Published:Updated:

நான்தான் உனக்குப் பையன்! - மகள் சுஜா - அம்மா விஜயகுமாரி

நான்தான் உனக்குப் பையன்! - மகள் சுஜா - அம்மா விஜயகுமாரி
பிரீமியம் ஸ்டோரி
நான்தான் உனக்குப் பையன்! - மகள் சுஜா - அம்மா விஜயகுமாரி

நம்பிக்கைவெ.வித்யா காயத்ரி - படங்கள் : க.பாலாஜி

நான்தான் உனக்குப் பையன்! - மகள் சுஜா - அம்மா விஜயகுமாரி

நம்பிக்கைவெ.வித்யா காயத்ரி - படங்கள் : க.பாலாஜி

Published:Updated:
நான்தான் உனக்குப் பையன்! - மகள் சுஜா - அம்மா விஜயகுமாரி
பிரீமியம் ஸ்டோரி
நான்தான் உனக்குப் பையன்! - மகள் சுஜா - அம்மா விஜயகுமாரி

‘`எங்கம்மா முகத்துல ரொம்ப வருஷம் கழிச்சு இப்போதான் சிரிப்பைப் பார்க்கிறேன்’’ - அம்மா விஜயகுமாரியின் தோளில் சாய்ந்துகொள்ளும் சுஜா வருணியின் முகத்திலும் புன்னகை!  

நான்தான் உனக்குப் பையன்! - மகள் சுஜா - அம்மா விஜயகுமாரி

குடும்பச் சூழ்நிலையால், பதினான்காவது வயதில் நடிக்கவந்தவர் சுஜா வருணி. ‘`கரடுமுரடான இந்தப் பயணத்தை நான் சிரித்துக்கொண்டே கடந்துவர ஒரு  காரணம் இருக்கு. என் அம்மா முகத்துல எப்பவும் சந்தோஷத்தைப் பார்க்கணும் என்பதற்காகத்தான் எல்லாமே’’ என்று சுஜா சொல்ல, அதிராத குரலில் ஆரம்பிக்கிறார் விஜயகுமாரி. 

‘`எங்க பூர்வீகம் ஆந்திராவிலுள்ள குண்டூர். என்னோட எட்டு வயசுலேயே அம்மா அப்பா இறந்துட்டாங்க. எங்ககிட்ட இருந்த சொத்துகளையெல்லாம் சொந்தக்காரங்க அபகரிச்சுட்டு, என்னையும் என்கூடப் பொறந்தவங்களையும் ரயிலில் ஏற்றி விட்டுட்டாங்க. தனித்தனியா பிரிந்து ஒவ்வொருத்தரும் ஒவ்வோர் ஊருக்குப் போயிட்டோம். நான் சென்னை வந்து இறங்கி னேன். எங்கே போறது, யாரை கேட்கறதுன்னு திக்குத் தெரியாம நின்னப்போ, என்னை மகளா தத்தெடுத்தவர்தான் ஆறுமுகம். என் வளர்ப்புத் தந்தை... ‘மக்கள் குரல்’ பத்திரிகையில் வேலை பார்த்துட்டிருந்தார். 

எங்க வீட்டுக்கு அருகில் இருந்தவரும் நானும் ஒருவரையொருவர் விரும்புறதைத் தெரிஞ்சுக்கிட்டு அப்பா எங்களுக்குத் திருமணம் செஞ்சு வெச்சார். எங்களுக்கு முதல் பெண் குழந்தை பிறந்தப்போ, ஆண் குழந்தையை எதிர்பார்த்த என் கணவருக்கு ஏமாற்றமாகவும் கோபமாகவும் இருந்துச்சு. ரெண்டாவதும் பெண் குழந்தைதான். அவதான்  சுஜா. ‘ரெண்டும் பொம்பளப் புள்ளையா போச்சு, இதுங்களை எப்படி வளர்த்துக் கரைசேர்க்கிறது’னு அடிக்கடி சண்டைபோட ஆரம்பிச்சார். அவரை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசாம, புள்ளைகளுக்காக நான் பொறுமையா இருந்தேன். இரண்டும் பெண் குழந்தைங் கன்னு எங்களை விட்டுட்டுப் போனாலும் அப்பப்போ வீட்டுக்கு வந்துட்டும் போயிட்டும் இருந்தார். எங்களுக்கு மூணாவதும் பொண்ணா பிறக்க, என்னையும் புள்ளைகளையும் மொத்தமா விட்டுட்டுப் போயிட்டார். அவர் வளர்க்க முடியாதுனு விட்டுட்டுப் போன பொண்ணுங்கதான், இன்னிக்கு என்னை ராணி மாதிரி பார்த்துக்கிறாங்க’’ என்று கலங்கும் விஜயகுமாரியைச் சட்டென அணைத்துத் தேற்றுகிறார் சுஜா.

‘`நாங்க நிராதரவா நின்னப்போ, எங்க தாத்தா ஆறுமுகம்தான் மறுபடியும் அடைக்கலம் கொடுத்தார். அப்பா போனதுக்கு அப்புறம், எங்க வீட்டுல சிரிப்புச் சத்தமே மறைஞ்சுபோக, அம்மா ரொம்ப உடைஞ்சுபோயிட்டாங்க. தாத்தாவுக்கு உதவியா அம்மா டிபன் கடை நடத்தினாங்க. ‘உங்க அப்பா எங்கே?’ என்கிற கேள்வி, ஸ்கூல்ல எங்க மூணு பேரையும் ரொம்பவே அவமானப்படுத்தும். வீட்டுக்கு வந்து அழுதுட்டே இருப்போம். தாத்தாதான் சமாதானம் பண்ணுவார். வயசான காலத்திலேயும், எங்களுக்காகவே உழைச்ச அவருக்கு ஓய்வுகொடுக்கணும்னு மனசு தவிக்கும்’’ என்கிற சுஜாவுக்கு, அந்தக் காலகட்டத்தில்தான் திரை வாய்ப்பு  தென்பட்டிருக்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான்தான் உனக்குப் பையன்! - மகள் சுஜா - அம்மா விஜயகுமாரி

‘`அக்காவுக்குக் கஷ்டப்பட்டுத் திருமணம் செஞ்சுவெச்சோம். அதன்பிறகு, எங்க வீட்டுக்குப் பக்கத்துல குடியிருந்தவங்க மூலமா சினிமா வாய்ப்பு வந்துச்சு. அப்போ நான் எட்டாவது படிச்சுட்டிருந்தேன். ‘ப்ளஸ் டூ’ன்னு ஒரு படத்துல கதாநாயகியா நடிக்கக் கேட்டாங்க. சினிமான்னா என்னன்னே தெரியாதுன்னாலும், எங்க குடும்பச் சூழ்நிலைக்காகப் படிப்பை நிறுத்திட்டு நடிக்க வந்தேன். அந்தப் படம் சரியா ஓடல. அதனால எனக்குத் தொடர்ந்து எந்த வாய்ப்பும் அமையலை. திருமணமான ஒரு வருஷத்திலேயே உடல்நிலை சரியில்லாம அக்கா இறந்துட்டாங்க. அம்மா சுக்குநூறாகிட்டாங்க’’ என்கிறபோது சுஜாவின் குரலில் அவ்வளவு வலி.

‘`அக்கா இறந்தது, எங்க குடும்பத்தை முழுசா சரிச்சிடுச்சு. இன்னொரு பக்கம், தாத்தாவின் மாச வருமானம் மூவாயிரத்தில்தான் பொழப்பு ஓடிட்டிருந்துச்சு. அக்காவை நினைச்சு நினைச்சு அம்மாவுடைய உடல்நிலை ரொம்ப மோசமாகிடுச்சு. என் படிப்பும் போயிடுச்சு. `தாத்தா சம்பாத்தியத்தில அம்மாவைக் காப்பாற்ற முடியாது. என்ன பண்றது’ன்னு நெருப்புல நின்னுட்டிருந்த நேரத்தில், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடும் வாய்ப்பு எனக்கு வந்தது. அதுதான் அம்மாவைக் காப்பாற்றுவதற்கு, எனக்குக் கிடைச்ச பற்றுக்கொடி. கொஞ்சம் கொஞ்சமா வறுமையிலிருந்து வெளிவந்தோம். அம்மாவுடைய உடல்நிலையும் சீராச்சு. இன்னொரு பக்கம், ‘குத்தாட்ட நடிகை’னு எனக்கு முத்திரை விழுந்திருந்தது. என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வேலைபார்க்கிற மாதிரி, நான் நடனமாடுற வேலை பார்த்தேன்... அவ்ளோதான். இப்போ, குத்துப்பாட்டுக்கு ஆடித்தான் என் குடும்பத்தை நடத்தணும்கிற அவசியமில்லாத அளவுக்குக் கொஞ்சம் மேலேறி வந்திருக்கேன். அதனால நல்ல கதாபாத்திரத்துக்காகக் காத்திட்டிருக்கேன். எந்தச் சூழ்நிலையிலும் நான் இப்படி நம்பிக்கை இழக்காம இயங்கிறதுக்கான காரணமும் என் பலமும் அம்மாதான்’’ என்கிறபோது, விஜயகுமாரியின் முகத்தில் பிரியமும் பிரகாசமும் பொங்க, அவர் பேசினார்...

‘`அப்பாவும் ஒரு கட்டத்துல இறந்துபோயிட,  `வீட்டுக்காரர் விட்டுட்டுப் போயிட்டார், பெத்த மகளும், வளர்த்த அப்பாவும் இறந்து போயிட்டாங்க, ஏன் எனக்கு இந்தத் தண்டனை’னு உடைஞ்சுபோயிட்டேன். ஆம்பளைத் துணை இல்லாத எங்க வீட்டை நினைச்சுக் கலங்கிப்போனப்போ, சுஜா, ‘நான்தான் உனக்குப் பையன்’னு அதட்டியும் அன்பாவும் சொன்னா. பையனா மட்டுமில்ல, நான் துவளும்போதெல்லாம் எனக்கு அம்மாவாகவும் இருந்தா. இப்போ அவதான் எங்க வீட்டுக் குலசாமி. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில அவளுடைய அப்பாவைப் பற்றி அவ பேசினப்போ, எனக்கு அவ்வளவு ஆச்சர்யம். ஏன்னா, வீட்டுல ஒரு தடவைகூட அவ அப்பாவைப் பற்றிக் கேட்டதோ, பேசினதோ இல்லை. அத்தனை கண்ணீரும் கனமும் என் புள்ளை மனசை அழுத்திட்டிருந்ததை, அந்த நிகழ்ச்சியில அவ பேசினப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். அவர் எங்களைத் தேடி வருவாருங்கிற நம்பிக்கை, இன்னும்கூட எனக்குள்ள ஒட்டிட்டுதான் இருக்கு. அவர்கிட்ட, ‘நீங்க வெறுத்து வேணாம்னு விட்டுட்டுப்போன பொண்ணுங்கதான், இப்போ ஒவ்வொண்ணும் எனக்குப் பார்த்துப் பார்த்துப் பண்ணிட்டிருக்காங்க பாருங்க’னு காட்டணும்’’ என்றவர்,

‘`என் மூணாவது பொண்ணு படிப்பை முடிச்சுட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறா. என் பொண்ணுங்க குடும்பம், குழந்தைகள்னு நல்லா இருக்கணும், அதைப் பார்த்த நிம்மதியோட இந்த மூச்சு போகணும்’’ - கைகள் கூப்பி வானம் நோக்கி வேண்டுகிறார், காலம் தந்த காயங்களையெல்லாம் கடந்து தன் குழந்தைகளைக் கரை சேர்த்திருக்கும் அந்தத் தாய்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism