது இந்த இசைதான். குடும்பச்சூழல், சினிமாவுக்குள் நுழைய என்னை அனுமதிக்க வில்லை. பொருளாதாரத் தேவைக் காக வானொலியில் வேலைபார்த்தேன். பிறகு, தொலைக்காட்சிப் பணி. அங்கே நிறைய டாக்குமென்டரிகள் செய்தேன். அந்த வேலையில் இருந்து வெளியே வந்ததும், `அடுத்து என்ன?' என்ற கேள்வி எழுந்தது. இயக்குநர் மீரா கதிரவன், `விழித்திரு' படம், ரேடியோ ஜாக்கி பற்றிய கதை என்பதால் ஸ்கிரிப்ட்டுக்காக அழைத்தார். பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தார்.

குட்டிரேவதியிடம் யதேச்சையாக என் வாழ்க்கையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். `இதை வைத்தே ஒரு படம் பண்ணலாமா?' என்றார். `பண்ணலாமே!' எனத் தோன்றியது. இரண்டு வருடங்கள் காலையில்
5:30 மணிக்கு அவரது டூவீலரில்  கிளம்புவோம். கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குவோம். சினிமா கம்பெனியில் கதையுடன் ஒரு பெண்ணாகப் போய் நிற்கும்போது எதிர்கொள்கிற ஒற்றை நிமிடப் பார்வையே என்னவோ செய்யும். `இதுங் கெல்லாம் சினிமாவுக்கு வந்து என்ன செய்யப் போகுதுங்க?' என்பதாக இருக்கும் அதன் அர்த்தம். பொருளாதார ரீதியாகவும் பெரிய போராட்டமான காலகட்டம் அது. அதைச் சமன்படுத்த பாடல்கள் எழுதினேன். ஏதோ ஓரிடத்தில் கதவுகள் திறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது.

விகடனில் சமீபத்தில் என் `தடயம்' சிறுகதை வெளி வந்தது. சில இயக்குநர்கள் அதைப் படமாக எடுக்கக் கேட்டார்கள். அதை வேறொருவர் அணுகுவதை விடவும் நானே இயக்கினால், நினைத்ததைச் சரியாகச் சொல்ல முடியும் எனத் தோன்றியது.  தயாரிப்பாளர் கனிகுஸ்ருதி போனிலேயே கதை கேட்டுவிட்டு `நிச்சயம் பண்ணலாம்' என்றார். அப்போதும் பொருளாதாரச் சுமை பெரிதாக இருந்தது. இந்தப் படத்தில் இணைந்த எல்லோரும் தன் சொந்தப்படம்போல நினைத்து எல்லா வேலை களையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்கள்.

* தற்கொலை முயற்சிகளின் பின்னணி...

* மீ டூ?


(அடுத்த இதழில் தொடர்கிறார் தமயந்தி)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism