Published:Updated:

அம்மா என்றால் ஆச்சர்யம்! - மருத்துவர் கு.சிவராமன்

அம்மா என்றால் ஆச்சர்யம்! - மருத்துவர் கு.சிவராமன்
பிரீமியம் ஸ்டோரி
அம்மா என்றால் ஆச்சர்யம்! - மருத்துவர் கு.சிவராமன்

அவளும் நானும்ஆர்.வைதேகி - படம் : வீ.நாகமணி

அம்மா என்றால் ஆச்சர்யம்! - மருத்துவர் கு.சிவராமன்

அவளும் நானும்ஆர்.வைதேகி - படம் : வீ.நாகமணி

Published:Updated:
அம்மா என்றால் ஆச்சர்யம்! - மருத்துவர் கு.சிவராமன்
பிரீமியம் ஸ்டோரி
அம்மா என்றால் ஆச்சர்யம்! - மருத்துவர் கு.சிவராமன்

ருத்துவத்தில் மனிதம் மரத்தும் மரித்தும் போய்க்கொண்டிருக்கும் வேளையில், மனிதம் பேசும் மருத்துவத்தைத் தன் பாணியாகக்கொண்டு இயங்குபவர் சித்த மருத்துவர் கு.சிவராமன். ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர் என இவரின் பன்முக அடையாளங்களை நாம் அறிவோம்.

அம்மா என்றால் ஆச்சர்யம்! - மருத்துவர் கு.சிவராமன்

அத்தனைக்குமான பின்னணியான அந்த அன்பை, அற்புதத்தை, ஆளுமையை நமக்கு அறிமுகம் செய்கிறார் மருத்துவர் கு.சிவராமன். ஆகச்சிறந்த உறவு தாய்மை என்பதற்கு மற்றுமோர் உதாரணமாகத் திகழ்கிறார் இவரின் தாய் வேலம்மாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``தன் வாழ்வின் முதல் 25 ஆண்டுகள் இலங்கையில் இருந்தவர் என் அம்மா. அவருடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர். அனைவரையும் நன்றாகப் படிக்கவைத்தார் தாத்தா. என் அம்மா கணிதப் பட்டதாரி. என்னையும் என் தங்கை குமாரியையும் வளர்த்து ஆளாக்கவே தன் நேரத்தை முழுமையாக அர்ப்பணித்தவர். அம்மாவுடன் படித்த பலரும் உயர் பதவிகளிலிருந்தவர்கள். குடும்பச்சூழல் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாதது பற்றிய லேசான வருத்தம் அம்மாவுக்கு உண்டு. கலெக்டர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டவர். அது முடியாததால், நாங்கள் சிறுபிள்ளைகளாக இருந்தபோது, `நீங்க டாக்டர் ஆகணும், கலெக்டர் ஆகணும்’ என்று அடிக்கடி சொல்வார். அந்தக் காலத்திலேயே தொலைநோக்குப் பார்வையுடன் இருந்தவர் அம்மா.

நானும் தங்கையும் பதின்பருவத்தைக் கடக்கும் வரையிலான வருடங்களில் சங்கரன்கோவில் மாதிரியான அதிக வளர்ச்சி பெறாத இடங்களில் இருந்தோம். அப்போது எங்கள் குடும்பம் நடுத்தரவர்க்கத்துக்கும் கீழான நிலையில் இருந்தது. அந்தச் சூழலில் படிப்பு மட்டும்தான் கைகொடுக்கும் என உறுதியாக நம்பினார் அம்மா. இன்று நானும் என் தங்கையும் சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையில் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் அம்மாவின் உழைப்புதான்.

அம்மா நிறைய புத்தகங்கள் படிப்பார். வரலாற்று விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர். சமூகத்தைக் குறுக்குவெட்டாகப் பார்க்கும் பார்வை அவருக்கு உண்டு. என் பள்ளி நாள்களில் வெறும் படிப்பு மட்டுமே போதாது என, பிற ஆர்வங்களிலும் ஊக்கப்படுத்தியவர். கலை, இலக்கிய விழாக்களில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கதை எழுதும் போட்டி என எல்லாவற்றிலும் பரிசுகளை வாங்கிக் குவித்திருக்கிறேன். அம்மா ஆட்டுரலில் அரைத்துக்கொண்டிருக்கும்போது நான் மாவை வழித்துக்கொண்டே கேட்ட ஒரு கதையைத் தான் ஏழாம் வகுப்பில் எழுதி, பரிசு வாங்கினேன். பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி இலக்கிய வாசிப்பையும் ஊக்கப்படுத்தியவர் அவர்.  

அம்மா என்றால் ஆச்சர்யம்! - மருத்துவர் கு.சிவராமன்

சிறுவயதில் நான் நோய்வாய்ப்பட்ட சிறுவனாகவே இருந்தேன். குறிப்பாக, ஆஸ்துமாவால் கடுமையாக பாதிக்கப்பட் டிருந்தேன். சைக்கிள்கூட ஓட்ட முடியாத என்னை என் நண்பன்தான் பள்ளிக்கு அழைத்துச் செல்வான். என் நோய் குறித்து எனக்கு சுயபச்சாதாபம் வந்துவிடக் கூடாது என்பதில் அம்மா உறுதியாக இருந்தார். குழந்தை தும்மினாலே ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு ஓடுகிறவர்களையும், குழந்தைக்குத் தான் ஒரு நோயாளி என்கிற கழிவிரக்கத்தை உருவாக்குபவர்களையும் இன்றும் பார்க்கிறேன். எங்கள் வீட்டில் இது நேர்மாறாக இருந்தது. `எல்லோருக்கும்தான் நோய் வரும். பெரிசுபடுத்தாம இன்னும் ஓடணும்’ என விரட்டுவார் அம்மா. பாசம் இருக்கும்... கூடவே `இதெல்லாம் ஒண்ணுமில்லைடா’ என்கிற தைரியத்தையும் கொடுப்பார்.

அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். கயாவில் ஒரு டிசம்பர் மாதம் ஸ்கவுட் கேம்ப் நடந்தது. கடுமையான குளிரில் டென்ட் அமைத்து 15 நாள்கள் தங்கவேண்டிய நிலை. அந்த கேம்ப்புக்குத் தேர்வானவர்களில் நானும் ஒருவன். என் அத்தனை வாத்தியார்களும் `இவன் எதுக்கு... டிசம்பர் மாசம் இவனுக்கு உடம்புக்கு ஆகாது’ என்று மறுத்தபோது, என் அம்மா பள்ளிக்கே வந்தார். `அவன் உடம்பைப் பார்த்துப்பான். தைரியமா அனுப்புங்க’ எனச் சம்மதிக்கவைத்தார். என் அப்பாவுக்குக்கூட உடன்பாடில்லை. `உன்னால முடியும்’ என்கிற மிகப்பெரிய உறுதியைக் கொடுத்து அம்மா என்னை அனுப்பிவைத்தார். இன்று நான் உலகம் முழுவதிலும் பயணம் செய்கிற ஒவ்வொரு தருணத்திலும் அதை நினைக்கத் தவறுவதில்லை.

நான் சாதிகளைக் கடந்து என் வகுப்புத் தோழியைத் திருமணம் செய்தேன். காதலைப் பற்றி முதலில் அம்மாவிடம்தான் சொன்னேன். சாதி குறித்து ஒரு கேள்விகூட எழுப்பவில்லை. `வாழ்க்கைங்கிறது சாதாரண விஷயமில்லை. அவள் கிராமியச் சூழல்லேருந்து வந்த பொண்ணு. ரெண்டு பேரும் புரிஞ்சு வாழ்க்கையில ஜெயிக்கணும். அதுக்கான நம்பிக்கை இருக்கா’ என்று மட்டுமே கேட்டார். எங்கள் திருமணம் நிறைய போராட்டங்களுக்கிடையில்தான் நடந்தது. அப்பாவை, அம்மாதான் சம்மதிக்கவைத்தார். இன்று வரை அம்மா எங்களுடன்தான் இருக்கிறார், அதே அன்போடும் அக்கறையோடும்!

என் தங்கையின் வாழ்க்கையில் சிக்கல்கள் வந்தபோது அம்மாதான் உறுதுணையாக இருந்தார். என் தங்கை கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் பாய் கட் வெட்டிக்கொண்டு வந்தாள்.  ப்ளஸ்  டூ படிக்கிறவரை அவளுக்கு இடுப்பு வரை முடி இருக்கும். பாய் கட் செய்து கொண்டு வந்ததும், எங்கள் வீட்டில் ஏதோ அசம்பாவிதமே நடந்துவிட்டதுபோல பெரிய கூட்டமே கூடியது. `என்ன உன் பொண்ணு இப்படி முடியை வெட்டிக்கிட்டு வந்து நிக்கிறா?’ எனக் கேட்டார்கள். `எனக்கு வசதியா இல்லை. அதனால வெட்டிக்கிட்டேன். இப்போ என்ன நடந்திடுச்சுன்னு வந்தீங்க?’ எனக் கேட்டுவிட்டுப் போய்விட்டாள் தங்கை. `அவளுக்கு வசதியா இல்லை. முடியைப் பராமரிக்க சிரமமா இருக்குனு வெட்டிக்கிட்டா. உங்களுக்கென்ன?’ எனப் பதிலடி கொடுத்தார் அம்மா. 1985-களில் பாளையங்கோட்டை மாதிரியான ஓர் ஊரில் ஒரு பெண், பையனைப்போல முடி வெட்டிக்கொள்வதே ஒருவிதப் புரட்சிதான். அதற்கு வீட்டார் உறுதுணையாக இருப்பது அதைவிடப் பெரிய விஷயம். அம்மாவின் அன்றைய சிந்தனையை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது.

அம்மா, சமையலில் நிபுணி. எனக்கு உணவியலில் ஆர்வம்வர முக்கியக் காரணம் அவர்தான். பாரம்பர்யச் சமையலில் மட்டுமல்ல, சமகால உணவுகளிலும் எக்ஸ்பர்ட். தொலைக்காட்சிகளில் தொடர்கள் பார்க்க மாட்டார். பயணம் மற்றும் உணவு சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து, அவற்றை நம் ஊர் உணவு களாக மாற்றி ஆராய்ச்சி செய்வார்.

இன்று நான் மருத்துவராகவும் என் தங்கை ஓர் ஆய்வாளராகவும் நல்ல நிலையில் உயர்ந்திருக்கிறோம். அம்மாவுக்கு 72 வயது. அவர் நினைத்தால் நன்றாக ஓய்வெடுக்கலாம். கொளத்தூர் அருகில் `சைல்டு’ என்கிற பெயரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஓர் இல்லம் இருக்கிறது. ஹெச்.ஐ.வி பாதித்து உயிரிழந்த பெற்றோரின் பிள்ளைகள் 50 பேர் அங்கே இருக்கிறார்கள். அந்த இல்லத்தில் அம்மா வாலன்டியராக வேலைபார்க்கிறார். அந்தக் குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பது, சமையல் கற்றுத்தருவது எனத் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார். அப்பா தவறி, நான்காண்டுகள் ஆகின்றன. அவரது ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு அந்தக் குழந்தைகளுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார். 72 வயதிலும் அம்மாவின் உழைப்பு பிரமிக்கவைக்கிறது.

சொந்தமாக மருத்துவமனை வைக்க வேண்டும் என விரும்பியபோதும், சித்த மருத்துவத்தில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என நினைத்தபோதும், `பூவுலகின் நண்பர்கள்' அமைப்பில் என்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டபோதும், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டபோதும் வீட்டில் அம்மாவின் அரவணைப்பு மிகப்பெரிய பலமாக இருந்தது.  எங்களுடையது குதூகலக் குடும்பமாக இருக்க, அம்மா மிக முக்கியமான ஓர் அச்சாணி.

இன்று என் பிள்ளைகளுக்கும் ஓர் அடையாளமாக இருக்கிறார். படித்த தாய், முற்போக்கான தாய், உழைப்பைக் கற்றுக்கொடுத்த தாய், மரபு விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகொண்ட தாய்... அவர் என் தாய் என்பதை நினைக்கும்போது ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்.’’

அம்மா என்றால் ஆச்சர்யம்! - மருத்துவர் கு.சிவராமன்

நானும் அவளும் முழுமையான ஓர் இதழ்

ம்மாவின் விருப்பமான பத்திரிகைளில் `அவள் விகடன்’ முக்கியமானது. இன்றும் தவறாமல் வாசிப்பார். எனக்குமே அவள் விகடன் பிரமிப்புக்குரிய ஒரு பத்திரிகை. காரணம், அதில் பதியப்படும் விஷயங்கள்.

பெண்களின் உலகத்தை சமையலோடு சுருக்காமல், வேறுபட்ட பல தளங்களைப் பற்றிப் பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது. குறிப்பாக, `அவள் விகடன்’ இதழின் வடிவமைப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு பெண்ணின் எல்லா பரிமாணங்களையும் பேசும் பத்திரிகையாக இருக்கிறது அவள் விகடன். உணவு முதல் உலகத்தின் எல்லா மூலைகளையும் தொடக்கூடிய அத்தனை விஷயங்களையும் சொல்லக்கூடிய பெண்களுக்கான முழுமையான ஓர் இதழ் `அவள் விகடன்’.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism