Published:Updated:

``இரண்டு பேரும் இந்துதான்... ஆனாலும், கோயில்ல...!?’’ `திருநங்கை’ ஶ்ரீஜா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``இரண்டு பேரும் இந்துதான்... ஆனாலும், கோயில்ல...!?’’ `திருநங்கை’ ஶ்ரீஜா
``இரண்டு பேரும் இந்துதான்... ஆனாலும், கோயில்ல...!?’’ `திருநங்கை’ ஶ்ரீஜா

``இரண்டு பேரும் இந்துதான்... ஆனாலும், கோயில்ல...!?’’ `திருநங்கை’ ஶ்ரீஜா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``இரண்டு வருடக் காதல் இன்று கைகூடியிருக்கிறது!' எனப் புன்னகைக்கிறார் திருநங்கை ஶ்ரீஜா. இவரைத் திருமணம் செய்திருக்கும் அருண்குமார், தங்களுடைய திருமணத்தை முறைப்படி பதிவுசெய்திருக்கிறார். புன்னகைத் ததும்ப காதல் பயணம் குறித்துப் பேசுகிறார் ஶ்ரீஜா.

``என்னுடைய சின்ன வயசிலேயே உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உணரமுடிஞ்சது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது, என் பெண்மையை மறைத்துவைக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். அப்பா இறந்துட்டாங்க. அம்மாதான் கஷ்டப்பட்டு என்னையும் என் தம்பியையும் படிக்கவெச்சுட்டிருந்தாங்க. என் நடவடிக்கையைப் பார்த்துட்டு, ஸ்கூலில் கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க. சொந்தக்காரங்க `நீ ஏன் உசுரோடு இருக்கே. செத்துரு'னு சொன்னாங்க. ஆனால், அந்த நேரத்திலும் என் அம்மா சப்போட்டா இருந்தாங்க. இது என்னுடைய தப்பு இல்லைன்னு அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க. பத்தாவது முடிச்சதும், பாலிடெக்னிக் சேர்த்தாங்க. கொஞ்ச நாள்தான் போனேன். அப்புறம், போகமாட்டேன்னு சொல்லிட்டு, பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்தேன். என்னை டாக்டர்கிட்டேயும் கூட்டிட்டுப் போனாங்க. `இது ஹார்மோன் மாற்றம். இந்தப் பையனுடைய தவறு இல்லை'னு சொல்லிட்டாங்க. என் அம்மாகிட்ட `நான் பொண்ணா மாறணும்மா. என்னைப் புரிஞ்சுக்கோ'னு சொன்னேன். பன்னிரண்டாம் வகுப்பு முடிஞ்சதும், அம்மாவே எனக்கு ஆபரேஷனுக்கு ஏற்பாடு செஞ்சாங்க. ஆபரேஷன் பண்ணதும் செய்யும் சடங்கையும் என் வீட்டுலதான் செஞ்சாங்க. ஆபரேஷன் பண்ணிட்டிருந்தப்போ எனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் அம்மாதான் செஞ்சாங்க. அந்த வகையில் நான் கொடுத்து வெச்சவள்'' எனக் கண் கலங்கிய ஶ்ரீஜா, காதல் நாள்களை வெட்கத்துடன் பகிர்கிறார்.

``ஆபரேஷன் முடிஞ்சதும் எங்க வீட்டுல என்னை எங்கேயுமே அனுப்பலை. என் குளோஸ் ஃப்ரெண்ட் வீஜா. அவள் கடை ஏறுவாள். வீட்டைவிட்டு வெளியே வந்து தனியா கஷ்டப்பட்டுட்டிருந்தா. அவளுக்கு ஆறுதலா அடிக்கடி வீட்டுக்குப் போவேன். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து குலசை திருவிழாவுக்குப் போயிருந்தோம். அங்கே என்னோடு படிச்ச விஜய், என்னை அடையாளம் கண்டுபிடிச்சுப் பேசினான். `என்னடா மூர்த்தி இப்படி மாறிட்டே?'னு கேட்டான். `என் பெயர் மூர்த்தி இல்லைடா, ஶ்ரீஜா'னு சொன்னேன். அப்போ அவன் பக்கத்தில் நின்னுட்டிருந்த விஜய் ஃப்ரெண்ட் அருண், `நீங்க பொண்ணு மாதிரியே அழகா இருக்கீங்க'னு சொன்னார். சரி எனச் சிரிச்சுட்டு வந்துட்டேன். அதுதான் அவரை முதன்முதலா பார்த்த நாள்.

விஜய்கிட்ட என் போன் நம்பர் இருந்துச்சு. `என் ஃப்ரெண்ட் கடை ஓப்பன் பண்ணியிருக்கான். நீ வந்து ஆசீர்வாதம் பண்ணினால் நல்லா இருக்கும்'னு கூப்பிட்டான். நானும் என் ஃப்ரெண்ட்டும் போனோம். அங்கே என் மாமாவும் இருந்தாங்க (அருண்). அப்போ அவரை அண்ணே எனக் கூப்பிட்டேன். `ஏய் அண்ணாண்ணு கூப்பிடாதே'னு சொன்னார். நண்பர்களா பேச ஆரம்பிச்சோம். ஒருநாள், `உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்'னு சொன்னார். என்னால் நம்பவே முடியலை. சிலர் லவ் பண்றேன்னு சொல்லிட்டு ஏமாத்திடுவாங்க. ஆனால், என் மாமா முதல்ல பேசும்போதே கல்யாணம் பண்ணிக்கிறேன்னுதான் சொன்னார். என் வீட்டிலும் சரி, என் சமூகத்தைச் சார்ந்தவங்களும் சரி, அவர் ஏமாத்திடுவார்னுதான் சொன்னாங்க.

அப்புறம் மாமாகிட்ட தெளிவா, `டைம்பாஸூக்குன்னா சொல்லிடுங்க. நானே உங்களைவிட்டு விலகிடறேன்'னு சொன்னேன். `எனக்கு ரெண்டு வருஷம் டைம் கொடு. நீ ஒழுங்காப் படி. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்'னு சொன்னார். நானும் அப்படியே நடந்துக்கிட்டேன். அலைஞ்சு திரிஞ்சு போராடி, என் சான்றிதழ்களில் திருநங்கைன்னு மாத்தினோம். என் அம்மாவுக்கு நான் டீச்சராகணும்னு ஆசை. இப்போ, தூத்துக்குடியில் ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். படிச்சுட்டிருக்கும்போதே கல்யாணத்துக்கு என்ன அவசரம்னுதானே கேட்கறீங்க.

என் மாமா ரயில்வேயில் கான்ட்ராக்ட் வேலை பார்க்கிறார். நாங்க பழகறது அவர் வீட்டுல யாருக்கும் பிடிக்கலை. எங்களைப் பிரிச்சுட நினைச்சாங்க. என்னை விலகி இருக்குமாறு அவரின் அம்மா, சொந்தக்காரங்க மூலமா சொல்லி விட்டாங்க. நானும் என் மாமாவைவிட்டு விலகிட்டேன். ஆனால், மாமாவால் என்னைவிட்டு இருக்க முடியலை. `எனக்கு நீதான் முக்கியம். உன்னைவிட்டுப் போகமாட்டேன்'னு சொன்னார். அவராவது நல்லா இருக்கட்டும்னுதான் விலக நினைச்சேனே தவிர, என்னாலும் அவர் இல்லாம இருக்க முடியாது. ரெண்டு பேரும் பேசி திருமணம் செஞ்சுக்க முடிவு பண்ணினோம்.

எங்க திருநங்கை இனத்துல ஆர்த்தி அம்மாவுடன் சேர்ந்து பல திருநங்கை சகோதரிகள் எங்க திருமணத்துக்கு ஏற்பாடு பண்ணாங்க. `பதிவுத் திருமணம் செஞ்சுக்கிட்டா நம்மை யாராலும் பிரிக்க முடியாது. நாம அப்படியே செஞ்சுக்கலாம்'னு சொன்னார். நானும் அருணும் இந்துவாக இருந்தும், கோயிலில்வெச்சு திருமணத்தை நடத்த சம்மதம் கிடைக்கலை. அறநிலையத்துறை அதிகாரிகிட்ட பேசி அவங்க ஓகே சொன்னதுக்கு அப்புறம்தான், திருமணம் செஞ்சுக்கிட்டோம். கோயிலில் திருமணமான கையோடு ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு பண்ணினோம். திருமணத்துக்கு என் வீட்டிலிருந்தும், என்னோடு படிக்கும் காலேஜ் பசங்களும், திருநங்கை உறவுகளும் வந்திருந்தாங்க.

இனியாவது என் மாமா வீட்டுல எங்களை ஏத்துப்பாங்கன்னு நம்பறேன். எங்களுக்குக் குழந்தை வேணும்னு தோணுச்சுன்னா, மாமாவின் சொந்தத்தில் குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்போம். இல்லைன்னா, அவருக்கு நான் குழந்தை.... எனக்கு அவர் குழந்தைன்னு எங்க காதல் திகட்டாமல் வாழ்நாள் முழுக்க தித்திப்பாக இருப்போம். சீக்கிரமே, டீச்சர் ஆகணும். இப்போ அதுதான் என் கனவு'' என்ற ஶ்ரீஜா முகத்தில் உலகை வென்ற ஆனந்தம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு