Published:Updated:

14 நாள்கள்

14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

தடகளத் தாரகை!

“நான் பெரிய ஸ்டார் இல்லை. இந்திய கிராமத்து மிடில் கிளாஸ் பெண்... அவ்வளவே!” என்றே தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார் ஹீமா தாஸ். பின்லாந்து நாட்டின் டாம்பியர் நகரில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகத் தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று பெருமை தேடித் தந்திருக்கிறார் ஹீமா. 18 வயதாகும் இந்த இளம்புயல் 51.46 நொடிகளில் 400 மீட்டர் தூரத்தைக் கடந்து தங்கம் வென்றிருக்கிறார். அசாம் மாநிலம் நகாவ்ன் மாவட்டம் திங்கி என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஹீமாவின் தந்தை, சாதாரண விவசாயி. போட்டியின் தொடக்கத்தில் சுணக்கமாகத் தெரிந்தாலும், இறுதி 80 மீட்டர்களில் ஹீமாவின் பாய்ச்சல் வெற்றிக்கனியைப் பெற்றுத் தந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
14 நாள்கள்

“அசாமில் மாவட்டங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகளில்தான் நான் ஹீமாவை முதலில் பார்த்தேன். மலிவான ஸ்பைக் ஷூக்கள் அணிந்திருந்தாலும், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கம் வென்றார். காற்றைப் போல ஓடினார். இப்படியொரு திறமையை நான் கண்டதில்லை” என்று வியக்கிறார் கோச் நிப்பான் தாஸ்.

ஹீமாவின் பெரும் பலம் அவரது தன்னம்பிக்கை. “இறுதிச் சுற்றில் எனக்கு எந்தப் பயமும் இல்லை. சிறந்த ரேஸ் அது. நேரத்தைத் தவிர வேறு எதையும் பார்த்து நான் பயப்படுவதில்லை” என்கிறார் ஹீமா.

குவியட்டும் பதக்கங்கள்!

நல்ல மனம் வாழ்க!

ர்நாடக முதல்வர் ஹெச்.டி.குமாரசாமியைச் சந்தித்த பெங்களூரு இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவரான சுதா மூர்த்தி, பெங்களூரு நகரின் ‘நம்ம மெட்ரோ’ அமைக்கவிருக்கும் புதிய ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்கு 200 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாகத் தெரிவித்தார். எதிர்வரும் 30 ஆண்டு களுக்கு அந்த ரயில் நிலையத்தைப் பராமரிக்கும் செலவையும் இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் ஏற்றுக்கொள்ளும் என்றும் கூறியிருக்கிறார்.

14 நாள்கள்

இதனால் மிகவும் மனம் மகிழ்வதாகக் கூறிய குமாரசாமி, கித்வாய் மருத்துவமனைக்கு சுதா வழங்கிய நன்கொடையையும் பாராட்டியிருக்கிறார். கார்ப்பரேட்டு களுக்கு சிறந்த உதாரணமாக சுதா மூர்த்தி இருப்பதாகக் கூறிய அவர், இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனின் பணிகள் மக்கள் நலனை மையமாகக் கொண்டவை என்றார்.

மெட்ரோ பணிகள் பெங்களூரு நகரில் தொடங்கியது முதலே அதில் தன் பங்கு இருக்க வேண்டும் என்று எண்ணியதாகவும், இன்ஃபோசிஸ் தலைமை அலுவலகத்துக்கு அருகில் அமைவதால், கோனப்பன அக்ரஹாரம் ரயில் நிலையத்தைத் தேர்வு செய்ததாகவும் சுதா கூறியுள்ளார்.

உதாரணப் பெண்மணி!

சரித்திரம் படைக்கும் சான்ட்ரா ஓ!

மெரிக்காவின் தலைசிறந்த தொலைக்காட்சி விருதுகளான எம்மி விருதுகள் 1949-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

2018-ம் ஆண்டுக்கான விருது பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் அமெரிக்க நடிகையான சான்ட்ரா ஓ. ஏற்கெனவே ‘கிரே'ஸ் அனாட்டமி’ தொடரில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகைப் பிரிவில் இவரது பெயர் இடம் பெற்றிருந்தாலும், சிறந்த நடிகை பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதன்முறை. இந்தத் தேர்வுப்பட்டியலில் இடம்பெறும் முதல் ஆசிய நடிகையும் சான்ட்ராதான். ‘கில்லிங் ஈவ்’ என்ற தொடரில் சிறப்பாக நடித்ததற்காக சான்ட்ராவின் பெயர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

14 நாள்கள்

கொரியாவிலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த சான்ட்ரா ஓ, தேர்ந்த பாலே நடனக் கலைஞரும்கூட! நாடகங்களின் மீது கொண்ட காதலால், ஸ்காலர்ஷிப்பில் கிடைத்த இதழியல் படிக்கும் வாய்ப்பை ஒதுக்கியவர் ஓ. நாடகத் துறையில் எதுவும் சாதிக்க முடியவில்லை என்றால் மீண்டும் படிப்புக்குத் திரும்புவதாகப் பெற்றோரிடம் வாக்களித்தவர், இன்று அமெரிக்காவின் தலை சிறந்த நடிகைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். `தி பிரின்சஸ் டைரீஸ்’, `பிக் ஃபேட் லையர்’, `சைட்வேஸ்’ போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் தலைகாட்டியிருந்தாலும், தொலைக்காட்சித் தொடர்கள்தாம் சான்ட்ராவின் திறமையை உலகறியச் செய்தன. உலகெங்கும் இவரது ‘கிரே'ஸ் அனாட்டமி’ தொடருக்கு விசிறிகள் உண்டு!

`ஓ’வுக்கு ஒரு ஓ போடேய்!

கேன்சரை வெல்லும் துணிவுடன் சோனாலி!

‘ப
ம்பாய்’ படத்தின் சூப்பர் ஹிட் பாடலான `அந்த அரபிக் கடலோரம்’ மூலம்தான் தமிழ் ரசிகர்களுக்கு முதன்முதலில் அறிமுகம் ஆனார் சோனாலி பெந்த்ரே. ‘காதலர் தினம்’ படத்தில் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துகொண்டார். அதன்பின் சில இந்திப் படங்களில் நடித்துவிட்டு, திருமணம் செய்துகொண்டார். அண்மையில் தன் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில், தனக்கு ‘மெடாஸ்டாடிக் கேன்சர்’ இருக்கிறது என்ற தகவலைப் பகிர்ந்துகொண்ட சோனாலி, சிகிச்சைக்காக நியூயார்க் சென்றிருப்பதாகவும் அறிவித்தார். “சில நேரங்களில் வாழ்க்கை நம் மீது பந்தைச் சுழற்றி வீசுகிறது. தொடர்ச்சியான வலி, சில டெஸ்ட்டுகள், அதன்பின் இந்தச் செய்தி. குடும்பமும் நட்பும் என்னுடன் தோள்கொடுத்து நிற்கிறார்கள். வேறென்ன வேண்டும்? மிகுந்த நம்பிக்கையுடன் இதைக் கடக்கலாம் என்றிருக்கிறேன். இந்தப் போரை நேருக்கு நேராகச் சந்திக்கிறேன். என்னுடன் சுற்றமும் நட்பும் இருக்கிறது என்ற நம்பிக்கையில்” என்று தெரிவித்துள்ளார்.

14 நாள்கள்

தன் மனம்கவர் எழுத்தாளர் இசபெல் ஹாலந்தின் கூற்றான, ‘நமக்குள் எத்தனை துணிவு இருக்கிறது என்பதை இக்கட்டான சூழலில்தான் உணர்கிறோம். தேவை, போர், பிரச்னைகளின்போதுதான் நாம் நம் பலத்தை உணர்கிறோம். அசாதாரண செய்கைகளைச் செய்கிறோம்’ என்பதையும் நினைவுகூர்ந்திருக்கிறார் சோனாலி. “என்னுடன் பலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நான் தனியாக இல்லை. என்னுடன் போராட்டத்தில் பலர் இருக்கிறார்கள் என்று உணர்கிறேன். இப்போதைக்கு ஒவ்வொரு நாளாக என் வாழ்க்கையை எதிர்கொள்கிறேன். என்ன நடந்தாலும் பாசிட்டிவாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

மீண்டு(ம்) வாருங்கள் சோனாலி!

உட்காரும் உரிமைக்காக ஒரு போர்!

ணிக நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்தும் `கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்ட'த்தில் திருத்தம் கொண்டுவர கேரள அரசு ஒப்புக்கொண்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே பெண்கள் பணிபுரியலாம் என்பதை மாற்றி, இரவு நேரத்திலும் பெண்கள் பணிபுரிய இதன்மூலம் வழிவகை செய்யப்படுகிறது. இதைவிட முக்கியமானதாக, பணிபுரியும் பெண்களுக்கு அமர நாற்காலி வழங்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

2016-ம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அம்மாநில அரசுக்கு துணிக்கடைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் மோசமான நிலையை ஆய்வு செய்ய அறிவுறுத்தியது.

