வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

நமக்குள்ளே...

‘அப்பா சாரிப்பா... என்னால ஜெயிக்க முடியல. நீ என்மேல வெச்சிருந்த நம்பிக்கையைக் காப்பாத்த முடியல.

நமக்குள்ளே...

திரும்பவும் ஒரு தோல்வியைத் தாங்குற சக்தி எனக்கு இல்லை. என்னாலதானப்பா மத்தவங்க முன்னாடி ரெண்டு வருஷமா நீ தலைகுனிந்து வாழ்ந்தே?’

- நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட விழுப்புரத்தைச் சேர்ந்த ஏழை மாணவி பிரதீபா எழுதிய கடைசிக் கடிதத்தின் வரிகள் இவை.

கடந்த ஆண்டு அனிதா, இந்த ஆண்டு பிரதீபா, சுபஸ்ரீ என்று தமிழகத்தில் வரிசையாக உயிர்கள் பறிபோய்க்கொண்டிருக்கின்றன.

இக்கட்டான வாழ்வியல் சூழலிலிருந்து தங்களைக் காப்பாற்றும் ஒரேவழி படிப்பு மட்டுமே என்று அடித்தட்டு மற்றும் நடுத்தரவர்க்க மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், பெரும்பாலானவர்கள் குடும்பக் கஷ்டத்தைத் சொல்லிச் சொல்லியே குழந்தைகளை வளர்க்கின்றனர். இதுவே ஒருவித மன அழுத்தமாக மாறி, குழந்தைகள் சரிவரப் படிக்க முடியாத நிலையை உருவாக்கி, தாழ்வு மனப்பான்மையை விதைக்கிறது.

ஆயிரக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் பிற ‘கேரியர் ஆப்ஷன்ஸ்’ பெரும்பாலான பெற்றோருக்குத் தெரியாத காரணம்தான், அனைவரையுமே மருத்துவம் மற்றும் பொறியியல் நோக்கியே சிந்திக்க வைக்கிறது. மருத்துவர், பொறியியலாளர் எனக் கனவுகளைச் சுமப்பதில் தவறில்லை. ஆனால், அந்தக் கனவு சிதைந்தால்... அதன்பிறகு வாழ்க்கையே இல்லை என்கிற எண்ணம் குழந்தைகளின் மனதில் உருவாகும்விதத்தில் நடந்துகொள்வதுதான் தவறு. அக்கம்பக்கம் என்ன சொல்லும்; சொந்தக்காரர்கள் என்ன சொல்லுவார்கள் என்பது போன்ற அழுத்தங்களும் குழந்தைகளை நிலைகுலையவே வைக்கும்.

இப்படியெல்லாம் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதற்கு முக்கியக் காரணமே... நம் நாட்டின் கல்வி முறை என்பதை ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. கணக்கிலடங்காத நுழைவுத் தேர்வுகள் குழந்தைகள்மீது திணிக்கப்படுகின்றன. `நுழைவுத் தேர்வு கட்டாயம் என்றால், பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளியில் தரப்படும் கல்வியினால் என்ன பயன்? பொதுத்தேர்வு என்கிற பெயரில் ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் நடத்தப்படும் பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண்கள் எதற்கும் ஆகாது என்றால், பிள்ளைகளை ஏன் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்? லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு நடத்தப்படும் தனியார் நுழைவுத் தேர்வுப் பயிற்சி மையங்களுக்கே நேரடியாக அனுப்பிவிடலாமே?’ என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கும் விடையில்லை. கல்வி என்பது ஏற்கெனவே கடைச் சரக்காகிவிட்ட நிலையில், காளான்கள்போல முளைத்திருக்கும் பயிற்சி மையங்கள், பல கோடி ரூபாய் புழங்கும் பக்கா ‘பிசினஸ்’ என மிரட்டுகின்றன.

இந்த நிலைக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் போராடுவதும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது... அனிதாக்கள், பிரதீபாக்கள், சுபஸ்ரீக்கள் பலியாவதைத் தடுப்பது.

நம்பிக்கை வளர்ப்போம்!

உரிமையுடன்,

நமக்குள்ளே...
ஆசிரியர்