Published:Updated:

அக்கா, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீர் இல்லை! - ராஜனி திராணகம

அக்கா, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீர் இல்லை! - ராஜனி திராணகம
பிரீமியம் ஸ்டோரி
News
அக்கா, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீர் இல்லை! - ராஜனி திராணகம

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

யிர் பிழைக்க, பலரும் இலங்கையிலிருந்து தப்பிப் பிழைத்துச் சிதறி ஓடிக்கொண் டிருந்தபோது, தனது மூன்று மாத பிரிட்டன் பயணத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு அவசரமாக வீடு திரும்பினார் ராஜனி திராணகம. `உனக்கெனன்ன பைத்தியமா?’ என்று கோபித்துக் கொண்டவர்களுக்கு ராஜனி நிதானமாகப் பதிலளித்தார். ``மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் இல்லை. அனைத்தையும் போர் நாசப்படுத்திவிட்டது. இடிந்த கட்டடங்களை மீண்டும் கட்டியெழுப்பு வதற்குப் பொறியாளர்களோ, தொழிலாளர்களோ இல்லை. வயதானவர்களும் நோயுற்றவர்களும் கவனிப்பாரற்று மடிந்துகொண்டிருக்கிறார்கள். இறந்தவர்களைப் புதைக்கவும் புத்திரர்கள் இல்லை. நான் மட்டும் ஆய்வுப்படிப்பை முடித்துவிட்டு என்ன சாதிக்கப்போகிறேன்?’’

இலங்கை திரும்பி, இரு வாரங்கள் மட்டுமே ராஜனி உயிருடன் இருந்தார். அது ஒரு வியாழக்கிழமை. 21 செப்டம்பர் 1989. திருநெல்வேலியில் இருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார் ராஜனி. மாணவர்களுக்கான இறுதி நாள் தேர்வு அன்றுதான் நடைபெற்று முடிவடைந்திருந்தது. சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார் ராஜனி. ``உடலைப் பாதிக்கும் கிருமிகளோடு சேர்த்து சமூகத்தைப் பாதிக்கும் கிருமிகள் குறித்தும் `மேடம்’ எங்களுடன் வகுப்பறையில் விவாதிப்பதுண்டு. அவருடைய பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாங்கள் தினமும் கண்டோம். பாடப்புத்தகங்களைக் கடந்து திரைப்படங்கள், நாவல்கள், கவிதைகள், உலக அனுபவங்கள் என சகலவற்றையும் மளமளவென எம்முன் எடுத்துச் சொல்வார்’’ என்று கண்ணீருடன் நினைவுகூர்கிறார் ராஜனியிடம் பாடம் பயின்ற மாணவர் ஒருவர். 

அன்றைய தினம் மேடம் தனது சைக்கிளில் வளாகப் பிரதான வாயில் வழியாக வீதிக்கு இறங்கியதுமே, அவரை சைக்கிளில் பின்தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலது பக்கத்தில் முதல் வேட்டையைத் தீர்த்தான். அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடவை அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான்.

அக்கா, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீர் இல்லை! - ராஜனி திராணகம

தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் 1954 பிப்ரவரி 23 அன்று பிறந்தார் ராஜனி (ரஜினி அல்லது ராஜினி என்றும் அழைக்கப்படுவதுண்டு). மூன்று சகோதரிகள். யாழ்ப்பாணத்தில் ஆரம்பக் கல்வி முடித்துக்கொண்டு, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் இணைந்து கொண்டார். சக மாணவரான தயாபால திராணகம என்பவரை, தனது 23-வது வயதில் திருமணம் செய்துகொண்டார். அவர் ஒரு சிங்கள பௌத்தர் என்பது ராஜனி தரப்பில் பலரையும் அதிர்ச்சியில் தள்ளியது. `போயும் போயும் நம் இனத்துரோகி ஒருவனையா நீ மணம் செய்துகொள்ள வேண்டும்’ என்று அவர்கள் கடுகடுத்தபோது ராஜனி அலட்டிக்கொள்ளவில்லை. வேறு எவரையும்விட சிங்களப் பேரின வாதத்தைத் தீவிரமாக எதிர்த்துவந்தவர் தயாபால. இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டவரும்கூட.

நர்மதா, ஷரிகா என்று இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். ``ராஜனியை நான் உயிருக்கு உயிராகக் காதலித்தேன். ஆனால், மேல் தோற்றத்தில் எங்களுடையது பொருத்தமற்ற இணைப்பாகவே பலருக்கும் தோன்றியது’’ என்கிறார் தயாபால. ராஜனி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்; யாழ்ப்பாணத்தில் பிறந்து, வளர்ந்தவர். தயாபால தெற்கில் வளர்ந்தவர். மிகவும் ஏழ்மையான விவசாயக் குடும்பம். ``செருப்புகூட இல்லாமல் வெறும் கால்களால்தான் நான் பல மைல் தள்ளி உள்ள பள்ளிக்கு நடந்து செல்வேன். என்னுடைய பின்னணியை நான் விவரிக்க ஆரம்பித்தபோது ராஜனி மிகவும் கலங்கிவிட்டார். என்னுடைய பின்னணி குறித்து யார் என்ன பேசினாலும் ராஜனிதான் எனக்கு உதவிக்கு வருவார்’’ என்கிறார் தயாபால.

அவர்களுடைய அரசியல் பார்வைகூட வேறானதாகவே இருந்தது. தயாபாலா, மார்க்சிய லெனினியத்தின்மீது ஆழ்ந்த பற்றுகொண்டிருந்தார். ராஜனியோ, தம் மக்களுக்கு சமூகநீதி விரைந்து கிடைக்க வேண்டுமானால், விடுதலைப்புலிகள் போன்ற போராளிகள் மூலமாகவே அது சாத்தியப்படும் என நம்பிக் கொண்டிருந்தார். இந்த நம்பிக்கைதான் அவரை தொடக்கத்தில் புலிகளின் ஆதரவாளராக இருக்கவைத்தது. பிற நாடுகளைப்போலவே, இங்கும் புரட்சிகர மாற்றம் ஒன்று ஏற்படும் என அவர் நம்பினார். தயாபாலவுக்கோ அத்தகைய கற்பனாவாத நம்பிக்கைகள் இல்லை. ``ராஜனிக்கு, அவர்களுடைய சித்தாந்தத்தின்மீது மிகுந்த ஈர்ப்பு இருந்தது. நள்ளிரவில்கூட எழுந்து சென்று காயப்பட்ட தமிழ்ப் போராளிகளுக்கு அவர் சிகிச்சையளித்து வந்தார்’’ என்கிறார் தயாபால.

ராஜனி கொல்லப்பட்ட தினத்தன்று, தயாபால தன் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தார். ``என்னுடைய இரு மகள்களையும் இரு கைகளில் பிடித்துக்கொண்டு ராஜனி அடக்கம் செய்யப்பட்டிருந்த அவருடைய குடும்பக் கல்லறைக்கு நடந்துசென்றேன். என் வாழ்வில் மறக்க முடியாத மிகக் கடினமான நடைப்பயணம் அது. ராஜனியோடு சேர்ந்து என் வாழ்வின் மகிழ்ச்சியும் முடிவுக்கு வந்துவிட்டது. தாயற்றுக் கிடந்த பல இலங்கைக் குழந்தைகளோடு என் குழந்தைகளும் அன்று சேர்ந்துகொண்டனர். இலங்கை காவல் துறையின் கொடூரமான துன்புறுத்தல்களுக்கு நான் ஆளாகியிருக்கிறேன். என் குடும்பத்தில் நான்தான் போருக்குப் பலியாவேன் என நினைத்துக்கொண்டிருந்தேன். `எனக்குப் பிறகு நீதான் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்’ என்றுகூட ராஜனியுடனும் கலந்து பேசியிருந்தேன். இப்படி நடக்கும் என நான் நினைக்கவில்லை.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அக்கா, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீர் இல்லை! - ராஜனி திராணகம

கணக்கற்ற தமிழர்களின் கொலைகள்போல ராஜனியின் படுகொலையும் விசாரிக்கப்பட வில்லை என்றாலும், விடுதலைப்புலிகளையே பெரும்பாலானோர் குற்றம்சாட்டினர். இன வாதப் போர் குறித்தும், புலிகள் அமைப்பு குறித்தும் விரிவாக பல கட்டுரைகள் எழுதி யிருக்கும் டி.பி.எஸ்.ஜெயராஜின் பார்வையும் இதுவேதான். ராஜனியுடன் ஒன்றாக யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்றவர் இவர்.

விடுதலைப்புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தை மீட்பதற்காக இந்திய அமைதி காக்கும் படை 1987 பிற்பகுதியில் `பவான் நடவடிக்கை’ என்னும் பெயரில் ராணுவத் தாக்குதலை மேற்கொண்டது. `பவான் என்றால், வலிமையான காற்று. ஆனால், பனைமரத்தை அந்தக் காற்றால் ஒன்றும் செய்துவிட முடியாது’ என்று தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார் ஜெயராஜ்.  காற்று தீவிரமாக வீசும்போது பனைமரம் காற்றுக்கேற்றவாறு அசைந்துகொடுத்து ஆடும். சில நேரம் உடைந்து விழும். வேறோடு சாய்ந்து விழவும் செய்யும். ஆனால், ஒருபோதும் பனையைக் காற்றால் வளைக்க முடியாது. விடுதலைப்புலிகள், பனைமரத்தைப் போன்றவர்கள். அவர்களை ஒருபோதும் வளைத்துச் சரணடைய வைக்க முடியாது. இதை ஜெயராஜ் விவரித்தபோது ராஜனி வலுவாக மறுத்திருக்கிறார். ``இல்லை, பனைமரம் முறிந்துவிட்டது.’’

இலங்கை ஏன் ஒரு பிளவுண்ட தீவாக இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களைத் தொகுத்திருக்கிறார் ராஜனி. சுயநிர்ணயத்துக் கான போராட்டம் சுயநிர்மூலத்துக் கான போராட்டமாக எப்படி மாறியது என்பதையும் அதற்கான காரணகர்த்தாக்கள் யாவர் என்பதையும் ராஜனி தெரிந்துகொள்ள விரும்பினார். மூன்று பிரதான குற்றவாளி களை அவரால் அடையாளம் காண முடிந்தது. முதல் குற்றவாளி, சிங்களப் பேரினவாத அரசு. இரண்டாவது, அமைதியை ஏற்படுத்துவதாகச் சொல்லி உள்நுழைந்து பேரழிவை ஏற்படுத்திய இந்திய ராணுவம். மூன்றாவது, விடுதலை என்னும் பெயரால் வன்முறையை வளர்த்தெடுத்த விடுதலைப்புலிகள். ராஜனியின் முயற்சியில் தொடங்கப்பட்ட இந்த நூல்,  அவரது மரணத்துக்குப் பிறகே வெளிவந்தது. தலைப்பு, `முறிந்த பனை’.

புலிகளிடமிருந்து திட்டவட்டமாக விலகிச்சென்றாரே தவிர, போராடுவதை நிறுத்திக்கொண்டதில்லை ராஜனி. பிரச்னையிலிருந்து விலகிச் செல்லுதல் என்னும் வழக்கம், அவரது குருதியிலேயே இருந்ததில்லை. போர்ச்சூழலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து பேராசிரியர்கள் பலரும் தப்பியோடிவிட்ட நிலையில், தனியொருவராக அனைத்து வகுப்புகளையும் ராஜனி கவனித்துக்கொண்டது மற்றோர் எடுத்துக்காட்டு. பல நேரங்களில் ஒரு வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர் பாடங்கள் எடுக்க வேண்டியிருந்தது. இதற்கிடையில் பல்கலைக்கழகப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து மனித உரிமைக் குழு ஒன்றையும் அவர் அமைத்தார். மனித உரிமைப் போராளியாகவும் பெண்ணியவாதியாகவும் ராஜனி தன்னை வளர்த்துக்கொண்டார்.

அவரது எழுத்து, இயக்கம், சிந்தனைகள் அனைத்திலும் பெண்களே பிரதானமாக இருந்தார்கள். போர்க்காலங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளையும் வன்முறைகளையும் எதிர்த்து ஒரு நாடகத்தை இயற்றி, அதில் நடிக்கவும் செய்தார். போர் என்பது ஆதிக்கம், அதிகாரம், வன்முறை ஆகியவற்றோடு தொடர்புகொண்டிருக்கிறது என்பதால், அது தவிர்க்கவியலாதபடி பெண்களுக்கு எதிரானதாகவும் இருக்கிறது. நிலத்தைப்போல பெண்ணுடலும் ஓர் உடைமையாகப் பார்க்கப்படுகிறது; ஆக்கிரமிக்கப் படுகிறது. ஒரு பெண்ணின் உடல், உள்ளம் இரண்டையும் போர் எப்படிச் சீரழிக்கிறது என்பதை விரிவான தரவுகளோடு ராஜனி ஆவணப்படுத்தினார். `முறிந்த பனை’யில் உள்ள அந்தப் பகுதிக்கு அவர் இட்டிருந்த தலைப்பு, `அக்கா, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீர் இல்லை.’

``நீங்கள் எவ்வளவு பலமிக்கவராக வேண்டுமானா லும் இருந்துகொள்ளுங்கள். நீங்கள் உயர்த்திப் பிடிக்கும் பதாகையின் நிறம் என்னவாக வேண்டு மானாலும் இருக்கட்டும். உங்கள் உதடுகள் எத்தகைய உயர்ந்த உண்மையை உச்சரித்தாலும் கவலையில்லை. நீங்கள் மக்களை மதியாதவராக, அவர்களைத் துன்புறுத்துபவராக, அவர்களுடைய சடலங்கள் பெருகுவதைப் பொருட்படுத்தாதவராக இருந்தால், உங்கள் பலமும் சித்தாந்தமும் உண்மையும் எம்மக்களுக்குப் பயனற்றவை’’ என்றார் ராஜனி.

துப்பாக்கியை ஏந்தியிருக்கும் கரம் யாருடையது என்பதை ராஜனி பொருட்படுத்தவில்லை. அந்தக் கரத்தால் பாதிக்கப்படுகிறவர்கள் யார் என்பதை மட்டும் கரிசனத்துடன் பார்த்தார். இலங்கையை உலுக்கிய ஜூலை 1983 கலவரத்தைத் தொடர்ந்து, புலிகளை வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்திருந்தார் ராஜனி. ``மக்களை ஒருங்கிணைத்து, மக்களோடு நின்று அவர்களையும் இணைத்துக்கொண்டு போராட வேண்டிய புலிகள், மக்களிடமிருந்து வெகுதூரம் விலகிவந்துவிட்டனர். இயக்கத்தின் செயல்பாடுகளில் மக்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றாகிவிட்டது. தங்களுடைய விடுதலைப் போராட்டத்தில் தாங்களே கலந்துகொள்ள முடியாத துர்பாக்கியநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். இது, புலிகளின் பெருந்தவறு’’ என்றார் ராஜனி.

`தனக்கேற்ற ஓர் அரசியல் இயக்கம் இல்லையே’ என அவர் வருந்தவில்லை. தன்னையே அத்தகைய ஓர் இயக்கமாக ராஜனி மாற்றிக்கொண்டார். குடும்பம் வேறு, அரசியல் வேறு என அவர் பிரித்துப் பார்த்ததில்லை. தன்னுடைய மருத்துவப் படிப்பின் ஒரு பகுதியாக பிரிட்டனில் மூன்றாண்டுகளை அவர் கழித்த போதும்கூட, இனவெறிக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த அமெரிக்கப் பெண்களுடன் உணர்வுபூர்வமாகத் தன்னை ஒருங் கிணைத்துக்கொண்டார். ஒருபக்கம் ராணுவக் கட்டமைப்பைப் புலிகள் பலப்படுத்திக்கொண்டிருந்தபோது, ஆதரவற்றப் பெண்களுக்காக `பூரணி’ என்னும் அமைப்பைக் கட்டமைக்கும் பணியில் இறங்கியிருந்தார் ராஜனி. `விடுதலைக்கு, ஆயுதமே தீர்வு’ என்னும் நம்பிக்கையைப் புலிகள் உறுதியாகப் பற்றிக்கொண்டு நின்ற போது, ``ஆயுதத் திடமிருந்தும் சேர்த்தேதான் நாம் விடுதலைபெற வேண்டியிருக்கிறது’’ என்று வாதிட்டார் ராஜனி.

`நான் ஏதாவது வாய் திறந்து பேசிவிடுவேனோ, எதையாவது எழுதி ஆபத்தில் மாட்டிக்கொண்டு விடுவேனோ, குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்றெல்லாம் அம்மா மிகவும் கவலைப்படுகிறார்’ என்று ஒரு கடிதத்தில் எழுதினார் ராஜனி... `நான் வாழும் சூழலைப் பார்க்கும்போதே எனக்கே பயமாகத்தான் இருக்கிறது...’
 
ராஜனி இனி இல்லை என்னும் உண்மையை அவர் அம்மாவால் நீண்டகாலத்துக்கு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. `உன் பெண்ணுக்கு அறிவில்லை. அவள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு போயிருந்தால் இப்படி ஆகியிருக்குமா?’ என்று கேட்கிறார்கள். என்ன செய்வது? மற்றவர்களின் துன்பத்தைப் பார்த்த பிறகு அவளால் இயல்பாக இருக்க முடிவதில்லை. இளைஞர்கள் துப்பாக்கி ஏந்திச் செல்வதை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எல்லாக் கொலைகளும் தவறு என்றே அவள் சொல்வாள். `யார் செய்தாலும், என்ன நோக்கத்துக்காகச் செய்தாலும் அது தவறுதான்’ என்பாள். இப்போது என் குழந்தையை நான் இழந்துவிட்டேன். அவள் குழந்தைகள் தாயை இழந்துவிட்டார்கள்.’’

`ராஜனி, புலிகளால் கொல்லப்படவில்லை; இதில் சதி உள்ளது’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். யாரால் கொல்லப்பட்டார் என்பதில் வேண்டுமானால் இப்படிச் சில மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். ஆனால், ராஜனி ஏன் கொல்லப்பட்டார் என்பதற்கான காரணங்கள் ஒருவராலும் மறுக்க இயலாதவை.

ராஜனி திராணகம, சுயமாகச் சிந்திக்கக் கூடியவராகவும், அச்சமின்றித் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவராகவும் இருந்தார். சார்பு எடுக்காமல் விலகி நின்று அனைத்தையும் அவதானிக்க முயன்றார். நான் மதிக்கும் கொள்கையாயிற்றே என மயங்காமல், கசந்தாலும் பரவாயில்லை என உண்மை பேசினார். நேர்மையாக இருந்தார். அவருடைய சொற்கள் பலரைச் சங்கடப்படுத்தின. அவருடைய நிலைப்பாடுகள் புனித பிம்பங்களைக் கலைத்தன. அவருடைய தேடல், பலரை எரிச்சலடையவைத்தது. அவருடைய இருப்பு, பலருக்குப் பிரச்னைக்குரியதாக இருந்தது. எனவே, கொல்லப்பட்டார்.

அக்கா, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீர் இல்லை! - ராஜனி திராணகம

``இலங்கையில் ஜனநாயகம் மலரவேண்டுமானால், ராஜனியைக் கொன்றவர்கள் தங்களுடைய அரசியல் தவற்றை உணர வேண்டும்’’ என்கிறார் தயாபால திராணகம. ஆனால், தவறிழைத்தவர்களை மட்டுமல்ல, மெய்யுணர்வுடன் போராடியவர்களையும் சேர்த்தே வாரிச்சுருட்டி விழுங்கிவிட்டது இலங்கை.

`ராஜனி, ராஜனிதானே நீ?’ என்று பெயரிட்டு அழைத்த போது, மேடம் தன்னுடைய சைக்கிளை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்திருக்கிறார். ``துப்பாக்கியைக் கண்டதும் இரு கைகளையும்கொண்டு தன் நெற்றியை மறைத்துக் கொண்டார்’’ என்கிறார் சம்பவத்தை நேரில் கண்ட மாணவர் ஒருவர். வெறும் கைகளால் தோட்டாக்களைத் தடுத்து நிறுத்திவிட முடியும் என்று குழந்தைத்தனமாக நம்பிய அதே ராஜனிதான், தன் முடிவைத் துல்லியமாகக் கணித்தும் வைத்திருந்தார். நண்பர் ஒருவருக்கு ராஜனி எழுதிய இறுதிக் கடிதத்தில் பின்வரும் வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. `என்றாவது ஒருநாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால், அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக, எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும், இந்தச் சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையிலிருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்.’