Published:Updated:

இதையும் தாங்குவேன் அப்பாவுக்காக! - சண்முகப்ரியா

இதையும் தாங்குவேன் அப்பாவுக்காக! - சண்முகப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
இதையும் தாங்குவேன் அப்பாவுக்காக! - சண்முகப்ரியா

கறிக்கடையில் கல்லூரிப் பெண்ஆ.சாந்தி கணேஷ், படம் : கே.ரமேஷ்

இதையும் தாங்குவேன் அப்பாவுக்காக! - சண்முகப்ரியா

கறிக்கடையில் கல்லூரிப் பெண்ஆ.சாந்தி கணேஷ், படம் : கே.ரமேஷ்

Published:Updated:
இதையும் தாங்குவேன் அப்பாவுக்காக! - சண்முகப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
இதையும் தாங்குவேன் அப்பாவுக்காக! - சண்முகப்ரியா

ரு நாளைக்கு இரண்டு ஜிபி டேட்டா கேட்கும் இளைய தலைமுறைக்கு மத்தியில், தனித்துத் தெரிகிறார் சண்முகப்ரியா. படிப்பது, திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு வேதியியல். பார்ட் டைமாகப் பணிபுரிவது, அப்பாவின் கறிக்கடையில்.

‘`ப்ளஸ் டூ முடிச்சுட்டு மூணு மாசங்கள் லீவுல வீட்ல இருந்தப்போ ஒருநாள் அப்பாதான், ‘ஒத்தாசைக்குக் கடையில வந்து நிக்கிறியாம்மா’னு கேட்டாரு. நான் உடனே `சரி’ன்னு சொல்லிட்டேன். ஏன்னா, எங்கப்பா வுக்கு ரொம்ப வயசாயிடுச்சு. அப்பா அம்மாவுக்குக் கல்யாணமாகி 12 வருஷங்கள் கழிச்சுத்தான் நான் பொறந்தேனாம். அப்புறம், என் ரெண்டு தம்பிங்க. இப்ப அப்பாவுக்கு அறுபது வயசாகுது’’ என்றவர், தன் அப்பாவைப் பற்றிப் பேசும்போது மலர்கிறார்.

‘`நான் குழந்தையா இருந்தப்போ, எங்கப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் நடந்துச்சு. டூவீலர்ல ஆட்டுக்குட்டியை ஏத்திட்டு வரும்போது, இருட்டுல ஜல்லிக்கல்லுல விழுந்து எந்திரிச்சு வந்து, விலா எலும்புல விரிசல்விட்டு சீழ் பிடிச்சிருந்திருக்கு. அப்படியும் கறிக்கடைக்குப் போறதை நிறுத்தலை. ஒருநாளு கடையில கறி கொத்திக்கிட்டிருக்கும்போது திடீர்னு கிறுகிறுன்னு வந்து அப்படியே கீழே விழுந்துட் டாரு. அப்புறம் ஆஸ்பத்திரி, கடை,  குடும்பம்னு படாதபாடு பட்டுட்டாரு. எனக்குப் புத்தி தெரிஞ்ச நாள்ல இருந்து, எங்கப்பா பட்ட கஷ்டத்தையெல்லாம் பார்த்து உணர்ந்து வளர்ந்தவ நான். என் பெரிய தம்பி அப்பாவுக்குத் துணையா கறிக்கடையிலதான் வேலை பார்க்குறான். அம்மாவும் கோழி வெட்டுறது, தோலுரிக்கிறதுல்லாம் செய்வாங்க. குடும்பமே உழைக்கிறப்போ காலேஜ்ல படிக்கிறதால நான் மட்டும் ஒதுங்கிட முடியுமா? அதான் கையில கத்தியை எடுத்துட்டேன்’’ என்கிறார் சண்முகப்ரியா.

