வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

வழிகாட்டும் ஒளி! -  `நேசம்' பிரேமா 

வழிகாட்டும் ஒளி! -  `நேசம்' பிரேமா 
பிரீமியம் ஸ்டோரி
News
வழிகாட்டும் ஒளி! -  `நேசம்' பிரேமா 

உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள் சாஹா, படங்கள் : க.பாலாஜி

புன்னகையால் எதிரிகளை மட்டுல்ல; எமனைக்கூட வெல்லலாம்... நிரூபித்திருக்கிறார் பிரேமா!

தோற்றுப்போன திருமண வாழ்க்கை, திடீர் விபத்து, தனிமை என வாழ்க்கையின் ஒரு பாதியைத் தொடர் துயரங்களுடன் கடந்தவருக்கு, அடுத்த பாதி இனிக்க வேண்டாமா? இல்லை. முன்னதைவிடவும் அதிகமான பிரச்னைகள்... அடுக்கடுக்கான சோகங்கள் என மரணப்படுக்கை வரை சென்று மீண்டிருக்கிற பிரேமா, ‘நேசம்’ டிரஸ்ட்டின் நிர்வாகி. ஆதரவற்ற குழந்தைகளுக்கான தேவைகளைக் கவனிக்கிற அமைப்பு இது. நேசத்தின் இன்னொரு பகுதியான ‘வழிகாட்டும் ஒளி’, தனித்து வாழும் பெண்களுக்கான தன்னம்பிக்கையையும் பொருளாதாரச் சுதந்திரத்தையும் ஏற்படுத்துகிறது.

‘`சாதாரண விவசாயக் குடும்பத்துல பிறந்தவள் நான். எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி நான். பேங்க்கிங் ரெக்ரூட்மென்ட் மூலமா தேர்வாகி, வங்கிப் பணிக்குப் போனேன். காதல் திருமணம் செய்துகிட்டேன். பதினஞ்சு வருஷ வாழ்க்கைக்குப் பிறகு, அதைத் தொடர முடியாம பிரிஞ்சுட்டோம். அதுக்குப் பிறகு வாழணுமாங்கிறதே கேள்விக்குறியா இருந்தது. அப்படியொரு நிலையிலதான் அந்த விபத்து நடந்தது. டூவீலர் ஓட்டிட்டுப் போனபோது, என் துப்பட்டாவோட ஒரு முனை சக்கரத்துலயும், இன்னொரு முனை பின்னாடி உட்கார்ந்திருந்த என் தோழி கையிலயும் சிக்கினதுல துப்பட்டா என் கழுத்தை இறுக்கிக் கீழே விழுந்துட்டேன். காலில் பலமான அடி. கிட்டத்தட்ட ஒரு வருஷம் படுக்கையில இருந்தேன். அந்தக் காலகட்டம் ரொம்பக் கொடுமையானது. நடக்க முடியாம சிரமப்பட்டேன்.மரணப் படுக்கையில இருந்தபோது மறுபடி `எதுக்கு இந்த வாழ்க்கை... இன்னும் வாழ்ந்து என்ன செய்யப்போறேன்?’ என்ற கேள்வி வந்தது. அப்போ ஒருநாள் திடீர்னு ஓர் உள்ளுணர்வு ‘உன்னை மாதிரி கஷ்டப்படறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்களுக்கு ஏதாவது சேவைகள் செய்யலாமே’னு சொன்னது. ஆஸ்பத்திரிப் படுக்கையில இருந்தபோது ஆரம்பிச்சதுதான் `நேசம்’ அமைப்பு. `நேசம்’ மூலமா உதவிகள் கிடைக்கப்பெற்ற எல்லாப் பிள்ளைங்களும் இன்னிக்கு நல்ல நிலைமையில இருக்காங்க. ரெண்டு பிள்ளைங்க வெளிநாட்டுல இருக்காங்க. இவ்வளவு செய்த பிறகும் மனசுல ஏதோ ஒரு வெறுமை.

வழிகாட்டும் ஒளி! -  `நேசம்' பிரேமா 

சுஜாதா, ரேவதினு எனக்கு ரெண்டு தோழிகள். அவங்களும் கணவன் ஆதரவில்லாம தனியே பிள்ளைங்களோடு வாழ்ந்திட்டிருந்தாங்க. நாங்க எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருந்தோம். ஆனா, யாருமே இல்லாத, வசதியில்லாத பெண்கள் என்ன செய்வாங்கனு கவலையா இருந்தது. கணவனால கைவிடப்பட்டவங்க, கணவனை இழந்தவங்க, விவாகரத்தானவங்க, கல்யாணம் ஆகாதவங்கனு தனியா வாழற பெண்களுக்கான அமைப்பா ‘வழிகாட்டும் ஒளி’யை ஆரம்பிச்சோம்.

தனிமை வாழ்க்கையை ஊக்கப்படுத்தறது எங்க நோக்கமில்லை. ‘எனக்குப் புருஷன் சரியில்லை, எப்படியாவது அவர்கிட்டருந்து என்னைப் பிரிச்சுடுங்க’னு நிறைய பேர் போன் பண்ணுவாங்க. ஆனா, பிரிக்கிறதுக்கான அமைப்பில்லை இது. சேர்ந்து வாழச் செய்ய முடியுமாங்கிறதை முதல் முயற்சியா செய்வோம். ஆனா, பிரியறதைத் தவிர வேற வழியே இல்லைங்கிற நிலைமையில தனிமைப்படுத்தப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பையும் வாழறதுக்கான ஆதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கணும். சின்னச் சின்ன பிசினஸ் தொடங்கறதுக்கான ஆலோசனைகளைக் கொடுத்து, உதவிகளையும் செய்யறோம். படிப்புக்கேத்த வேலைகளை வாங்கிக் கொடுக்க முயற்சிகள் செய்யறோம்.  அவங்க பிள்ளைங்களுக்கு `நேசம்’ மூலமா படிப்புக்கான உதவிகளைச் செய்யறோம்.

முழுக்க முழுக்க நண்பர்களை நம்பித்தான் இத்தனை விஷயங்களையும் செய்யறோம். ஒருகாலத்துல எங்க பிறந்த நாள்களை பிரமாண்டமா ஸ்டார் ஹோட்டல்ல கொண்டாடியிருக்கோம். அந்தச் செலவை ஏழைக் குழந்தைங்களுக்காகப் பயன்படுத்தலாமேனு தோணினது. அதன் பிறகு, யாருக்குப் பிறந்த நாள் என்றாலும் அந்த நாளில் ஏழைக்குழந்தைங்களை தீம் பார்க்குக்குக் கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சோம்.

பொன்னேரி, கண்டிகை உள்பட ஏழு இடங்களில் டியூஷன் சென்டர்ஸ் வெச்சிருக்கோம். பள்ளிக்கூடம் முடிச்சதும் கல்லூரியில சேரவும் உதவிகள் செய்யறோம். சென்னையில் உள்ள 38 இல்லங்களோடு தொடர்புல இருக்கோம். அங்கே உள்ள குழந்தைகளுக்கு உதவிகளைச் செய்யறோம். நல்ல மனசு கொண்ட யாராவது ஒரு குழந்தைக்கான படிப்புச் செலவை ஏத்துக்க முன்வருவாங்க. இதுதவிர, கைவிடப்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கும் உதவிகள் செய்யறோம்...’’ - இப்படியாக சேவை, வேலை என 24 மணி நேரமும் ஓடிக் கொண்டிருந்த பிரேமாவுக்கு வாழ்வில் அடுத்த அதிர்ச்சி தயாராக இருந்திருக்கிறது.

‘`ஒருநாள்கூட ஓய்வில்லாம இந்த விஷயங்களை எல்லாம் விருப்பத்தோடும் முழு மனதோடும் பண்ணிட்டிருந்தேன். அப்பப்ப உடம்புக்கு முடியாம போகும். உழைக்கிறதால வந்துபோகிற களைப்பா இருக்கும்னு பெரிசா எடுத்துக்கலை. அடிக்கடி வயிற்றுவலி வரும். ஒரு கட்டத்துல வலி அதிகமானதால டெஸ்ட் பண்ணிப் பார்த்தோம். பெருங்குடல் புற்றுநோய்னு ரிசல்ட் வந்தது. உடனடியா ஆபரேஷன் பண்ணியாகணும்னு சொன்னாங்க.

புற்றுநோய்னு உறுதியான அந்த ஒருநாள் மட்டும் அழுதேன். அடுத்த நாள் எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டு அடுத்து நான் செய்ய வேண்டிய வேலைகளுக்காக வாழணும்னு மன உறுதியை உருவாக்கிக்கிட்டேன்.

பல நேரம் தீவிரமான மன அழுத்தத்துக்கு ஆளாகிறதுண்டு. அப்பல்லாம் கடவுள் நம்பிக்கையாலும் நட்பாலும்தான் மீள்கிறேன். தனிமைங்கிறது வாழ்க்கையின் மிகப்பெரிய சோகம். அந்தத் தனிமை உணர்வு என்னை அழுத்திடாம இருக்க முடிஞ்சவரைக்கும் என்னை பிஸியாவே வெச்சிருப்பேன். அதையும் மீறி என் வாழ்க்கையில அடுத்த இடி காத்துட்டிருந்தது. புற்றுநோய்க்கான சிகிச்சைகள் எடுத்துட்டிருந்தபோதே ஹார்ட் அட்டாக். இதயத்துல கடுமையான வலி வந்தபோது, அதை ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியா சந்தேகப்படத் தோணலை. கீமோதெரபியின் பக்க விளைவா இருக்கலாம்னு நினைச்சேன். ஆனா, தாங்க முடியாத வலி,

பல மணி நேரம் தொடர்ந்ததால டாக்டரைப் பார்க்கப் போனேன்.  இதயத்துல அடைப்புனு சொன்னாங்க. உடனடியா அதுக்கான ஆபரேஷன். ரெண்டு ஸ்டென்ட் வெச்சுக்கிட்டு மறுபடியும் செத்துப் பிழைச்சேன்.

இப்பவும் என்னால வேகமா நடக்க முடியாது. கால்வலியும் நெஞ்சுவலியும் இருக்கு. ‘ரத்த ஓட்டம் மெதுவா இருக்கு. பழுதடைஞ்ச உறுப்பைச் சரி பண்ணிக் கொடுத்திருக்கோம். அவ்வளவுதான்னு முடியும்’னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.

ஒருபக்கம் கீமோதெரபி. அந்த சிகிச்சை எடுக்கும்போது கலோரி அதிகமான சத்தான உணவுகளைச் சாப்பிடணும். இன்னொரு பக்கம் இதயத்துக்கான சிகிச்சை. அதுக்கு ஒவ்வோர் உணவையும் கலோரி கணக்குப் பண்
ணிச் சாப்பிடணும். முரண்பட்ட வாழ்க்கை...’’ - சோகமாகச் சிரிக்கிற பிரேமாவுக்கு இத்தனைக்குப் பிறகும் நம்பிக்கை இருக்கிறது.

‘`இப்போதைக்கு என்னுடைய ஒரே கனவு கம்யூனிட்டி சென்டர் தொடங்குவது. டெய்லரிங், எம்ப்ராய்டரி, கம்ப்யூட்டர், அழகுக்கலை மாதிரியான துறைகளில் ஏழைக் குழந்தைங்களுக்கும் தனியா வாழற பெண்களுக்கும் பயிற்சிகள் கொடுக்கணும். அது மூலமா அவங்களுக்கு வாழ்க்கையில ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தணும். என் காலத்துக்குள்ள இதை நடத்திப் பார்க்கணும்...’’ - நம்பிக்கையுடன் சொல்பவர், பெண்களுக்கு ஒரு மெசேஜும் வைத்திருக்கிறார். 

‘`தனிமை மிகப்பெரிய நோய். தனிமை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டவங்களுக்கு ஓர் அட்வைஸ். கூடியவரை உங்களை பிஸியா வெச்சுக்கோங்க. பொழுதுபோக்கு, வேலை, அடுத்தவங்களுக்கான உதவிகள்னு பிடிச்சதைச் செய்யுங்க. தனிமையை ஜெயிக்கிறது உங்க கையிலதான் இருக்கு.’’

மாறாத புன்னகையில் மனம் நிறைக்கிறார் பிரேமா!