தராஸ் செனட் ஹவுஸ்... 1898-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா. கொஞ்சம் பதற்றத்துடன் அமர்ந்திருந்தார் அந்த ஒற்றைப் பெண்மணி. `தென்னிந்தியாவின் முதல் பெண் பி.ஏ பட்டதாரி' என்கிற அறிமுகத்துடன் அவரது பெயர் அழைக்கப்பட, தடுமாறி மேடை ஏற எத்தனித்தார். அவரை சான்சிலரிடம் அறிமுகம் செய்துவைக்க வந்தவர், மாநிலக் கல்லூரியின் பிரபலமான பேராசிரியர். அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. அவரைக் கண்டதும் மயக்கம் வராத குறை பெண்மணிக்கு. காரணம் - அவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. குறுஞ்சிரிப்புடன் தன் வருங்கால மனைவியின் தடுமாற்றத்தை ரசித்தபடி அவரை அழைத்துக்கொண்டு மேடையேறினார் பேராசிரியர். `அந்த நொடி பூமி பிளந்து கீழே சென்றுவிட மாட்டோமா என்று எனக்குத் தோன்றியது' என்று பின்னாளில் தன் மகளிடம் வெட்கத்துடன் சொன்னார் அந்தப் பெண்மணி. அவர் - கமலா ரத்தினம் சத்தியநாதன்... தென்னிந்தியாவின் முதல் பெண் பட்டதாரி, இந்தியாவின் முதல் பெண்கள் பத்திரிகையைத் தொடங்கி நடத்திய பெண் பத்திரிகை ஆசிரியர்.
1879 ஜூலை 2 அன்று ஒருகன்ட்டி சிவராம கிருஷ்ணம்மாவின் மகளாக ராஜமுந்திரியில் பிறந்தார் கமலா. பள்ளிப் படிப்பை முடித்ததும், மசூலிப்பட்டினம் நோபிள் கல்லூரியில் தன் இரு பெண்களையும் படிக்க அனுப்பினார் சிவராம கிருஷ்ணம்மா. தென்னிந்தியாவின் முதல் பெண் பட்டதாரியும், அதன் பின் முதல் பெண் முதுநிலைப் பட்டதாரியுமானார் கமலா. சம்ஸ்கிருதமும் தெலுங்கும் ஒருபுறம், ஆங்கிலம் மறுபுறம் என்று தன் மகள்கள் மேற்கும் கிழக்கும் கலந்த சிறந்த கல்வியைப் பெற வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார் தந்தை.

எதிலும் சிறந்ததை மட்டுமே தன் மகள்களுக்குத் தர நினைத்த சிவராமனிடம் வந்து சேர்ந்தது அவரின் மூத்த மகள் கமலாவுக்கு ஒரு வரன்... அவளைவிட இருபது வயது மூத்த டாக்டர் சாமுவேல் சத்தியநாதன். ஏற்கெனவே திருமணமான சாமுவேல், மனைவி கிருபா பாயை இழந்தவர் எனினும், சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் மிக்கவர். உலகம் முழுக்க பயணித்தவர். 1898-ம் ஆண்டு திருமணம் முடிந்து, சத்தியநாதனும் கமலாவும் மதராஸ் ராயப்பேட்டையில் குடியமர்ந்தனர். டென்னிஸ், செஸ், குதிரை வண்டி ஓட்டுதல் என்று விளையாட்டிலும், விலை உயர்ந்த ஐரிஷ் துணி விரிப்புகள், பீங்கான் சாமான்கள் என வீட்டை அழகுபடுத்துவதிலும் 18 வயது கமலாவுக்குப் பொழுது அழகாகப் போயிற்று. படிப்பைத் தொடரும்படி அவரின் கணவர் தூண்டினார். 1900-ல் மூத்த மகன் பிறக்க, 1901-ம் ஆண்டு எம்.ஏ தேர்வு எழுதி, தென்னிந்தியாவின் முதல் முதுகலைப் பெண் பட்டதாரியுமானார் கமலா. எட்டு ஆண்டுகள் தெள்ளிய நீரோட்டமாகச் சென்றது திருமண வாழ்க்கை. திருமணமான முதல் ஆண்டே கணவருடன் இணைந்து `ஸ்டோரீஸ் ஆஃப் இண்டியன் கிறிஸ்டியன் லைஃப்’ என்ற புத்தகத்தை எழுதினார் கமலா. எழுத்தில் கமலா கொண்டிருந்த ஆர்வத்தைக்கண்ட சத்தியநாதன், 1901-ம் ஆண்டு `இந்தியன் லேடீஸ் மேகசின்’ என்ற பத்திரிகையை கமலா தொடங்கக் காரணமானார். இந்தியாவில் பெண் ஒருவரால் தொடங்கப்பட்டு, நடத்தப்பட்ட முதல் பெண்கள் பத்திரிகை இதுவே. டாக்டர் அன்னி பெசன்ட், சரோஜினி நாயுடு, இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கர்னேலியா சொராப்ஜி, பண்டித ரமாபாய் என இந்தியாவின் பல பெண் அறிஞர்களின் கட்டுரைகளும், கதைகளும் இந்தியன் லேடீஸ் மேகசினில் வெளிவந்தன. `இந்தியப் பெண்களால் நடத்தப்படும் இந்த இதழ், அவர்களின் கலாசார மற்றும் சமுதாய முன்னேற்றம் பற்றிப் பேசுகிறது. விமர்சனங்கள், வேதங்கள் பற்றிய கட்டுரைகள், சமையல் குறிப்புகள் என இதில் அனைத்தும் இருக்கின்றன’ என்று இங்கிலாந்தின் புகழ்பெற்ற `லண்டன் டைம்ஸ்' பாராட்டியிருக்கிறது.
1903-ல் தன் இரண்டாவது மகன் பிறந்து இறந்ததையும் கடந்து வந்தார் கமலா. கமலாவின் தந்தை அடுத்து இறக்க, ஏப்ரல் 4, 1906-ல் விழுந்தது அடுத்த இடி. தன் 46-வது வயதில், ஜப்பானில் திடீர் மரணம் அடைந்தார் கமலாவின் கணவர் சாமுவேல் சத்தியநாதன். அதே ஆண்டு விதி இன்னும் கோரமாக விளையாடியது. சத்தியநாதன் குடும்பத்தினர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை வைத்திருந்த ஆர்புத்நாட் வங்கி திவால் ஆனது. 27 வயதில் கணவரையும் இழந்து, செல்வத்தையும் இழந்து நின்றார் கமலா. பீதாபுரம் ராணிக்கு ஆங்கிலம் கற்றுத் தரும் ஆசிரியப் பணியை ஏற்றுக்கொண்டு, தன் இரு குழந்தைகளுடன் கோதாவரி நோக்கிப் பயணித்தார், பிறரது உதவியின்றி தன் சொந்தக் காலில் நிற்க எண்ணிய கமலா. அத்தனை துன்பத்திலும், பத்திரிகைத் தயாரிப்பை நிறுத்தவில்லை. தீவிபத்து ஒன்றில் ராணி மோசமாக பாதிக்கப்பட, அந்த வேலையும் பறிபோனது. மதராஸ் திரும்பியது குடும்பம்.
1919-ல் தன் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி வேண்டும் என்பதற்காக, குடியிருந்த வீட்டை விற்றுவிட்டு இங்கிலாந்துக்குக் குழந்தைகளுடன் கப்பல் ஏறினார் கமலா. `மை இம்ப்ரெஷன்ஸ் ஆஃப் இங்கிலாண்ட்’ என்ற பெயரில் 1925-ம் ஆண்டு ஹிந்து நாளிதழில் வெளிவந்தது அவரது கட்டுரைத் தொடர். இங்கிலாந்தில் அவரின் மகன் இந்திய சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெறும்வரை இருந்து, பின்னர் நாடு திரும்பினார். இந்தியா திரும்பியதும் ஓராண்டுக் காலம் பல்லாவரம் ‘வித்யோதயா’ பள்ளியின் முதல்வராக இருந்தார். தன் மகனுடன் இந்தியா முழுக்க ஒரு கலெக்டரின் தாயாக, ‘மம்மி’ என்ற அடைமொழியுடன் பயணப்பட்டார்.
1927-ல் மீண்டும் தொடங்கப்பட்டது இந்தியன் லேடீஸ் மேகசின். இம்முறை அவரின் மகள் பத்மினி துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். மூன்று ஆண்டுகள் மதராஸ் பல்கலைக்கழகத்திலும், ஆந்திரப் பல்கலைக்கழகத்திலும் செனட் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மதராஸ் மற்றும் விஜயநகரத்தில் கௌரவ நீதிபதியாகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். அனந்தபூரில் மகளிர் கூட்டுறவு சங்கம், மதராஸில் அதுபோல ஒன்பது சங்கங்கள், திருநெல்வேலியில் குழந்தைகள் நலம் மற்றும் பேறுகால உதவி மையம் எனப் பல பொதுநல நிறுவனங்களைத் தொடங்கினார். மதராஸ் மாகாணத்தின் மகளிர் கூட்டுறவு சங்கங்களை ஒன்றிணைத்ததில் கமலாவின் பங்கு அளப்பரியது. 1950 ஜனவரி 26 அன்று மறைந்தார் கமலா சத்தியநாதன்.
