அலசல்
சமூகம்
Published:Updated:

“அதாவது கண்ணுங்களா!” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்!

“அதாவது கண்ணுங்களா!” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
“அதாவது கண்ணுங்களா!” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்!

ஜான்ஸி ராஜா

ரு சுயநிதிக் கல்லூரியை எப்படி நிர்வாகம் செய்யவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்தப் பெண்மணியைத்தான் காட்டுவார்கள், தனியார் கல்லூரிகளை நடத்துபவர்கள்.

இளம் வயதிலேயே ஐந்து கல்லூரிகளை நிர்வாகம் செய்யும் பொறுப்புக்கு வந்தவர். கல்லூரி நிர்வாகத்தைப் பொறுத்தவரை அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். தன் நிர்வாகத் திறமையால் கல்லூரிகளை மதிப்புமிக்க இடங்களில் வைத்திருக்கிறார். திறமையான பேராசிரியர்கள்தான் இந்தக் கல்லூரிகளில் வேலை செய்ய முடியும். நல்ல ரிசல்ட் அவருக்கு ரொம்ப முக்கியம். அதைக் கொடுக்காதவர்களால் அங்கு தொடர்ந்து வேலை பார்க்க முடியாது. எனவே, இவரின் கல்லூரிகள் எப்போதும் ரேங்க் பட்டியலில் எப்போதும் முன்வரிசையில்தான் இருக்கும்.

எத்தனை லட்சம் வேண்டுமானாலும் கொடுத்து இங்கு சேர்ந்துவிட வேண்டும் என மாணவர்கள் போட்டி போடுவார்கள். நம்பிக்கையுடன் இங்கு தங்கள் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு, நிம்மதியாக வீட்டுக்குப் போவார்கள் பெற்றோர்கள். அவர்களை மலர் போல மென்மையாகக் கவனித்து, கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வார் இந்த நிர்வாகி. இயல்பிலேயே சமையலில் ஆர்வம் உள்ள இவர், ஹாஸ்டலில் தரும் உணவும் தரமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவார். திடீரென மாணவிகளின் ஹாஸ்டல் அறைக்குள் நுழையும் இவர், டாய்லெட் சுத்தமாக இருக்கிறதா என்றுகூட சோதிப்பார். மாணவர்களிடம் அதிகார தோரணையில் பேசாமல், அன்பாக அணுகி தோழமையுடன் பழகுவார். பாடப் புத்தகங்களைத் தாண்டி அவர்களின் திறமையை வளர்த்தெடுக்க உதவிகள் செய்வார்.

“அதாவது கண்ணுங்களா!” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்!

ஆனால், ‘ஸ்ட்ரைக்’ என்ற வார்த்தையைக்கூட கல்லூரி வளாகத்தில் எவரும் உச்சரித்துவிட முடியாது. பூ போல சிரிக்கும் முகத்துக்குப் பின்னால் இருக்கும் புயலான மறுபக்கத்தை அப்போது எல்லோரும் பார்க்க முடியும். ஒற்றை ஆளாக நின்று மிரட்டி அத்தனை பேரையும் ஓடவைப்பார். கல்லூரி ஊழியர்களுக்கு இவரின் இந்த டெர்ரர் முகம் தெரியும் என்பதால், மாணவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, பணிவாக நடந்துகொள்ள வைப்பார்கள்.

இவர் இந்த இடத்துக்கு வந்ததே ஒரு விபத்து. இந்தக் கல்லூரியின் ஒரு குற்ற வழக்கில், சிறைத்தண்டனை பெற்றார். இதனால் அவரை விட்டு அவரின் நெருங்கிய உறவுகள் பிரிந்த சூழலில், என்ட்ரி கார்டு போட்டவர்தான் இந்தப் பெண்மணி. அந்தக் கல்லூரியில் பணியாற்றிய தன் சகோதரரின் சிபாரிசில் இவருக்கும் இதே கல்லூரியில் கிளார்க் வேலை கிடைத்தது. அப்படியே படிப்படியாக முன்னேறிவந்த வேளையில், அந்தக் குற்ற வழக்கில் சிறைக்குப் போனார் கல்லூரி உரிமையாளர்.

கல்லூரி நிர்வாக விஷயங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காகக் கல்லூரி உரிமையாளரை அடிக்கடி சந்திக்கப் போனார் இந்தப் பெண்மணி. அப்போது இவர் கூறிய ஆறுதல் வார்த்தைகள், கல்லூரி உரிமையாளருக்கு மருந்தானது. ‘‘அடிக்கடி வந்து போம்மா’’ என அவரே இந்தப் பெண்மணியின் வருகையை விரும்ப ஆரம்பித்தார். கம்பிகளுக்குப் பின்னால் சென்று இந்தப் பெண்மணி தந்த ட்ரீட்மென்ட், அவரின் மன அழுத்தத்தைக் குறைத்தது. ஜாமீனில் வெளியில் வந்த கல்லூரி உரிமையாளர், இந்தப் பெண்மணியை எளிமையாகக் கரம்பிடித்தார்.

சிறைக்குச் சென்றதால் ஏற்பட்ட தலைக்குனிவு அந்த நிர்வாகியைக் கல்லூரி பக்கம் வரவிடாமல் தடுக்க, முழு கன்ட்ரோலும் இந்தப் பெண்மணியின் கைக்கு வந்தது. அப்போது, மீண்டும் சிறைக்குச் சென்ற கல்லூரி உரிமையாளர், சில மாதங்களில் கண்ணை மூடினார். அதன் பிறகு, கல்லூரி உள்பட அவரின் சொத்துகள் அனைத்தும் இந்தப் பெண்மணியின்  வசம் வந்தது.

கல்லூரி உரிமையாளரின் குடும்பம், இந்தப் பெண்மணியை விரட்டப் பார்த்தது. சாமர்த்தியமாக அரசியல் செல்வாக்கையும், அதிகாரிகள் ஆதரவையும் பெற்று, எதுவும் தன் கையை விட்டுப் போகாமல் பார்த்துக்கொண்டார். அதன்பிறகு எல்லாமே ஏறுமுகம்தான். இன்றைக்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டத்தில் அவரது செல்வாக்கு உச்சத்திலேயே உள்ளது. மற்ற கல்லூரி நிர்வாகிகள் யாருக்காவது ஏதாவது பிரச்னை என்றால், இவரிடம்தான் ஆலோசனை கேட்டு வருகிறார்கள். ‘உயர்கல்வித் துறையின் பெண் தாதா’ என்று இவரை வர்ணிப்பார்கள். இவர், செக்யூரிட்டிகள் சகிதம் வலம்வரும் தோரணையைப் பார்த்தால், ஏதோ ஒரு மாநிலத்தின் முதல்வரோ என்ற சந்தேகம் வரும்.

“அதாவது கண்ணுங்களா!” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்!

டெல்லியில் நியமனம் பெற்று கிண்டி பங்களாவுக்கு வரும் வயோதிக அன்பர்கள்தான் உயர்கல்வியில் அத்தாரிட்டி. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அவர்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் என்பதால், அவர்களுக்கு மிகுந்த மரியாதை தருவார் இந்தப் பெண்மணி. இதற்கு முன்பு இந்த மாளிகையில் குடியிருந்த ஆவக்காய் மனிதர் அடிக்கடி இந்த ஏரியாவுக்குப் பயணம் வந்துபோவார். இங்கு வந்து தங்கியபடி மலையாள தேசத்தின் தென்றலை அனுபவித்தபடி, இயற்கையை ரசிப்பார். கல்லூரிகளை எப்படியெல்லாம் திறம்பட அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வது என்று ஆலோசனைகளைச் சொல்வார். ‘கிண்டி பங்களாவை வெளியூருக்கு மாற்றிவிடுவார் போல’ என குற்றச்சாட்டுகள் எழுகிற அளவுக்கு அதிகபட்ச பயணங்கள். அவர் தந்த ஆதரவில் உற்சாகமான இந்தப் பெண்மணி, பக்கத்துப் பல்கலைக்கழகத்தை தன்வசப்படுத்த ஆயத்தமானார். ஆனால், அதன் நிர்வாகமும் ஊழியர்களும் கடுமையாக எதிர்த்தனர். அந்த முயற்சியிலிருந்து இவர் பின்வாங்கினார். வாழ்க்கையில் அவர் சந்தித்த ஒரே தோல்வியாக இதுதான் இருக்கும். இன்னமும்கூட என்றைக்காவது ஒருநாள் அது தன் வசமாகும் என்ற நம்பிக்கையுடன் இவர் காத்திருக்கிறார்.

ஃபாரீன் காரில் பளிங்கு பொம்மை போல வந்து இறங்கும் இவரின் மறுபக்கம் சுவாரசியமானது. கல்லூரியில் படித்த காலத்தில் கம்பீரமான ஒரு வேலைக்குப் போக வேண்டும் என ஆசைப்பட்டார் இவர். அதற்காக விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வமாகப் பங்கேற்றார். விதி இவரை வேறுதிசையில் செலுத்திவிட்டாலும், தனக்குள் இருக்கும் சாகசக்காரியை இவர் மறக்கவில்லை. விடுமுறை நாள்களில் அடையாளம் தெரியாதபடி ஹெல்மெட் அணிந்து, காஸ்ட்லி பைக்கில் தொலைதூர நகரங்களுக்குப் பயணம் போவார். இதற்கென தனியாக நட்புவட்டமே இவருக்கு உண்டு. அவர்கள் மத்தியில் இருக்கும்போதுதான் இவருக்கு அளவற்ற மகிழ்ச்சி.

இவரின் பண்ணை வீடு, எஸ்டேட் பங்களா, கெஸ்ட் ஹவுஸ் என எல்லா இடங்களிலும் முக்கிய அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சிவப்புக்கம்பள வரவேற்பு எப்போதும் உண்டு. தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகள் முகாம்களாகவும் இவை மாறிவிடும்.
 
இவரின் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதன் மர்மம் பலருக்கும் புரியாதது. மாணவிகளின் விடுதிகளுக்கு அருகில் ஸ்டார் ஹோட்டல் அந்தஸ்தில் கெஸ்ட் ஹவுஸ்கள் அமைத்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று எழும் கேள்விகளில்தான் இவரது வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலாதேவிகள், ‘எச்சரிக்கை’ என்ற உணர்வை நமக்குள் எப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.