இதையும் தாங்குவேன் அப்பாவுக்காக! - சண்முகப்ரியா

‘`குடும்பத்துல வறுமை. ரெண்டு தலைமுறையா நமக்குக் கறிக்கடைதான் பொழப்பு. புள்ளைகளாச்சும் நல்லா வந்துடணும்’’ என்கிறார் சண்முகப்ரியா வின் அப்பா சின்னசாமி. “மொதல்ல ஒரு வாரம் அப்பாவும் தம்பியும் கறி வெட்டுறதை வேடிக்கைதான் பார்த்துட்டு இருந்தேன்’’ என்ற சண்முகப்ரியா, ‘`ஒரு வாரம் கழிச்சு அப்பா, ஓர் ஆட்டுமுட்டியைக் கொடுத்து, ‘வெட்டிப் பழகு’ன்னு சொன்னாரு. மொதமொதல்ல கத்தியை கையில பிடிச்சப்போ விரலெல்லாம் நடுங்குச்சு. கறியைப் புடிச்சு வெட்டப் பார்த்தா, அது நழுவி நழுவி ஓடிடும். அதுவுமில்லாம கஸ்டமர்ஸ் முன்னாடி கறி வெட்டவும் கூச்சமாயிருக்கும். அப்புறம், ‘இது நம்ம கடை. அப்பாவுக்கு முடிஞ்சளவுக்கு ஓய்வு கொடுக்கணும்’னு மனசுல நெனச்சுக்கிட்டே கத்தியைப் பழகினப்போ, கறி கைக்குக் கட்டுப்பட்டுச்சு. ரெண்டு வாரத்துல எல்லாம் சரியாகிடுச்சு. கத்தியைப் பார்த்து என் கையும் நடுங்கலை, கறியும் என் கையைவிட்டு நழுவிப் போகலை’’ என்கிறார் புன்னகையுடன்.

‘`காலேஜுல சேர்ந்ததுக்கு அப்புறம் ஞாயித்துக்கிழமை மட்டும் கடைக்குப் போறேன்.  முதல்நாள் நடுராத்திரி ஒரு மணிக்கே குடும்பத்தோட எழுந்திரிச்சிடுவோம். அப்ப கிளம்பினாத்தான், முன்னாடியே வாங்கி வெச்சிருக்கிற ஆறேழு ஆடுங்களை வெட்டி, தோலுரிச்சு, காலையில ஆறு மணிக்குள்ள கடைக்கு எடுத்துட்டு வர முடியும். எல்லாம் வித்து முடிஞ்சு நாங்க வீட்டுக்குக் கிளம்ப சாயங்காலம் அஞ்சு அஞ்சரையாகிடும். அப்போ என்னைப் பார்த்தீங்கன்னா மேலெல்லாம் ரத்த வாடை, கறி வாடைன்னு கண்றாவியா இருப்பேன்’’ என்று பெரிய சிரிப்புடன் சொன்னவரிடம், ‘காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எதுவும் கேலி பண்றாங்களா?’ என்று கேட்டால், சட்டென ஓர் இறுக்கம் சண்முகப்ரியாவின் குரலில்.

‘`இதுவரை அப்படி யாரும் கிண்டல் பண்ணலை. பண்ணினாலும் நான் கண்டுக்கமாட்டேன். என் கால்கள் நிக்கிற சில நிமிஷங்கள் அப்பாவோட கால்கள் ஓய்வெடுக்குது. அதை நினைச்சாலே எனக்கு ஒரு சந்தோஷம், நிம்மதி. கஷ்டமோ, நஷ்டமோ இது எங்க குடும்பத் தொழில். படிப்பை முடிச்சதுக்கப்புறம் இதையே நான் பெரிய அளவுல செய்யப் போறேன்’’ என்கிறார் தீர்க்கமுடன் இந்த அப்பா பொண்ணு!

அப்பாவின் மகள்கள் ஆனந்த யாழை மட்டும் மீட்டுவதில்லை... அவருக்காகக் கறிக்கடை கத்தியையும் கையிலெடுக்கிறார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!