14 நாள்கள்

அசங்காதித மேகல தொழிலாளி யூனியன் (ஏ.எம்.டி.யூ.) என்ற அமைப்பு 2013-ம் ஆண்டு முதல் ‘சேல்ஸ் கேர்ள்’களாகப் பணிபுரியும் பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வருகிறது. இந்த யூனியனின் `இருப்பு சமரம்’ (அமர்வதற்கான போர்) வேகமாக கேரளா முழுவதும் பரவி, பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

2014-ம் ஆண்டு திருச்சூரைச் சேர்ந்த பிரபல நகைக்கடையின் பெண் தொழிலாளிகள் இருக்கைகள் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிக்கணக்கில் நின்று கொண்டே வேலை செய்வதால், வெரிகோஸ் வெயின்ஸ், வீங்கும் கால்கள், 12 மணி நேர ஷிஃப்ட்டில் இரு முறை மட்டுமே கழிப்பறை பயன்படுத்தும் நிர்பந்தத்தால் சிறுநீரகக் கோளாறுகள் என உடல் உபாதைகள் ஏற்படுவதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள், இந்தப் பெண்கள். இந்தச் சட்டம் மூலம் பத்து மணி நேரத்துக்கு மேல் பெண்கள் பணிபுரிவது தடை செய்யப்படும். ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாகப் பணிபுரிபவர்களுக்கு ஓர் இடைவேளை வழங்கப்படும்.

மலையாளக் கரையோரம் மாற்றம்… இங்கே?!

கேட்கும் திறனற்றோருக்கான ஒலிம்பிக்...

களமிறங்கும் தமிழ்ப் பெண்கள்!


ர்மீனியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கேட்கும் திறனற்ற இளைஞர்களுக்கான முதல் உலக ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பங்கேற்க உள்ளனர். மதுரை நகரைச் சேர்ந்த பாட்மின்டன் வீராங்கனையான 14 வயது ஜெரின் அனிகா மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த தடகள வீராங்கனையான 16 வயது சமீஹா பர்வீன் ஆகிய இருவரும் ஆர்மீனியா செல்லவிருக்கின்றனர். சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கேட்கும் திறனற்றோருக்கான 22-வது தேசியப் போட்டிகளில் இருவரும் சிறப்பாக விளையாடி இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். சென்னையில் மாநிலத்தின் முதல் கேட்கும் திறனற்றோருக்கான இளையோருக்கான போட்டியிலும் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள்.

“சுற்றத்தாரின் ஏளனம், பயமுறுத்தல் இவற்றைத் தாண்டித்தான் நாங்கள் வர நேர்ந்தது” என்று ஒப்புக் கொள்கிறார் ஜெரினின் தந்தை ஜெயரட்சகன். பெண் குழந்தை அதிலும் குறைபாடு உள்ள குழந்தை என்றால், `திருமணமே நடக்கப்போவதில்லை... எதற்கு இப்படி போட்டிகள், விளையாட்டு என்று அலைந்துகொண்டு’ என்பதுபோன்ற விமர்சனங்களையே அதிகம் சந்தித்திருப்பதாக வருந்தும் ஜெயரட்சகன், `திருமணம் மட்டுமே என் பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போவதில்லை' என்று திடமாகக் கூறுகிறார். “எட்டு வயதில் பாட்மின்டன் விளையாடப் பழக்கினேன். ஓர் அப்பாவாக என் கடமையைச் செய்தேன். சிறுவயதிலேயே எனக்கு பெருமைதேடித் தந்துகொண்டிருக்கிறாள்'' என்று தன் மகளைப் பற்றி மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார். சமீஹாவின் தாயான சலாமத்தோ, தனக்கு விளையாட்டில் பெரிதும் ஆர்வம் இல்லையென்றாலும், மகளின் ஆசைக்காக அழைத்துச் செல்கிறேன் என்கிறார். “என் மகள் சொந்தக் காலில் நிற்க வேண்டும். அது விளையாட்டால் நடக்கிறது என்றால், அப்படியே நடக்கட்டுமே!” என்கிறார் சலாமத்.

சாதிக்கச் செவி எதற்கு?