Published:Updated:

``நான் மீண்டும் சபரிமலைக்கு வருவேன்!’’ - யார் அந்த திருப்தி தேசாய்?!

`ஒவ்வொரு மதத்திலிருக்கும் பெண்களுக்கும் அந்தந்த மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்ட வேண்டும். அது அவர்களின் அடிப்படை உரிமையும்கூட. பெண்கள் தூய்மையற்றவர்கள் எனக் கூறுபவர்களும் அந்தத் தூய்மையற்றவர்களின் வழியாகவே இந்த உலகத்திற்கு வந்தார்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்’

``நான் மீண்டும் சபரிமலைக்கு வருவேன்!’’ - யார் அந்த திருப்தி தேசாய்?!
``நான் மீண்டும் சபரிமலைக்கு வருவேன்!’’ - யார் அந்த திருப்தி தேசாய்?!

`அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழையலாம்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே பத்திரிகையாளர் கவிதா ஜெகல், சமூகச் செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா, மேடி ஸ்வீட்டி போன்ற சில பெண்கள், கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்தனர். அவர்கள் அனைவரும் 500 மீட்டர் தூரத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்கள். பின் சபரிமலை நடை சாத்தப்பட்டு அந்தப் பிரச்னைக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டது. “அடுத்தமுறை சபரிமலை திறக்கப்பட்டால் என்னுடன் 6 பெண்களைச் சேர்த்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைவேன்’’ என்று அறிவித்தார் சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கோயிலுக்குச் செல்வதற்காக நேற்று (16.11.2018) அதிகாலை 4.30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்துசேர்ந்தார். ஆனால், அவரை கொச்சி விமான நிலையத்திலிருந்து வெளியில் வர முடியாத அளவிற்குப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் வேறு வழியின்றி இரவு 9.30 மணி விமானத்தில் புறப்பட்டுச்  சென்றுவிட்டார்.

திரும்பிச் செல்லும்போது “நான் மீண்டும் சபரிமலைக்கு வருவேன்’ எனச் சூளுரைத்தார். யார் அந்த திருப்தி தேசாய்?


கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா எல்லையில் அமைந்திருக்கும் நிபானி தாலுகாவில் கோல்பாபூரில் பிறந்தவர். எட்டு வயதாக இருக்கும்போது பெற்றோருடன் புனேவிற்குக் குடிபெயர்ந்துவிட்டார். கோல்ஹாப்யூரில் இருந்த ‘கஹங்கிரி மஹராஜ்’ என்ற சாமியாரின் மிகத் தீவிரமான பக்தை. 33 வயதாகும் திருப்தி ‘பூமாதா ரங்ராகினி படை’ என்ற அமைப்பின் தலைவராகச் செயல்பட்டுவருகிறார். 

புனேவில் உள்ள ஸ்ரீமதி நதிபாய் தமோதர் தகேர்ஸ்ரீ கல்லூரியில் ஹோம் சயின்ஸ் சேர்ந்தார். குடும்பச் சூழல் காரணமாக கல்லூரிப் படிப்பை முதலாம் ஆண்டுடன் நிறுத்திக்கொண்டார். அப்போதே குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கான உரிமைகளுக்காகப் போராடும் ‘க்ரந்திவீர் ஜோப்டி சங்கம்’ என்ற அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றுத் தன்னுடைய சமூகச் செயல்பாட்டைத் தொடங்கினார்.

“2003-ல் நான் க்ரந்தி ஜோப்டி விகாஸ் சங்கத்துடன் இணைந்து குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்காகப் போராடியதுதான் என்னுடைய முதல் போராட்டம். என்றாலும், நான் என்னுடைய சமூக சேவையை 10 வயதிலிருந்தே தொடங்கிவிட்டேன். குடிசைப்பகுதியிலிருக்கும் மக்களுக்கு  ரேசன் கார்டுகள் பெற்றுத்தருவதும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதும், சட்டம் தொடர்பான உதவிகள் செய்வதும்தான் என் போராட்டத்தின் முக்கிய காரணம்” என்கிறார்.


பல்வேறு பிரச்னைகள் சார்ந்து தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும் 2007-ம் ஆண்டில் 50 கோடி ரூபாய் மக்கள் பணத்தை மோசடி செய்துவிட்டதாக, அஜித் கார்பரேட் பேங்குக்கு எதிராக போராடியதன் மூலம்தான் வெளிச்சத்திற்கு வந்தார். இந்த வங்கியின் சேர்மன் தேசியவாத காங்கிரஸின் முக்கியப் புள்ளியான அஜித் பவார். “அஜித் கார்பரேட் பேங்க் அரசியல்வாதிகளுக்கும் பெரிய பணக்காரர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கிறது. இதனால், இங்கே டெபாசிட் செய்திருக்கும் 35,000 மக்கள் தங்கள் பணத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் இழந்த பணத்தை மீட்க ‘அஜித் பேங் சங்கரஷ் சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, கடந்த நான்கு ஆண்டுகளாகப் போராடி வந்துள்ளேன். அதன் பலனாகக் கிட்டத்தட்ட 29,000 மக்கள் தாங்கள் இழந்த பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்” எனத் தன் போராட்டம் வெற்றிபெற்றது குறித்துப் பேசியுள்ளார். 

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 27, 2010-ல் அவர் உருவாக்கியதுதான் ‘பூமாதா படை’. “நிலம் இல்லை என்றால் இந்த உலகத்தில் எவராலும் வாழ முடியாது. அந்தளவிற்கு நிலம் என்பது ஒருவருக்கு முக்கியமானதாக இருக்கிறது. அதனால்தான் என்னுடைய அமைப்பிற்கு ‘பூமாதா படை’ என்று பெயரிட்டேன். தொடங்கும்போது வெறும் 40 பெண்களை மட்டுமே வைத்துத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின்கீழ் தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான, பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள்” என்கிறார் தேசாய். மேலும், “இந்த அமைப்பு ஊழல், விவசாயிகள் தற்கொலை, பெண்களுக்கான உரிமை, சுழலியல் பிரச்னைகள் மற்றும் உதவி தேவைப்படும் அனைவருக்காகவும் குரல் கொடுக்கும்” என்றும் அறிவித்தார். 

இந்த அமைப்பு ஆண், பெண் இருபாலருக்குமானதாக இருந்தாலும் பெண்களுக்கான சிறப்புப் பிரிவை ஏற்படுத்தி அதற்கு ‘பூமாதா ரங்ராகினி படை’ என்று பெயரிட்டு பெண்களின் உரிமைகளுக்காகப் போராட ஆரம்பித்தது. இந்த அமைப்பின் முக்கியமான செயல்பாடே பெண்கள் செல்வதற்கு அனுமதி மறுத்துள்ள கோயில்களுக்கு எதிராகப் போராடி, பெண்கள் நுழைய அனுமதி பெற்றுத் தருவதே. அப்படிப் போராடித்தான் மகாராஷ்டிராவின் அஹ்மத் நகரில் இருக்கும் 400 ஆண்டு பழைமையான சனிபகவான் கோயிலுக்கு பெண்கள் நுழைய அனுமதி பெற்றுத்தந்தது. பின் கோஹல்பூரில் உள்ள மகாலெட்சுமி கோயில், நாசிக்கிலிருக்கும் திரம்பகேஸ்வர் கோயில் மட்டும் இல்லாமல் மும்பை ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்றுள்ளது. 


இந்த வெற்றிகளைத் தொடர்ந்து 2016-ல் தன்னுடைய கவனத்தை சபரிமலை பக்கம் திருப்பினார் தேசாய். “பூமாதா படையின் 100 பெண் போராளிகளோடு கேரளாவிற்கு வந்து திருவாங்கூர் தேவஸ்தானத்திடம் சபரிமலை கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுப் போராட்டம் நடத்தவுள்ளேன்” என்று 2017-ன் ஆரம்பத்திலேயே அறிவித்தார். “மாதவிடாய் என்பது இயற்கையானது. எந்தக் கடவுளும் இதற்காகப் பெண்களை தூய்மை இல்லாதவர்கள் என்று கூறியதில்லை. கடவுளைத் தொழுவது என்பது சட்டப்படி பெண்களுக்கும் உள்ள உரிமை. அந்த உரிமையைப் பெறுவதற்காக நாங்கள் சபரிமலை நோக்கி வருகிறோம்’ என்று அறிவித்தார். ஆனால், கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சி “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை கோயில் நுழைவு முயற்சியில் ஈடுபட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டதால் தற்போது வரை அந்த முயற்சியில் ஈடுபடாமல் இருந்தார். 

தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்னரும் பெண்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைப் பார்த்து ‘சபரிமலை கோயில் நடை திறக்கும் நாளுக்கு அடுத்த நாள் தன்னுடன் சேர்ந்து ஆறு பெண்களைச் சேர்த்துக்கொண்டு கோயிலுக்கு நுழைவேன். கோயிலுக்குச் செல்லவுள்ள எனக்கு உரிய பாதுகாப்பை கேரள அரசு அளிக்க வேண்டும்’ என கேரள முதல்வருக்கு கடிதம் எழுதினார். 


“ஒவ்வொரு மதத்திலிருக்கும் பெண்களுக்கும் அந்தந்த மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்ட வேண்டும். அது அவர்களின் அடிப்படை உரிமையும்கூட. பெண்கள் தூய்மையற்றவர்கள் எனக் கூறுபவர்களும் அந்தத் தூய்மையற்றவர்களின் வழியாகவே இந்த உலகத்திற்கு வந்தார்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். கோயில் சிலைகளுக்கு பூஜைக்காகக் கொடுக்கப்படும் பால் பசுக்களிடமிருந்தே வருவதே. அதுவும் பெண்தான் என்பதை உணர வேண்டும்’ என்கிறார்.

எல்லாக் கோயில் நுழைவிலும் வெற்றி பெற்ற திருப்தி தேசாய் சபரிமலை விஷயத்தில் என்ன செய்யப்போகிறார்?