Published:Updated:

14 நாள்கள்

14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

Published:Updated:
14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

மண்ணுக்குள் சென்ற கறுப்பு வைரம்! 

14 நாள்கள்

தென்னாப்பிரிக்காவின் தாய் என அழைக்கப்பட்ட வின்னி மடிக்கசேலா மண்டேலா ஏப்ரல் 2 அன்று மறைந்தார். 1957-ம் ஆண்டில், 20 வயது மங்கையாக வெள்ளையருக்கு எதிரான போராட்டக்களத்தில் நின்ற வின்னியும், அவரைவிட  16 வயது மூத்தவரான மண்டேலாவும் சந்தித்தபோது, ஒரு கடுமையான வாழ்க்கை இருவரையும் இணைக்கும் என அவர்கள் நினைக்கவில்லை. உடனே திருமணம், அடுத்தடுத்து இரு பெண் குழந்தைகள் ஒருபுறம், போராட்டம் மறுபுறம் என மூச்சுவிட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த தம்பதியை உலுக்கிப்போட்டது 1964-ல் மண்டேலாவின் கைது. அதன்பின் 26 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் மண்டேலா. வின்னியோ அவ்வப்போது சிறையும் ஆர்ப்பாட்டங்களும் என மாறிமாறி பிரச்னைகளைக் கையாண்டு வந்தார். இரு குழந்தைகளையும் தனியே நின்று வளர்த்தெடுத்தார். குடியிருந்த வீடு எரிக்கப்பட்டது. இரவு விசாரணை, ஆயுத மிரட்டல் என அத்தனையும் தாண்டி வந்தார் வின்னி. 1990-ம் ஆண்டு, 26 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து வெளிவந்த மண்டேலாவுடன் கைகோத்தபடி சிரித்திருந்த வின்னியின் புகைப்படங்கள் உலகெங்கும் வெளியாகி அவர்களது காதலைப் பறைசாற்றின. அந்த மகிழ்ச்சியும் நிலைக்கவில்லை. சில ஆண்டுகளிலேயே, விவாகரத்து கேட்டார் மண்டேலா. அவர் வகித்த கலாசாரத் துறை அமைச்சர் பதவியையும் பறித்தார். அதையும் கடந்து வந்தார் வின்னி. வங்கி மோசடி வழக்கு ஒன்றில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, `ராபின் ஹுட்’ போல வங்கியிடம் இருந்து பணத்தை ஏமாற்றி வாங்கி, ஏழைகளுக்கு வழங்கினார் எனத் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். விமர்சனங்களைத் தாண்டி, தனியே தன் வாழ்க்கையின் பெரும்பான்மைப் பகுதியை நாட்டுக்கான அர்ப்பணிப்புடன் கழித்த வின்னி பாராட்டுக்குரியவர்தான்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

14 நாள்கள்

வாழவைக்கும் காதலுக்கு ஜே!

டந்த 2015-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துச் சாதனை புரிந்தவர் டீனா தபி. அதே தேர்வில் இரண்டாமிடம் பிடித்தவர் அத்தர் அமீர் உல் ஷஃபி. டெல்லியைச் சேர்ந்த டீனாவும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அத்தரும் 2016-ம் ஆண்டு, மசூரி நகரில் சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் சந்திக்க, கண்டதும் பற்றிக்கொண்டது காதல். இஸ்லாமியரான அத்தரை, தான் காதலிப்பதாக ட்விட்டரில் மூன்றாண்டுகளுக்கு முன்னரே செய்தி வெளியிட்டார் டீனா. `இந்துவான டீனாவை ஏமாற்றித் திருமணம் செய்துகொள்ள முயல்கிறார் இஸ்லாமியரான அத்தர். இது, லவ் ஜிஹாத்' எனக் கொதித்து எழுந்தன இந்துத்துவ அமைப்புகள். பயிற்சி முடியும் வரை அமைதி காத்த ஜோடி, ராஜஸ்தான் மாநிலத்தில் பணியேற்றுக்கொண்டது.

அவ்வப்போது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஜோடிக்கு, ஆன்லைன் ‘ட்ரால்கள்’ கடும் மன உளைச்சலை ஏற்படுத்தின. இந்த நிலையில் சந்தடியின்றி டீனாவும் அத்தரும் ஜெய்ப்பூர் ஆட்சியர் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின், காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நகரில் பாரம்பர்ய முறைப்படி திருமண சடங்கு நடைபெற்றது. டெல்லியில் வரவேற்பும் நடைபெறவுள்ளது. “சமூக நல்லிணக்கம் இல்லாத இந்த வேளையில், திருமண பந்தத்தில் இணைந்துள்ள உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்’ என்று வாழ்த்தியிருக்கிறார் ராகுல் காந்தி. எதிர்ப்பையும் வெறுப்பையும் புறம்தள்ளிவிட்டு இணைந்திருக்கிறது காதல் ஜோடி.

காதல் கிளிகளுக்கு நம் வாழ்த்தும் அன்பும்!

14 நாள்கள்

இந்தியாவின் முதல்  பாலின நடுநிலை விடுதி!

மு
ம்பையிலுள்ள டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் கல்வி நிறுவனம் (டிஸ்), இந்தியாவின் முதல் பாலின நடுநிலை விடுதியை வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கையர், பாலின சார்பற்றோர் என `எல்ஜிபிடி’ மாணவ மாணவிகளுக்கு இது ஒரு வரமாக அமையும்.

சுலபமாகக் கிடைத்துவிடவில்லை இந்த விடுதி வசதி. `டிஸ் க்வீர் கலெக்டிவ்’ என்ற அமைப்பினரின் விடாமுயற்சியும் தொடர் போராட்டமும்தான் இதற்குக் காரணம் என்று கூறுகிறார் இரண்டாமாண்டு பயிலும் `க்வீர் கலெக்டிவ்’வின் தேஜோ. “கடந்த ஆண்டு செப்டம்பரில் இதுபோன்ற விடுதி வேண்டும் என்று மாணவர் யூனியன் சிறப்புத் தீர்மானம் இயற்றியது. பாலின நடுநிலை கழிவறைகளும் விடுதியும் எங்களது நீண்ட நாள் கோரிக்கை” என்கிறார் தன்னை டிரான்ஸ்-உமன் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் தேஜோ. மிஸ்டர், மிஸ், மிஸஸ் என்ற அடையாளங்கள் தாண்டி, மெக்ஸ் (Mx) என்ற அடைமொழியைச் சான்றிதழில் எழுதி வழங்கவும் இந்த ஆண்டு அனுமதியளித்தது டிஸ்.

டிஸ் - நிச்சயம் ஒரு முன்னோடிதான்!

14 நாள்கள்

பிறந்த மண்ணில் கல்வி  தேவதை !

மைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுஃப்சாய் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு, தான் பிறந்த ஸ்வாட் பள்ளத்தாக்கின் மண்ணை மிதித்திருக்கிறார். பாகிஸ்தானின் தாலிபன் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டு, கோமா நிலையில் பாகிஸ்தானிலிருந்து வெளியேறினார் அப்போது 14 வயதான சிறுமி மலாலா. அவர் செய்த குற்றம், இஸ்லாமிய தீவிரவாதிகளான தாலிபனை எதிர்த்துக் கல்வி கற்க பள்ளிக்குச் சென்றது. இப்போது, தன் தாய்வீட்டை அடைந்த மலாலா, ஸ்வாட் பள்ளத்தாக்கின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிந்து, ‘உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடம்’ என எழுதியிருக்கிறார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் மலாலா, “படித்து முடித்தபின் நான் பாகிஸ்தானுக்குத் திரும்புவேன். இது என் நாடு. ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் இருக்கும் உரிமை எனக்கும் இந்த நாட்டின் மீது உள்ளது” என்றும் கூறினார். அனைவருக்கும் கல்வி என்ற உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் மலாலா, 2017-ம் ஆண்டு அமைதிக்கான ஐ.நா தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளைப்பூக்கள் மலரட்டும்... அனைவருக்கும் கல்வி கிடைக்கட்டும்!

14 நாள்கள்

குடும்பக் கட்டுப்பாடு ஒரு நியாயமான கேள்வி!

ருத்தடை என்றதுமே இரண்டு குழந்தைகளுக்குப் பின் பெண்கள் செய்து கொள்ள வேண்டும் என்பது இந்தியக் குடும்பங்களில் எழுதப்படாத நியதி.

ஆனால், கேரளாவைச் சேர்ந்த ஹபீப் தன் மனைவி அஞ்சுவுடன் குழந்தைப் பிறப்புக்கு முன்பே பேசி முடிவு எடுத்துவிட்டார். சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தால், அஞ்சு பிறப்புத் தடை அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும் இல்லை என்றால் ஹபீப் செய்துகொள்வதாகவும் உடன்பாடு. நார்மல் முறையில் அஞ்சுவுக்குக் குழந்தை பிறக்க, வாசக்டமி எனப்படும் ஆணுக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டார் ஹபீப். 20 நிமிடங்களில் சிகிச்சை முடிந்ததாகவும், வலி அத்தனை அதிகம் இல்லை எனவும் தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் ஹபீப், தனியாகவே மருத்துவமனை சென்று ஒன்றரை மணி நேரத்தில் வீட்டுக்கு மீண்டும் இருசக்கர வாகனத்தைத் தானே ஓட்டி வந்ததையும் எழுதியுள்ளார். அதன்பின், தன் பணிகளைத் தானே செய்ததாகவும் அதிக பளு மட்டும் ஒரு வாரத்துக்குத் தூக்கவில்லை என்றும் கூறியுள்ள ஹபீப், ஒரே ஒரு கேள்வியை முன்வைக்கிறார். “மருத்துவர் உங்கள் முன் இரண்டு வாய்ப்புகளைத் தருகிறார். ஒன்று, தோல் மட்டும் நீக்கிச் செய்யப்படும் அறுவை சிகிச்சை, இன்னொன்று வயிற்றைக் கிழித்துச் செய்யப்படும் அறுவை சிகிச்சை. இரண்டில் நீங்கள் எதைத் தேர்ந்
தெடுப்பீர்கள்? பெண்களே ஏன் இதுபோன்ற அறுவை சிகிச்சையைச் செய்துகொள்ள வேண்டும்?”

அதானே?!

14 நாள்கள்

கலக்கும் இந்திய  வீராங்கனைகள்!

ந்தியப் பெண்களுக்குத் தங்கப்பதக்கங்களை அள்ளித் தந்துகொண்டிருக்கிறது கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு. எட்டாவது நாள் வரை 14 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பெருமையுடன் நின்றுகொண்டிருக்கிறது இந்தியா. துப்பாக்கிச் சுடுதல், பளுதூக்குதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் என வித்தியாசமான விளையாட்டுகளில் முத்திரைப் பதித்துவருகிறார்கள் இந்தியப் பெண்கள். முதல் தங்கத்தை இந்தியாவுக்குப் பெற்றுத்தந்தார் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. இரண்டாவது தங்கமும் பளுதூக்கும் போட்டியிலேயே கிடைத்தது சஞ்சிதா சானு மூலம். பூனம் யாதவ் மூன்றாவது தங்கம் பெற்றுத் தந்தார். பிஸ்டல் போட்டியில் மனு பேக்கர் முதலிடம் பிடித்து, தங்கம் வென்றார்.

2002-ம் ஆண்டு முதல் எந்த காமன்வெல்த் போட்டி யிலும் தோற்காத சிங்கப்பூர் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணியை வீழ்த்தியும் தங்கம் வென்றது இந்தியப் பெண்கள் அணி. துப்பாக்கி சுடுதலில் ஹீனா சித்து, ஷ்ரேயசி சிங், தேஜஸ்வினி சாவந்த், மெஹுலி கோஷ், ஹீனா சித்து ஆகியோர் வெள்ளி வென்றனர். தங்கமும் வெள்ளியும் என இரண்டு பதக்கங்களைத் துப்பாக்கி சுடுதலில் வென்று சாதனை புரிந்திருக்கிறார் மும்பையைச் சேர்ந்த பல் மருத்துவரான ஹீனா.
பளுதூக்குதலில் பபிதா குமாரி வெள்ளி வென்றுள்ளார். மல்யுத்தத்தில் கிரண், அபூர்வி சந்தேலா ஆகியோர் வெண்கலம் வென்றிருக்கின்றனர்.

பெண்கள் அணிக்குப் பாராட்டுகள்! 

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன? அறிவோம்... ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism