Published:Updated:

புத்தர் பேசினார்!

புத்தர் பேசினார்!
பிரீமியம் ஸ்டோரி
புத்தர் பேசினார்!

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

புத்தர் பேசினார்!

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

Published:Updated:
புத்தர் பேசினார்!
பிரீமியம் ஸ்டோரி
புத்தர் பேசினார்!

ழகும் இளமையும் குழந்தைத்தனமும் பொங்க வலம்வந்துகொண்டிருந்த சுபா, ஒருநாள் தன்னுடைய நீண்ட கருங்கூந்தலைக் கத்தரித்துக்கொண்டார். ஊர் மக்கள் அதிர்ந்துவிட்டனர். ``உனக்கு புத்தி பேதலித்துவிட்டதா என்ன? ஊரே பொறாமைப்பட்ட உன் அழகை, ஏன் நீயே இப்படிக் கெடுத்துக்கொண்டாய்? எந்த ஆடவன் இனி உன்னை மணப்பான்? உன் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எத்தனை பெரிய மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறாய் என்பதை உன்னால் உணர முடிகிறதா? குழந்தைகள்கூட உன்னை விநோதமாகப் பார்ப்பார்களே? உன் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டதே? வீட்டைவிட்டு நீ வெளியேறிவிட்டாய் என்றும் சொல்கிறார்கள். நீ ஏன் இப்படி வெளிறிய ஆடைகள் அணிந்திருக்கிறாய்? எப்படிச் சாப்பிடுகிறாய்? ஒரு பெண், இரவைத் தனியாகக் கழிப்பது ஆபத்து என்பது உனக்குத் தெரியாதா? சொல் சுபா, உனக்கு என்ன ஆனது?''  

புத்தர் பேசினார்!

சுபாவின் முகத்தில் அழுத்தமான ஒரு புன்னகை ஒட்டிக்கொண்டிருந்தது. கூர்ந்து கவனிப்பவர்கள், அவர் முகம் முழுக்கப் பரவியிருந்த அமைதியையும் கவனித்திருக்கக்கூடும். சுபாவின் தோழிகளோ, வெறுமையாக இருந்த அவர் தலையைத்தான் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

``நானும் எல்லோரையும்போலதான் இருந்தேன். ஒருநாள் புத்தர் குறித்து அறிய நேர்ந்தது. அந்த நாளை என்னால் மறக்க முடியாது. என் வாழ்வைத் தலைகீழாகத் திருப்பிப்போட்ட தினம் அது. புத்தர் எனக்கு அழகிய இரு விழிகளை வழங்கினார். அவற்றை அணிந்து பார்த்தபோது உலகம் வேறுவிதமாக எனக்குக் காட்சியளிக்க ஆரம்பித்தது. அதுவரை இன்பமளித்து வந்த அனைத்தும் அதற்குப் பிறகு சலிப்பையே ஏற்படுத்தின. என் உடலைக் கண்டே எனக்கு அச்சம் ஏற்பட்டது. விடுதலைக்காக நான் ஏங்க ஆரம்பித்தேன். என் வீட்டை விட்டும், உறவினர்களை விட்டும், பணியாளர்களை விட்டும், கிராமத்தை விட்டும், வயல்வெளிகளை விட்டும் நான் வெளியேறினேன். என்னிடமிருந்த செல்வத்தைக் கடந்து நான் முன்னேறி நடக்கத் தொடங்கினேன். தங்கமும் வெள்ளியும் இனி என்னை ஈர்க்காது. எல்லாவற்றையும் இழந்த பிறகு மனம் லேசாகிப்போனது. சுதந்திரமாகச் சிந்திப்பதும் சாத்தியமானது. நாம் அருகருகில் நின்று பேசிக்கொண்டிருந்தாலும், நமக்குள் பெரும் இடைவெளி விழுந்துகிடக்கிறது'' எனத் தோழிகளுக்கு விளக்கினார் சுபா.

``நீங்கள் வசித்துக்கொண்டிருக்கும் உலகிலிருந்து நான் வெளியேறிவிட்டேன்'' என்று மெல்லிய குரலில் சொன்ன சுபா, அதற்கான காரணங்களையும் அடுக்கினார். ``பேராசைகொள்ளும்படி இந்த உலகம் என்னைத் தூண்டுகிறது. `இளமை என்பது இன்பங்களைத் துய்ப்பதற்குதான்; வா, இதையெல்லாம் அனுபவி' என்று கொக்கிப்போட்டு என்னை இழுத்து வைத்துக்கொள்கிறது. நானும் இத்தனை காலம் மயங்கித்தான் கிடந்தேன். இன்று எனக்கு விழிப்பு வந்துவிட்டது. இன்பங்கள் எங்கெல்லாம் நிறைந்துகிடக்கின்றனவோ, அங்கெல்லாம் ஆபத்துகள் ஒளிந்துகொண்டிருப்பதை நான் என் கண்களால் கண்டேன். என்னை மயக்கி ஈர்த்துவிட்டு, பிறகு சக்கையைப்போலப் பிழிந்தெடுத்து, தூர எறிந்துவிடுகின்றன இந்த உலகின் இன்பங்கள். என் புலன்களைத் தூண்டிவிட்டுப் பிறகு என்னையே வீழ்த்தி விடுகின்றன. எனவே, எதிரிகளை விட்டு விலகியிருப்பதைப்போல் இன்பங்களை விட்டும் நான் விலகியிருக்கிறேன். நான் இப்போது இருப்பது புத்தரின் உலகில்.''

அனுபமாவுக்கு நேர்ந்ததும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஓர் அனுபவம்தான். `` `உனக்கு இணையாக யாரும் இல்லை அனுபமா' என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். இளவரசர்கள் பலர், என் அழகில் மயங்கி என்னை மணக்கப் போட்டிபோட்டார்கள். `எனக்கு அனுபமாவைக் கொடுங்கள். அவள் எடையைவிட எட்டு மடங்கு தங்கமும் வெள்ளியும் தருகிறேன்' என்றுகூட ஒருவர் என் தந்தையை அணுகினார். இந்த நிலையில்தான் நான் கௌதமரைக் கண்டேன். அவர், என்னை இந்த உலகிலிருந்து விடுவித்தார். நான் அனைத்தையும் துறந்துவிட்டு அவர் வழியைப் பின்பற்ற ஆரம்பித்தேன். என்னைக் காணவில்லை எனத் தேடிக்கொண்டிருந்தவர் கள், ஒருகட்டத்தில் என்னைத் தேடுவதை நிறுத்திக்கொண்டார்கள். ஆனால், நான் என் தேடலை இந்த விநாடி வரை நிறுத்தவில்லை.'' 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புத்தர் பேசினார்!

தந்திகாவுக்குக் கிடைத்தது வேறுவகையான தரிசனம். ``ஒரு யானை, குளத்திலிருந்து எழுந்து வருவதைக் கண்டேன். `காலை மடக்கு' என்று யானைப் பாகன் அதட்டினான். உடனே யானை பணிவுடன் கீழே குனிந்தது. யானைப் பாகன் யானையின் காலின் மீது தன் காலைப் பதித்து மேலே ஏறினான். அந்தக் காட்சியைப் பார்த்தவுடனே எனக்குப் புரிந்துவிட்டது. பார்ப்பதற்கு மிரட்சியளிக்கும் வகையில் பெரிய அளவில் இருந்தாலும் யானையைக் கட்டுப்படுத்துவது சாத்தியம்தான். எனில், அலைபாயும் என் மனதையும்கூட என்னால் கட்டுப்படுத்த முடியும் அல்லவா?''

சுபாவும் அனுபமாவும் தந்திகாவும் அவர்களைப் போன்ற வேறு பலரும், கி.மு 6 மற்றும் 3-ம் நூற்றாண்டுக்கு இடைப் பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். வெவ்வேறு பின்னணியைக் கொண்டவர்கள் என்றாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் புத்தரைக் கண்டடைந்திருக்கிறார்கள். அதாவது, பௌத்தத்தை. பௌத்தம் என் வாழ்வில் நுழைந்த பிறகு என் உடலும் உள்ளமும் மாறிவிட்டன. `அவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்வதே என் நோக்கம்' என்கிறார்கள் இவர்கள்.

இவர்களுடைய குரல்கள் `தெரிகதா' என்ற நூலில் பதிவாகியுள்ளன. மூத்த பௌத்தத் துறவிகள் பாலி மொழியில் இயற்றிய பாடல்களே `தெரிகதா'. (தெரி என்றால் மூத்த பெண்கள், கதா என்றால் பாடல்கள்). மொத்தம் 73 கவிதைகள் தெரிகதாவில் இடம்பெற்றிருக்கின்றன. இதில் பல இடங்களில் புத்தர் வருகிறார் என்றாலும் தெரிகதாவின் மையம் அவர் அல்லர். அவருடைய உபதேசங்கள் மூலம் பெண்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்களே பாடலின் மையம். பௌத்த அமைப்புகள் தெரிகதாவை ஏற்று அங்கீகரித்துள்ளன. உலகில் மத நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்ற மிகச் சில பெண் எழுத்து நூல்களில் இது முக்கியமானது.

``புத்தர், என்னைப் புறவுலகிடமிருந்து மட்டுமல்ல, என்னிடமிருந்தும் மீட்டெடுத்தார்'' என்கிறார் அம்பாலி. ``என் கேசம் தேனீக்களைப்போலவே கருமையாகவும் மினுமினுப்பாகவும் இருந்தது. இன்று அதில் நரை கூடிவிட்டது. என் புருவங்கள் ஒருகாலத்தில் அழகாக வில்லைப் போல வளைந்து இருந்தன. இப்போது சுருங்கிக் கீழிறிங்கிவிட்டன. என் கண்கள் அழகாகவும் கூர்மையாகவும் இருக்கும். இன்று அவற்றிலுள்ள பளபளப்பு மறைந்துவிட்டது. விழிகள் மட்டுமா? என் மூக்கு, முகம், பற்கள், கழுத்து, தோள், கைகள், விரல்கள் அனைத்துமே களையிழந்துவிட்டன. என் பற்கள் மஞ்சளாகிவிட்டன. என் உடல் சோர்ந்தும் உலர்ந்தும் தளர்ந்தும்விட்டது. காலம் என் அழகையும் இளமையையும் தின்றுவிட்டது. என் செருக்கு குலைந்துவிட்டது. பழைய வீடு போல என் உடல் உதிர ஆரம்பித்துவிட்டது. இருந்தும் இன்று நான் ஏன் இது குறித்தெல்லாம் கலங்காமல் இருக்கிறேன் தெரியுமா? இப்படியெல்லாம் ஆகும் என்று புத்தர் ஏற்கெனவே சொல்லிவிட்டார். எனவே, எனக்கு அதிர்ச்சியில்லை. மாறாக, தெளிவே கிடைத்திருக்கிறது.''

`உன் துக்கம் நிரந்தரமானதல்ல' என்கிறார் புத்தர். `உன் அழகும் இளமையும் நிழல் போலக் கரைந்துவிடும்' என்கிறார் அவர். `நீ தேடிப் போகும் இன்பங்கள் இன்பங்களே அல்ல' என்கிறார். `உன் வீடு உன்னைச் சிறைவைத்துள்ளது' என்கிறார். `வீடு மட்டுமல்ல; உன் உலகமும்தான். உலகம் மட்டுமல்ல; உன் உடலும்கூட உன்னைச் சிறைப்படுத்தியிருக்கிறது' என்கிறார் புத்தர். `உடல் மட்டுமா? உன் மதமும்தான். நீ எதையெல்லாம் புனிதம் எனக் கருதினாயோ, எதையெல்லாம் நம்பினாயோ, எதையெல்லாம் கண்டு பெருமிதம்கொண்டாயோ அவை அனைத்தும் உன்னை ஒருகாலத்தில் கைவிடும்' என்றும் சொன்னார் புத்தர்.

பெண் என்றால் அழகு. பெண் என்றால் குடும்பம். பெண் என்றால் பணிவு. பெண் என்றால் குழந்தை, குட்டிகள். பெண் என்றால் தகப்பன், கணவன், உறவுகள். பெண் என்றால் கட்டுப்பாடு, அடக்கம், பண்பு. பெண் என்றால் நாணம், காதல், காமம். பெண் என்றால் சொல்லப்பட்டதைக் கேள்வியின்றி ஏற்றுக்கொள்வது. பெண் என்றால் நறுமணம் வீசும் தைலத்தையும் ஆடவரை மயக்கும் ஆடைகளையும் அணிந்துகொள்வது. பெண் என்றால் இன்பத்தைத் துய்ப்பது அல்லது துய்க்க விரும்புபவருக்கு உடன்படுவது. பெண் என்றால் எதையும் ஏற்பது, ஓரிடத்தில் முடங்கியிருப்பது, ஊருக்கும் உலகுக்கும் பயந்துகிடப்பது. பெண் என்றால் முன்னோர்களுக்கும் பெரியோர்களுக்கும் வேதங்களுக்கும் கட்டுப் படுவது. `இப்படி நீ நினைத்திருந்தால் உன்னை நீ மாற்றிக்கொள் சுபா' என்றார் புத்தர்.

`அனுபமா, உன் பாதையை நீ வகுத்துக்கொள்; உன் விதிகளை நீயே உருவாக்கிக்கொள்' என்றார் புத்தர். `அழகு என்பது உடலில் இல்லை' என்று அம்பாலியிடம் சொன்னார் புத்தர். `நீ வாழும் உலகம் ஆண்களின் விருப்பங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய விழிகளைக்கொண்டு உலகைக் காணாதே. அவர்கள் தங்கள் நலன்களுக்காகக் கட்டமைத்துவைத்திருக்கும் கட்டுப்பாடுகளுக்குள் முடங்கிவிடாதே. அவர்களுடைய அதிகாரத்துக்கு உன்னை ஒப்புக்கொடுத்துவிடாதே' என்று வாசேத்தியிடம் சொன்னார் புத்தர்.

`ஆடவர்களின் துணையின்றி ஒரு பெண் தனியாக எங்கும் செல்லக் கூடாது; எதையும் செய்யக் கூடாது' என்று மனு தனது தர்மத்தைப் போதித்துக்கொண்டிருந்த நேரத்தில், புத்தர் தன் தம்மத்தை முன்வைத்தார். சான்றோர்களும் துறவிகளும் ஆடவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது புத்தர் பெண்களை நெருங்கி அவர்களுடன் உரையாடினார். `அறிவும் அறிவுக்கான தேடலும் அனைவருக்கும் பொதுவானது' என்று அறிவித்தார். `துறவு உட்பட அனைத்தும் அனைவருக்கும் பொது' என்றார். `அதிகாரத்தை எதிர்த்துக் கேள்விகள் கேள்' என்றார். `உனக்கான விடைகளை நீயே தேடிக் கண்டுபிடி' என்றார்.

உண்மையாகவும் எளிமையாகவும் சுடர்விடும் அழகோடும் இருப்பதால், இன்றும் நம்மால் தெரிகதாவோடு உணர்வுபூர்வமாக ஒன்றிப்போக முடிகிறது. இந்தப் பாடல்களை வாசிக்க நீங்கள் ஒரு பௌத்தராகவோ பெண்ணியவாதியாகவோ, ஏன் ஒரு பெண்ணாகவோகூட இருக்கவேண்டியதில்லை. புத்தர் நம் அனைவருடனும் பேச விரும்புகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism