வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

“நாங்க பின்வாங்கினா, செத்த உசுருக்கு மதிப்பே இல்லாம போயிடும்!” - தூத்துக்குடி துயரம்

“நாங்க பின்வாங்கினா, செத்த உசுருக்கு மதிப்பே இல்லாம போயிடும்!” - தூத்துக்குடி துயரம்
பிரீமியம் ஸ்டோரி
News
“நாங்க பின்வாங்கினா, செத்த உசுருக்கு மதிப்பே இல்லாம போயிடும்!” - தூத்துக்குடி துயரம்

ஸ்டெர்லைட் வி.எஸ்.சரவணன், வெ.வித்யா காயத்ரி

தூத்துக்குடி என்றதும் முத்துக் குளித்தலும் உப்புக் காய்ச்சுவதும் நம் நினைவுக்கு வந்தது மாறி, துப்பாக்கிச் சூட்டின் கொடூரக் காட்சிகள் நிழலாடுகின்றன. ‘ஸ்டெர்லைட்’ காப்பர் ஆலையால் தங்களின் வாழ்வாதாரமும் உடல்நலமும் பாழாகிறது என்பதால், அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வந்தாலும், சமீபத்தில் மாநிலத்தையே கவனிக்கவைத்த தீவிரமான தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். 99 நாள்கள் போராடியவர்கள், 100-வது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேற, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பல உயிர்கள் பறிக்கப்பட்டன; நூற்றுக்கணக்கானோர் காயம்பட்டனர். இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த அந்தக் கறுப்புச் சம்பவம் பற்றி, இங்கே ஐந்து பெண்கள் பேசுகிறார்கள்... கேள்வி எழுப்புகிறார்கள். 

“நாங்க பின்வாங்கினா, செத்த உசுருக்கு மதிப்பே இல்லாம போயிடும்!” - தூத்துக்குடி துயரம்

இது மக்களுக்கான அரசா?!

பேராசிரியர் பாத்திமா பாபு, சமூக ஆர்வலர்


நான் 23 வருடங்களாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறேன். இந்த ஆலை 1993-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 96-ம் ஆண்டி லிருந்து செயல்படத் தொடங் கியது. மூலப்பொருள்களிலிருந்து தாமிரத்தைப் பிரிப்பதே இங்கு நடைபெறும் பணி. இந்தச் செயல்முறையில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் ரசாயனக் கழிவாக  வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆலையைச் சுற்றி பல கிலோமீட்டர் தூரமுள்ள பகுதிகள் வரை மண்ணும் நிலத்தடி நீரும் பெரும் மாசடைகின்றன. குடிப்பதற்குத் தகுதியற்ற நீராக நிலத்தடி நீர் மாறிவிட்டது. இதனால், அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நீரின்றி மக்கள் சிரமப்படு கின்றனர். பெரும் குழாய்கள் மூலம் கடலில் கழிவுகளைக் கலக்கும் போது கடல் மாசுபடுவதோடு, கடலில் வாழும் உயிர்களும் இறக்கின்றன. இதனால், கடலை நம்பி வாழும் மீனவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர். மேலும், ஆலை இயங்க தினந்தோறும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. அதற்காகத் தாமிரபரணி ஆற்றிலிருந்து தினமும் பல லட்சம் லிட்டர் நீரை, அதுவும் மிகவும் மலிவான விலைக்குப் பெற்றுக்கொள் கின்றனர். பொதுமக்களோ ஒரு குடம் தண்ணீரைப் பத்து ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

ஆலை வெளியேற்றும் ரசாயனக் கழிவுகளாலும் நச்சுக்காற்றாலும் அங்கு வாழும் மக்களுக்கு உடல்நிலை கடும் பாதிப் படைகிறது. குமரெட்டியாபுரம் கிராமத்தில் 500 பேர் இருக்கிறார்கள் என்றால், அதில் சரிபாதி பெண்கள். அந்த 250 பேரில் 25 பேருக்குக் கருப்பையை அகற்றிவிட்டனர். அங்கு வாழும் பெண்களுக்குச் சரியான இடைவெளியில் பீரியட்ஸ் ஏற்படுவதில்லை. அதே பெண்கள் வெளியூர் செல்லும்போது இயல்பான இடைவெளியில் மாதவிடாய் நிகழ்கிறது. ஆண் பெண் பலரும் மலட்டுத்தன்மைக்கு உள்ளாகி யுள்ளனர். கருத்தரிப்பவர்களுக்கு அது எப்போது வேண்டுமானாலும் சிதைந்துவிடும் எனும் நிலை.இப்போது குழந்தைகளுக்கும் கேன்சர் வரத் தொடங்கிவிட்டது. இதற்கான போராட்டம் நூறு நாள்களாக அமைதிவழியில்தான் தொடர்ந்தது. ஆனால், ஒரு தனியார் ஆலைக்காகத் தன் குடிமக்களின் உயிரையே குடித்திருக்கிறது அரசு. இது மக்களுக்கான அரசா?!

ஆலையைத் திறந்தால் மறுபடியும் போராடுவோம்!

பெயர் வெளியிட விரும்பாத கல்லூரி மாணவி

அன்னிக்குக் காலையில், எங்க ஏரியாவுல கேன்சரால பாதிக்கப் பட்டிருந்த ஓர் அண்ணன் செத்துப்போயிட்டார். அவரை அடக்கம் பண்ணிட்டு, கலெக்டர் ஆபீஸை நோக்கிக் கூட்டமா நடக்க ஆரம்பிச்சோம். ஸ்னோலின் புள்ள, ‘அக்கா இந்த மாதிரி கூட்டத்துல நான் கலந்துகிட்டதே இல்ல; புது அனுபவமா இருக்கு, நல்லா சத்தமா கத்துக்கா’ன்னு சொல்லிச்சு. நாங்க போய்ட்டு இருக்கும்போதே போலீஸ்காரங்க கல்லைத் தூக்கி எறிஞ்சாங்க. அந்தக் கல் என்மேல பட்டு எனக்குக் காயமாகிடுச்சு. அதையும் பொருட்படுத்தாம,  போலீஸ் வீசின கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் கடந்து கலெக்டர் ஆபீஸ்கிட்ட வந்தோம். கல்லடி பட்டதால, வலிக்குதுன்னு மரத்தடியில நான் உட்கார்ந் துட்டேன். கொஞ்ச நேரத்துலேயே துப்பாக்கி குண்டு சத்தம் காது கிழியக் கேட்டுச்சு. நாங்க ஓட ஆரம்பிச்சோம். ‘அக்கா, நாம மூணு பேரும் கையை இறுக்கிப் பிடிச்சுப்போம். என்ன ஆனாலும் கையை விட்டுறாதீங்க’ன்னு சொன்னா, ஸ்னோலின். அதுதான் ஸ்னோலின் பேசின கடைசி வார்த்தை. மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சு நின்னு திடீர்னு ஸ்னோலினைச் சுட்டாங்க. என் கையை விட்டு ஓடினவ தப்பிச்சு ஓடுவான்னுதான் விட்டேன்; இப்படி சாவான்னு தெரிஞ்சிருந்தா கையை விட்டிருக்கவே மாட்டேன்.

இத்தனை பேர் உயிரைக் காவு வாங்கிட்டு, அந்த ஆலையை இப்போ மூடியிருக்காங்க. நாங்க பின்வாங்கினா, செத்த உசுருக்கு மதிப்பே இல்லாமப் போயிடுமே? மறுபடியும் ஆலையைத் திறந்தா, நாங்க மறுபடியும் போராடுவோம்.

“நாங்க பின்வாங்கினா, செத்த உசுருக்கு மதிப்பே இல்லாம போயிடும்!” - தூத்துக்குடி துயரம்

எங்க அத்தை...

எந்தப் போராட்டம் பண்ணுச்சு?

பெயர் வெளியிட விரும்பாத இல்லத்தரசி


ஜான்சி ராணி, என் அத்தை. அவங்களுக்கு நாலு பிள்ளைங்க. முதல் பொண்ணைக் கட்டிக் கொடுத்தாச்சு. அடுத்த பையனுக்கு 19 வயசாகுது. சிறுசும் பொடிசுமா இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க.  சம்பவம் நடந்த அன்னிக்கு ஜான்சி அத்தை, மூத்த பொண்ணுக்கு மீன் கொடுக்கப் போயிருந்துச்சு. ரொம்ப நேரமாகியும் அத்தையைக் காணோம்னு நாங்க தேட ஆரம்பிச்சோம். ஒரு தெருமுனையில் சிதறி கிடந்த மூளையைப் பார்த்ததும் எல்லோருக்கும் பதறிப் போயிருச்சு. ஆஸ்பத்திரிக்குப் போய்,  `திரேஸ்புரத்துல ஒரு பொண்ணை சுட்டுக்கொன்னாங்களே, அந்தப் பொண்ணு யாரு?’ன்னு விசாரிச்சோம். ‘பேர் வனிதா, வயசு 29’னு சொன்னாங்க. மறுபடியும் பிணவறைக்குப் போய், ‘வனிதாங்கிற பொண்ணைத் தேடி யாராச்சும் வந்தாங்களா?’ன்னு கேட்டோம். ‘இல்லை’னு அவங்க சொல்ல, ‘அது எங்க அத்தையான்னு நாங்க பார்க்கலாமா?’னு கெஞ்சியும், பாடியைப் பார்க்க அனுமதிக்காம, செயினை மட்டும் கொண்டுவந்து அடையாளமா காட்டினாங்க. ஆத்தீ... அது எங்க அத்தைதான்.

அத்தை புள்ளைங்க துடியா துடிச்சுட்டு இருக்குங்க. போராட்டம் பண்ணுவங்களைச் சுட்டோம்னு காரணம் சொல்றீங்க. எங்க அத்தை எந்தப் போராட்டம் பண்ணுச்சு? தெருவுக்குள்ள வந்து, பொம்பளைகளைச் சுட்டவங்களுக்கு என்ன தண்டனை?

மூடப்பட்ட ஆலை...

அடுத்த சட்ட நகர்வு என்ன?!

அருள்மொழி, வழக்கறிஞர்


தமிழக அரசு வழங்கியிருக்கும் ஆணை மூலம் இந்த ஆலையை நிரந்தரமாக மூட முடியும். ஆனால், தொழிற்சாலைகள் சட்டப்படியும், பசுமை தீர்ப்பாயத்தின் நடைமுறைகள்படியும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மின்சார வாரியம் போன்றவற்றிலிருந்து அந்த ஆலையின் செயல்பாடு மக்களுக்கு ஆபத்தானது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர், அதைச் சட்டசபையில் ஒரு தீர்மானமாகவும் நிறைவேற்றி, அதை ஒரு மசோதாவாகவும் நிறைவேற்றிவிட்டால், அந்த ஆணை இன்னும் உறுதியாகிவிடும்.

தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டிலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களிலும், வழக்கறிஞர் மூலம் வைக்கப்போகிற வாதங்களிலும் தன் முடிவைத் தெளிவாக, உறுதியாகத் தெரிவிக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால்தான், ‘அந்த ஆலை நிரந்தரமாக மூடப்படும்' என்ற அரசின் வார்த்தைகளை மக்களால் நம்பமுடியும். 

மக்கள் சக்தி நிகழ்த்தும்!

பாலபாரதி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்


இந்தப் போராட்டம் எந்த அரசியல் கட்சியாலும் முன்னெடுக்கப்படவில்லை. மக்கள் தங்களுக்குத் தாங்களே தலைமையேற்று நடத்தினர். ஒருவேளை வன்முறை அவர்களின் நோக்கமாக இருந்திருந்தால், களத்துக்குத் தங்கள் குழந்தைகளைத் தூக்கிச் சென்றிருப் பார்களா? நான் நேரில் சந்தித்த பெண்கள், ‘கைது பண்ணினாலும், மரத்தடியில் இருக்கச் சொல்வாங்க, சாயந்திரம் விட்டுவாங்கனுதான் நினைச்சு வந்தோம்.
 
அதனாலதான் குழந்தை களுக்கு மத்தியானம் சாப்பாடுகூட எடுத்துவந்தோம்’ எனச் சொன்னார்கள். ஆனால், அரசு அவர்களை அறத்துடன் எதிர்கொள்ளாமல், துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளது. ஆனாலும், மக்கள் ஆலைக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். இப்போது ஆலை மூடப்படுவதாக அரசு அறிவித்திருந்தாலும் அதை மகிழ்ச்சியோடு கொண்டாடும் நிலையில் மனமும் உடலும் இல்லாத அவலச் சூழலில் அவர்கள் இருக்கிறார்கள்.

நான் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்தேன். தலையிலும் காலிலும் எனப் பல கட்டுகளோடு சிகிச்சை எடுத்து வருவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருந்தது. ஒரு பெண்மணி, ‘இந்த ஆலையை மறுதிறப்பு எனும் வாய்ப்பே இல்லாமல் மூடினால்தான் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையும்' என்றார்.

மக்கள் சக்தி அதை நிகழ்த்தும்.